இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேளாண்மையையும் அதைச்சார்ந்த தொழிலையும் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் பெருமளவில் அரசினால் வழங்கப்பட்டுவருகிறது. சமூக மேம்பாடு என்பது சுகாதாரத்தை தவிர்த்து அடையமுடியாது. சமூக மேம்பாடு பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைக்கூறு ஆகும். அனைவருக்குமான சுகாதாரம் என்பது நாட்டின் முதன்மைக் குறிக்கோளாகும். இந்தியாவில் சுகாதாரம் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்தாலும் ஒன்றிய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டை பெரிய அளவில் கொண்டுள்ளது. சுகாதாரம், பொது மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்படுகிறது. தற்போது கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது சுகாதாரம் பெரும் சேவையினை அளித்துவருகிறது. எழை எளிய, விளிம்பு நிலையில் வாழும் மக்கள் இந்தியாவில் அதிகம், இவர்களால் மருத்துவ பாதுகாப்பினை பெற இயலாமல் இருப்பவர்கள் பங்கு சுமார் 60 விழுக்காடாகும். இதயநோய், சுவாச நோய், புற்று நோயால் உலக அளவில் மொத்த இறப்பில் 71 விழுக்காடு ஆகும். இதில் 60 விழுக்காடு இறப்பு இந்தியாவில் ஏற்படுகிறது. எனவே பொதுத்துறையின் சுகாதார சேவை முக்கியத்துவம் பெறுகிறது. வட்டார அடிப்படையில் பார்த்தால் சுகாதார சேவையினை பெருவதில் கிராம-நகர நிலையில் வேறுபாடு அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவைப் பொருத்த அளவில் பொதுசுகாதாரம் கிராமப்புறங்களின் மூன்று அடுக்கு முறையில் சங்கிலி இணைப்பில் வழங்கி வருகிறது. அதன்படி கடைநிலையில் துணை சுகாதாரமையங்கள் (Sub-centres), இடைநிலையில் ஆரம்ப சுகாதாரமையங்கள் (Primary Health Centres) அடுத்த நிலையில் சமூக சுகாதாரமையங்கள் (Community Health Centres) என்பதாகும்.
தற்போது அச்சுறுத்துகிற கோவிட் பெருந்தொற்று முதல் அலை மார்ச் 2020 இந்தியாவில் ஊடுருவியபோது ஒன்றிய-மாநில அரசுகள் அதனை எதிர்கொள்ள பல்வேறு உத்திகளை கையாண்டு கட்டுப்படுத்தியது. இதில் அதிக அளவில் நகர்ப்புறங்கள் பாதிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் பெருமளவிற்கு புலம்பெயர்நத தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்வு வெகுவாக பாதித்தது. மனித தவறுகளால் (முக்கியமாக தேர்தல் பரப்புரை, கும்பமேளா, குடும்ப விழாக்கள்) கோவிட்-19ன் 2வது அலை விஸ்வரூபம் எடுத்து ஏப்ரல் 2021ல் வேகமெடுத்து பரவத்தொடங்கியது. அறிவியல் அறிஞர்கள் முன்எச்சரிக்கை விடுத்தும் அதற்கான ஏற்பாட்டை செய்யத் தவறியதால் தற்போது அது கிராமப்புறங்களை நோக்கி வேகமாகப் பரவத்தொடங்கியது. இவ்விரண்டு அலைகளையும் எதிர்கொள்ள பொது சுகாதார மருத்துவமனைகள் பெரும் பங்காற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அளவிற்கு அதிகமான பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய சுகாதார கட்டமைப்பு பேதுமான அளவில் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை நிலவியதால் பெரும் உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது. கோவிட்டினால் இறந்த உடலை தகனம் செய்ய இயலாத நிலையும் அதனால் பல வடமாநிலங்களில் இறந்தவர்களின் உடல்கள்; நதிகளில் வீசப்பட்டதும், ஒரே இடத்தில் பல பிணங்கள் எரியூட்டப்பட்டதும் துயரத்தின் உச்சகட்டம்.
2ஆம் அலையில் தாய், தந்தை இழந்து அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் ஏராளம், இளம் வயதுடையவர்கள், வீட்டில் சம்பாத்தியம் செய்பவர்கள், முதியோர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம். கோவிட்டினால் நம்முடன் வாழ்நத 3.53 லட்சம் பேர் (09.06.2021 கணக்கின்படி) இன்று உயிருடன் இல்லை. இதற்கு காரணம் என்ன? ஏன் இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுவரையில் மருத்துவத்திற்கான பாதுகாப்பைக்கூட முழுமையாக ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை? பல அறிஞர்கள் தொடர்ந்து பொது மருத்துவத்திற்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 3 விழுக்காடு இருக்க வேண்டும் என்றனர். ஆனால் 1 விழுக்காடு அளவிற்கே தற்போதுவரை ஒதுக்கிவருகிறோம். உலகிலே அதிகமாக (70 விழுக்காடு) தனிமனிதர்கள் சொந்த வருமானத்தின் வழியாக மருத்துவம் பெரும் நாடு இந்தியா, அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பினை தற்போதுவரை எட்ட முடியவில்லை. சுகாதாரம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்பது தெரியாதா? இதற்கான முன்னெடுப்பை சரியாக செய்திருந்தால் இந்த பாதிப்பினையும் உயிரிழப்பினையும் வெகுவாக குறைத்திருக்கலாம் அல்லவா? ஏழை-பணக்கார, கிராம-நகர, சமூகங்களுக்கிடையே மருத்துவ பாதுகாப்பை பெறுவதில் பெருத்த வேறுபாடு நிலவுவது ஏன்? கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையின் பாதிப்பு கிராமப்புறங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்கான காரணங்கள் என்ன?
இந்திய அரசு அன்மையில் வெளியிடபட்ட (கிராமப்புற சுகாதார புள்ளிவிவரம் 2019-20) புள்ளி விரத்தின்படி 2020ஆம் ஆண்டு மார்ச்சு 31ன்படி கிராமப்புறங்களுக்கு தேவையான துணை சுகாதாரமையங்கள் 191461. ஆனால் இருப்பதோ 155404 அதவது 24 விழுக்காடு பற்றாக்குறை. இதுபோல் 31337 ஆரம்ப சுகாதார மையங்கள் தேவை. ஆனால் 24918 மட்டுமே உள்ளது அதாவது பற்றாக்குறை 29 விழுக்காடு, 7820 சமூக சுகாதாரமையங்களின் தேவை ஆனால் இருப்பதோ 5183 எனவே 38 விழுக்;காடு பற்றாக்குறையாக உள்ளது. மாநிலங்களிலே அதிக அளவு இச்சுகாதாரமையங்கள் அதிக அளவு பற்றாக்குறையாக பீகார் (53 முதல் 94 விழுக்காடு), ஜார்கண்டு (37 முதல் 73 விழுக்காடு), மத்தியப்பிரதேசம் (28 முதல் 47 விழுக்காடு), உத்திரப்பிரதேசம் (41 முதல் 51 விழுக்காடு) ஆகியவைகளில் காணப்படுகிறது. குஜராத், ஹிமாசல் பிரதேசம், கேரளா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் அதன் தேவையைவிட சுகாதாரமையங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. துணை சுகாதார மையத்தை பொருத்தவரையில் இந்திய பொதுச்சுகாதார தரநிலையின்படி 3000 முதல் 5000 மக்களுக்கு ஒன்று வேண்டும் ஆனால் இந்திய அளவில் 5729 மக்களுக்கு ஒன்று காணப்படுகிறது.
ஆரம்ப சுகாதாரமையத்தை பொருத்தமட்டில் ஒரு மையமானது 20000 முதல் 30000 மக்களுக்குச் சேவையினை அளிப்பதாக இருக்க வேண்டும் ஆனால் ஒரு மையமானது 35730 மக்களுக்குச் சேவையினை அளிக்கிறது. இதில் பீகார், ஐhர்கண்டு, உத்திரபிரதேசம் மிகவும் பின்நிலையில் உள்ளது. கிராமப்புற துணை சுகாதாரமையங்கள் சராசரியாக 2.51கிமீ சுற்றளவிற்கும், ஆரம்ப சுகாதாரமையங்கள் 6.28கி.மீ சுற்றளவிற்கும், சமூக சுகாதாரமையங்கள் 13.77கி.மீ சுற்றளவிற்கும் சேவையினை அளித்துவருகின்றன. கிராமப்புற துணை சுகாதாரமையம் 4 கிராமங்களுக்கு ஒன்றும், ஆரம்ப சுகாதாரமையம் 27 கிராமங்களுக்கு ஒன்றும், சமூக சுகாதாரமையம் 128 கிராமங்களுக்கு ஒன்றும் செயல்படுகிறது. இதில் ஜார்கண்டு, ஹிமாச்சல் பிரதேசம், ஒடிசா, உத்திரபிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் மேற்கண்ட தரவுகளைவிட அதிக அளவிலான கிராமங்களுக்கான சேவையினை செய்து வருவதால் இம்மாநிலங்களில் சுகாதாரமையங்களின் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவையான சுகாதராமையங்கள் பெருமளவில் பற்றாக்குறை காணப்படுகிறது எடுத்துக்காட்டாக மலைபிரதேசங்களுக்கு 5015 முதன்மை சுகாதாரமையங்கள் தேவைப்படுகிறது. ஆனால் 4203 மையங்கள் மட்டுமே இயங்குகிறது
(file:///C:/Users/User/Desktop/Rural%20Health%20statistics.pdf)..
இது போன்றே கிராமப்புற ஆரம்ப சுகதாராமையங்களில் பணிசெய்யும் மருத்துவர்களின் பற்றாக்குறை 6.8 விழுக்காடாக உள்ளது. சமூக சுகாதாரமையங்களில் சிறப்பு மருத்துவர்கள் மொத்த அளவில் 76 விழுக்காடு, 79 விழுக்காடு அறுவை சிகிச்சை நிபுணர்கள், 70 விழுக்காடு மகப்பேறு மருத்துவர்கள், 78 விழுக்காடு பொது மருத்துவர்கள், 78 விழுக்காடு குழந்தைகள்நல மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றன. இதுபோன்றே மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதார உதவி பணியாளார்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் கிராமப்புற சுகாதாரமையங்களில் நிலவி வருகிறது.
நாள் மற்றும் வாரம்முழுவதும் 34 விழுக்காடு கிராமாப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மட்டுமே இயங்குகின்றன. 28 விழுக்காடு சுகாதார மையங்களில் குழந்தைபேறு நடைபெறும் அறை இல்லை, 64 விழுக்காடு மையங்களில் அறுவைசிகிச்சை அறை இல்லை, 33 விழுக்காடு சுகாதார மையங்களில் 4ங்கு படுக்கைக்கு குறைவாக இயங்குகிறது, 21 விழுக்காடு மையங்களில் கழிப்பறை இல்லை. இதுபோன்ற நிலையே மற்ற கிராமப்புறத் துணை மற்றும் சமூக சுகாதாரமையங்களில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்குகின்றன. இந்தநிலையில் கிராமப்புற உள்கட்டமைபினை கொண்டுள்ள இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் பெரும் சிரமம் இருக்கவே செய்கிறது.
கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கிராமங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராட்டிரா, மேற்குவங்காளம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெருமளவில் பரவிவருகிறது. மே மாதம் 2021 கணக்கின்படி இந்தியாவில் 3ல் 2 கிராமங்கள் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (%)
மாநிலம் | பிப்பரவரி 2021* | மே 2021* |
உத்திரப்பிரதேசம் | 70.4 | 78.4 |
ராஜஸ்தான் | 64.0 | 74.3 |
மகாராட்டிரா | 48.9 | 65.9 |
மத்தியப் பிரதேசம் | 37.2 | 55.9 |
கர்நாடகா | 41.7 | 54.8 |
குஜராத் | 49.8 | 52.7 |
மேற்கு வங்காளம் | 35.9 | 52.6 |
கேரளா | 48.7 | 43.5 |
தமிழ் நாடு | 36.2 | 41.8 |
குறிப்பு: * மொத்த கோவிட் பாதிப்பில் கிராமப்புறத்தில் பாதிக்கப்பட்டோர் விழுக்காட்டில்.
ஆதாரம்: https://www.thehindu.com>article34607195.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மே 2021 இறுதியில் மொத்த கோவிட் பெருந்தொற்றில் 56 விழுக்காடு கிராமங்களில் பரவியிருந்தது ஆனால் இவற்றை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பு போதுமானதாக இல்லை. அதாவது பிப்பரவரியிலிருந்து மே மாதத்திற்கு இடையில் 19 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்த 819 கோவிட் சிகிச்சை மையத்தில் 69 மட்டுமே கிராமப்புறங்களில் இருக்கின்றன. தனிமைபடுத்தப்பட்ட 21637 படுக்கைகளில் 3039 படுக்கைகள் மட்டுமே கிராமப்புறங்களில் இருக்கின்றன. இதனால் கிராமபுறங்களில் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு சிகிச்சை பெற சென்றனர். நகர்புறங்களில் சிகிச்சை பெறுபவர்களில் 30-35 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள் ஆகும், இதனால் நகர்புறங்களில் மருத்துவமனைகளில் அளவுக்கு அதிமான நேயாளிகள் பெருகத் தொடங்கினர். இவற்றை சமளிக்க மருதுவர்கள், செவிலியர்கள் இல்லை மேலும் பணிச்சுமை காரணமாக பல மருத்துவர்கள் வேலையை விட்டுவிட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கோவிட் 2வது அலையில் மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களிலிருந்து புலம் பெயர்நத தொழிலாளர்கள் அதிக அளவில் சொந்த ஊர்;களுக்கு திரும்பியதால் கிராமங்களில் அதிக அளவில் கோவிட் பரவியது. மே 2021 இறுதியில் மொத்த பாதிப்பில் 74 விழுக்காடு கிராமப்புறங்களில் ஏற்பட்டது. இவற்றை எதிர்கொள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் அதிகரித்து.
மகாராட்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல், பொதுமக்களின் கட்டுகடங்காத புழக்கம் போன்றவைகளால் கோவிட் கிராமப்புறங்களில் பரவத் தொடங்கியது. மே 2021 இறுதியில் நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக (66 விழுக்காடு) அளவிற்கு கோவிட் பெருந்தொற்று காணப்பட்டது. இதனை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு மாநிலத்தில் இல்லை. படுக்கைகள், மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமானது இதனால் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்தது. மேற்குவங்காளத்தில் எட்டு கட்ட தேர்தல் பரபுரையினால் அதிமான கோவிட் பரவல் கிராமப்புறங்களில் ஏற்பட்டது. மே 2021 இறுதியில் 52.6 விழுக்காடு கிராமப்புறங்களில் கோவிட் பரவியிருந்தது. கிராமப்புற சுகாதார கட்டமைப்பில் மருந்து, படுக்கை, ஆக்சிஜன் போன்றவைகள் தேவையினை ஈடுசெய்ய முடியாமல் பெரும் இன்னலை சந்தித்தது. உத்திரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல், கும்பமேளா, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழியாக கிராமப்புறங்களில் கோவிட் தொற்று வேகமெடுத்து பரவியது. மே 2021 இறுதியில் 78 விழுக்காடு கோவிட் பாதிப்பு கிராமப்புறங்களில் இருந்தது. அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் இதில் உயிரிழந்தனர். இறந்த உடல்களை அடக்கம் செய்ய பணமில்லாமல் அவற்றை நதிகளில் எறிந்த நிலையும், அதிக அளவில் பிணங்கள் ஒரே இடங்களில் வரிசைபடுத்தப்பட்டு எரியூட்டப்பட்டதும் இந்த மாநிலத்தில்தான் நிழ்ந்தது (India Today 10.05.2021). அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம் அன்மையில் (05.06.2021) வெளியிட்ட புதிய புள்ளிவிவர அறிக்கை கோவிட்-19 பெருந்தொற்றானது இந்தியாவின் சுகாதாரகட்டமைப்பின் நிலையினை தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளது என்கிறது. கிராமப்புறங்கள் இதன் தாக்கத்தினால் நிலைகுலைந்து போயின. ஒவ்வெரு நிமிடமும் கோவிட்டினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் கிராமப்புறங்களில் மே மாதம் முதல் பெருமளவில் காணப்படுகிறது.
இவ்வாறு கிராமங்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு 2வது அலையில் பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. கிராமப்புற பொது சுகாதாரமையங்களில் மருத்துவர், செவிலியர், படுக்கைகள், இதர உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லாதால் இங்கு வாழும் மக்கள் பலரை இழக்கவேண்டியதாயிற்று. மேலும் பொருளாதார அடிப்படையில் கிராமப்புற பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதித்து வருமானம் இன்றி தவிக்கின்ற வேலையில் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள பணமின்றி தவித்தவர்கள் ஏராளம், இந்த நிலை சரியாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது கணக்கிட இயலாத நிலையே தற்போது உள்ளது. இப்போது நாம் இவற்றை சரிசெய்யக்கூடிய குறுகிய கால திட்டமாக அனைவருக்குமான கோவிட் தடுப்பூசி செலுத்துவதாகும். தற்போது 3 – 4 விழுக்காடு மக்கள் மட்டுமே தடுப்பூசியினை பெற்றுள்ளனர் இதனை முழு அளவில் செலுத்தப்பட வேண்டும். இதற்காக தற்போது ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர முயற்சியினை எடுத்து வருகிறது. மேலும் மக்களிடையே கோவிட் தடுப்பு நடைமுறைகளை கண்டிபான முறையில் பின்பற்ற நடவடிக்கைகளையும் அதனைப் பற்றி விழிப்புணர்வினை கிராமங்கள் தோறும் கடைகோடி நிலைவரை ஏற்படுத்த வேண்டும்.
நீண்டகால கண்ணோட்டம் என்பது சுகாதார உள்கட்டமைப்பினை வலுப்படுத்துவதாகும். இந்தியாவில் 562 மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இதில் ஆண்டொன்றிற்கு 85000 இளநிலை மருத்துவர்கள் வெளிவருகின்றனர். இந்தியா முழுக்க 850 செவிலியர் கல்லூரிகள் இயங்குகின்றன. இதன் வழியாக ஏ.என்.எம் படித்தவர்கள் ஆண்டுக்கு 55000மும் பி.எஸ்.சி (என்) படித்தவர்கள் 1 லட்சம் பேர் வெளிவருகின்றனர். அப்படி இருக்கையில் தேவைப்படும் மனித வளங்களை எளிதாக பயன்படுத்திக்கொள்ள இயலும். இந்தியா உலகளவில் மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் மருந்து தேவையில் 50 விழுக்காடு இந்தியாவால் அளிக்கப்படுகிறது. 3000 மருந்து உற்பத்தி நிறுவனங்களும் 10500 உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளது. அப்படி இருக்கும் போது நம் நாட்டின் மருந்து தேவையினை எளிதில் பூர்த்தி செய்யும் நிலை நம்மிடம் உள்ளது. இது போன்றே மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் என நம்மிடம் அதிக அளவில் இருக்கும் போது சுகாதார உள்கட்டமைப்பினை வலுப்படுத்துவது தலையாய பணியாக இருக்கவேண்டும் இதற்காக அரசு குறைந்தபட்சம்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காட்டை வரும் நிதிநிலை அறிக்கையிலாவது ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முதுமொழியினை நடைமுறையில் அடைய வேண்டும்.
———-
இக்கட்டுரையின் ஆசிரியர், திரு ந. பாலசுந்தரம் அவர்களுக்கு இக்கட்டுரை வடிவம் பெற உதவியதற்கு தனது நன்றியினை பதிவு செய்துள்ளார்.
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி
பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்
வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.