’க்ரியா’ ராம் : கோவிட் 19 சாய்த்துவிட்ட ஆலமரம் – எஸ்.வி.ராஜதுரைதமிழ் இலக்கிய உலகில் ஆழ வேரூன்றியிருந்த ஓர் ஆலமரம், கோவிட்-19 சூறாவளியால் சாய்க்கப்பட்டுவிட்டது.பதிப்புத் துறையிலோ, அறிவார்ந்த விவாதங்களிலோ, மொழியாக்கப் பணிகளிலோ சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் தனியொரு மனிதனாக நவீனத் தமிழ் அறிவுலகத்திற்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இனி நம்மோடு இல்லை.

அரை நூற்றாண்டு காலம் என் குடும்ப நண்பராய், ஆசானாய், என்னையும் ஓர் எழுத்தாளனாய், மொழிபெயர்ப்பாளனாய் வார்த்தெடுத்த ‘க்ரியா ’ராம் இலக்கியம், இசை, ஓவியம் எனப் பல்துறைகளில் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவும், ரசனையும் நம்மை மலைக்க வைப்பவை. இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பேசப்படும் ‘கசடதபற’ ஏட்டை வெளியிட்டு வந்தவர்களில் ஒருவரான அவர் அற்புதமான சிறுகதைகளை எழுதியுள்ளார். 41 ஆண்டுகளை நிறைவு செய்யும் அவரது ‘க்ரியா’ பதிப்பகம் நான் எழுதிய நான்கு நூல்களை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் மூன்று நூல்களுக்கு மேல் வெளியிட மாட்டார். இமையம், ந.முத்துசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், பூமணி,சுந்தர ராமசாமி, மெளனி, சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், சி.மணி, திலீப்குமார், தங்க.ஜெயராமன், ந.கோவிந்தராஜன், மு.நித்தியானந்தன் போன்ற மகத்தான ஆளுமைகளின் ஆக்கங்கள் ‘க்ரியா’முத்திரையுடன் வெளிவந்துள்ளன.

ஈழக்கவிஞர்களைத் தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்தவர் அவர்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, உலகெங்கும் பேசப்படும், சிந்து நாகரிகம் பற்றியும் தமிழ்-பிராமி எழுத்துகளின் வளர்ச்சி பற்றியும் காலஞ்சென்ற அறிஞர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கில நூலை வெளியிட்டவர்.

வெ.ஸ்ரீராம், தட்சிணாமூர்த்தி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, மதனகல்யாணி, சிவராமன் முதலிய மொழிபெயர்ப்பாளர்களைப் போற்றி வளர்த்தவர். எத்தனையோ இளம் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். கூத்துக் கலையைப் புதுப்பிப்பதில், நவீன நாடகங்கள் மேடையேற்றப்படுவதில் ந.முத்துசாமியுடன் கரம் கோர்த்தவர். ரோஜா முத்தையா நூலகத்தின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. சாதி, மதம், சாத்திரங்கள் அனைத்தையும் வெறுத்தொதுக்கியவர்.காம்யு, காஃப்கா,இயனெஸ்கோ, அந்துவான் து எக்சுபரி, ழாக் ப்ரெவெர், கமால் தவுத், ரே ப்ராட்பரி, யானிஸ் வரூஃபாகிஸ் முதலிய ஐரோப்பிய எழுத்தாளர்கள், பண்டை சீனத் தத்துவ ஞானி லாவோ ட்ஸு போன்றோரை அற்புதமான மொழியாக்கங்கள் வழி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசாங்கமோ, பல்கலைக் கழகங்களோ செய்யத் துணியாத, இதுவரை நமக்குக் கிடைத்துள்ள ஒரே ‘தமிழ்-தமிழ்-ஆங்கில’ அகராதியின் மூன்று பதிப்புகளை நமக்கு வழங்கிச் சென்றவர். அகராதியின் உருவாக்கத்தில் பல அறிஞர்களின் பங்களிப்புகளை இணைத்தவர். ஒரு சொல்லுக்கான விளக்கம் தனக்குச் சரியாகப் படவில்லை என்றால் அதை அறிந்துகொள்ள இரண்டு, மூன்று மாதங்களைச் செலவிடும் அர்ப்பணிப்பு அவருடையது. அந்த அகராதியின் மூன்றாவது, விரிவுபடுத்தப்பட்ட பதிப்பை கொரோனா பரவல் விதித்திருந்த தடைகளை உடைத்து, மருத்துவ மனையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும்போது வெளியிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றவர்.

தான் வெளியிட்ட புத்தகங்களில் சில நன்கு விற்பனையாகாமல் இருப்பது அவருக்கு அவ்வப்போது சற்று மனத் தொய்வைத் தரும். அப்போதும் அவர் தனகே உரிய நகைச்சுவை உணர்வைக் கைவிடமாட்டார். சில மாதங்களுக்கு முன் என் நண்பர் ஒருவருக்காக காஃப்காவின் ‘விசாரணை’ நூலின் பிரதியொன்றை அனுப்புமாறு கேட்டேன். “ எனக்கு சமாதி கட்டும் அளவுக்கு உள்ளன விற்பனையாகாத பிரதிகள்” என்றும் “ இழப்பு எனக்கல்ல, தமிழ் வாசகர்களுக்குத்தான் என்றும் கூறினார்.

தனக்குப் பின் ‘க்ரியா’வையும் அதில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் எப்படிப் பேணிப் பாதுகாப்பது என்ற கவலையில் மூழ்கியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் முன் நச்சுக் கிருமி அவரை விழுங்கிவிட்டது.

நன்றி: மின்னம்பலம் இணையம்