அவர்கள் ஒழித்துக்கட்டுவது கொரோனாவை அல்ல. 40 கோடி தொழிலாளர்களின் வாழ்வை. மோடியின் திட்டமிடப்படாத ஊரடங்கால் ஒரே மாதத்தில் சுமார் 12 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். 20 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பாதங்களால் இந்திய வரைபடத்தை சிவப்பாக்கி வருகிறார்கள். எப்படியாவது தப்பிப்பிழைத்து ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வேலை தேடிக்கொண்டிருக்கும் மீதமிருக்கும் பல கோடி தொழிலாளர்களின் மூச்சுக்குழாயை துண்டித்தெறிய தயாராகி வருகிறார்கள். ஆம் மாடுகளுக்கு ஆட்சி நடத்தும் யோகி ஆத்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச மாநில பா.ஜ.க. அரசு தொடங்கி வைக்க தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் 12 மாநில அரசுகள் களத்தில் இறங்கியுள்ளன.

இவற்றில் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரகண்ட், அசாம், இமாசலப்பிரதேசம், கோவா ஆகிய 8 மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள், பஞ்சாப், ராஜஸ்தான் இரு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் காங்கிரஸ் அரசுகள், மகாராஸ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு என பாசிச பா.ஜ.க.வும் வலதுசாரி காங்கிரசும் முதலாளிகளுக்கு சேவகம் புரிவற்கு ஒரு நோய் தொற்று அச்சுருத்தலையே சாதகமாக்கிக்கொண்டார்கள்.

வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிப்பு, ஊதிய வெட்டு, மிகை உழைப்பிற்கான ஊதியம் ரத்து உள்ளிட்ட தொழிலாளர் விரோத அரசானைகள் அல்லது அவசரச் சட்டத் திருத்தங்களை பிறப்பித்துள்ளன. உத்திரப்பிரதேச பாஜக அரசு மட்டும் மொத்தமுள்ள 44 தொழிலாளர் சட்டங்களில் அடிப்படை ஊதியச் சட்டம் -1936, வேலையாள் இழப்பீட்டுச் சட்டம்-1923, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம்-1976, கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலளர் சட்டம்- 1996 ஆகிய நான்கு சட்டங்களைத் தவிர மீதுமுள்ள 38 சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு முடக்கி வைத்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது என்பதுதான் இவர்கள் சொல்லும் ஒரே காரணம். ஆனால் இது உண்மையான காரணமல்ல என இரத்தப் பரிசோதனை முடிவுகள் சொல்கின்றன. மத்திய மாநில அரசுகளின் இரத்தத்தில் கலந்துள்ள கார்ப்பரேட் விசுவாச வைரஸ் தொற்றே உண்மையான காரணம் ஆகும்.

காலனி அரசு வழங்கியது – குடியரசு பறிக்கிறது….

History: First 8-hour day with no loss of pay - The Socialist

கடந்த சில நூற்றாண்டுகளில் ஒரு அரசு பிறப்பித்த மிகக் கொடூரமான சமூகச் சட்டம் இது என்பேன். சுதந்திரப் போராட்டம் அதி தீவிரமாக நடந்த காலவெளியிலும் நம்மைத் தீவிரவாதிகளாக, அடிமைகளாகக் கருதிய பிரிட்டிஷ் காலனி அரசு, அடிமை இந்தியாவுக்கு பல சமூகச் சீர்திருத்தச் சட்டங்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் இயற்றியது. 1881 இல் இயற்றப்பட்ட முதல் தொழிற்சாலைகள் சட்டம், 7 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒன்பது மணி நேர வேலை, வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வு என்பதைக் கட்டாயமாக்கியது. 1991 இல் பெண்களின் வேலை நேரம் 11 மணி நேரமாகவும் ஆண்களின் வேலை நேரம் 12 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டது. 130 ஆண்டுகளுக்கு முன்பாக காலனி ஆதிக்க அரசு வேலை நேரத்தைக் குறைத்தது. இன்றைய சுதந்திர, ஜனநாயக, சமதர்ம, குடியரசோ நமது நாட்டை இரு நூற்றாண்டுகள் பின்னிழுத்து தொடங்கிய இடத்திற்கு கொண்டு செல்கிறது.

உலகப்போர்களை வென்ற தொழிலாளர் சட்டங்கள்….

முதல் உலகப்போருக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி பிளேக், காலாரா, ஸ்பேனிஷ் ப்ளு பெருந்தொற்றுகள், கோடிக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்த கடுங்காலத்தில் வேலை நேரம் அதிகரிக்கப்படவில்லை. குறைக்கப்பட்டது. 1919 இல் உலக சர்வதேச அமைப்பின் முதல் மாநாட்டில் அதிகபட்சம் 8 மணி நேர வேலை என்ற உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அதில் கையெழுத்திட்ட இந்தியா 1923 இல் வேலையாள் இழப்பீட்டுச் சட்டத்தை இயற்றியது. பணியிடை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் ஊனங்களுக்கும் இழப்பீடு கோரும் உரிமை இந்தச் சட்டத்தின்படிதான் இன்றுவரை கிடைத்து வருகிறது.

In Defence of Marxism

அதேபோல் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, கடும் பஞ்சம், லட்சக்கணக்கான விவசாயிகளின் மரணம் என கொரோனா பெருந்தொற்றைவிட பலநூறு மடங்கு மோசமான காலத்திலும்கூட எந்தத் தொழிலாளர் சட்டங்களும் முடக்கப்படவில்லை. மாறாக பல புதிய சட்டங்கள்தான் இயற்றப்பட்டன. 1937 இல் தொழிலாளர்களின் போராட்ட உரிமை அங்கீகரிக்கப்பட்டது. 1942 நவம்பர் 27 அன்று தில்லியில் நடைபெற்ற 7 ஆவது இந்திய தொழிலாளர்கள் மாநாட்டில் 14 மணி நேர வேலை என்பதை 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் தொழிலாளர் அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேதகர் முயற்சியாலும் 1943 இல் முதலாளிகள் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு பலன்கள், சமவேலைக்கு சமஊதியம், பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி, தொழிலாளர்கள் சேமநலநிதி, வருங்கால வைப்புநிதி, குறைந்தபட்ச ஊதியம், அகவிலைப்படி, மிகை உழைப்பிற்கான ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, நிலையானைகள், தொழிலாளர்கள் மாநில காப்புறுதிக் கழகம், வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களும் சட்டங்களும் உருவாக்கப்பட்டன.

இந்திராகாந்தி ஆட்சியில் கடும் அடக்குமுறைகள் அரங்கேற்றப்பட்ட தேசிய நெருக்கடிநிலை காலத்திலும், உலகமயம் மற்றும் தாராளமயத்தால் இந்தியாவில் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளும் தொழிற்சாலைகளும் மூடப்பட்ட தொழிற் சிதைவு காலத்திலும், பத்தாண்டுகளாக உலகம் எதிர்கொள்ளும் கடும் பொருளாதாரச் சரிவு நெருக்கடியிலும் எந்தச் சட்டமும் முடக்கப் படவில்லை.

கார்ப்பரேட் வைரஸும் வர்க்கப் பரவலும்..

வரலாற்றின் இப்படியான மிக மோசமான காலங்களில் முடக்கப்படாத தொழிலாளர் சட்டங்கள் தற்போது முடக்கப்படுவது ஏன்?

மோடியின் முதல் ஆட்சியிலேயே மதவெறி வைரஸ் தொற்றுடன் கார்ப்பரேட் விசுவாச வைரஸ் தொற்றும் தீவிரமாக இருந்துவந்தது. அதில் அம்பானி மற்றும் அதானி வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்திவந்தன. இரண்டாவது ஆட்சியில் இந்தத் தொற்று அதிதீவிரமடைந்து கடந்த ஓராண்டு காலமாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தது. தொழிலாளர்கள் காலங்காலமாகப் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக 4 சட்டத் தொகுப்புகளாகத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்துள்ளது. கொரானோ பெருந்தொற்றுக்கு முன்பாகவே மத்திய பாஜக அரசு தொழிலாளர்களை கொத்தடிமைகள் காலத்திற்கு நெட்டித்தள்ளுகிற வேலையை திறம்பட செய்துவந்தது. தற்போது தங்கள் எலிப்பொறியில் சிக்கிய கொரானோவை வைத்து வித்தைகாட்டி பாஜக மத்திய அரசும் மாநில அரசுகளும் அந்த வேலையை அதிவேகமாகச் செய்கின்றன. சில காங்கிரஸ் மாநில அரசுகளுக்கும் இந்தத் தொற்று பரவியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனெனில் இது சமூகப் பரவல் அல்ல. வர்க்கப்பரவல். முதலாளி வர்க்கப்பரவல்.

மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை..

Labour Laws in India - All you need to know - Vskills Blog

மத்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மாநில அரசு அரசானையின் மூலம் முடக்க இயலாது. எனவேதான் உத்திரப்பிரதேச யோகி அரசு தனது நிர்வாக உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்குப்பதிலாக அவசரச் சட்டம் வரைந்து ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. இது மத்தியச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் என்பதால் மத்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சம்மதம் அளித்தால் மட்டுமே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க இயலும்.

இது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை நிறுத்திவைக்க முடியுமா? தொழிற்தகராறுகள் சட்டப்பிரிவு 36B இன் படிதான் நிறுத்திவைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சட்டப்பிரிவு அரசால் நடத்தப்படுகிற ஒரு குறிப்பிட்ட தொழிலகம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகைமையான தொழிலகங்களுக்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக விலக்களிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. அவ்வாறு விலக்களிக்கும் முன் அந்தத் தொழிலகத்தில் எழும் தொழிற்தாவாக்களை விசாரித்து தீர்வு வழங்க போதுமான மாற்று இயந்திரத்தை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் அது செல்லாது. எப்படிப்பார்த்தாலும் கொரானா போன்ற நோய் தொற்றுகள், பொதுமுடக்கம், பேரிடர்கள், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட எவ்விதப் பொதுமையானக் காரணங்களைச் சொல்லி ஒட்டுமொத்த சட்டத்தையும் முடக்கிவைக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது..

அரசியலமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தியுள்ள சமத்துவ உரிமை, அடிப்படை உரிமைகள், வாழ்வுரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை ஆகியவற்றைப் பறிப்பதாக உள்ளது. தொழிலாளர்களின் உடல்நலம், திறம், வாழ்வூதியம், கண்ணியமான வாழ்க்கைத் தரம், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளுக்கும் எதிராக உள்ளது.

சர்வதேச உடன்படிக்கைக்கு எதிரானது..

Top 20 employment law facts you need to know | Start Up Donut

வேலை நேர மாநாடு என்று அழைக்கப்படும் 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதல் மாநாட்டில்தான் ஒரு நாள் வேலை நேரம் 8 மணி நேரம் அல்லது ஒரு வாரத்தின் வேலை நேரம் 48 மணி என்று வரையறுக்கப்பட்டு உறுப்பு நாடுகளின் அரசுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கிடையே உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது இந்தியா இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது. அதை அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு 1921 ஜுலை 14 அன்று ஏற்றுக் கொண்டது. அதனடிப்படையில்தான் பல புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. எனவே தொழிலாளர் சட்டங்களை முடக்கிவைக்கிற மாநில அரசுகளின் நடவடிக்கைகள் வேலை நேர மாநாட்டின் உடன்படிக்கைக்கு எதிரானவை.

இந்தியாவிலிருந்து பல தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு புகார்கள் அனுப்பியுள்ளன. அதன் இயக்குனர் கைய் ரைடர் தொழிலாளர் சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நமது பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நமது பிரதமர் வழக்கம்போல் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. திரும்பப் பெறுமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தவில்லை. எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வழக்கம்போல மான் கி பாத் நிகழ்வில் கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அவருக்கு ஏற்பட்டிருப்பது விசேச நாடக வைரஸ் தொற்று.

தொழிலாளர் சட்டங்களில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் நூற்றாண்டுகளின் போராட்டச் சுவடுகளும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்த் தியாகங்களும் இரத்தக் கறைகளும் படிந்துள்ளது. அந்த வரிகளும் வார்த்தைகளும் மீண்டும் உயிர்த்தெழும். வேண்டுமானால் புதிய போராட்டத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ளும். ஒரு போதும் அந்தச் சட்டப்புத்தகத்தை அரித்துத் திங்க எந்தக் கொடூர கார்ப்பரேட் விசுவாச வைரஸ் கிருமிகளை அனுமதிக்காது.

Image may contain: மு. ஆனந்தன்
மு.ஆனந்தன் – 9443049987 – [email protected]

நனறி- தீக்கதிர் – 07.06.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *