உலகமே இன்னமும் கொரானாவின் கோரபிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா, தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது மே மாதத்தில், இந்த நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியையாவது டிஜிட்டல் வடிவில் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. இதை ஒரு மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். போக போக இதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, உலகின் முதல் டிஜிட்டல் நாணய முறையை நோக்கிய பாதையில் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது. மேலும் இது அமெரிக்க டாலருக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியை குறித்துப் பார்ப்போம்.
டாலரின் மேலாதிக்கம்
மற்ற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் உலகலாவிய ஆற்றல் அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலர் ஆகும். உலகப் பொருளாதாரத்தில் இன்றுவரையிலும் அமெரிக்க டாலர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிரில்லியன் கணக்கான பரிவர்த்தனைகள் டாலரின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகின்றன. 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 90 சதவீத சர்வதேச பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலர்களில் நடைபெற்றுள்ளது. உலகில் உள்ள அனைத்து அந்நிய செலாவணி இருப்புக்களில் 60 சதவீதம் அமெரிக்க டாலர்களில் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகின்றது. இத்தகைய டாலரின் ஆதிக்கம்தான் இன்றளவிலும் அமெரிக்காவிற்கு மகத்தான ஆற்றலை அளித்து வருகின்றது.
பொருளாதார விசயங்களில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் அமெரிக்க மைய வங்கியைச் சார்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் எந்த வர்த்தக உறவும் இல்லை என்றாலும்கூட அந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
டாலர் நாணயம் அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய சொத்தாக இருந்து வருகிறது, நெருக்கடி காலங்களில் குறிப்பாக, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் கடுமையான நெருக்கடியில் மீள முடியாத நிலையிலும் டாலர்கள் அதிகரித்துள்ளன என்பது ஆச்சரியமான உண்மை. ஆகவே ஒப்பீட்டளவில் இதர நாடுகளைவிட குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடிந்தது. நலிவடைந்த நிறுவங்களை மீட்டெடுக்க நிதியளிக்க முடிகிறது. உலகில் உள்ள எல்லா நாணயங்களும் டாலருடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாடுகளுக்கு ஒரு பாதகமான விளைவை டாலர் உருவாக்குகிறது.
டாலருக்கு எதிரான மாற்று நாணயம்
பல பத்தாண்டுகளாக, சீனா, ரஷ்யா மற்றும் பல நாடுகள் டாலருக்கு எதிரான ஒரு ‘மாற்று நாணய முறை’யை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வந்தன. ஆனால் அவை எதுவும் அதிக வெற்றியை ஈட்டிதரவில்லை.
சீனாவில் இருக்கும் பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்ற காரணத்தை இப்போது சொன்னாலும், 2014 ஆம் ஆண்டிலிருந்தே சீனா தனக்கான டிஜிட்டல் நாணயங்களை உருவாக்க திட்டமிட்டு வந்துள்ளது. இதற்காக டிஜிட்டல் நாணயத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதை ஒரு முதன்மையான இலக்காக கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில் சீனாவின் தேசிய பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களுக்காக பிளாக்செயின் என்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டது.
2019 செப்டம்பர் மாதத்தில், சீனா தனது அந்நிய செலாவணியைப் பாதுகாக்கும் நோக்குடன் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. பிளாக்செயின் தொழில்நுட்ப வளர்ச்சியை சீனா துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் 2019 அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிடம் தெரிவித்தார்.
சீனாவின் மீதான குற்றச்சாட்டுகள்
சீன முயற்சிகளுக்கு எதிர்வினையாக, கிரிப்டோகரன்ஸ்கள் ஏற்கனவே பல பில்லியன் டாலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக அமெரிக்கா கருதுகிறது. மேலும் வளர்ந்து வரும் நிதி தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது ஆபத்தானது என்று அமெரிக்கா கருதுகின்றது.
வலுவான சீனப் பொருளாதாரம்
சீனா வலுவான ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டிருப்பதனால், டாலரின் மேலாதிக்கம் சீனாவை பெரிய அளவில் பாதிப்பதில்லை. அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனா அமெரிக்க டாலர்கள் பெருமளவில் பெற்றுக்கொள்கிறது. சீன நிறுவனங்கள் அவ்வாறு பெறும் அமெரிக்க டாலர்களை சீன நாட்டின் மத்திய வங்கியிடம் கொடுத்து யுவானாக மாற்றிக் கொண்டு தங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கி வருகின்றன. சீன மத்திய வங்கியானது அந்த டாலர்களை கையிருப்பாக வைத்திருக்கிறது. 2020, மார்ச் மாத நிலவரப்படி, சீனா 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க நாணயத்தை கையிருப்பாக வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான. பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்த நாட்டிற்கு செலுத்தப்படும் தொகையை டாலர்களில் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே சீனாவின் நாணயம், ஈரான் போன்ற சில ஆசிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் போது சீன நாணயத்தைப் பயன்படுத்தி வருகிறது.
சீனாவின் புதிய டிஜிட்டல் நாணயம்

இப்போது அமுலுக்கு வந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் யுவானின் வரம்பை விரிவாக்க வகை செய்கின்றன. வெவ்வேறு நாணயங்களைப் பயன்படுத்தும் இரண்டு நிறுவனங்கள் வணிக ஒப்பந்தத்தை உருவாக்கும்போது, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை பொதுவாக டாலர்களில் குறிப்பிடப்படுவது பொதுவான நடைமுறையாகும். இதனால் ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு டாலர் ஆபத்தை விளைவிக்கும் என்பது தவிர்க்கமுடியாத விசமயாக இருக்கின்றது. ஆனால் சீன டிஜிட்டல் நாணயத்தால் இதுபோன்ற விளைவுகள் வராமல் பார்த்து கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, ஒரு வெளிநாட்டு இறக்குமதியாளரும், சீன நாட்டின் ஏற்றுமதியாளரும் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பிளாக்செயின் நெட்வொர்க்கில் உள்ள ஒருங்கிணைந்த கணினிகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம்,
சீனாவின் டிஜிட்டல் நாணயம், யுவானின் உலகளாவிய பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது உலகெங்கிலும் உள்ள அன்றாட பரிவர்த்தனைகளில் சீனாவின் யுவானைப் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைமுறையாக மாறும் என்றும் நம்பப் படுகிறது. சீன நாட்டின் மைய வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் நாணயங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டிஜிட்டல் நாணய முயற்சிகள்
அமெரிக்காவியப் பொறுத்தவரை, டிஜிட்டல் நாணயங்கள் இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளன. பேஸ்புக் கடந்த கோடையில் லிப்ரா எனப்படும் உலகளாவிய டிஜிட்டல் நாணயத்தை அறிவித்தது. ஆனால் அதனால் இன்னும் அரசிடமிருந்து ஒப்புதலைப் பெறமுடியவில்லை. இன்னொரு புறம், டிஜிட்டல் டாலர் கணக்கு பணப்பைகளை உருவாக்க பெடரல் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த இரண்டு முயற்சிகளும் இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளன.
சீனாவின் டிஜிட்டல் நாணயம் வெற்றிபெறுமா?

டிஜிட்டல் நாணய போட்டியில் சீனா வெற்றிபெறுமானால், அது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் சீனா இந்த டிஜிட்டல் நாணயப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்னும் நீண்டதொலைவு செல்ல வேண்டியிருக்கின்றது. இந்த விசயத்தை அமெரிக்கா விரைவில் கைப்பற்றிக் கொள்ளவில்லை என்றால் அது ஒரு பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
டாலர் வீழ்த்தப்படுமா இல்லையா என்பதை இப்போது கணிக்க இயலாது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பே சீனா டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து அவற்றில் வெற்றியும் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது. என்றாலும், இன்றைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விசயங்களின் போக்குகளைப் பொருத்தே இது தீர்மானிக்கப்படும்.
(நன்றி:-China’s Digital Currency Takes Shape; Will It Challenge Dollar?)
வெறும் நாணயம் மாத்துறதுனால ஏதும் மாறாது.
ஒரு முதலாளித்துவ நாடோட நாணயம் சர்வதேச நாணயமா இருக்குறதுக்கு காரணம் அது பரிவர்த்தனைக்கு எளிமையா, பாதுகாப்பா இருக்குன்னு மட்டும் இல்ல.
ஒரு நட்டோட “நாணயம்” அப்டிங்குறது அந்த நாடு அந்த நாணயத்தை வெச்சிருக்குறவங்களுக்கு கொடுக்குற உறுதிமொழி மாதிரி. இப்ப நம்ம கையில இருக்குற ரூபாயை நாம கொடுத்தா, இந்திய அரசு நமக்கு அதுக்கு நிகரான பண்டங்களோ, இல்ல சொத்தோ நமக்கு தரும் (பொதுவா சொத்து தான். அரசாங்க bond). அந்த bond நம்ம கிட்ட இருந்தா, அதை நாம பிற்காலத்தில அதை பணமா மாத்திக்கலாம். அரசு bondகள் பொதுவா risk இல்லாதது. எந்த bank போண்டி ஆனாலும் அரசு போண்டி ஆவது. நமக்கு correctஆ குடுத்துடும்.
அதே மாதிரி அமெரிக்க டாலர்ல உலக வார்த்தகம் நடக்குறதுக்கு காரணம், எந்த நாடு போண்டி ஆனாலும், அமெரிக்கா போண்டி ஆவதுன்னு தான். ஏன்னா அமெரிக்கா உலக முதலாளித்துவ don.
கண்டிப்பா இந்த நிலைய சீனா அடையல..