கோவிட்-19 தாக்குதல் என்பது, ஒரு நோய் என்பதைவிட, வாராது வந்த மாமணியான வாய்ப்பாகவே நரேந்திர மோடிக்கு அமைந்துவிட்டது. வரலாற்றின் மிகப்பெரிய ‘லாக்-டவுண்’ என்று வருணிக்கப்பட்ட ஊரடங்கை மார்ச் 24 அன்று அறிவிப்பதற்குமுன், இந்தியாவின் மதச்சார்பின்மையின்மீது, குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில், அவர் அரசு தொடுத்திருக்கிற தாக்குதலுக்கு எதிராக எல்லாப் பெரிய நகரங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டங்கள், அவர் இருக்கும் டெல்லியிலேயே நடைபெற்று 53 உயிர்களைப் பலிவாங்கிய மிகப்பெரிய மதக்கலவரம், உயர்ந்துகொண்டே போகும் வேலையின்மை, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி என்று, தன்னாலேயே உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்குள் இந்தியப் பிரதமர் மூழ்கிக்கொண்டிருந்தார். அவரை முன்னிறுத்திய மதவாத அமைப்புகளின் மோசமான நடவடிக்கைகளால் மோடியின் புதிய இந்தியா செங்குத்தாகச் சரிந்துகொண்டிருந்தது. சீனாவிலிருந்து பரவிய நோய்க்கிருமி, ஆபத்பாந்தவனாக வந்து, சாக்குச் சொல்ல உதவியது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகளை வாங்கத் தொடங்கியிருந்த ஃபிப்ரவரியில், ட்ரம்ப்புக்கு கோலாகலமான வரவேற்பளிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கவிழ்ப்பது என்றிருந்த மோடி, முதலில் கொரோனாவைக் கண்டுகொள்ளவேயில்லை. ஐரோப்பாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிய மார்ச் இறுதியில்கூட 84 ஆயிரம் மக்களுக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை, 11,600 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர், 1,826 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவமனைப் படுக்கை என்ற நிலையில்தான் இருந்த இந்தியாவில், அதைத் தடுப்பதற்கான தயாரிப்புப் பணிகளை மோடி தொடங்கவில்லை. கொரோனா நோயாளிகளைக் கையாளுபவர்களுக்கான தற்காப்புக் கருவிகள்(பிபிஈ) வாங்குவதற்கான முதல் ஆர்டரே, ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரம் முன்பாகத்தான் அளிக்கப்பட்டது. அதுவே முன்னேற்றம்தான் என்று சொல்லுமளவுக்கு, அதுவரை எந்த நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படவில்லை!

அடுத்த சில நாட்களில், கட்டிடத் தொழிலாளர்களாக, சமையல் காரர்களாக, சுத்தம் செய்பவர்களாக, பணியாளர்களாக இந்தியர்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்த பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மண்ணை நோக்கி நடந்தே செல்லத் தொடங்கினர். 1947இல் பிரிவினையின்போது புலம் பெயர நேரிட்ட மக்கள் சந்தித்த கொடூரங்களை நினைவூட்டிய இந்த வெளியேற்றத்தில், பாதிக்கப்பட்டவர்களை இந்தியாவின் குடிமக்களாகவே மோடி கருதவில்லை. பலநூறு கி.மீ. நடையில் சோர்ந்து விழுந்து இறந்தவர்கள் உட்பட, திட்டமிடப்படாத லாக்டவுணால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மத்தியில் 200ஐக் கடந்தது. கொரோனா பரவலை இந்தியாவில் முடக்கப் பயன்பட்டதோ இல்லையோ, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை முடக்க, இந்த லாக்டவுண் மோடியால் மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. மோடியின் பயனற்ற நடவடிக்கைகளை விமர்சிப்பது தேசத் துரோகமாக ஆனதுடன், கைத் தட்டுதல், விளக்கேற்றுதல் முதலான கோமாளித் தனங்களைச் செய்வதே, நல்ல குடிமகனுக்கு இலக்கணமாக்கப்பட்டது.
லாக்டவுணால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழ்மையிலும் ஏழ்மையிலுள்ளவர்களுக்கு உதவுவதற்கு, நிதி திரட்டுவதற்காக, வரிச் சலுகையுடன் நன்கொடை வசூலிக்க, ‘ரகசிய’ கணக்கு தொடங்கப்பட்டது. அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்குப் புகழ்பெற்ற ஹைட்டி அதிபர் ‘பப்பா டாக்’-கே வெட்கப்படக்கூடிய வகையில், இந்த நிதிக்கு ‘பிஎம் கேர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் குவிந்தன. அரசு ஊழியர்கள் ஊதியத்தின் ஒரு பகுதியைத் தர ‘அன்பாக’ வலியுறுத்தும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. தொழிலாளர்களின் மிகக் குறைந்த ஊதியத்தைக்கூட மறுத்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல கோடிகளை பிஎம் கேர்சுக்கு வாரி வழங்கின. பிஎம் கேர்சுக்கு 5 லட்சம் டாலர்களை வழங்கிய சில நாட்களில், ஒரு நிறுவனம் ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

சரி… மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே, அவ்வளவு நிதியும் எங்கே சென்றது? இது யாருமே விடையளிக்க முடியாத கேள்வி. ஏனென்றால் பிஎம் கேர்ஸ் என்பது ஒரு தனியார் அறக்கட்டளையாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் ஆடிட்டர் இதை தணிக்கை செய்ய முடியாது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலக நாடுகளின் தலைவர்கள் தடுமாறி, அச்சமுற்று, வீறுகொண்டெழுந்து, மக்களை வேண்டி என்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதே நேரத்தில், ஜனநாயக உலகின் மிகமோசமான வஞ்சகத்தை துணிந்து செய்வதற்கான வாய்ப்பாக, நூற்றாண்டின் மிகமோசமான நோய் நெருக்கடியை மோடி பயன்படுத்திக்கொண்டதுதான், கொடுமை. திரட்டப்பட்ட நிதியை மோடி தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார் என்று நம்பவைக்கப்பட்டுள்ளதால், சுவிஸ் வங்கியில் போய் முடங்கிவிடும் என்று, ஜனநாயகத்தின் எதிர்காலத்தின்மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை என்றாலும், நிச்சயமாக மக்களுக்குப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஊழலை மேலும் வளர்ப்பது, மோடியின் மதவாதக் கொள்கைகளுக்குள் சிக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட, மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்குவது, மிகவும் விலைவாசி உயர்ந்துவிட்ட ‘தேர்தல் சந்தையில்’ மற்றவர்களைவிட அதிகம் செலவிடுவது, அவரது அதிகாரத்திற்கு குறுக்கீடுகளாக இன்னும் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தின் தடைகளைத் தகர்ப்பது ஆகியவற்றுக்கெல்லாம் இந்த நிதி பயன்படலாம்!
சரி… அந்த ஏழ்மையிலும் ஏழ்மையிலுள்ளவர்களின் நிலை? அவர்களை எதற்குப் பயன்படுத்திக்கொள்வது என்ற வழிகளை, மே.1 அன்று, மேலும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய லாக் டவுண் நீட்டிக்கப்பட்டதுமே, மோடியின் விசுவாசிகள் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசரகால ரயில், பெங்களூரில் தடுத்து நிறுத்தப்பட்டது. மோடி அரசால் கைவிடப்பட்ட தொழிலாளர்கள், சொந்த மண்ணிற்குச் செல்லும் அடிப்படை உரிமை தடுத்து நிறுத்தப்பட்டதை, நல்ல வாழ்க்கையைத் தேடி பெங்களூருக்கு வந்த புலம் பெயர் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட அவசியமான, துணிச்சலான நடவடிக்கை என்று மோடியின் எம்பிக்களுள் ஒருவர் ‘விளக்கினார்’. தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டால், பணிகள் பாதிக்கப்படும் என்று பெங்களூரின் கட்டுமானத் தொழில் பெருமுதலாளிகள் வலியுறுத்தியதாலேயே, தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பதுடன், எதிர்ப்புகள் வலுத்ததும் அவர்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டுவிட்டனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் ஏழ்மையிலிருப்பவர்களின் ஒரு பகுதியான இத்தொழிலாளர்களுக்கு, சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தைக்கூடச் செலுத்தாமல், அவர்களின்மீதான அக்கறையை அந்த அரசு வெளிப்படுத்தியது. அதற்குச் சிலநாட்கள் முன்னதாகத்தான் பிஎம் கேர்ஸ் நிதிக்கு, ரூ.151 கோடியை வழங்கிய, அரசுக்குச் சொந்தமான இந்திய ரயில்வே, இத் தொழிலாளர்களிடம் முழுக்கட்டணம் கேட்டதுதான் கொடூரத்தின் உச்சம்!
இதற்கிடையே, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று, பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவதற்காக என்ற சாக்கில், தொழிலாளர்களின் அடிப்படையான சட்டப் பாதுகாப்புகளை, மோடியின் கட்சி ஆட்சியிலிருக்கும் இரு மாநிலங்கள் பிடுங்கிவிட்டன. உலக வரலாற்றின் மிகமோசமான தொழிலகப் பேரழிவை போபாலில் உருவாக்கியதைப் போன்ற நிறுவனங்களுக்கு, அடிப்படைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதுதான் இதன் உண்மையான பொருள்! தென்னிந்தியாவின் ஒரு பாலிமர் தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேறி 11 பேர் பலியானது என்பது, இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தபோகும் அழிவுகளுக்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது.
இந்திய மண்ணில் காணப்படுகிற மோசமான சமூகப் பிரிவினைகளைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான சாக்காக கோவிட்-19 மாறியிருக்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்களை அழிக்கும் காவிகளால் மட்டும் இது செய்யப்படவில்லை. இந்தச் சாதுர்யமான நடவடிக்கையைக் கட்டமைத்துச் செயல்படுத்துபவர்கள், தாராளப் பொருளாதார வாதிகளே. பண்டைய இந்தியாவில், கீழ்ச் சாதியினருக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே, புரியாத மொழியில் வழிபாட்டை நடத்தியவர்களைப் போன்றவர்கள் இவர்கள். பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் ஏழைகளின் உரிமைகளை மறுப்பதே நோக்கம் என்பதால், சிக்கலான சொல்லாடல்களுடன், புரிந்துவிடாததாகவே இவர்களின் வாதங்கள் இருக்கும். ‘தேர்தலின்போது மட்டுமே எளிய மக்கள் தேவைப்படுகிறார்கள். அதன்பின், புத்திசாலித்தனமான பொருமுதலாளி வர்க்கம், தங்கள் தொழில்களுக்கேற்றவாறு அரசை சிறப்பாக நடத்த வழிவிட்டு, அரசியலை மறந்து, தங்கள் வேலைகளை மட்டும் மக்கள் பார்க்க வேண்டும்’ என்று, பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அதுல் கோலி சொல்லும் ‘இரட்டைத் தட ஜனநாயக’ அமைப்பை இந்தியாவில் நிறுவுவதுதான், இவர்களின் நோக்கமாக எப்போதும் இருக்கிறது.
அவர்களின் மீட்பராகப் பணியாற்ற, மோடிக்கு கோவிட்-19 புத்துயிரூட்டியிருக்கிறது. ஏழ்மையில் வளர்ந்த பிரதமரின் நடவடிக்கைகளில், திடீர்ப் பணக்காரர்கள் ஏழைகளிடம் காட்டும் அலட்சியம் வெளிப்படுகிறது. இந்த ‘ஏழைத் தாயின் மகன்’ பயணிப்பதற்காக, இரண்டு போயிங் விமானங்கள் வாங்க, கடந்த பட்ஜெட்டில் 100 கோடி டாலர்களுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தன் ஆட்சியின் நினைவுச்சின்னமாக, புதிய புதுடெல்லியைக் கட்டமைக்கும் தற்புகழ்ச்சித் திட்டம் சிக்கலின்றி செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய பல தற்புகழ்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடிகளை, இந்தியாவில் கொரோனாவால் தீவிரமடைந்துவரும் சோகங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. மோடியின் தற்பெருமை, வன்மம், பொருத்தமற்ற செயல்பாடுகள் ஆகியவை, கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்தியாவை எல்லா வகையிலும் நாசமாக்கிவிட்டன. அனைத்தையும் சரிசெய்யும் சர்வரோக நிவாரணியாக இன்று பிணைத் தொழிலாளர் முறையைக் கொண்டுவர முயற்சிக்கிறார் மோடி!
கட்டுரையாளர்: அறிவுக்கடல்