தடுப்பூசி தேசியவாதம்: *மாப்பிள அவரு!.சட்ட என்னுது* – பிரபிர் புர்காயஸ்தா | தமிழில்: இரா.இரமணன்தம்பி – அண்ணே இப்ப கொரோனாவுக்கு இரண்டு தடுப்பூசி இருக்காமே?

அண்ணன் – ஆமாண்டா.ஒண்ணு கோவிஷீல்டு. இன்னொன்னு கோவாக்சின்.

தம்பி – இரண்டுக்கும் என்னண்ணே வித்தியாசம்?

அண்ணன் – கோவிஷீல்டு இங்கிலாந்து நாட்டில கண்டுபிடிச்சது. கோவாக்சின் நம்ம நாட்டில கண்டுபிடிச்சது.

தம்பி – இரண்டுக்குமே அனுமதி கொடுத்திட்டாங்களா ?

அண்ணன் – முதல்ல கோவிஷீல்டுக்குதான் கொடுத்தாங்க.

தம்பி – சரி அப்புறம்?

அண்ணன் – இந்த பிஜேபி ஆர்எஸ்எஸ்காரங்க வெளிநாட்டு மருந்துக்கு அனுமதி கொடுத்திட்டு உள்நாட்டு மருந்துக்கு கொடுக்காதது தப்பு. ஆத்மநிர்பார் கொள்கைக்கு விரோதமானதுன்னு கூச்சல் போட்டாங்க. வேற வழியில்லாம அதுக்கும் அனுமதி கொடுத்திட்டாங்க.

தம்பி – அவங்க சொல்றது சரிதானே அண்ணே?

அண்ணன் – உனக்கு இந்த ரபேல் விமானம் தெரியுமா?

தம்பி- பேப்பர்ல பாத்தேன் . இப்ப குடியரசு தினத்தில கூட அத காட்சிக்கு வைக்கப்போறாங்களாம்.

அண்ணன் – அது எங்க தயாரிக்கறாங்க தெரியுமா?

தம்பி – பிரான்ஸ் நாட்டில.

அண்ணன் – டேய் ! நீ விவரமாத்தான் இருக்க. அதே மாதிரி போர் விமானத்த நம்ம நாட்டில இருக்கிற இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் தயரிக்கிறேன்னாங்க. ஆத்மநிர்பார்னா யாருக்கு அனுமதி கொடுத்திருக்கணும்?

தம்பி – இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ்குத்தான்.

அண்ணன் – கொடுத்தாங்களா. கொடுக்கலையே? அப்ப இவங்க தேசப்பற்று எல்லாம் எங்க போச்சு?

தம்பி – அது இருக்கட்டும் அண்ணே. இந்த இரண்டு ஊசிக்கும் என்ன வித்தியாசம்?  

அண்ணன் – இரண்டிலும் உள்ள உட்பொருள் வேறுபட்டது. அத  நம்மள மாதிரி ஆளுங்க புரிஞ்சுக்கிறத கொஞ்சம் கஷ்டம். எப்படி வேலை செய்யும்னு சொல்றாங்கன்னா, கோவிஷீல்டு, கொரோனா மேல கொம்பு மாதிரி இருக்கில்ல, அத உண்டாக்கி அதுக்கு நம்ம உடம்பில எதிர்ப்பு சக்திய ஏற்படுத்துமாம். கோவாக்சின் முழு கொரோனாவையும் எதிர்க்கிற மாதிரி வேல செய்யுமாம்.

தம்பி – அப்படின்னா இரண்டாவதுதானே நல்லது? அதுக்கு அனுமதி கொடுத்ததில என்ன தப்பு?

அண்ணன் – உன் கேள்விக்கு பதில் சொல்லணுமின்னா, முதல்ல இந்த மருந்துக்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கணும். இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியமுன்னு ஒண்ணு இருக்கு. அது தடுப்பூசிக்கு எப்படி அனுமதி கொடுக்கணுமின்னு சொல்லியிருக்கு.

தம்பி – என்ன சொல்லியிருக்கு?

அண்ணன் – தடுப்பூசிய மூணு கட்ட பரிசோதனை பண்ணி அதில வர முடிவுகள வெச்சுதான் அனுமதி கொடுக்கணும். கோவிஷீல்டு இங்கிலாந்தில மூணு கட்ட பரிசோதன பண்ணி முடிவுகள் வந்திருக்கு. கோவாக்சின் இந்தியாவில இரண்டு கட்ட பரிசோதனைகள் முடிவுகதான் வந்திருக்கு. மூணாவதுக்கு இன்னும் முடிவுகள் வரல.    

தம்பி – அதினால அதுக்கு அனுமதி கொடுத்தது தப்புங்கறாங்க?

அண்ணன் – ஆமாம். இன்னொண்ணும் தெரிஞ்சுக்கோ. கோவாக்சின் இந்திய தயாரிப்பு சொன்னாலும் அதில் சேக்கற வேதிப்பொருள் வெளிநாட்டிலிருந்து வாங்கியதுதான். தம்பி – மாப்பிள அவருதான்.ஆனா சட்டை என்துகிறமாதிரி. அது போகட்டும்.கோவாக்சின் நல்லா வேலை செய்யுமா செய்யாதாண்ணே?

அண்ணன் – நல்லா வேல செய்யலாம். ஏன்னா அது ரொம்ப காலமா பயன்படுத்திக்கிட்டிருக்கிற செயலிழக்கப்பட்ட கிருமி நுணுக்கத்தில செஞ்சது. எதிர்ப்பு சக்திய அதிகரிக்கிற வேதிப்பொருள் எல்லாம் சேத்திருக்காங்க. மூணாவது கட்ட முடிவுகள் வற்ர வர பொறுத்திருந்திருக்கலாம். 

தம்பி – ஆனா தடுப்பூசி லட்சக்கணக்கில தயாரிக்கிறது, சேமிக்கிறது, பல இடங்களுக்கு கொண்டு போய் சேக்கிறது எல்லாம் வேகமா நடக்கிறதே அண்ணே?

அண்ணன் – அதிலயும் பிரச்சினை இருக்கு. அரசாங்கம் இத ஒரு நிர்வாக விசயமாகப் பாக்குது. மேலிருந்து சொல்றத கீழ உள்ளவங்க செய்யுங்க அப்படீங்கிற மாதிரி. எல்லாமே ரகசியமா செய்யற மோடி ஸ்டையில்தான் இதிலயும் தெரியுது. இந்த ஊசி எத்தன தடவ போடணும் தெரியுமா?

தம்பி – ஒரு தடவ போட்டா போராதா?

அண்ணன் – இரண்டு வாட்டி போடணும். இரண்டுக்கும் நடுவில எவ்வளவு நாள் இருக்கணுமின்னு சொல்ல மாட்டேங்கறாங்க. முன்னுரிமை யார் யாருக்குன்னு சொல்லல. இந்த கொரோனா வந்த உடனே ஒரு ஊரடங்கு அறிவிச்சாங்களே நினைவிருக்கா?

தம்பி – ஆமாண்ணே ரூபா நோட்டு செல்லாதுன்னு ராத்திரி எட்டு மணிக்கு அறிவிச்சாங்க. ஜனங்க எல்லாம் சேத்து வச்சிருந்த ரூபா நூட்ட எடுத்துகிட்டு பேங்கு வாசல்ல காத்து கிடந்தாங்க. கொரோனா  ஊரடங்கு நாலு மணி நேரத்தில அமுலாகும்ன்னு சொன்னாங்க. வெளிமாநில தொழிலாளிங்கல்லாம் மூட்ட முடிச்சு எடுத்துகிட்டு குழந்தைகள அழைச்சுகிட்டு மைல் கணக்கா கால் நடையா நடந்தாங்களே?

அண்ணன் –  அதேதான். இப்பவும் தடாலடியா செயல்படுத்தறாங்க.

தம்பி –  நீங்க முடிவா என்ன சொல்றீங்க?

அண்ணன் – கொரோனாவுக்கு சில நாடுகளில ஒண்ணும் செய்ய வேண்டாம்; மந்தை எதிர்ப்பு சக்தி வந்துரும்ன்னு சொன்னாங்க. இன்னும் சில நாடுகளில பொருளாதாரமா, கொரோனா கட்டுப்பாடா அப்படின்னு கேள்வி எழுப்பினாங்க. இரண்டுமே தப்புன்னு தெரியுது. கொரோனா கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த கொரியா, வியட்நாம், சீனா மாதிரி நாடுங்க தான் குறைவான பொருளாதார பாதிப்ப சந்திச்சுது.

தம்பி – நம்ம நாட்டில என்ன செஞ்சாங்க?

அண்ணன் – இதே பிஜேபி ஆர்எஸ்எஸ்காரங்க வெளக்க கொளுத்துங்க, தட்ட அடிங்க, ‘போ கொரோனா போ’ அப்படின்னு கூச்சல் போட சொன்னாங்க. இப்ப உள்நாட்டு ஊசிக்கு உடனே அனுமதி கொடுன்னு மிரட்டறாங்க.அதுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் அடி பணிஞ்சிருச்சு.

தம்பி – அவங்கதான் என்ன சாப்பிடணும், பெண்கள் யார காதலிக்கணும் திருமணம் செஞ்சுக்கிடணும், கோமியத்த குடிக்கணும்னு சொல்றாங்களே? இதிலையும் அப்படித்தானே இருப்பாங்க.

அண்ணன் – சரியா சொன்னே. அதோட அரசாங்கமும் ஒரு தடுப்பூசி போடற பொது சுகாதார விசயத்தில, மூடி மறைச்சு மேலிருந்து எதேச்சாதிகாரமா செய்யிறது மோசமான ஒண்ணு.    

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி  ஜனவரி 04-10 இதழில் பிரபிர் புர்காயஸ்தா அவர்களின் கட்டுரையை தழுவியது)