கோபா டெல் முண்டோ – ஏற்காடு இளங்கோ
பொலிவியாவின் புவியியல் பல்வேறு வகையான கற்கள் மற்றும் டெக்டோனிக் மற்றும் வண்டல் சூழல்களைக் கொண்டுள்ளது. இதன் மேற்குப் பகுதி மலைப்பகுதியாக நாடு பிரிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் சுட் சிச்சாஸ் (Sud Chichas) மாகாணத்தில் ஃபால்சூரியின் (Falsuri) அருகில் மனதை மயக்கும் நிலப்பரப்பு உள்ளது. இது பாறைகளின் பள்ளத்தாக்கு (Valley of Rocks) என அழைக்கப்படுகிறது.
இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் கோபா டெல் முண்டோ (Copa Del Mundo) என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமானப் பாறை அமைப்பு காணப்படுகிறது. இந்தப் பாறை உண்மையில் கால்பந்து உலகக் கோப்பை போல் தெரிகிறது. ஆகவே இது உலகக் கோப்பை பாறை (World Cup Rock) எனவும் அழைக்கப்படுகிறது. இது சிற்பியால் செதுக்கப்பட்ட பாறை அல்ல, இயற்கையால் செதுக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இது பொலிவியாவின் அடையாளச் சின்னமாகும். இந்தக் கண்கவர் பாறை உருவாக்கம் சுமார் 10 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மேல் பகுதியில் பெரிய கோளம் (Sphere) இடம் பெற்றுள்ளது. இது பூமி போன்ற வடிவம் கொண்டது. இந்தக் கோளத்தை வைத்திருக்கும் பாறையானது கைகளை ஒத்திருக்கிறது. இது பார்ப்பதற்கு உண்மையில் பூமியைக் (Globe) கைகளில் வைத்திருப்பது போல் தெரிகிறது. இது தனித்துவமான ஒரு அரிய வடிவம் ஆகும்.
இது மிகப்பெரிய கால்பந்து உலகக் கோப்பையைப் பிரதிபலிக்கிறது. இது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காற்று மற்றும் அரிப்பினால் செதுக்கப்பட்டது. சுமார் 21,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரிய வடிவத்தை அடைந்தது. இது கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் போது இது வேடிக்கையாகவும், வைரலாகவும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. பொலிவியர்கள் சொந்த உலகக் கோப்பையை தாங்கள் வைத்திருப்பதாக நகைச்சுவையாகவும், பெருமையாகவும் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் பாறுக் கழுகுகள், தேரைகள் மற்றும் டைனோசர்கள் போன்ற பாறைக் கற்களும் உள்ளன. கால்பந்து ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்த அதிசயத்தைக் காண அதிகம் விரும்புகின்றனர்.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.