அடுத்த சில மாதங்களில் மனிதர்கள் கொரோனா வைரசை வெற்றி கொண்டு விடும் வாய்ப்பு நிறையவே உள்ளது. ஆனால் அந்த வெற்றி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவு என்ற பெரிய புத்தகத்தின் ஒரு அத்தியாயமாகவே இருக்கும். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் நிச்சயமாக இறுதியானதல்ல. எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்கள் இன்னும் அதிகமாக நிகழும். இன்னும் இத்தகைய பொது சுகாதார அவசரநிலைகள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்ள நாம் மனிதர்களும், விலங்குகளும் ஊடாடக் கூடிய பல்வேறு வழிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு உயிரினங்களும் பகிர்ந்து கொள்ளும் இந்த பூமியில் பரஸ்பரம் அவர்களது ஆரோக்கியம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1960 முதலே புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். மனிதர்களைத் தாக்கும் ஏழு கரோனா வைரஸ்கள் பற்றி இதுவரை நமக்குத் தெரியும். ஒவ்வொன்றும் ஒரு புதிய கொடிய வைரஸ். உதாரணமாக, சார்ஸ் வைரசும் புதிய கரோனா வைரசும் (சார்ஸ் கோவிட் 2) 70% ஒரே மாதிரியாக இருந்தாலும், புதிய வைரஸ் குறைவாக உயிர்ச்சேதம் உண்டாக்குகிறது, ஆனால் அதிகமாகப் பரவுகிறது. இது அதற்கேற்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க ஆய்வாளர்களை நிர்ப்பந்திக்கிறது.
சார்ஸ் கோவிட் 2 வைரஸ் அநேகமாக வௌவால்களிடமிருந்து வந்திருக்க வேண்டுமென நாம் நம்புகிறோம். ஏனெனில் இந்த வைரசின் ஜீன்கள் ஒரு வகை வௌவால்களின் (horse shoe bats) ஜீன்களுடன் 96% ஒத்திருக்கின்றன. ஆனால் வௌவால்களிடமிருந்துதான் மனிதர்களுக்கு நேரடியாகப் பரவுகிறது என்பதற்கு எந்த ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லாத நிலையில், இரண்டுக்கும் இடையில் வேறு எதாவது ஒரு விலங்கு இருக்கக் கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வைரஸ் வௌவால்களிடமிருந்து அந்த விலங்குக்கும், அதிலிருந்து மனிதர்களுக்கும் தாவியிருக்கலாம். அதில் ஒரு வாய்ப்பு அலுங்கு என்ற விலங்கு. ஏனெனில் அதன் உடலில் சுரக்கும் ஒரு புரதம் வைரஸ் உருவாக்கும் புரதத்துடன் 99% ஒத்துப் போகிறது.
புதிய கரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்குத் தாவத் தொடங்கிய போது, அது மனித உடலில் உயிர்வாழ நன்றாகத் தகவமைத்துக் கொண்டிருக்கலாம். இதைக் குறித்து ஆய்வாளர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நியூயார்க்கில் பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஒரு புலிக்கு கரோனா தொற்று பரவியது. அநேகமாகத் அதனைப் பராமரிப்பவரிடமிருந்து கரோனா அதற்குப் பரவியிருக்க வேண்டும். இது வினோதமானது. ஒவ்வொரு நோய்க்கிருமியும் தான் தாக்கும் உயிரினத்தின் நோய் எதிர்ப்பு சக்தியிடமிருந்து தப்பிக்கும் தனக்கே உரிய வழியைக் கொண்டிருக்கும். எனவே மனிதர்களைத் தாக்கும் ஒரு வைரஸ் புலிகளையும் தாக்கக் கூடுமென்பது வியப்பாகவே இருக்கிறது.
விஞ்ஞானிகள் இந்தக் கேள்விக்கும், புதிய கரோனா வைரசை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எதிர்காலத்தில் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி முந்தைய வைரஸ் நம்மைத் தாக்கிய போது நாம் கற்றுக் கொண்டது, புதிய வைரஸ்கள் தாக்கும்போதும் அதை நல்ல முறையில் கையாள உதவும்.
உதாரணமாக மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ரேபிஸ் ஒரு நியூரோட்ரோபிக் வைரஸால் உண்டாக்கப்படுகிறது. இந்த வைரஸ் உடலில் கடித்த இடத்திலிருந்து புறநரம்பு மண்டலம் வழியாக மைய நரம்பு மண்டலத்தை அடைய வேண்டும். (பல வைரஸ்கள் ரத்தம் வழியாகவே உடலில் பரவுவதற்கு மாறாக இது நடக்கிறது). அதாவது, வைரஸ் ரத்த ஓட்டத்துக்கு வெளியே தொடர்ந்து செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்து முறையையே கடத்த அது மாற்று வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டது.
P75NTR என்ற ஒரு புரதம்,விளிம்பு நியூரான்களின் முனையில் இருக்கும். அது நரம்பு வளர்ச்சி அம்சம் ( NGF – nerve growth factor) என்ற பொருளுடன் இணையும். இணைந்த பிறகு, இந்தப் பொருள் ஒரு குமிழி வழியாக மைய நரம்பு மண்டலத்துக்குப் பிரயாணிக்கும். ரேபிஸ் வைரஸ் என்.ஜி.எஃப் போலவே நடந்து கொள்ளும். அது p75NTR உடன் இணைந்து மைய நரம்பு மண்டலத்தை எளிதாக அடையும்.
நோய் விளைவிக்கும் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியா இதபோன்ற தனிச்சிறப்பான முறையை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த பாக்டீரியா கால்நடைகளனான மாடுகள், எருமைகள், குதிரைகள் முதலியவற்றில் அடைப்பான் நோயை உருவாக்குகிறது. விலங்குகளிடமிருந்து இது மனிதர்களுக்குப் பரவுகிறது, ஆனால் மனிதர்களின் உயிருக்கு அது ஆபத்தை விளைவிக்காது.
தான் குடி புகுந்த ஒருஉயிருள்ள உடலில் பாக்டீரியா இயக்க நிலையில் வளர்ந்து பெருகுகிறது. ஆனால் அவை உடலுக்கு வெளியே ஒப்பீட்டளவில் அதிகமான ஆக்சிஜன் இருக்கும் இருக்கும் சூழலில்,தன்னைச் சுற்றிப் பாதுகாப்பாக வித்துக்கள் (ஸ்போர்) என்ற கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளும். அவை வெப்பம், குளிர்ச்சி, அமிலத்தன்மை, வறட்சி, கதிர்வீச்சு ஆகியவற்றைத் தாங்கக் கூடிய கட்டமைப்பு படைத்தலை. இவ்வகையில் இந்த பாக்டீரியா ஒரே சமயத்தில் பல ஆண்டுகளுக்கு உயிர்வாழக் கூடியவை.
வித்துக்களை முகர்வதன் மூலமோ, உட்கொள்வதன் மூலமோ விலங்குகள் ஆந்திராக்ஸ் தாக்கத்தைப் பெறும். இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் புலன்கள் வழியாகச் சென்று அதனால் ரத்தப் போக்கு ஏற்பட்டு அநேகமாக உடனடியாக மரணம் நிகழும். இவ்வாறு மரணிக்கும் விலங்குகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் இந்த நோய் தாக்கிய விலங்கின் உடலிலிருந்து எளிதாக அது மனித உடலுக்குப் பரவி விடும். மாறாக தொற்று ஏற்பட்ட உல் அப்படியே எரிக்கப்பட்டு விடும்.
சில நோய்க்கிருமிகளுக்கு ஒரு உயிரினத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல தஒரு ஊடகம் தேவை. இதற்குச் சரியான உதாரணம் கியாசனூர் வன நோய். அதன் ஊடகம் ஒரு உண்ணிப்பூச்சி. நோய் வைரஸ் பூச்சியிடம் தொற்றிய பிறகு அது நிரந்தரமாக அதில் இருக்கும். அதன் முட்டைகள் வழியாக அதன் வாரிசுக்குத் தொற்றும். இந்தப் பூச்சிகள் குரங்குகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் மேல் உட்காரும் போது, அவற்றுக்கு இந்த வைரஸ் நோய்த்தொற்று ஏற்படும். இந்தப் பூச்சிகள் கடிப்பதன் மூலமாகவோ நோய்த்தொற்று ஏற்பட்ட குரங்கு மூலமாகவோ மனிதர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும். எனினும் நாமறிந்த வரை இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்குத் தொற்றுவதில்லை.
வனங்களை அழிப்பது, விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட மனிதர்கள் உருவாக்கும் அழுத்தங்கள் இந்த நோய் பரவுவதை விரைவுபடுத்துகிறது. 2020, மார்ச் 30 அன்று கர்னாடக மாநிலத்தில் ஒரு விவசாயி இந்த நோய்க்குப் பலியானார். இந்தப் பிரதேசத்தில் மேலும் ஐந்து பேர் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்களிலெல்லாம் மனிதர்கள்தான் கடைசிப் புகலிடம்; இந்த வைரசுகள் மனிதனிடமிருந்து விலங்குகளுக்குத் தொற்றி அவற்றுக்கு அழிவு ஏற்படுத்தவில்லை. கியாசனூர் வன நோயையும், வேறு சில நோய்களை உண்டாக்கிய வைரசுகளைத் தவிர, வேறு சில நோய்க்கிருமிகள் மனிதர்களின் கவனத்தை ஈர்த்தன. இவ்வாறு மனிதர்களின் கவனத்தைக் கவர்ந்த சில விலங்கின வைரஸ்கள் சார்ஸ் வைரஸ், மெர்ஸ் வைரஸ், எபோலா வைரஸ். நிபா வைரஸ் மற்றும் நாம் அறிந்த புதிய கரோனா வைரஸ் ஆகியன.
இவற்றில் மனிதர்களுக்குப் பெரும்பாலான வைரஸ்கள் வௌவால்களிடமிருந்துதான் தொற்றியுள்ளன. அநேகமாக இதற்கு வௌவால்களின் வைரஸ் நோய் எதிர்ப்பு எதிர்வினை காரணமாக இருக்கலாம். பறக்கும் இந்தப் பாலூட்டிகளின் நோய் எதிர்ப்பு எதிர்வினை வலுவானது என்றாலும், வைரசை ஒரேடியாக ஒழித்துக் கட்டுமளவுக்கு வலுவானதல்ல. கூடுதலாக, ஒரு வைரஸ் வௌவால்களின் உடலில் தொற்றும்போது, அவற்றின் செல்கள் இண்டர்ஃபெரான் ஆல்ஃபா என்ற மூலக்கூறை சுரக்கின்றன. இது மற்ற செல்களை வைரஸ்களை எதிர்க்கும் நிலைக்குத் தயாராகுமாறு எச்சரிக்கிறது. எனவே வைரஸ்கள் அது தொற்றியிருக்கும் உடலை பாதிக்காமலே தம்மைப் பெருக்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு மாறாக மனிதர்களிடம் இத்தகைய வைரஸ் எதிர்ப்பு வழிமுறை கிடையாது.
மனிதர்கள் அவற்றின் இருப்பிடத்தையும், சுற்றுச்சூழலையும் இடைஞ்சல் செய்யும்போது, அவை அழுத்தத்துக்குள்ளாகி, தமது எச்சிலில் அதிகமான வைரஸ்களைத் துப்பும். அதன் விளைவாக அதிகமான மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று உண்டாகும் நிலை ஏற்படும்.
இதற்கு மனிதர்களின் சூழலியல் பழக்கங்கள் மட்டுமே காரணமல்ல. சமீபத்தில் பல நோய்க்கிருமிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக அதிகப் பாதுகாப்பை உருவாக்கிக் கொண்டுள்ளன. ஒன்று அதைத் தாங்கும் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளன அல்லது வெளியிலிருந்து தடுப்பு ஜீன்களைப் பெற்றுக் கொண்டுள்ளன. இவ்வாறாக ஒரு நுண்ணுயிரை எதிர்ப்பதில் வலுவாக இருந்த மருந்துகள் ஒரேயடியாக வலுவிழக்கா விட்டாலும், குறைந்த திறனுள்ளவையாக ஆகி விடுகின்றன. பெரும்பாலான நோய்களில், மனிதர்கள், விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க ஒரே வகையான முக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன என்பதால் மனிதர்கள், விலங்குகள் இருவருமே நுண்ணுயிர் எதிர்ப்பு எதிர்வினைக்குத் தமது பங்களிப்பைச் செய்கிறார்கள்.
ஒரு விலங்கின் உடலில் இருக்கும் நோய்க்கிருமியிடமிருந்து எதிர்ப்பு ஜீன்களை மனித உடலில் இருக்கும் இன்னொரு நோய்க்கிருமிக்கு மனிதர்கள் கடத்த உதவ முடியும். இது கெட்டுப்போன சமைக்கப்படாத மாமிசத்தை உண்பதாலும் நிகழக்கூடும். உணவு உற்பத்தியில் இருக்கும் ஏராளமான விலங்கின வகைகள் – கோழிகள், பன்றிகள் போன்றவை – நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உபயோகிப்பதைச் சிக்கலாக்கி விடுகின்றன.
மனிதர்களின் மக்கட்தொகை தொடர்ந்து அதிகரித்து, தொழில்மயமாகி, பூமியின் தோற்றத்தையே மாற்றும் போது, நமது சூழல் அமைப்பும், பல்லுயிர்ப் பெருக்கமும் மோசமாகி, விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களை அதிகரிக்கின்றன. நம்மிடம் ஏற்படும் 75% நோய்த்தொற்றுக்கள் விலங்குகளிடமிருந்தே வருபவை என்பதால், ‘ஒரே ஆரோக்கியக்’ கோட்பாட்டில் மனித, விலங்கின சுகாதார நிபுணர்கள் சேர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களும், விலங்குகளும் பகிர்ந்து கொள்ளும் சூழலில், அவர்களுக்கிடையில் இருக்கும் உறவைப் புரிந்து கொள்ள ‘ஒரே ஆரோக்கியம்’ என்னும் அணுகுமுறை நிச்சயம் தேவை. எனவே விலங்கினங்களால் உருவாகும் நோய்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த, நாம் விலங்கினங்களின் ஆரோக்கியத்தைத் தனித்தனியாகப் புரிந்து கொள்வதை விட சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
நிரஞ்சனா ராஜலஷ்மி (கால்நடை நுண்ணுயிரியலாளர்).
தமிழில்: கி.ரமேஷ்.
நன்றி:The Wire Science