சத்தீஸ்கரின் கிராமப்புறத்தில் சமூக அடிப்படையிலான சுகாதார அமைப்பாகச் செயல்பட்டு வரும் ஜன் ஸ்வஸ்தியா சஹியோக் (JSS – ஜே.எஸ்.எஸ்) என்ற அமைப்பில் குடும்ப நல மருத்துவர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணராக டாக்டர்.  நமன் ஷா எம்.டி., பி.எச்.டி இருந்து வருகிறார். உலகளாவிய தொற்று காய்ச்சல் குறித்து திட்டமிடல், நோய் கட்டுப்பாட்டு ஆய்வுகள், சுகாதாரத் துறைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து திட்ட மேலாண்மை துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 (சார்ஸ்-கோவ்-2) தோற்றம், சுகாதாரம் குறித்து ஆயத்தமாக இருத்தல் உள்ளிட்டு முன்னுரிமை அளிக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி ஃப்ரண்ட்லைனுடன் பேசிய டாக்டர் ஷா, இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிவேகமாக உயரும் என்றும், தொற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையம் போன்ற நிறுவனங்களை மையப்படுத்த வேண்டிய தேவை அதிகமாக உள்ளது என்றும் டாக்டர் ஷா நம்புகிறார்.

அவரது  நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அமைப்புகளின் விழிப்புணர்விற்கான அழைப்பாக கோவிட்-19இன் பரவல் இருந்தாலும்அது வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளையே அதிகம் பாதித்துள்ளது. தொற்றுநோயியல் குறித்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இதில் ஏதேனும் உள்ளனவாஅல்லது இனிமேல்தான் மோசமான நிலைமை வரவிருக்கிறதா?

Covid-19, India and crisis communication | ORF

இந்த நோயின் திடீர் பரவல் விழிப்புணர்விற்கான அழைப்பாகவே உண்மையில் இருக்கிறது. சமூக மற்றும் சர்வதேச உறவுகள் மிக அதிகமாக முறிந்து போயிருப்பதாக உணருகின்ற இந்த காலகட்டத்தில், அதே நோய்க்கு எதிராக உலகெங்கிலும் உள்ள சகாக்கள் தயாராகி அல்லது பதிலளித்து வருவது வியப்பளிப்பதாக உள்ளது.வளர்ந்த நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அவர்கள் கொண்டிருக்கும் அதிக அளவிலான சர்வதேச இணைப்பாலேயே அதிகமாக இருக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோயாளிகள் தொற்றுநோயைத் தூண்டியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்த வரை மோசமான நிலை இன்னும் வரவில்லை; ஆனாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இப்போது நம்மிடையே இருக்கிற வைரஸ் பரவுதல், பயணத்துடன் தொடர்புடையதாக இருப்பதை விட, சமூக அடிப்படையிலானதாகவே இருக்கிறது.  அர்த்தமுள்ள ஒப்பீடுகளை இனிமேல்தான் நம்மால் செய்ய முடியும்.

தொற்று நோய்களிலிருந்து தொற்று இல்லாத நோய்களுக்கு  சமீப காலங்களில் நாம் அளித்து வருகின்ற முக்கியத்துவம் மாறியிருப்பதை காண முடிகிறது. அவ்வாறான மாற்றம் இருந்தபோதிலும்எபோலாஜிகாநிபா மற்றும் பல நோய்களும் இந்த காலகட்டத்தில்தான்  தோன்றியுள்ளன. தொற்று நோய்களின் மீது கவனம் செலுத்துவதில் இருந்து அரசின் கொள்கை வகுப்பாளர்களை  இந்த மாற்றம் திசை திருப்பி விட்டிருக்கிறது என்று  நீங்கள் கருதுகிறீர்களா?

Nipah: A Dangerous Virus That Deserves A Lot of Respect — Tracking ...

நீங்கள் சொல்வது சரிதான். நோய்த்தொற்றுகள் முழுமையாக நீங்கி விடாது. தொற்று அல்லாத நோய்கள், தொற்று நோய்கள் என்று இரண்டுமே இந்தியாவில் இருந்து வருகின்றன. நம்மை அச்சுறுத்துகின்ற காசநோய் உட்பட மற்ற தொற்று நோய்களையும் நாம் புறக்கணித்தே வந்திருக்கிறோம். நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தின் பங்கு (என்.சி.டி.சி) என்பது ஒப்பீட்டளவில் இல்லாமலே இருப்பது, இந்த தொற்றுநோய் தோன்றியதில் இருந்து இதுவரையிலும் என்னை மிகவும் பாதித்த விஷயமாக இருக்கின்றது. பெருமளவில் பரவுகின்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் மைய நிறுவனமாக இந்த என்.சி.டி.சி  இருந்திருக்க வேண்டும்.

இந்த நோக்கத்திற்காகவே அது அமைக்கப்பட்டது மட்டுமல்லாது, அதற்கான விரிவான பங்களிப்பைச் செய்திருப்பதற்கான வரலாற்றையும் அது தன்னிடத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு  சமமானதாக அது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, என்.சி.டி.சி. தன்னுடைய அறிவியல் ஆற்றலை அதிகாரத்துவ மையத்திடம் இழந்து விட்டது. பல அரசுத்துறை பொது நிறுவனங்களைப் போலவே, தன்னுடைய திறமை மற்றும் வளங்களை அது இழந்துவிட நாம் அனுமதித்திருக்கிறோம். அவர்கள் (என்.சி.டி.சி) கோவிட்-19க்கு எதிராகச் செயல்பட்டு வந்தாலும், நாம் எதிர்பார்ப்பது போல பிரச்சாரத்தை முன்னின்று வழிநடத்தவில்லை.

சமுதாய பரவல் நிலையில் இந்தியா இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. நோய்த்தொற்றின் அறிகுறி உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டியதில்லை; வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன்  தொடர்பு கொண்டவர்கள் என்று வரையறையைச் செய்து கொண்டு, மிகக் குறைந்த பரிசோதனை அளவுகோல்களையே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு குறைந்த அளவிலான பரிசோதனை செய்யப்படுவது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறை என்று  நீங்கள் கருதுகிறீர்களா?

Coronavirus in India: Cure and Preventive measures

இது  அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறுபிள்ளைத்தனமான சொல் விளையாட்டு ஆகும். சமூகத்தை விலக்கி வைத்து, நம்மிடையே போதுமான பரிசோதனை மற்றும் பரிசோதனை அளவுகோல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றால்,  தேவையான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கப் போவதில்லை. சிறிது காலத்திற்கு, மிகக் குறைவான சில மாதிரிகளை மட்டும் எடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இங்கே நோய் இருக்கின்றது என்பதையும், அது தொற்றுநோய் என்பதையும், அதிவேகமாக அது பரவி வருகிறது என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

சமூகப் பரவலுக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகின்ற அரசாங்கம், பரிசோதனைகளை மறுப்பதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஆம், பரிசோதனை குறித்த நடவடிக்கைகளில் முழுமையான மாற்றம் அவசியம் தேவை. நமது நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதுவே, மிகக்குறைவாக மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளுக்கான காரணமாக இருக்க முடியாது. அறியாமை காரணமாக இருக்கின்ற போது, கெட்ட எண்ணங்களே காரணம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற முதுமொழியை நான்  இங்கே துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

தொற்றுக்கான இது போன்ற  பரிசோதனைகள்  அதிக செலவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றனவா? இந்த பரிசோதனைகள் இன்னும் பரவலாக மேற்கொள்ளப்படுவதற்கான தொழில்நுட்பத்தை  நியாயமான விலையில் உருவாக்க முடியுமா?

F.D.A. Approves New Coronavirus Test Under 'Emergency Use ...

இது நல்ல கேள்வி.  தற்போது  நாம் மேற்கொள்கின்ற பரிசோதனைகள் மிகவும் குறைவாக இருந்தாலும், விரிவான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்பதை நான்  நம்பவில்லை. பரிசோதனையின் நோக்கம் என்ன என்பதை நாம் கேட்க வேண்டும். நோயாளிகளைப் பொறுத்தவரை, லேசான தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை என்பதால், அவர்களிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனை தற்போது அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சையை மாற்றப் போவதில்லை; கடுமையான தொற்று இருக்கின்ற சந்தர்ப்பங்களில், மருத்துவ நோயறிதல் முறைகளின் அடிப்படையில் சிகிச்சையளிப்பதே சரியானதாக இருக்கும்.

ஆரம்ப கட்டங்களில் பரிசோதனைகள் தனிமைப்படுத்த உதவுவதால். பொது சுகாதார நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் எண்ணிக்கை  அதிகரிக்கும் போது அந்த முறை செயல்பட முடியாது. வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தலை நம்மால் பரவலாக மேற்கொள்ள முடியாது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும், பரிசோதனையானது நபர்களுக்கிடையேயான தொடர்பையும், பரவுவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கவே செய்கிறது. நோயின் அறிகுறிகள் உள்ள பலருக்கு பிற வைரஸ் நோய்கள் இருக்கலாம். அவர்கள் சுகாதார மையங்களில் கூடுவதன் மூலம், கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு, விரிவான பரிசோதனைகள் நிச்சயம் விலை உயர்ந்தவையாகவே இருக்கும். அதற்காகப் பயன்படுத்தப்படும் நிதிகள் வேறு பணிகளுக்காக சிறப்பாகப் பயன்படுத்தப்படலாம். இப்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளுக்கு ரூ.1,000 (மலேரியாவுக்கு ரூ.20) செலவாகிறது. இந்த பரிசோதனைகள் குறைந்த உணர்திறன் கொண்டவையாகவே இருக்கின்றன. அதாவது 20-30 சதவீத நோய்த் தொற்றுள்ள மாதிரிகளை இந்த பரிசோதனைகளால் கண்டு கொள்ள இயல்வதில்லை.

இந்த விகிதம் மற்றும் பரிசோதனைக்கு ஆகின்ற செலவு ஆகியவறைப் பார்க்கும் போது, ரத்த அடிப்படையிலான விரைவான பரிசோதனைகளே மேம்பட்டவையாக இருக்கின்றன. ஆனாலும் பரிசோதனைக்கான  நியாயம் ஒருபோதும் மாறாது. இந்தப் பரிசோதனைகள் நோயின் தற்போதைய போக்குகளைப்  புரிந்து கொள்வதற்கான கண்காணிப்பிற்காக நமக்குத் தேவைப்படுகின்றன. பரவுதலைக் குறைப்பதற்கான பொருளாதார ரீதியான மற்றும் உடல்ரீதியிலான கட்டுப்பாடுகள் போன்ற  தலையீடுகளை இலக்காகக் கொள்வதற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள்  நமக்குத் தேவை.ப்படுகின்றன.

முழுமையான ஊரடங்கல் இந்தியாவிற்கு தேவைப்பட்டதா? வகைப்படுத்தப்பட்ட ஊரடங்காக அது இருந்திருக்கலாமா?

அப்போது நாம் தயாராக இருந்திருக்கவில்லை. இன்னும் அப்படியேதான் இருக்கிறோம். தேசிய அளவிலான ஊரடங்கு என்பது மிகவும் உச்சபட்ச நடவடிக்கையாகும். குடிமக்கள் பலரும் ஏற்கனவே ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற, சமூக ஆதரவிற்கான வழிமுறைகள் பலவீனமாக இருக்கின்ற ஒரு சமூகத்தில், தேசிய அளவிலான ஊரடங்கு போன்ற நடவடிக்கையின் பக்க விளைவுகள் இன்னும் கடுமையானவையாக இருக்கின்றன.

India observes 'Janta Curfew' as Covid-19 cases rise above 300

இந்த குடிமக்களே வைரஸால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஊரடங்கு சமூகப் பரவலை தாமதப்படுத்துவதற்கான  நேரத்தை  அளிப்பதாக இருந்தது. நமக்குத் தேவையான முக்கியமான கால அவகாசத்தை அளித்தாலும், இந்த ஊரடங்கால் எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்படும் போது, அந்த எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரிக்கும்.

பிராந்திய அளவிலான ஊரடங்கு சிறந்த அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால் அதனை எங்கே  பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வதற்கு நமக்கு ஏராளமான தரவுகள் தேவைப்படும். நிச்சயமாக, அந்த ஊரடங்கு மோசமாகவே திட்டமிடப்பட்டது. 48-72 மணிநேர எச்சரிக்கை மற்றும் தயாரிப்பு வேலைகளைச் செய்திருந்தால்கூட, அது ஏற்படுத்திய பல பாதிப்புகளை நம்மால் குறைத்திருக்க முடியும். ஊரடங்கு எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுகிறது என்பது இங்கே எழுகின்ற மற்றொரு கேள்வி. விரைவாக நம்மைத் தயாரித்துக் கொண்டால், இப்போது 21 நாட்களுக்கு முன்னதாகவே  ஊரடங்கை முடித்துக் கொள்ளலாம் என்றே நான் நினைக்கிறேன்.

வைரஸின் வேகம் விவாதத்திற்குரிய மற்றொரு விஷயமாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, அது சீனாவில் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் வந்துள்ள இதைப் போன்ற தொற்றுநோய்களின் அடிப்படையில் பார்த்தால், ஆரம்பகட்ட உச்சத்திற்குப் பிறகு தொடர்ச்சியான சரிவு என்பதற்கு சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். பெரும்பாலான தொற்றுநோய்கள் இரண்டாம்கட்ட உச்சத்தைக் கொண்டிருந்தன.

ஒரு சமூகத்திற்குள்ளேயும், சமூகங்களுக்கிடையிலும் கொரோனா வைரஸ் பரவுவது, எத்தனை பேர் அங்கே பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்பது போன்ற காரணிகளை அது சார்ந்திருக்கிறது. நோயின் போக்கை தீவிரமாகப் பாதிக்கின்றவையாக இருக்கின்ற திறனுள்ள  தடுப்பூசி, புதிய சிகிச்சை முறைகள் அல்லது வைரஸில் ஏற்படும் பிறழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த நிச்சயமற்ற, ஆனால்  பொதுவான முன்னேற்றங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை நம்மால் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடியாது.

உலகளவில், சுகாதார உள்கட்டமைப்பில் குறிப்பாக பொது சுகாதாரத்தை வழங்குவதில் பற்றாக்குறை இருக்கிறது. உலகளவில்  நடந்திருக்கும் இந்த விஷயத்திலிருந்து ஏதேனும் பாடங்கள் கற்றுக் கொள்ளப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது  நிலைமை இயல்பானவுடன், வழக்கம்போலவே வேலைகள் தொடருமா?

நெருக்கடிகள் மாற்றத்திற்கான அருமையான வாய்ப்பை வழங்குகின்றன.

1) அனைவருக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான சுகாதார பாதுகாப்பை  உருவாக்குதல்

2) போதுமான சமூக பாதுகாப்பு வலைகள் மூலமாக ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதை உறுதி செய்தல்

3) நமது நோய் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு செய்வது என்ற மூன்று முனைகளில் இருந்து குடிமக்களும், அவர்களுடைய தலைவர்களும்,முன்னேறுவார்கள் என்று நான் நம்புகிறேன். பாரம்பரியமாக இருந்து வருகின்ற கண்காணிப்பு, நோய்க்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் சுத்தம் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளின் மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படுகின்றன. என்றாலும், அவற்றின் வெற்றிகள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்பதால் பெரும்பாலும் அவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

India's rural public health facilities need urgent fixing

இந்திய மக்களில் பெரும்பாலானோர் இளமையாக இருப்பதால், இந்தியா குறைவான ஆபத்தில் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களாஇந்தியாவில் உள்ள மோசமான சுகாதார நிலைமையின் தாக்கம் என்னவாக இருக்கும்?

நமது மக்கள் மீது வரவிருக்கின்ற ஆபத்தை கணிப்பது மிகக் கடினமானது. நாம் இளைய மக்கள் கொண்ட நாடு என்பதும், சில இணை நோய்கள், நீரிழிவு மற்றும் இதய நோய்களின் விகிதம் நம்மிடையே குறைவாக இருப்பதும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாடு  அதிக அளவில் இருந்தாலும், கோவிட் – 19 ஏற்படுத்தும் ஆபத்திற்கு ஊட்டத்துக் குறைபாட்டின் பங்களிப்பு குறித்து இன்னும் அறியப்படவில்லை. கிராமப்புற மத்திய இந்தியாவில் உள்ள ஜே.எஸ்.எஸ்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில்,  ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் இருப்பது, பல நோய்களால் ஏற்படும் சிக்கல்களுக்கும், மோசமான விளைவுகளுக்கும் முக்கியமான காரணியாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களுக்கு வைரஸ் பரவினால், அதைக்  கண்காணிப்பதற்கும், சமாளிப்பதற்கும்  தேவையான  வசதிகள் நமது சுகாதார அமைப்பில் இருக்கின்றனவா?

நாங்கள் வேலை செய்யும் இடத்தில் இல்லை. பல பொது சுகாதார சேவைகள் இன்னும் இங்கே எளிய தேவைகளுக்காகப் போராடி வருகின்றன. ஸ்க்ரப் டைபஸ் அல்லது லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற கடுமையான காய்ச்சல்கள் குறித்து அக்கறை கொள்ளுதல், பிறப்பின் போதான அவசரநிலைகளை நிர்வகித்தல், அறிவிக்கத்தக்க நோய்களைப் பற்றி தகவல்களைத் தருவதற்கான நிர்வாக அம்சம் போன்றவை இதில் அடங்கும். தொற்றுநோய் பற்றிய அச்சத்தைத் தூண்டுகின்ற, பரவலாக இருக்கின்ற இந்த புதிய நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றே நான் கருதுகிறேன்.

Are Indian villages Corona ready..? - Tolivelugu

கூடுதலாக, பல சாதி பிளவுகள் மற்றும் பழங்குடியின மக்களின்  தேவைகளை கவனிக்காத வரலாறு நமக்கு இருப்பதால், சமூக நம்பிக்கை நம்மிடையே மிகக்குறைவாகவே உள்ளது. போதுமான  ஆதரவு, உணவு, போக்குவரத்து மற்றும் அடிப்படை சிகிச்சைகளுக்காக மருத்துவ மையங்களை அணுகுதல் போன்றவற்றை மக்களுக்குத் தந்து அவர்களை ஆயத்தப்படுத்துவதே இப்போது நம்மிடம் இருக்கின்ற ஒரே நம்பிக்கையாகும். பெரும்பாலும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தோல்விகளை அடைகின்ற வரலாறு நம்மிடம் இருப்பதால், அடையக்கூடியவையாக இருக்கின்ற  நல்ல திட்டங்களை நாம் உருவாக்கிட வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு வெண்ண்டிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (பிபிஇ) தேவைக்கும், அவை கிடைப்பதற்கும்  இடையிலான இடைவெளி எவ்வளவு பெரியதாக இருக்கிறது?

இதுவரையிலும், நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக ஆரம்ப நிலையிலே இருப்பதால், நிலைமை மோசமாக இருக்கவில்லை. ஜே.எஸ்.எஸ்ஸில், இப்போது நாங்கள் போதுமான அளவு  இருப்பு வைத்திருக்கின்றோம். மாநில அரசிடமிருந்து கூடுதல் பொருட்களைப் பெற்றுள்ளோம். இப்போதிலிருந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குப் பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்போதுதான், உண்மையான சோதனை ஆரம்பிக்கும். போதுமான பிபிஇகளைத் தயாரித்து, அவற்றை நல்ல முறையில் எங்களால் விநியோகிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

https://frontline.thehindu.com/cover-story/article31269300.ece    

 – டி.கே. ராஜலட்சுமி

ஃப்ரண்ட்லைன் இதழ், 2020  ஏப்ரல் 11

தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *