சிறுதொழில் மீன்வளம்
பல்வேறு அடித்தள மக்களுக்கு நேர்ந்தது போலவே மீனவர்களுக்கும் கொரோனா பெருந்தொற்று பொருளாதாரப் பேரிடராய் மாறியிருக்கிறது. சிறுதொழில் மீன்பிடி தொழிலில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரிதாய்க் கவனிக்கப்படவில்லை.
சிறுதொழில் மீன்வளம் மூன்று நிலைகளில் தொழில்களை வழங்கும் களம்: மீன்பிடி கருவிகள்/ படகுகள் உற்பத்தி, பராமரிப்பு சார்ந்த தொழில்கள், அறுவடைத் தொழில், சந்தை, பதனம் சார்ந்த தொழில்கள். கடலுக்குப் போகும் ஒவ்வொரு மீனவரும் கரையில் சராசரியாக 16 பேருக்குத் தொழில் தருகிறார்.
உலக அளவில் 3.2 கோடி தொழிலாளர்கள் மீன்பிடிப்பவர்கள்; 7.6 கோடிப்பேர் சந்தைப்படுத்தல், பதனம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுபவர்கள். இவர்களில் (7.6 கோடி) 80-90% பேர் பெண்கள். இவர்கள் மிகக் குறைந்த ஊதியம் பெற்று, பணிப் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்து வருபவர்கள்.
இந்தியாவில் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கத் தனிமனித இடைவெளி வலியுறுத்தப்பட்ட நிலையில் சிறுதொழில் மீன்பிடி பல மாதங்களுக்கு முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. மீன் பதனக் கூடங்களும் மீன் சந்தைகளும் இயங்கவில்லை. இந்தச் சூழலில் மீன்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலையிழப்புக்கு உள்ளாயினர். அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு இது போதாமைகளின் காலம். தடைக் காலத்தில் முறையான நிவாரணத் திட்டங்கள் ஏதும் செய்லபடுத்தப் படவில்லை. மேம்போக்கான நிவாரணங்களே வழங்கப்பட்டன. பல தரப்பிலிருந்தும் மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகுதான் தமிழக அரசு மீனவர்களைக் கடலுக்குப் போக- சில கட்டுப்பாடுகளுடன்- அனுமதித்தது. சரக்குப் போக்குவரத்துத் தடைகளில் தளர்வு இல்லாமல், ஊரடங்குச் சூழலில் மீனுக்கான சந்தையை மீளக்கொணர்வது அத்தனை எளிதல்ல.
பொதுவாக, மீன்பிடி துறைமுகங்களும் உள்ளூர் மீன் சந்தைகளும் பெருந்தொற்றுப் பரவலுக்கு எளிதான இலக்குகள். சில்லரை விற்பனை, பதனம் உள்ளிட்ட வேலைகளில் இவர்களுக்குத் தொற்று அபாயம் மிக அதிகம். மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த கடற்கரை ஊர்ப்புறச் சூழலில் வாழ்வாதாரத்துக்கும் உயிர்ப் பாதுகாப்புக்கும் இடையில் கடற்கரைச் சமூகங்கள் வழிகாட்டுதலின்றித் தவித்து நிற்கின்றன.
மீன் நுகர்வு வீழ்ச்சி
இயல்பாக, உலக மீன் அறுவடையில் 80% உள்ளூர் அளவில் நுகரப்படுவது. மீதி 20% பொருளாதார மதிப்பிலும் அந்நியச் செலாவணியிலும் முக்கியமானது. ஆடம்பர மீன் உணவு ஏற்றுமதிச் சந்தையும் மீன் பதனிடு ஆலைகளும் உலக அளவில் ஏராளம் வேலை வாய்ப்புகளைத் தந்துகொண்டிருக்கிறது.
பொது முடக்கம் காரணமாக உலக மீன் சந்தை பெருவீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. குளிர்ப்பதன வசதிகள், விமான/கப்பல் போக்குவரத்து ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டன. மீன் ஏற்றுமதியும் பதனிடுதலும் மாதக்கணக்கில் முடக்கப்பட்டுள்ளன. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டன. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, குடிமைப் போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்ட சூழலில் மொத்த அறுவடையையும் உள்ளூர்ச் சந்தையிலேயே விற்பனை செய்யவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.
மீன்பிடி தடை படிப்படியாக நீங்கியபோது சில்லரை மீன் நுகர்வு சரிந்தது, அதன் விளைவாக மீன்விலை வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மக்களின் நுகரும் திறன் குறைந்துவிட்டதால் சந்தைகள் இயல்புக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்றே தோன்றுகிறது. விற்பனையாகாத சரக்கைப் பாடம் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் மீனவர்களிடம் இல்லை. கூட்டுறவு முறையில் குளிரூட்டப்பட்ட மீன் சேமிப்பு நிலையங்கள் கடற்கரைகளில் நிறுவப்பட்டால் மீனின் தரத்தையும் விலையையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக, மீனுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் மீனவர் கைக்கு வரவும் வாய்ப்புண்டு.

கன்னியாகுமரி ஆழ்கடல் மீனவர்கள்
ஏற்றுமதிச் சந்தை முடங்கிவிட்டதால் தூத்தூர் மீனவர்கள் பிடித்துவரும் கேரை மீனுக்கு (சூரை மீனில் ஒருவகை) வழக்கமான விலை கிடைக்கவில்லை. நாளும் எகிறிக்கொண்டிருக்கும் எரிபொருள் விலையில் அவர்களால் இந்த வீழ்ச்சியைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அறுவடையுடன் துறைமுகத்துக்கு வந்த ஆழ்கடல் விசைப்படகுகள் பலவும் கேரள வியாபாரிகளின் வரவை எதிர்பார்த்து நாட்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.
ஆழ்கடல் மீன்பிடி பயணத்துக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று பனிக்கட்டி. சில மாதங்களாக மூடிக்கிடந்த பனிக்கட்டி உற்பத்தி நிலையங்களில் இயந்திரங்கள் பழுதுபட்டுவிட்டன. பனிக்கட்டிக்கான அலைச்சலில் சில படகுகள் தூத்துக்குடி வரை சென்று பனிக்கட்டி ஏற்றிக்கொண்டு ஆழ்கடலுக்குப் போனதாய்ச் செய்தி.
புலம் பெயர் மீனவர்கள்
புலம் பெயர்ந்த மீனவர்களின் நிலைமை இதைவிடச் சிக்கலானது: வேலை இழப்பினால் தங்களின் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க முடியவில்லை; அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியவில்லை. அரசு நிவாரணத் திட்டங்களில் புலம்பெயர் மீனவர்கள் புறக்கணிக்கப் பட்டனர். நூற்றுக்கணக்கான கன்னியாகுமரி மீனவர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
கருவாட்டு வணிகம்
கடற்கரைப் பயணங்களின்போது பழவேற்காடு, நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம் கடற்கரைகளில் கருவாட்டுத் தொழிலில் இயங்கிவரும் ஏராளம் மீனவப் பெண்களோடு உரையாடியிருக்கிறேன். மீனுணவு எட்ட முடியாத தொலைவிடங்களில் கருவாட்டுச் சந்தை அதிக பொருளாதாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கோவில்பட்டி, சங்கனாச்சேரி சந்தைகள் முக்கியமானவை. புதுக்கோட்டைக்கு மாயவரம், திருவாரூர்ச் சந்தைகள். பழவேற்காடு ஏரி, கடல் அறுவடைகளின் பெரும்பகுதி கருவாடாக பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சென்னைச் சந்தைகளுக்கு வந்து சேர்ந்ததுது. மீன் வியாபார வாய்ப்பு மட்டும் இல்லையென்றால் ஏராளம் கடற்கரைக் கைம்பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.
நவீன தொழில் நுட்பங்களின் தயவினால் மீன் சந்தை விரிவாக்கம் பெற்றாலும் கருவாட்டு வணிகம் ஏராளம் பெண்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. சிறுதொழில் மீன்வளத்தில் பெண்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு நிகரான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. இந்த வேதனையான எதார்த்தம் பேரிடர், பெருந்தொற்றுக் காலங்களில் வெளிபட்டுவிடுகிறது.

கைவிடப்பட்டவர்கள்
சத்தான உணவும் முறையான உடற்பயிற்சியும் கொண்டு நோய் எதீர்ப்புத் திறனைப் பராமரிக்கவேண்டும் என்று அரசு மக்களுக்கு அறிவுரை சொல்கிறது. ஆனால் பாதுகாப்பான கடல் புரத உணவை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மீன்பிடி தொழிலை பாதுகாப்பான முறையில் மீளத் தொடங்குவதில் அரசு பெரிதாய் அக்கறை காட்டவில்லை. இதில் அதிகபட்ச பாதிப்பு நேர்ந்தது சிறுதொழில் மீனவர்களுக்கும் உள்ளூர் வணிகம் சார்ந்த தொழிலாளர்களுக்கும்தான். பஞ்சகால சேமிப்பு- நிவாரணத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மீன்வளம் குறைந்துபடும் மூன்று மாதங்களுக்கு நிவரணம் தந்துவந்த மாநில அரசு மீனவர்களுக்குத் தொழில் மறுக்கப்பட்ட பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் (2020 மார்ச்– ஜூலை) உரிய நிவாரணம் வழங்கவில்லை.
சுனாமி நிவாரண, மறுகட்டுமான கட்டங்களில் மீன்பிடி தொழில் சார்ந்த இரண்டு முக்கியமான தரப்புகள் புறக்கணிக்கப்பட்டன- உள்நாட்டு மீனவர்கள் (கடல் மீன் வணிகர்கள்), பெண் தொழிலாளர்கள் (வணிகம், பதனம்). அமைப்பு சாராத இந்த இரண்டு தரப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகள் இல்லை என்பது முக்கியமான குறைபாடு. 600 கடற்கரைக் கிராமங்கள் கொண்ட தமிழ்நாட்டில் நானறிய மீனவப் பெண்கள் கூட்டுறவு சங்கங்கள் 12 மட்டுமே. சிறுதொழில் மீன்பிடி பாதிக்கப்பட்ட போதெல்லாம் மேற்சொன்ன இரண்டு தரப்பினரும் தொழில் இழந்திருந்தனர், ஆனால் மாநில அரசு இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. சில மீன்தொழிலாளர் இயக்கங்கள் பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த பிறகும் பஞ்ச/ பேரிடர் நிவாரணம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. ‘வணிகமும் பதனமும் இல்லாமல் மீன்பிடி தொழில் இல்லை’ என்கிற குறைந்தபட்சப் புரிதல்கூட அரசு துறைகளுக்கு அற்றுப்போனது.
சில மாற்றங்கள்
பெருந்தொற்று பலவகையான சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பொதுமுடக்கத்துக்குப் பின்னான காலத்தில் கன்னியாகுமரிக்கடற்கரையில் பல பட்டதாரி இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் மீன்விற்பனையில் இறங்கினர். சில ஊர்களில் பட்டதாரி உள்ளிட்ட இளம்பெண்கள் சாலையோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்டனர். மீன்பிடித்தல், மீன் வணிகம் படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைகளல்ல என்பதான பார்வையை உடைக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதே. சுகாதாரமான மீன் கையாளுதல் குறித்த தொழில்முறை அறிவை இந்த இளைஞர்கள் நடைமுறைப்படுத்தினால் இது நம்பகமான தொழில்களமாய் அமையும்.
காவல்துறை வன்முறை
முள்ளுர்துறைக் கடற்கரைக் கிராமத்தில் சட்ட ஒழுங்கின் பெயரால் நிகழ்த்தப்பட்ட காவல்துறை வன்முறை வெந்த புண்ணில் வேலானது. கடற்கரைக் குடியிருப்புகள் இயல்பாக நெரிசல் மிகுந்தவை; பகலும் இரவும் ஆண்களின் புழங்குவெளி கடற்கரைதான். கடற்கரையில் மீனவர்கள் புழங்குவதைக் குற்றமாக மதிப்பிடுவதே கோளாறான அணுகுமுறைதான். கோயம்பேடு போன்ற பெருநகரச் சந்தைகளில், டாஸ்மாக் கடைகளில், புறநகர்ச் சாலைகளில் விதிமீறும் மக்களை ‘அன்போடு அறிவுரை சொல்லித் திருத்திய’ காவல்துறையினர் முள்ளூர்துறை மக்கள் மீது நிகழ்த்திய வன்முறை புரிதலின் கோளாறா, வழமையான வன்முறைப் போக்கா?
கூட்டுறவு அமைப்பு என்ன செய்கிறது?
கோவிட்-19 பெருந்தொற்று ஓர் இயல்பு மீறிய பெருநெருக்கடி. இயல்பு மீறிய நெருக்கடிகளுக்கு இயல்பான பிரதிவினை தீர்வு தராது, சமயங்களில் நெருக்கடியைத் தீவிரப்படுத்திவிடும்.. சிறுதொழில் மீன்பிடி, மீன் சந்தை சார்ந்த வாழ்வாதாரத்தின் இயங்கியலைக் குறித்த அடிப்படைப் புரிதல் அரசுத் தரப்புக்குத் துப்புரவாக இல்லை என்பது அது முன்னெடுத்த உடனடித் தீர்வுகளில் வெளிப்பட்டது.
சிறுதொழில் மீன்வளத்தைப் பொறுத்தவரை மீன்வளத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்துறை போன்ற துறைகளின் இடையீடுகளுக்கான இடங்கள் தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கவில்லை. மீனவர் கூட்டுறவு அமைப்புகள் குடிமை வழங்கல் அமைப்புகளாகக் குறுகிப்போய்விட்டன. சிறுதொழில் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான கட்டுமானங்களாய் அவை வளர்க்கப்பட்டிருந்தால் பெருந்தொற்று போன்ற நெருக்கடிகளைச் சிறப்பாய்க் கையாண்டிருக்க முடியும்.
தளம் மறுக்கப்படும் மீனவர்கள்
மீனவர்களின் கரிசனங்களை அரசிடம் எடுத்துரைக்கவும் கோரிக்கைகளை முன்வைக்கவும் பொருத்தமான தளங்கள் கிடைக்கப்பெறவில்லை. கடற்கரையில் அடிப்படைத் தொழில் கட்டுமானங்களை அமைப்பதிலும் தொழில் நெருக்கடிகளைக் கையாள்வதிலும் மீனவர்களைக் கலந்தாலோசிக்கும் நிர்வாக நெறிமுறைகளோ துறைசார் கட்டமைப்போ இல்லாத சூழலில் சிறுதொழில் மீனவர்கள் குரலற்று நிற்கிறார்கள்.
தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் அண்மையில் நேர்ந்த மரணங்கள் இதற்கொரு உதாரணம். அலைத் தடுப்புக் கட்டுமானத்தின் தொழில்நுட்பக் கோளாறினால் இம்மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இத்தொழில்நுட்பக் கோளாறினால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு, விசைப்படகுகள் சேதமாகிக் கொண்டிருந்தன; இது குறித்து நீண்ட கலமாக மீனவர் தரப்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள்/ புகார்கள் புறக்கணிக்கப் பட்டன. கழிமுக வாயிலில் தூர்வாருவதால் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத்தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை.
இரட்டைத் தாக்குதல்
கடற்கரை நிலங்களையும் கடலையும். பெருந்தொழில் திட்டங்களுக்குத் தாரைவார்க்கும் இலக்குடன் மீனவர்கள் மீது இப்பெருந்தொற்றுக் காலத்தில் தாக்குதல்கள் தொடுக்கப் படுகின்றன: சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (திருத்த) மசோதா- 2020, தேசிய மீன்வளக் கொள்கை- 2020 இரண்டையும் நடப்பாக்குவதற்கு மைய அரசு இப்பெருந்தொற்றுக் காலத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது அவலமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முதலாக மீன்பிடி கப்பலை உரிமைகொண்ட ஸ்கிப்பர் மெல்க்கியாஸ் (67) அண்மையில் குறிப்பிட்டார்- ‘அரசு கடலைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் இனிமேல் 12 கடல்மைலுக்கு அப்பால் போக முடியாதபடி சட்டங்களை உருவாக்கி, கார்ப்பரேட்டுகள் சர்வ சுதந்திரமாகக் கடல்வளங்களைக் கொள்ளையிடுவதற்கு வசதி செய்து கொடுக்கிறது. அந்தக் கப்பல்கள் ’புல் ட்ரால்’ஐ (bull trawl/ twin trawl) பயன்படுத்தி மொத்தக் கடலையும் வடிகட்டிக் கொண்டிருக்கின்றன. மீனவர்களின் எதிர்காலத்துக்கே இது சாவுமணியடித்துவிடும்.’
கருத்துப் பரிமாற: vareeth59@gmail.com
(முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959) நெய்தல் சூழலியல் ஆய்வாளர், எழுத்தாளர். பணிநிறைவு (1982- 2018) பெற்ற (விலங்கியல்/ மீன்வளப்) பேராசிரியர். இப்போது தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியர். )

