புதிய கொரானா தொற்று நோய்க் கிருமிகள் தோற்றம் குறித்தும், அவற்றின் பாதிப்புகள் குறித்தும் உலக அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தொற்றுநோய் கிருமிகள் உருவாவதும், எண்ணற்ற மக்களை கொல்வதும் உலகத்திற்கு புதிய நிகழ்வந்று. சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்புகூட ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற தொற்றுக்கிருமி கோடிக்கணக்கான மனித உயிர்களை பலி கொண்டது. இது மட்டுமல்ல தொற்றுநோய்க் கிருமிகள் உலகத்தின்மீது படையெடுப்பை நிகழ்த்துவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக நிகழக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
நவீன விவசாயத் தொழில்துறையின் மூலம் புதிய கொரானா தொற்றுக் கிருமிகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்து, பின்னர் அவை உலகம் முழுவதும் அது பரவி மனித இனத்தின்மீது கோரத்தாண்டவமாடும் இந்தச் சூழ்நிலையிலும், மருத்துவம் சார்ந்த தொழில்களில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தையும் சுரண்டலையும் நடத்தி வருகின்றன. மக்கள் சாவதைப் பற்றி கவலையில்லை, மூலதனத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இது போன்ற நெருக்கடியான காலங்களின் விதி. தொற்றுநோய் கிருமிகள் உருவாவதற்கான சமூகப் பொருளாதார காரணிகள், வரலாற்று பின்புலத்துடன் இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
- நகரத்திற்கும் கிராமத்திற்கும் ஏற்பட்ட பிளவு
16 அல்லது 17 ஆம் நூற்றாண்டுகள் வரை நகரங்கள், கிராமப்புறங்களைச் சார்ந்து இருந்தன. உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் வரம்புக்குட்பட்டிருந்தன. விரிவான நகரமயமாக்கல் தடுக்கப்பட்டிருந்தது. நகரத்தின் கழிவுகள் கிராமங்களுக்கு போய்ச் சேர்ந்தன. அவை கிராமபுறங்களில் இருந்த மண்ணை மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தின. உண்மையில் ஆரம்பகால நகர்ப்புற மையங்கள் உயிரியல் சூழலில் அமைந்திருந்தன.
இருப்பினும், முதலாளித்துவம் வளர்ச்சியடைந்ததும், நகரங்களின் பரப்பளவு கூடியது. மக்கள் தொகை அதிகரித்தது. பெரிய அளவிலான தொழில்துறை உருவானது. இதற்கு தொழிற்சாலைகள், மூலப்பொருள், தொழிலாளர்கள் மற்றும் அதிக அளவு உணவு தேவைப்பட்டன. நகர்ப்புறப் பொருட்கள் சுழற்சிக்கு செல்வது நிறுத்தப்பட்டது. நகரங்கள் கிராமத்தை விட்டு வெகுதொலைவு நகர்ந்தன. முன்பு முதலாளித்துவ சமூகம் கொண்டிருந்த “இயற்கையால் விதிக்கப்பட்ட நிலைத்தன்மையின் நிலைமைகள்” மாறியது.
வர்த்தகம் விரிவடைந்ததால், உணவு மற்றும் நார்ப்பொருட்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மண்ணின் ஊட்டச்சத்துக்கள் விவசாய விளைபொருட்களின் வடிவத்தில் நகரங்களுக்கு அனுப்பப்பட்டன, ஆனால் இதே ஊட்டச்சத்துக்கள், மனித கழிவுகளின் வடிவத்திலோ அல்லது விலங்குகளின் கழிவுகளின் வடிவத்திலோ மீண்டும் விவசாய நிலத்திற்கு திரும்பவில்லை. இதனால் கிராமத்திலிருந்தும் நகரத்திற்கும் செல்லும் பாதை ஒரு வழிப்பாதையானது. அந்தப் பாதை, மண்ணை கொள்ளையடிப்பதாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவு, ஒருபுறம் கிராமத்தின் மண்வளம் குன்றியது. இன்னொரு புறம் நகரங்கள் மாசுபாட்டால் நிறைந்தது. இதனால் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே பிளவு உருவானது. முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தியின் சமூக சுற்றுச்சூழல் உறவுகள் நீடிக்க முடியாதவையாக இருந்தன.
- மண் அறிவியலின் வளர்ச்சி
ஜேர்மன் விவசாய வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லிபிக், தனது ‘ஆர்கானிக் வேதியியலில் அதன் பயன்பாடுகள் வேளாண்மை மற்றும் உடலியல்’ (1840) என்ற நூலில், தாவரங்களின் வளர்ச்சியில் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் பங்கைப் பற்றிய விளக்கத்தை வழங்கினார். பின்னர், இவர் ‘வளர்சிதை மாற்றம்’ என்ற சொல்லின் பொருளை விரிவுபடுத்தினார். அதாவது உடலில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள் முதற்கொண்டு, இயற்கை அமைப்புகளில் நடைபெறும் உயிர் வேதியியல் செயல்முறைகள் வரையிலும் இந்தக் கோட்பாட்டை அவர் விரிவுபடுத்தினார்.
காலப்போக்கில் லிபிக் உருவாக்கிய இந்த கோட்பாடுகள், முதலாளித்துவ விவசாயத்தை மிகவும் விமர்சித்தன. மண்ணின் ஊட்டச்சத்து சுழற்சி என்ற நிலைப்பாடு, கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் இடையிலான சமூக-பொருளாதார முரண்பாடாக மாறியது.
இத்தகைய வளர்சிதை மாற்றக் கோட்பாட்டை மேலே குறிப்பிட்டுள்ள லீபிக்கின் மண்ணியல் பகுப்பாய்விலிருந்து மார்க்ஸ் பெற்றுக் கொண்டார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் இந்த வளர்சிதை மாற்றக் கோட்பாட்டை தொழிலாளர்களின் உழைப்பு நிகழ்முறையோடு இணைத்துக் கொண்டார். உழைப்பின் மூலமே மனிதர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்ய இயற்கையைச் சார்ந்து இயங்கினர். இயற்கையின் மீதான சமூகத்தின் வளர்சிதை மாற்றம் என்பது உலகலாவிய பண்பாக நிலைத்து நின்றது.
வளர்சிதை மாற்றம் என்பது ஒரு சிக்கலானக் கோட்பாடாகும். மண்ணின் வளம் என்பது அதன் இயற்கையான தன்மையால் உருவானதன்று. மாறாக அந்தந்த காலத்தில் நிலவும் சமூக உறவுகளுடன் பிணைக்கப்பட்டது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரங்களில் ஏற்பட்ட மாசுபாடு பிரச்சனையை, கிராமப்புறத்தின் மண்வளக் குறைபாடு என்ற அபாயத்தோடு அவர் தொடர்புபடுத்தினார்.
- காரல் மார்க்சின் ஆய்வு
காரல் மார்க்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தார். இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின் அடிப்படையில் விவசாயப் புரட்சி ஏற்பட்டது. இரண்டாம் விவசாயப் புரட்சியின் காலத்தில் மார்க்ஸ் இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவைப் பற்றி ஆராய்ந்தார். இயற்கையும் சமூகமும் ஊடாடும் துறையில் ‘வளர்சிதை மாற்றம்’ குறித்த கோட்பாட்டை உருவாக்கினார்.
பிரிட்டனில் அப்போது, விவசாயம் பெருமளவு வளர்ந்து வந்தது. பெரியளவிலான பண்ணைகளில் விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக மண் சார்ந்த வேதியியலின் வளர்ச்சியும், ரசாயன உரங்களின் பயன்பாடும் அதிகரித்திருந்தன. அதனால் மண்ணின் வளம் மிகவும் குறைந்து போனது. அப்போதைய முதலாளித்துவ சமுதாயத்திற்கு இது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தது. மண்ணின் வளத்தில் ஏற்பட்ட குறைப்பாட்டைச் சரிபடுத்த உரம் தேவைப்பட்டது.
அதற்காக, எலும்புகளும் பறவைகளின் எச்சங்களும் உரமாக பயன்படுத்தப் பட்டன. இதனால், பிரிட்டனும் பிற நாடுகளும் எலும்பு மற்றும் குவானா (கடற்பறவை மற்றும் வைவால்களின் எச்சம்) போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பெருவிய நாட்டில் கிடைக்கும் குவானாவை பிரிட்டன் மட்டும் பெற்றுகொள்ளமுடியும். இதில் பிரிட்டிஷ் தனது ஏகபோகத்தைக் கொண்டிருந்தது. அப்போது பிரிட்டிஷ் அரசு, குவானோ தீவுகள் சட்டம் (1856) இயற்றியது. அதன்படி அமெரிக்காவில் குவானோ அதிகம் கிடைக்கும் எந்தவொரு தீவையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வகை செய்தது.
- மார்க்சின் கருத்துரை
மனித இனம், தனது வாழ்வாதாரத்திற்காக இயற்கையைப் பெரிதும் சார்ந்திருக்கின்றது. என்றாலும், தனது இயக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள இயற்கைக்கு மனிதஇனம் அவசியமாக இருக்கின்றது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். இதனால், மனிதஇனம் இயற்கையுடன் ஒரு நெருக்கமான இணக்கமான உறவைப் பேணிபாதுகாத்து வந்தது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றது. இந்த நிகழ்முறையில் தமக்குள் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. ஒன்றின் மீது ஒன்று வினைபுரிகின்றது. இவ்வாறு, மனித சமுதாயமும் இயற்கையும் வளர்சிதை மாற்ற உறவுகளாக இணைகின்றன.
“உழைப்பு என்பது முதலில், மனிதனும் இயற்கையும் பங்கேற்கும் ஒரு செயல்முறையாகும். மனிதன், தனக்கும் இயற்கையுக்கும் இடையிலான பொருளீய் அடிப்படையிலான எதிர்வினைகளைத் தொடங்குகிறார், ஒழுங்குபடுத்துகிறார், கட்டுப்படுத்துகிறார். . .இயற்கையின் தயாரிப்புகளை தனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு வடிவத்தில் பொருத்துவதற்காக. இவ்வாறு இயற்கையின் மீது, செயல்பட்டு அதை மாற்றுவதன் மூலம், அவர் அதே நேரத்தில் தனது சொந்த தன்மையையும் மாற்றிக் கொள்கிறார்.” உழைப்பு என்பது மனிதர் – இயற்கை இருவரும் இணைந்து பங்கேற்கும் செயல்பாடு என்பதை ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
“மனிதர்கள் இயற்கையிலிருந்து வாழ்கிறார்கள், இயற்கையே நம் உடல், நாம் இறக்கக்கூடாது என்றால் அதனுடன் தொடர்ச்சியான உறவைப் பேண வேண்டும். மனிதகுலத்தின் வாழ்க்கை இயற்கையோடு இணைக்கப்பட்டுள்ளது என்றால் இயற்கையானது தன்னுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பொருளாகும். ஏனென்றால் மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி” என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.
பின்னர் முதலாளித்துவம் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாக அவர் அறிவித்தார். அதாவது இயற்கையும், மனித சமூகமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்த செயல்பாட்டில் முதலாளித்துவம் ஒரு பிளவை உருவாக்கிவிட்டது என்று கூறினார். இவ்வாறு உருவான வளர்சிதை மாற்றப் பிளவை ஈடுசெய்யவோ அல்லது சரிசெய்வதோ முடியாது என்றார்.
மார்க்ஸ் எழுதிய ‘சுள்ளிகளைக் களவாடுவது பற்றிய சட்டத்தின் மீதான விவாதங்கள்’ என்ற கட்டுரை சூழலியல் பொருண்மை சார்ந்த கட்டுரை ஆகும். அதில் இயற்கையுடன் பிணைந்த வறிய ஏழைகளின் உறவு, தனியுடைமையால் துண்டிக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார்.
கிராமபுற மண்வளத்தைச் சூறையாடும் முதலாளித்துவ வளர்ச்சியை மார்க்ஸ் தனது ‘மூலதன’த்தில் தோலுரித்துக் காட்டுகிறார்.
“உழவையும் தொழிலையும் அவற்றின் பிள்ளைப் பிராயத்தில் இணைத்துக் கட்டியிருந்த பழைய பந்தத்தை முதலாளித்துவப் பொருளுற்பத்தி அறவே துண்டித்து விடுகிறது. முதலாளித்துவ உற்பத்தியானது, கேந்திரமான மையங்களில் மக்களை ஒன்று சேர்க்கிறது. மேலும் நகர்ப்புற மக்கள் தொடர்ந்து மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போக்குகள் இரண்டு விளைவுகளை உருவாக்கின்றன. ஒருபுறம் சமூகத்தின் வரலாற்று இயங்குவிசையை ஒன்றுகுவியச் செய்கிறது; மறுபுறம், மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையிலான பொருளின் சுற்றோட்டத்தைக் குலைக்கிறது. அதாவது, உணவு, உடை வடிவத்தில் மனிதனால் நுகரப்பட்ட மண்ணின் கூறுகள் மண்ணுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுக்கிறது.; எனவே மண்வளம் நிலைத்து நீடிப்பதற்கு அவசியமான நிலைமைகளைக் கெடுக்கிறது…
ஆனால், அது பொருளின் சுற்றோட்டம் தொடர்ந்து நடைபெற இருக்கும் சூழ்நிலைகளைக் கெடுக்கும் அதேபோது, இந்தச் சுற்றோட்டத்தை ஒரு அமைப்பாக, சமூக உற்பத்தி முறையை ஒழுங்குபடுத்தும் விதியாக, மனித இனத்தின் முழு வளர்ச்சிக்குப் பொருத்தமான வடிவில் மீட்டமைப்பதை அவசியமாக்குகிறது. … முதலாளித்துவ விவசாயத்தின் முன்னேற்றம் எல்லாமே உழைப்பாளியைக் கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், மண்ணையும் கொள்ளையடிக்கிற கலையிலான முன்னேற்றம்தான். ஒரு நாடு எவ்வளவுக்கு எவ்வளவு நவீனத் தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டு தன் வளர்ச்சியைத் தொடங்குகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது. எனவே, முதலாளித்துவப் பொருளுற்பத்தியானது, செல்வங்களுக்கெல்லாம் மூல ஆதாரமாகிய மண்ணையும் உழைப்பையும் கசக்கிப் பிழிந்துதான் தொழில் நுட்பத்தை வளர்த்திடுகிறது. (மூலதனம், தொகுதி 1)
‘இயற்கையின் மீது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு, நம்மை நாமே அளவு கடந்து புகழ்ந்துகொள்ள வேண்டியதில்லை. இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை வஞ்சிக்கிறது’ என்கிற எங்கெல்ஸின் கூற்றையும் நான் நினைவில் வைக்கவேண்டும்.
மார்க்ஸின் இந்தச் சூழலியல் பார்வை லெனினின் சிந்தனையிலும் பிரதிபலித்தது. ‘சபோவெட்னிகி’ (Zapovedniki) என்ற இயற்கைப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அவர் உருவாக்கியது அதன்படி, வேட்டை, காடுபடுபொருட்கள் சேகரித்தல், சுற்றுலா அனைத்தும் தடை செய்யப்பட்டன. இயற்கையின் சமநிலையை உறுதிப்படுத்தல், உயிர்ப் பன்மையை நிலைப்படுத்தல் ஆகியவையே அதன் நோக்கமாக இருந்தது.
- மார்க்சுக்கு பிந்தைய சிந்தனையாளர்கள்
முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் உள்ளார்ந்து இருக்கும் சமூக-சுற்றுச்சூழல் முரண்பாடுகளைக் கண்டறிவதுதான் வளர்சிதை மாற்ற பிளவு என்ற கோட்பாட்டின் முதன்மையான பணியாகும். பிற்கால சோசலிஸ்டுகளில் ஒருவரான நிகோலாய் புகாரின் தனது ‘வரலாற்று பொருள்முதல்வாதம்’ என்ற நூலிலும், காரல் காவுஸ்கி தனது விவசாயப் பிரச்சனை (1899) என்ற நூலிலும் மார்க்சின் கருத்துக்களை விரிவுபடுத்தினர். வளர்சிதை மாற்ற பிளவினால் தோன்றிய கிராமப்புறங்களை நகரங்கள் சுரண்டுவது என்ற பிரச்சனையை விவரித்தனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மார்க்சின் வளர்சிதை மாற்ற அணுகுமுறை மற்றும் இயற்கையின் உடனான, சமூகத்தின் உறவை இக்கோட்பாட்டின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தனர். முதலாளித்துவ உற்பத்தியில் இருந்து அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் ஃபாஸ்டரின் ‘சுற்றுச் சூழல் பிளவு’ என்ற கோட்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
மார்க்ஸ் தனது ‘மூலதன’த்தில், இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை வரலாற்றைப் பற்றிய தனது பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்துடன் ஒருங்கிணைத்தார் என்று ஃபாஸ்டர் குறிப்பிடுவார். வளர்சிதை மாற்ற பிளவு என்ற கோட்பாட்டை வரலாற்று பொருள்முதல்வாதிகள் வெவ்வேறு வழிகளில் பொருள்கொண்டனர். ஜேசன் டபிள்யூ. மூரைப் பொறுத்தவரை, வளர்சிதை மாற்றம் என்பது மனித மற்றும் கூடுதல் மனித இயல்புகளின் உறவுகளாக கருதுகிறார். இது மனிதர்களுக்கும் இயற்கையின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான உறவுகளின் ஒரு தொகுப்பு ஆகும்.
- சுற்றுச்சூழல் பிரச்சனை
இன்று, முதலாளித்துவத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவிற்கு எதிராக உலகம் தழுவிய அளவில் எதிர்ப்புகள் உருவாயுள்ளன. “வளர்சிதை மாற்றம்” என்ற சொல்லுக்கு பதிலாக “சுற்றுச்சூழல்” என்ற வார்த்தை தற்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் பிரச்சனையைத் தனித்துப் பார்க்கமுடியாது. சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது தற்போது நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையோடும் உற்பத்தி உறவுகளோடும் தொடர்புடைய விசயமாகும். தற்போது அதிகமான விவாதிக்கப்படும் வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து சுற்றுச் சூழல் சீர்கேடும் பன்னாட்டு முதலாளித்துவ உற்பத்தியின் விளைபொருளாகும்.
ஜான் பெல்லாமி ஃபோஸ்டர் கருத்துப்படி, வளர்சிதை மாற்ற பிளவு என்பது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு பற்றியும் விளக்கும் மார்க்சின் கோட்பாடாகும். இது மனிதர்களுக்கும் இயற்கையுக்கும் இடையிலான சிக்கலான, மாறும் பரிமாற்றத்தை சித்தரிக்கின்றது. இயற்கைக்கும் மனித இனத்திற்கும் இடையிலான தீராத பிரச்சனையில் இயற்கை அந்நியப்பட்டுப் போகிறது என்பது இக்கருத்தின் சாரமாகும்.
மார்க்சின் இந்தக் கோட்பாடு, இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையின் தீவிரத்தை தெளிவாகக் காட்டுகிறது. அது மட்டுமின்றி, இது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக உருவான சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு வழிகாட்டவும் செய்கிறது.
- பெரிய பண்ணைகள் பெரிய காய்ச்சலை உருவாக்குகின்றன
நவீன் அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் விளைவாக, உற்பத்தி மற்றும் உணவு அறிவியலில் எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.. என்றாலும், வேளாண் வணிகமானது அதிக உணவுப் பொருட்களை விளைவிப்பதிலும், புதிய இடங்களைக் கைப்பற்றி விளைச்சலை பெருக்கிக் கொள்வதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான கலப்பினக் கோழிகள், மிகச் சிறிய இடங்களில் அடக்கிவைத்து, சில மாதங்களில் வளர்த்து, பின்னர் அவற்றைக் கொன்று, பதப்படுத்தப்பட்டு, உலகத்தின் பல பகுதிகளிலுக்கும் அனுப்பப்படுகின்றன. மனிதர்களுக்கு வரும் மிகவும் ஆபத்தான புதிய நோய்கள் பலவற்றை, முதலாளித்துவம் உருவாக்கி கொடுத்த புதிய உணவு முறைகளில் காணலாம். சிறப்பு வேளாண்மை சூழல்கள்தான் கொடிய நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கு இடமளிக்கின்றன. அவற்றில் காம்பிலோபாக்டர், நிபா வைரஸ், கியூ காய்ச்சல், ஹெபடைடிஸ் இ மற்றும் பலவிதமான புதிய தொற்றுநோய்க் கிருமிகளின் வகைகளும் அடங்கும்.
“பெரிய பண்ணைகள் பெரிய காய்ச்சலை உருவாக்குகின்றன” என்ற நூலை எழுதிய ராப் வாலஸ் என்பவர் ஒரு பரிணாம உயிரியலாளர் மற்றும் தொற்றுநோய் நிபுணர். இவரது ஆய்வின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய பண்ணைகளிலிருந்து இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற நோய்க்கிருமிகள் உருவாவதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலில், தொற்று நோய்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் அறிவியலின் தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைந்த வகையில் ஆராய்கிறார்.
மேலும் இறகு இல்லாத கோழிகளை உற்பத்திச் செய்வதன் மூலம் எபோலா போன்ற கொடிய நோய்க் கிருமிகள் உருவாகின்றன என்று கூறுகின்றார். நோய்களின் அரசியல் பொருளாதாரத்தையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து தொற்றுநோய்களைப் பற்றிய புதிய தெளிவை ஊட்டுகிறார். ராப் வாலஸ் இந்நூலில், நம்முடைய வேளாண் தொழில்துறை அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இந்நூல் அரசியல் சூழலியல் பற்றி முழுமையான புரிதலை வழங்குகிறது.
தொழில்முறையிலான விவசாய நடைமுறைகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் வைரஸ் தொற்றுநோயியல் ஆகியவற்றுக்கு இடையிலான முக்கியமான தொடர்புகளை அம்பலப்படுத்துகிறார். உயிரியல் மற்றும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளின் பகுப்பாய்வை வாலஸ் நேர்த்தியாக இணைக்கிறார், தொற்று நோய் திடீர் பரவல் பற்றிய விவாதங்களில் மூலதனம் மற்றும் அதிகாரத்தின் பாத்திரங்கள் குறித்துப் பேசுகிறார்.
திடீரென பரவும் நோய்களுக்கு எதிரான போரில் முழுமையான, தீவிர அறிவியலை முன்னிறுத்துகிறார். அரசியல் சூழலியல் என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி, உலகலாவிய தொற்றுநோய்களின் பரிணாம வளர்ச்சியில் தொழிற்சாலை – விவசாயம் மற்றும் துரித உணவுத் தொழில்கள் வகிக்கும் முக்கிய பாத்திரத்தை ராப் வாலஸ் நிரூபிக்கிறார்.
பெரிய பண்ணைகள், கால்நடை பண்ணைகள் ஆகியவற்றின் இருப்பை இந்நூல் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. என்றாலும், பண்ணை விலங்குகள் மற்றும் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இணக்கமான வாழ்வை தரக்கூடிய தீர்வுகளைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஆபத்தான வேளாண் வணிகத்திற்கு உணர்வுபூர்வமான, அறிவுபூர்வமான மாற்று வேளாண்மை முறைகளையும் வாலஸ் முன்வைக்கிறார். கூட்டுறவு வேளாண்மை, ஒருங்கிணைந்த நோய்க்கிருமி ஒழிப்பு மேலாண்மை மற்றும் பயிர்-கால்நடை இணைந்த வளர்ப்பு முறைகள் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறார்.
- கொரானா – சுற்றுசூழல் சீர்க்கேட்டின் உச்சம்
உழைக்கின்ற மக்களை கொடூரமான சுரண்டிவரும் பன்னாட்டு முதலாளித்துவம் தீராத வர்க்கப் பிளவை உருவாக்கியுள்ளது. அதேபோல இயற்கையின் வளங்களை வகைதொகையின்றி பறிப்பதன்மூலம் இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தில் தீராத பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இயற்கை ஒட்டுமொத்த மனித இனத்தின்மீது எதிர்பாராத வகையில் மீண்டெழ முடியாத வகையில் தனது எதிர்வினையை ஆற்றிவருகின்றது.
பன்னாட்டு நவீன விவசாயப் பண்ணைகளும், லாபவெறியை ஊட்டும் சந்தைப் பொருளாதாரமும், ஏகாதிபத்தியத்தின் கொரூரமான சுரண்டலும்தான் புதிய புதிய தொற்றுக் கிருமிகள் உருவாவதற்கான காரணிகளாக அமைகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் உருவானதுதான் புதிய கொரானா தொற்றுக்கிருமி.
அது மட்டுமின்றி, இயற்கையின் நுறையீரலாகவும், இதயமாகவும் விளங்குபவை எல்லாம் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவம் இயற்கையின்மீது செலுத்திவரும் வரம்பற்ற ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது இயற்கையின் தனது எதிர்வினையின்மூலம் ஒட்டுமொத்த மனித சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த எதிர்வினையில் விளைவாக உருவான ஒரு புதிய பரிணாமம்தான் புதிய கொரோனா வைரஸ். மனிதஇனம் இயற்கையின் முதலாளியும் அன்று; இயற்கையிலிருந்து பிரிந்து தனித்த தகுதியை பெற்றிருப்பதுமன்று; மாறாக, இந்த உலகத்தின் ஒரு பகுதிதான் என்பதை கொரானா வைரஸ் நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. பன்னாட்டு முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை ஆராயும் அதே நேரத்தில் இன்று முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் உருவான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்தும் ஆராய வேண்டிய தேவையும் இணைந்திருக்கின்றது என்பதை உணரமுடிகிறது. இவை குறித்த கோட்பாட்டையும் நடைமுறையையும் உருவாக்குவது நமது அனைவரின் கடமையாகும். ஏனெனில் இயற்கையைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கின்றது.
உதவிய நூல்களும் கட்டுரைகளும்
- Big Farms Make Big Flu: Dispatches on Infectious Disease, Agribusiness, and the Nature of Science, Rob Wallace.
- What is the ‘metabolic rift’?, Marx Memorial Library,MR Online
- மூலதனம், தொகுதி1, காரல் மார்க்ஸ்
- The Ecological Rift: Capitalism’s War on the Earth, Monthly Review