“கடலின் அமேசான்” களவு போய்விடுமா?
முனைவர். பா. ராம் மனோகர்
இயற்கை அளவில்லா வளம் உடையது! எனினும் நவீன அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி, வாழ்க்கை முறை மாற்றம், பொருளாதார உயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மனித இனத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய இயற்கை வளத்தில் உலகின் “பவள முக்கோண கடல் பகுதி” (Coral Triangle) முக்கியமான ஒன்று ஆகும்.
மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினியா, இந்தோனேஷியா, சாலமோன் தீவுகள், டைமோர் லெஸ்லே ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையில் உள்ள கடல் பகுதி ”பவள முக்கோணம்“ (Coral Triangle) என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப் பெரிய இயற்கை வளங்களில் ஒன்றான தென் அமெரிக்காவின் அமேசான் காடுகள் போன்று, அவற்றை ஒத்த சிறந்த கடல் பகுதி ஆகும். இதனை நாம் கடலின் அமேசான் என்று கூட சொல்லலாம்.
கடலின் அமேசான் என்று அழைக்கப்படும் பவள முக்கோண கடல் கிட்டத் தட்ட, உலகின் 75% பவளப் பாறைகளை, தன்னகத்தே பெற்றுள்ளது. உலகின் 37% மீன் இனங்கள், 50% கத்தி மட்டி உயிரினங்கள், மேலும் உலகிலுள்ள 7 கடல் ஆமை இனங்களில் 6 சிற்றினங்கள், மட்டுமல்ல,அலையாத்தி காடுகள் உள்ள இந்த முக்கோண கடல் பகுதியில் 950 மெல்லுடலி, சிற்றினங்கள், 458 கணுக்காலி இனங்கள், 3000க்கு மேல் எலும்பு மீன் வகைகள் போன்றவை உள்ளன..
58.550 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்தகடல் பகுதி 10- 19 வெவ்வேறு கடல் தாழை தாவர, சிற்றினங்களைக் கொண்டு அமைந்துள்ள நிலை உண்மையில், அதிசயம்!! உயிரின வேற்றுமை கருவூலமாக விளங்கிடும் கடலின் அமேசான், பவள முக்கோண பகுதி, பல்வேறு அழிநிலை பயமுறுத்தல்களை எதிர் கொண்டு வருகிறது.
பருவ கால மாற்றங்கள், வெப்ப உயர்வு, எதிரி உயிரினம், ஆகிய இயற்கை பிரச்சினைகள் ஒரு புறம் இருப்பினும், மீன் பிடிதொழில், கடல் மாசு, கடலில் மகிழ்ச்சி மூழ்கும் பொழுது போக்கு (SEA DIVING), நோய் பரப்பும் காரணிகளின் தாக்கம் ஆகியன ஆகும். எனினும் சமீப காலமாக சிங்கப்பூர் நாட்டையும் உள்ளடக்கிய இந்த 10 மில்லியன் கடல் பரப்பு கொண்ட பவள முக்கோணம் (Coral Triangle) படிவ எரி பொருள் துரப்பண செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.
உயிரின வேற்றுமை அழிவு மட்டுமின்றி, இப்பகுதியினை வாழ்வாதாரமாக நம்பியுள்ள 120 மில்லியன் மக்கள் தம் வாழ்க்கையினை விரைவில் இழந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். எர்த் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினை சார்ந்த டைசன் மில்லர், பிலிப்பைன்ஸ் நாட்டின், கெர்ரி, மற்றும் ஜான் ஆகிய ஆராய்ச்சியாளர்கள், கடந்த 26.10.24 அன்று நடைபெற்ற உலக சுற்று சூழல் உயிரின வேற்றுமை CBD மாநாட்டில் (COP16) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் மிகவும் அதிர்ச்சி தரும், வருந்தத் தக்க தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
பவள முக்கோணம் (Coral Triangle) கடல் பகுதியில், வாயு எண்ணெய்,துரப்பண செயல்கள் இப்பகுதியின் இயற்கை வளத்தின் செழிப்புக்கு மிக கடினமான சவால்களாக உள்ள நிலை வேதனை தருகிறது. 20000சதுர கி. மீ பரப்பு உள்ள ஒரு பகுதியில் (1%)மட்டும், 100 எண்ணெய் கிணறுகள் காணப்படுகின்றன. மேலும் 450 கிணறுகளை உருவாக்க (16%-1.6 மில்லியன் ச. கிமீ) திட்டம் இருப்பதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக அங்கு 24% பவளப்பாறை, 22% கடல் தாழை தாவரம், 37% அலையாத்தி காடுகள் ஆகிய உயிரின வேற்றுமை வளம், இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. 793 கப்பல் அடிப்புற வெளியேற்ற எண்ணெய் கசிவுகளால், 24,000 சதுர கி. மீ கடல் பரப்பு மாசு அடைந்து விட்டது. 2023 ஆம் ஆண்டு, மிக மோசமான, எண்ணெய் மாசு விபத்து “பிரின்சஸ் எம்பெரர் “என்ற கப்பல் ஏற்படுத்தியது.
இதனால் பாதுகாக்கப்பட்ட, கடல் பகுதியில் 20% உயிரின வேற்றுமை, கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலை என்ற தகவல் வேதனை தருகிறது. மேலும் இதனால் 21,000 குடும்பங்கள், வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. பொருளாதார அளவில் 68.3 பில்லியன் டாலர் தொகை நஷ்டம் உண்டாகிவிட்டது. மேலும் ஆய்வறிக்கை தரும் உண்மையினால் நிச்சயம் எல்லோரும் தற்கால நவீன வாழ்க்கையினை எந்த அளவுக்கு இயற்கை பலி கொடுத்து நகரங்களில், அனுபவித்து வருகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.
ஏனெனில் திரவ இயற்கை எரி வாயு (LNG, LIQUIFIED NATURAL GAS) அகழ்ந்து எடுக்க தென் கிழக்கு ஆசிய நாடுகள் 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 30பில்லியன் டாலர் தொகை மூலதனம் செலுத்தி இந்த பவள முக்கோண பகுதியில் பணிகள் நடந்து வரும் நிலை, மேலும் அச்சம் தருகிறது. தற்பொழுது 19 வாயு முனையங்கள் செயல் படுகின்றன. எதிர் காலத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.
ஆனால் கடல் சூழல் பாதிப்பு, உயிரின வாழிட அழிவு, கடல் கப்பல் போக்குவரத்து பிரச்சனை, எண்ணெய் மாசு கழிவு ஆகியன தவிர்க்க இயலாமல் போகும் அவலங்கள் தொடர வாய்ப்புகள் உள்ளன. திமிங்கலம், டால்பின் போன்ற கடல் வாழ் பாலூட்டிகளின் , ஒலி தொடர்புகள் மூலம் வழி தேடல், உணவு தேடல் ஆகிய நடத்தை கப்பல்கள் உருவாக்கும் ஒலி மாசு மூலம் பாதிக்கிறது. 16% பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் எண்ணெய் வாயு அகழ்வு பணிகள் (80 பகுதிகள்) முழுவதும் தொடர்ந்து வருவது கவலை அளிக்கிறது.
19 முனையங்களில்,15 முனையங்கள், மிக முக்கிய கடல் தாழை, அலையாத்தி (MANGROVE ), உயிரின வேற்றுமை உள்ள, 10 ச. கிமீ பரப்பளவில் அமைந்து இருப்பது உண்மை! அங்கு எண்ணெய் கழிவு, நச்சு வேதி பொருட்கள் அதிகம் வெளியெற்றி, ( ALGAL BLOOM) பாசி மாசுபாடு நிகழ்ந்து வருகிறது. இதன் மூலம் நீர் தரம் குறைந்து, உயிரினங்கள் இறக்கும் நிலை உள்ளது.
எண்ணெய், வாயு துரப்பண பணியினால், அந்த கடலில் வாழ்கின்ற உயிரினம் மட்டும் பாதிப்பு அடைகிறதா!!? மேற்கண்ட வினாவிற்கு விடை, இத்தகைய இயற்கை அழிப்பு செயல்பாடுகள் உள்ளூர் மக்களை நேரடியாக பாதிக்கின்ற நிலை பற்றியும் சிந்திக்க வேண்டும். பிரின்சஸ் எம்பெரர் கப்பல் விபத்து எண்ணை மூலம் கசிவு அருகில் உள்ள கடற்கரை மக்களை பாதித்து விட்டது. ஆம்! அங்கு ஏற்பட்ட நச்சு வாயு நெடியினால் மக்கள் சுவாசம் கோளாறு துன்பங்கள் அடைந்தனர். பள்ளிகள் மூடப்பட்டன. மீனவர்கள் தொழில் பாதித்தது.
இந்தோனேஷியா நாட்டில் தெற்கு பாலி பகுதியில் இந்த செயல்பாட்டினால், அங்கு உள்ள, புனித தலம் முழுவதும் பாதிக்கப்படுவிட்டதாக அறியப்பட்டுள்ளது. அங்கு இதனை மக்கள் எதிர்த்து வருகின்றனர். COP 16 மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி, பவள முக்கோண கடல் பகுதியினை காப்பாற்ற இரண்டு முக்கிய பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை 1.எண்ணெய், எரி வாயு அகழ்வு பணிகள் உடனடியாக அந்த இயற்கை பகுதியில் நிறுத்த உடன்படிக்கை தயாரித்து (MORATORIUM) குறிப்பிட்ட நாடுகள் இ செயல்படவேண்டும். 2.படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக அனைத்து நாடுகள் புதுப்பிக்கப்படும் ஆற்றல் மூலங்கள் நோக்கி தம் பார்வை செலுத்த முயல வேண்டும்.
பன்னாட்டு அளவில், சட்டம், பரிந்துரைகள் ஏற்படுத்தும் நோக்கில், உயிரின வேற்றுமை பாதுகாப்பு மாநாடு (COP16) முயற்சிகள் செய்வது மகிழ்ச்சியாயினும், பொருளாதார முன்னேற்றம் என்ற நிலையில் நம் இயற்கை கடல் வள உயிரின பாதுகாப்பு, என்று வரும்பொழுது, முக்கியத்துவம் பெறாமல் போய்விடுவது உண்மை!. நம் ஈடு செய்ய முடியாத கடல் வளம் “பவள முக்கோணம் “ (Coral Triangle) என்ற கடல் அமேசான் மேலும் களவு போய்விடாது என்று நம்பிக்கை கொள்வோம்!.
கட்டுரையாளர் :
முனைவர். பா. ராம் மனோகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.