தூரிகை
***********
நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம்
உன்
தூரிகை நானாகிறேன்…
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…
புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….
வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும் வறுமையெனும் பிணிபோக்க….
உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….
நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…
அவசரமாய்க் கேசத்தை சரிசெய்து
முகப்பசைகளைப்பூசி ஒப்பனைகள் செய்து
கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…
பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப்பொட்டுகளையும் விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…
எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும்
மீதம் வைக்காமலும் காட்சிபடுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்
நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில்
இன்னொரு பிம்பத்தை பதிவுசெய்ய
இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…
சந்தனவிறகுகள்
********************
மலையின் கொடையில் செழித்த சந்தனமே
மரங்களில் தனக்கென
தனிமதிப்பை தக்கவைத்ததால்
மனிதனும் இதைப்பார்த்து கொண்டானொரு வியப்பு
வாசனையால் கொள்ளையடித்த சந்தன விருட்சங்களை
கோடாரிகளால் சிதைக்கும்போதெல்லாம் குதூகலிக்கிறது மனிதமனம்
பசிபோக்கும் அடுப்புகள் எதற்கும் எளிதில்கிடைக்காத
சந்தனவிறகுகள் உரசும்போதெல்லாம் வாசம் மாறாததால்
அதிசயப்பிறவியோவென!
அறிந்தவர் எவரும் வெறுப்பதில்லை
பசிக்காக சேகரித்த விறகுகள் வீதியில்போனதால்
வனத்தினை அழிப்பதாய் தண்டனை வனவாசிகளுக்கு
காடுகளில் களவாடப்படும் தந்தங்களையும் பின்னுக்குதள்ளி
வனத்துறையுமறியாத பாதைகளில் பயணமான ஊர்திகளில்
இரகசியமாய் பச்சிலைகள் போர்த்தி முன்னுக்குப்போகிறது
அரசுஇலாகாக்களின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்த
விறகுகள் அத்தனையும் மொத்தச்சந்தையில் விற்பனைக்கு
அக்னிக் குண்டத்தில் எரிந்த நெருப்பில்
கடவுளுக்கும் கோடிபிரியமோ சந்தனவாசம் கோவில்கருவறைக்குள்ளும்
ஆட்சி அதிகாரங்களில் மிதந்த தேகங்கள்கூட
சுவாசங்கள் நின்றபின் மயானத்திலும் நிரூபிக்கறது
கட்டுக்கட்டாய் அடுக்கிய விறகுச்சுமைகளில் தன்பலத்தை
விடைபெற்ற ஆளுமைகளின்
பெருமையும் புகழும்
ஆடம்பரமாய் எரியும் சந்தனவிறகுகளின் வாசத்தில்
அதிகாரத்திமிர்களும் ஆணவங்களும் எரிந்து சாம்பலாகின்றன
கைப்பிடிச்சாம்பலும் கடைசியில் கரைகிறது ஊரோரநதிக்கரையில்
கோவைஆனந்தன்
குமாரபாளையம்,
கிணத்துக்கடவு, கோவை 642109
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.