கைபேசியும் கரோனாவும்:
கோவிட்19 என்ற நோயைப் பரப்பும் புதிய கரோனா கிருமியிடமிருந்து மனிதர்களைக் காக்க மருத்துவர்களும் செவிலியர்களும் உலகெங்கும் போராடி வருகிற இந்நாட்களில் அவர்களோடு பொறியாளர்களும் புதிய தொழில்நுட்பங்களால் உயிர்களைக் காக்க உடன் களமாடுவது நம்பிக்கையளிக்கிறது.
என்னென்ன பொறியியல் தொழில்நுட்பங்கள் கரோனாவுக்கு எதிரானப் போரில் உலக நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன?
செயற்கை நுண்ணறிவு-கணித்திறன்:
கிருமியின் மரபணு நிரலை (Genome Sequence) கண்டறிந்தால் தான் அதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய முடியும். 2002 ஆம் ஆண்டில் சீனாவில் சார்ஸ் (SARS) நோய் தாக்கிய போது, கிருமியின் மரபணு நிரலை கண்டுபிடிக்க ஏறக்குறைய 5 மாதங்களுக்கு மேல் ஆனது. புதிய கரோனா-19 கிருமியின் மரபணு நிரல் ஒரு மாதத்தில் கண்டறியப்பட்டது. எப்படி? மீத்திறன் (Super Computer) கணினிகளும் செயற்கை நுண்ணறிவும் இதனைச் சாத்தியப்படுத்தின. மனிதர்களுக்கு மட்டுமே கைவந்த கலையான கற்றுக்கொள்வதையும் சிந்திப்பதையும் எந்திரங்களுக்குள் புகுத்துவது, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம். மருத்துவ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி வேகத்தை அதிகரித்தது பொறியாளர்களின் பங்களிப்பு என்பது சிறப்பு. கரோனா கிருமிக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியிலும் மீத்திறன் கணினிகளும், செயற்கை நுண்ணறிவும் மருத்து விஞ்ஞானிகளுக்கு பெரும் உதவிபுரிகின்றன.
கைபேசி செயலிகள்:
கோவிட் 19 வியாதியின் மிகப்பெரிய சவால் இதன் அதீத தொற்று வேகம். நோய் பாதித்த பகுதிகளில் புழங்கியவர்கள், அவர்களோடு பழகியவர்கள், பயணித்தவர்கள் எனக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும். இதை மருத்துவர்கள் செய்வது சிரமம். இங்கும் பொறியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
சீனாவில் இதற்காகக் கைபேசி செயலிகள் (உதாரணம்: Health Code App) உருவாக்கப்பட்டன. இதில் மருத்துவ வரலாறு, பயணவிபரங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பதித்தால் கரோனா பாதிப்பை பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களில் காட்டும். கைபேசியில் பச்சை நிறம் இருந்தால் மட்டும் ஒருவர் பொது இடங்களில் புழங்க முடியும். சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே பிம்பங்களைக் கொண்டு கோவிட் பாதிப்பை அறியும் தொழில்நுட்ப முயற்சிகளும் உண்டு.
இதைத் தவிர தடுப்புக்காப்பில் (Quarantine) உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதை அறிய அவர்களின் கைபேசி இருப்பிடத்தை வைத்து தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்காணிக்கின்றன. நோய் தடுப்பில் கைபேசி பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
தென் கொரியாவின் Co100 என்ற கைபேசி செயலி, கரோனா பாதிப்படைந்த நபர் புழங்கிய பகுதிக்கு 100 மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை செய்யும். இதனால் ஒருவர் நோய் பாதித்த பகுதிகளை தவிர்க்க முடியும்.
பெருந்தரவு தொழில்நுட்பங்கள்:
கிருமி தொற்றின் போக்கை முன்னறிவிக்கும் தொழில்நுட்பங்களும் உண்டு. புளுடாட் என்ற நிறுவனம், கனடாவில் கோவிட் நோய் எச்சரிக்கையை அரசின் அறிவிப்புக்கு முன்பே வெளியிட்டது. எப்படி? 65 மொழிகளில் வெளிவந்த செய்திகள், சமூக வலைதள தகவல்கள், அரசு அறிவிப்புகள் என லட்சக்கணக்கான தரவுகளை அலசி இந்த முடிவை முன்னறிவித்தது இந்த நிறுவனம். செயற்கை நுண்ணறிவோடு, பெருந்தகவல் தொழில்நுட்பங்களும் (Big Data) கொரானா தடுப்பில் பயன்படுத்தப்படுகின்றன. பெருந்தகவல் தொழில்நுட்பம் என்பது பெரும் தகவல்களை கணினியில் அலசி ஆராய்ந்து அவைகளின் போக்குகளை தொடர்புகளை வெளிப்படுத்துவதாகும்.
பெருந்தகவல் தொழில்நுட்பங்கள் (Big Data)
சில நாடுகள் ஒரு படி மேலே சென்று பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை வைத்து கணினிகளின் மூலம் நபர்களின் முகங்களை அடையாளம் (Facial Recognition) காணும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்றன. முகக்கவசம் அணிந்திருந்தாலும் அடையாளம் காணமுடியும் என சில தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுவது ஆழக்கற்றல் /இயந்திரக்கற்றல் (Deep Learning/Machining Learning) தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தை குறிக்கும் அதே வேளையில் தனிமனித சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆளில்லா விமானங்கள்:
சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்க ஓடுபாதைகளோ, ஹெலிகாப்டர் தளங்களோ அவசியமில்லை. இந்த வகை ஆளில்லா விமானங்கள் பல நாடுகளில் கரோனா தடுப்பில் பயன்படுத்தப்படுகின்றன். விசாலமான பொது வெளிகள், குறுகிய தெருக்கள் உள்ள வசிப்பிடங்களில் குறைந்த நேரத்தில் கிருமி நாசினி தெளிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தின் சில நகரங்களிலும் இம்முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இது தவிர, கிருமி பாதித்த பகுதிகளில் மனிதர்களை அனுப்பாமல், உணவுப் பொருட்கள், மருந்துகள் விநியோகிக்கவும் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆளில்லா விமானங்கள்
வெப்பமானி பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்தபடி காய்ச்சலுள்ளவர்களை அடையாளம் கண்டு பிரித்தெடுக்க சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தரை மற்றும் விமானப்போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில், ரத்த மற்றும் சளி மாதிரிகளை ஆய்வகங்களுக்கு விரைவாக கொண்டு செல்லவும் இவ்வகை விமானங்கள் உதவுகின்றன.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நகரங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க காவல் துறையிலும் ஆளில்லா விமானங்கள் பல நாடுகளில் உதவுகின்றன.
சைப்ரஸ் நாட்டில் கரோனாவுக்கு பயந்து வெளியே வரத்தயங்கிய ஒருவர் தன் வளர்ப்பு நாயை சங்கிலியால் ஆளில்லா விமானத்தில் கட்டி நடைபயிற்சிக்கு அனுப்பி வைத்தது தொழில்நுட்ப விநோதம்!
ரோபோ-எந்திரர்கள்:
ரோபோ-எந்திரர்கள்
கிருமித் தொற்றை தடுக்க மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளில் எந்திரர்களை (Robots) பயன்படுத்துவது அவசியமாகிறது. மருந்து, உணவுப்பொருட்களை உள்நோயாளிகளுக்கு கொடுக்க மருத்துவமனைகளில் எந்திரர்களை பயன்படுத்தியது சீனா. ஏறக்குறை 40 மருத்துவமனைகளில் இப்படியான முயற்சிகள் சீனாவில் நடந்தன. நட்சத்திர விடுதிகளில் அறைகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க எந்திரர்களை பயன்படுத்தும் முயற்சிகளும் உண்டு.
நானோ தொழில்நுட்பங்கள்:
புத்திசாலி தலைக்கவசங்கள்
நானோ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிருமி தொற்று ஏற்படாத முகக்கவசங்களும், பாதுகாப்பு மேலாடைகளும் இந்திய உள்ளிட்ட நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவலியர்கள் உள்ளிட்ட அதிக நோய் தொற்று ஆபத்து உள்ள பணிகளில் ஈடுபடுவோருக்கு இவ்வகை தொழில்நுட்பப்படைப்புகள் பேருதவி புரிகின்றன. பொதுமக்களின் காய்ச்சலை 5 மீட்டர் தூரத்திலிருந்தே கண்டறியும் புத்திசாலி தலைக்கவசங்களை (Smart Helmets) சீன போக்குவரத்து காவலர்கள் பயன்படுத்தி கரானா பாதிப்படைந்தவர்களைக் கண்டறிந்தனர்.
சமூக வலைதளங்கள்:
கரோனா குறித்த அரசின் தகவல்களை எச்சரிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல சமூக வலைதளங்கள் மிக அவசியம். பொய்யான தகவல்களை நீக்குவதிலும் இவைகளின் பங்கு மிக முக்கியம். தகவல்களை தேடும் மக்களின் வசதிக்காக, தேடு பொறிகளும் (Search Engines) உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் வலைதளங்களை முதல் பதில்களாக வரிசைப்படுத்துவது ஒரு தொழில்நுட்ப சேவை தான். இதனால் நம்பகமான தகவல் மக்களை சென்றடைந்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு வழி ஏற்படுகிறது. தவறான தகவல்களால் பீதியடைவதும் தடுக்கப்படுகிறது.
கரோனா பாதிப்பு தகவல்களை உலகவரைபடத்தில் பதிந்து, எந்த நாட்டின் நிலவரத்தையும் உடனடியாக தெரிந்து கொள்ளும் ஊடாடும் வரைபடங்கள் (Interactive Maps) இந்த சமயத்தில் அதிகம் உதவுகின்றன். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் சேவை இதில் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்கள்
சமுதாய விலகலை நடைமுறைப்படுத்தவும் காணொளித் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடும் தேவாலயங்களில் தற்போது பல நாடுகளில் காணொளி காட்சி மூலம் வழிபாடு செய்கிறார்கள். எல்லா மத பிரார்தனைகளிலும் சமூக வலைதள-காணொளி காட்சி போன்ற தொழில்நுட்ப வசதிகளால் சுய தடுப்புக்காப்பில் (Self Quarantine) உள்ளவர்களும் பங்கேற்க முடிகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களும் தங்கள் குடும்பத்தினரின் முகம் பார்த்து பேசி ஆறுதலடைய தொழில்நுட்பம் உதவுகிறது.
கோவிட் பரவல் துவங்கியதும் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் சமூக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது. கொரானா கிருமி தொற்று ஒரு மருத்துவ பிரச்சனையாக இருந்தாலும் நோய் தடுப்பில் பொறியில் தொழில்நுட்பங்கள் பெரும்பங்காற்றுகின்றன.
கட்டுமானத் தொழில்நுட்பங்கள்:
கரோனா போன்ற கொள்ளை நோய்கள் குதிரைப்பாய்ச்சலில் நகரத்தின் பல பகுதிகளில் பரவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகும். இப்படி திடீரென அதிகரிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் வசதிகள் இருக்காது. வல்லரசுகளும் வளரும் நாடுகளும் ஒரு சேர சந்திக்கும் சவால் இது.
கட்டுமானத் தொழில்நுட்பங்கள் (Pre Fabricated)
இதற்கு என்ன வழி? சீனாவில் புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. மருத்துவமனை கட்டுவதற்கு பல மாதங்கள் ஆகுமே? இங்கும் நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. முன் கூட்டியே உருவாக்கப்பட்ட (Pre Fabricated) கட்டிட பாகங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு கட்டிடங்களைக் கட்டலாம். அடித்தளம் அமைக்கப்படும் அதே நேரத்தில் முதல் மாடி பாகங்களை வேறு இடத்தில் உருவாக்கலாம். இந்த தொழில்நுட்பத்தில் சீனாவில் 1000 படுக்கைகள் கொண்ட இரண்டு மாடி மருத்துவமனை 10 நாட்களில் கட்டப்பட்டு கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தற்காலிக மருத்து கூடாரங்கள் அமைக்கப்பட்டும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
பொறியியல் பழகு:
உயிர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கு பொறியல் தொழில்நுட்பங்களின் மூலம் பொறியாளர்கள் உதவுவது பாராட்டத்தக்கது. ஆனாலும் ஆளில்லா விமானங்கள் ரோபோ ஆகியவற்றின் எண்ணிக்கை இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் குறைவு.
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களில் பொறியியல் மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் அரசுகளும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் கரோனா விதைத்திருக்கும் உலகளாவிய பாடம். ஆண்டுக்கு இந்தியாவில் 15 லட்சம் இளைஞர்கள் யுவதிகள் பொறியாளர்களாக உருவாவது நாட்டுக்கு நிச்சயம் நம்பிக்கை தரும் செய்தி.
– ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு