Covai M.Uma Maheswari Three Poems in Tamil language. Book day website is Branch of Bharathi Puthakalayam



1. இலக்கணப் பெருமை

விரும்பிய வண்ணம் சுற்றித் திரிதல்
சமூகவிலகலை பின்பற்றாது
அருகருகே அமர்ந்து
காதல் கிளுகிளுப்பு வேறு
கீச்சுகீச்சென்று
கூடிப் பேசுதல்
மாற்றமில்லா
உற்சாகத்துள்ளலுடன்
சீழ்க்கை ஒலிகள்
எல்லைக்கட்டுப்பாடுகளை
எவ்வித முன்அனுமதியுமின்றி அலட்சியமாகக் கடந்து செல்லுதல்..

முகக்கவசம்
சத்துணவு
நோய் எதிர்ப்பு மருந்துகள்
எலுமிச்சை பழச்சாறு
இஞ்சி பூண்டு கஷாயம்
கபசுரக் குடிநீர்
அடிக்கடி கைகழுவுதல்
அறவே இல்லை

அச்சம்
அதீத பதற்றம்
கலக்கம்
இழப்பின் சோகம்
மனஅழுத்தம்
ஏதுமின்றி
எப்பொழுதும் போலவே
வெகுஇலகுவாய் நம்மைக் கடந்து
பறக்கின்றன..
வெற்று இலக்கணப் பெருமையின்
வெளிறிய அடையாளமாக நாம்…



2. காதலின் விழித்தடங்கள்

உலக அதிசயங்களின்
பட்டியலைத் தட்டினேன்
உனது பெயரை இணைக்காத கூகுளை கண்டித்து வெளியேறினேன்

உனது விழித் தடங்களை
வழித்தட வரைபடங்களாக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்
திடீரென முட்டுச் சந்தில் திசையறியாது நிற்கையில்
உணர்ந்து கொள்வேன்
நீ உறங்கிக் கொண்டு இருக்கிறாயென…

மனக்கிடங்கில்
சேகரித்து வைத்த
காதலின் விதைகளை
தூவினேன்
அமோக விளைச்சல் …
பார்வையிட வருகிற போது
ஊடுபயிராக வளர்ந்திருக்கும் என்னையும்
உனது விரல்களால் வருடிச் செல்..



3. பெருங்காதல்

கிளைகளும் அறியாவண்ணம் மௌனமாய் வீழும்
பழுத்த இலைகள் போல்
உடலின் வேட்கைகள்
ஒடுங்கி
உதிர்ந்து விட்டன…
உள்ளமெனும் ஊற்றுக்கண்ணில் கசிந்துகொண்டிருக்கிற
பெருங் காதலுக்கு
யாதுமோர் குறைவுமில்லை
பெளதிகத்தை வென்று நிற்கிறார்கள் மாகிழவனும் கிழத்தியும்…

வாருங்கள் அவர்களோடு
ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வோம்
முனை முறிந்த நம் காதல் செடியில்
ஒரு துளிராவது துளிர்க்கட்டும்..

கோவை மீ. உமாமகேஸ்வரி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “கோவை மீ. உமாமகேஸ்வரி கவிதைகள்”
  1. கிளைகளும் அறியாவண்ணம் உதிரும் பழுத்த இலைகள் வேற லெவல் உவமை உள்ளக் காதலுக்கு முதிர்ச்சியே இல்லை என்று ஆழமாக சொல்லி இருக்கீங்க. ஆழ்ந்த காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *