Corona lockdown tragedy | கொரோனா பொது முடக்க பெருந்துயரம்

 

திடீர் என பொது முடக்கம். ஆங்காங்கே உலகம் முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டது. ஆனால், வீட்டுக்குள் சென்றவர் வெளியே வருவதற்குள் கதவை இழுத்து சாத்தி அடைத்தாகிவிட்டது. ஆங்காங்கே ஏதேதோ வேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்த மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி, சொந்த ஊரை நோக்கி நகரத் தொடங்கினர். நகர்ந்து சென்றவர்கள் ஊர்ந்து சென்றவர்கள் ஊர் சென்று சேராமல் நடுவழியில் செத்து செத்து மடிந்தனர். தண்ணீர் கிடைக்காமல் செத்தவர்கள், சோறு கிடைக்காமல் செத்தவர்கள், களைத்துப் போய் ரயில் ரோட்டில் தூங்கி கொத்தாய் செத்துப் போனவர்கள். அய்யய்யோ! எத்தனை விதமான துயர் மிகுந்த மரணம். இந்தத் தலைமுறையினர் என்றென்றும் மறக்க முடியாத பெருந்துயர்.

இதனை பல பத்திரிகையாளர்கள் ஆவணப் படுத்தினர். அதில் வினோத் கப்ரியும் ஒருவர். டெல்லியில், பொது முடக்கத்தில் சோறின்றி முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு வயிற்றுப் பசி போக்க, தினமும் ஒரு வேளை சோறு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.‌ அதனை படம் பிடிக்க செல்கிறார் கப்ரி. வந்திருந்த கூட்டத்திற்கு கொண்டு வந்த சாப்பாடு போதவில்லை. “சாப்பாடு கிடைக்காதவர்கள் அடுத்த தெருவிற்கு செல்லுங்கள்” என்று அறிவிப்பு. செக்கச் செவேல் என்ற முப்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு சோறு கிடைக்கவில்லை. அவர் அடுத்த தெருவிற்கு போக மறுத்து, போலிஸ் காரர்கள் அங்கு அந்த கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருந்தவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத வார்த்தைகள் தான். அப்போதும் அந்த பெண்ணுக்கு கோபம் தணியவில்லை. உச்சஸ்தாயியில் திட்டிக் கொண்டே இருக்கிறார். வினோத் கப்ரி அருகே சென்று, “சாப்பாடு தான் தீர்ந்து விட்டதே. அடுத்த தெருவிற்கு செல்லலாம் அல்லவா?” என்று தணிந்த குரலில் கேட்கிறார். சுட்டெரிப்பது போல் பார்த்து விட்டு, மீண்டும் அதே உச்சஸ்தாயியில், ” மளார் என தன் சேலையை தொடை வரை உயர்த்துகிறார். கப்பாரி முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். “இங்கே பாரடா” என்கிறார். காட்டிய இடத்தை பார்த்ததை கப்பாரிக்கு பேரதிர்ச்சி. சிவந்த தொடையில் இரத்தம் கட்டியது போல் நெடுக வீங்கி இருக்கிறது. “இந்தாடா! இதை ஃபோட்டோ எடுத்து உங்க பிரதமருக்கு காட்டு. நீ சொன்னாய் அல்லவா? பக்கத்து தெருவில் சென்று வாங்கி சாப்பிடு என்று. அதற்குத் தான் நேற்று சென்றேன். சோறு கிடைக்கவில்லை. இந்த அடிதான் கிடைத்தது. சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று” என்று கதறிக் கதறி அழுகிறார்.‌

இதில் நெக்குறுகி போகும் கப்ரி, இத்தகைய மக்களுக்கு சில உதவிகளையும் ஒருங்கிணைக்கிறார். இந்த அனுபவங்களின் போதுதான் தான், ‘1232 km : The Long Journey Home’ என்றொரு புத்தகமாக எழுதியுள்ளார். ஆவணப் படமாகவும் வெளிவந்தது. டெல்லியிலிருந்து ஏழு இளைஞர்கள் சைக்கிள்களில் பிகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்ற சோக வரலாறு அது. இத்தகைய நெஞ்சை பிழியும் சம்பவங்கள், ஆறாத் துயர்கள் ஆயிரம் ஆயிரம் அல்ல. இலட்சம் கோடி.‌ உலகெங்கும் தானே கொரோனா பரவல். உலகெங்கும் தானே மரணங்கள் துயரங்கள். உலகில் எங்கும் இல்லாத பொது முடக்கம். அதனை ஒட்டிய மரணங்கள் இந்தியாவில் தான் அதிகம்.‌ ஏன்? ஏன்? ஏன்?

உலகெங்கும் இருந்த சுமார் 200 நாடுகளில், பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம் அல்லது சந்தைப் பொருளாதார சக்திகள் ஆட்சியில் இருந்தன. கியூபா, சீனா போன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் நாடுகள் என பல வகை நாடுகள். எங்கும் இந்தியாவை போன்ற கொடூரமான திடீர் பொது முடக்கம் இல்லை. சீனாவில் இந்தியாவை விட கடுமையான பொது முடக்கம் என சிலர் வாதிடலாம். மக்கள் வீடுகளுக்குள் முடக்கப் பட்டனர். அரசு எந்திரம் மக்கள் முன் சேவகம் செய்தது. இந்தியாவிலோ மக்களை முடக்கிப் போட்டுவிட்டு அரசும் மிகவும் முடங்கி படுத்துக் கொண்டது.

உலகம் முழுவதும் மக்கள் கொரோனா தொற்றால் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டனர். உலகெங்கும் செத்து மடிந்தனர். ஆனால் பொது முடக்கத்தால் துயர் உற்றவர்கள் செத்து மடிந்தவர்கள் இந்தியாவில் தான் அதிகம். ஏன்?

இந்தியாவை ஆண்டு கொண்டிக்கிடக்கும் ஆளும் பாஜக அரசு வர்ணாசிரம கொள்கையின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட அரசு. அதனை நவீன இந்தியாவில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டு இருக்கும் அரசு. அதுதான் கொரோனா பொது முடக்கம் துயரங்களுக்கு காரணம். மரணங்களுக்கு காரணம். எப்படி?

வேதகாலத்தில் நான்கு வர்ணங்களாக இருந்து இன்று பல நூறு சாதிகளாக பிரிந்து இருக்கலாம். ஆனால் அடிப்படை சாதி கட்டமைப்பு நான்கு வர்ண பிரிவுகளில் அடங்குகிறது என்பதை நாம் அறிவோம். இந்த நான்கு வர்ணங்களில் சூத்திரர்கள் என்பவர்கள் இன்றைய உடல் உழைப்பு தொழிலாளிகள். அதுமட்டுமின்றி, அவர்களை மனிதர்களாகவே மநு கருதவில்லை. விவரங்களைப் போலத்தான் கருதினான். சத்திரியர் முதல் வைசியர் வரையான மக்கள் திரளுக்கு சேவை செய்ய கடவுளால் படைக்கப்பட்ட ஓர் உயிரினம் சூத்திரர்கள். அவர்கள் என்றென்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களாக இருக்கும் வண்ணம் மநு தனது விதிகளை உருவாக்கி இருந்தான். அவர்கள் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற மநுவின் விதிகள் சுதந்திர இந்தியாவில் உருவாக்கபட்ட கல்வி இட ஒதுக்கீடுகள் முறைகள் எழுபத்து ஐந்து ஆண்டுகள் வழங்கப்பட்டும் அவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்களாக பெரும்பான்மையோர் நீடிக்கின்றனர். இவர்கள் கிராமப்புற வாழ்வாதார நெருக்கடிகள் காரணமாக நகர்புறங்களில் தங்கள் பிழைப்புக்கு வழி தேடி நெடுந்தொலைவு செல்கிறார்கள்.

கொரோனா தொற்று என்ற பீதி வந்தவுடன், வர்ணாசிரம மூளைக்கு, இன்றைய உடல் உழைப்பு தொழிலாளிகள் (சூத்திரர்கள்) நினைவுக்கு வரவேயில்லை. அவர்கள் இந்திய நெடுஞ்சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக உணவு இன்றி தண்ணீர் இன்றி நடந்து நடந்து செத்தபோதும் கருணை சுருக்காமல் போனதற்கும் அவர்கள் மக்கள் திரளில் ஒரு பகுதி என்று நினைக்க மறந்ததே காரணம். அவர்கள் போடும் கூப்பாடுகள், பொய்கள், பித்தலாட்டங்கள், தகிடு தத்தங்கள். இவர்களது அறிவிப்புகள், வாக்குறுதிகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் ஓட்டுக்களைக் கவர போடும் வேஷங்கள். அதனை இப்படித்தான் பெயரிட்டு அழைக்க வேண்டும். பொது முடக்கத்தில் துயர் உற்றவர்கள் தருணம் இது. செத்து மடிந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தருணம்.‌ இம்மக்கள் “கருணையற்ற அரசு கடிந்து ஒழிக” என ஒரே குரலில் குரலில் ஓசை எழுப்ப வேண்டும்.
~~~~~~~~
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *