“கொரானா தடுப்பு மருந்துகள் எந்த அளவு வேகமாக பெரும் திரள் மக்களின் உடல்களில் இரண்டு கட்ட டோஸ்களாக சேர்க்கப்படுகிறதோ அந்த அளவே அந்த நோய் பரவலை ஊரடங்கில்லாமல் தடுக்க முடியும். மக்களை முடக்குவதையும், உயிர்களைப் பறிப்பதையும் தடுக்க முடியும்” “50% முதல் 80% மக்களுக்குத் தடுப்பு மருந்து போடப்பட்டு எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டால் அதன் பிறகு ஒருவருக்கு இந்த வைரஸ் பற்றினால் கூட எளிதாக பரவாது ஊரடங்கு இல்லாமல் வாழமுடியும் ” என்று உலக சுகாதார கழகம் உலக நாடுகளை அறிவுறுத்துகிறது.
தடுப்பூசி போடுவதில் கால தாமதம் கூடாது “பெறும் திரள் எதிர்ப்புச் சக்தி” (Herd Immunity) தானாக உருவாகாது, மாறாக வைரசுகள் புதிய வடிவில் மக்களை முடக்க தோன்றிவிடும் என்று வைரஸ் ஆய்வு நிபுணர்கள் கணிக்கின்றனர். இப்பொழுதே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய ரக கொரானா வைரஸ் தலையெடுத்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன
இதன் படி பார்த்தால் 1366 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்குக் குறைந்தது 50 சதமக்களுக்கு இரண்டு டோஸ்செலுத்த 1366 மில்லியன் டோஸ் மருந்துகள் தேவை. 2021ம் ஆண்டு முடிவிற்குள் இந்த இலக்கை தொட வேண்டுமானால் மாதம் ஒன்றுக்குக் குறைந்தது ஆறரை கோடி (65 மில்லியன்) மக்களுக்கு மருந்து செலுத்தப்படவேண்டும் இதற்கு மாதம் ஒன்றுக்கு 130 மில்லியன் டோஸ்கள் தேவை. இந்தியாவின் உற்பத்தித் திறன் வருடத்திற்கு 2 கோடி (20 மில்லியன்) டோஸ்களே தயாரிக்கும் நிலைமை உள்ளது நமக்குத் தேவை குறைந்தபட்சம் 136 கோடி டோஸ்கள் எனவே இறக்குமதி செய்யாமல் தடுப்பூசி மருந்து பஞ்சம் போகாது. இதை மனதில் கொண்டு வாசிப்பைத் தொடர்க.
அதே உலக சுகாதார கழகம் இன்னொன்றையும் சொல்கிறது. உலக மயமாகிவிட்ட கொரானாவை முறியடிக்க எல்லா நாடுகளுக்கும்,அது போல் ஒரு நாட்டின் வர்க்க பாகுபாடில்லாமல் எல்லா மக்களுக்கும் மருந்து கிடைக்க ஏற்பாடு வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. இவ்வாறு அறிவுறுத்தக் காரணமென்ன? 92 வளர்முக நாடுகளில் உள்ள மக்களுக்கும் அதேபோல் பணக்கார நாடுகளில் உள்ள ஏழைகளுக்கும் இந்த தடுப்பூசி மருந்துகள் கிடைக்கிற நிலை இன்று இல்லை.
ஏன் எனில் பெரும்பாலான தடுப்பு மருந்துகள் முதலாளித்துவ நாடுகளில் சந்தை பொருளாகப் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு மருந்து வர்த்தக பன்னாட்டு நிறுவனங்களால் ஸ்டாக் செய்ய ஏற்பாடுகள் தொடங்கி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன… இந்த நிகழ்வுகள் கொரானா தடுப்பு மருந்துகளைக் கள்ளச் சந்தை சரக்காக உருவாக வழிவகுக்கிறது.
2020ம் ஆண்டிலிருந்தே மேலை நாட்டு மருந்து நிறுவனங்கள் கொரானா தடுப்பு மருந்து ஆய்வினை மேற்கொண்டு உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டனர் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்சு இந்த தடுப்பு மருந்து உற்பத்தியைச் சந்தை நோக்குடன் அதாவது லாபம் சம்பாதிக்கும் நோக்குடன் உள்நாட்டுத் தேவையைப்போல் பலமடங்கு தயாரிப்பு திறனைக் கொண்டதாகக் கட்டமைத்துக் கொண்டன. இதே காலத்தில் ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் சோசலிச பாதையைத் தேர்வு செய்த நாடுகளும் ஆய்வு செய்து தயாரித்துக் கொண்டன.
தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆற்றல் உள்ள நாடுகள் அனைத்தும் மனது வைத்தால் ஆற்றலில்லாத 92 நாடுகளுக்குத் தாங்கும் விலையில் மருந்துகளையும் சிகிச்சை அழிக்கத் தேவையான கருவிகளையும் கொடுக்க முடியும் என்று விவரம் அறிந்த வட்டார மட்டுமல்ல சோசலிச பாதையைத் தேர்வு செய்த நாடுகளின் அரசுகளும் அறிவிக்கின்றனர்
இன்று 33 கோடி மக்கள் வாழும் அமெரிக்காமட்டும் 200 கோடி மக்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கிற அளவிற்கு உற்பத்தித் திறன் இருக்கிறது.. ஆனால் நடப்பதென்ன?
ரஷ்யா சீனா உலக சந்தையில் நுழைந்தால் விலைகளை மேலை நாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்க இயலாது என்பதால் போன வருடமே இந்த ஆய்வுகள் நடக்கிற பொழுதே டிரம்ப் போன்ற மேலைநாட்டு ஆட்சியாளர்கள் முதலில் ரஷ்யாவை மருந்து தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டி பொருளாதாரத் தடை என்றனர்,பின்னர் சீனாவையும் மேலை நாட்டு ஆய்வுத் தகவல்களைத் திருடியதாகப் பழி சுமத்தினர். அதோடு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று குற்றம் கூறி பயத்தை விதைக்கத் தயங்கவுமில்லை.. போட்டியைத் தவிர்த்து ஏகபோகமாக மருந்து விற்பனையைத் தொடர்வதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவிலும் தனியார் மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளைச் செய்தும் மேலை நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்தும் தடுப்பு மருந்தைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. அதே வேளையில் டாட்டா நிறுவனம் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை வாங்கி விற்க ஒப்பந்தம் போட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ரிலையன்ஸ் ஐரோப்பிய நிறுவனங்களின் சேல்ஸ் ஏஜென்டாக ஒப்பந்தம் செய்த செய்தியும் உள்ளது. இந்தியத் தனியார் வாக்சின் தயாரிக்கும் நிறுவனங்களும் உலக சந்தையில் விற்கப் போட்டிப் போட தயாராகி வருகின்றன.
பிரிட்டன் நாட்டு பி.பி.சி ஊடகம் கொரானா தடுப்பு மருந்து வர்த்தகம் பற்றி .28,ஜனவரி 2012 அன்று ஆன்லைனில் .( Covax: How will Covid vaccines be shared with poorer countries?) ஏழை நாடுகளுக்கு கோவிட் வாக்சின் எப்படிக் கிடைக்கும்? என்ற தலைப்பில் ஒரு தகவல் கட்டுரை வெளியிட்டது.
”உலக மக்கள் தொகையில் 16 சத மக்களே வாழ்கிற எண்ணிக்கையில் மிகக் குறைவான பணக்கார நாடுகளின் மருந்து வர்த்தக நிறுவனங்கள் வாக்சின் உற்பத்தியில் 60 சதத்தை ஸ்டாக்காக வைத்திட முடிவு செய்துவிட்டன. . எனவே உலக சுகாதார கழகம் ஏழைநாடுகளுக்கு தாங்கும் விலையில் மருந்துகளைப் பெற COVAX என்ற திட்டத்தை அறிவித்துள்ளது”. இதன்படி 92 வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு மருந்தைத் தாங்கும் விலைக்குக் கொடுக்க முன்வந்துள்ளது. அதற்காகப் பணக்கார நாடுகளின் அரசுகளும் தனியாரும் நன்கொடையாக நிதியைப் பெற்று மருந்தைக் கொடுக்க திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார கழகம் தருகிற தகவல்படி ஆறு பில்லியன் டாலர்கள் தானமாகப் பெற்றதைக் கொண்டு தாங்கும் விலைக்கு மருந்துகளைக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நல்லெண்ண அடிப்படையில் உலக சுகாதார கழகம் செயல்பட்டாலும். பெரும்பாலான ஏழைகளுக்குப் போய்ச் சேருவது கடினமே.
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான டியூக் பல்கலைக்கழகத்தின் மக்களின் ஆரோக்கிய ஆய்வுப் பிரிவு இந்த வாக்சின் உற்பத்தி மற்றும் வர்த்தகம்பற்றி இணையத்தில் வெளியிடும் தகவல்கள் இந்த கடினத்தை உறுதி செய்து அதிர்ச்சி அளிக்கின்றன.
446 மில்லியன் மக்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மருந்து வர்த்தக நிறுவனங்கள் 2.8 மடங்கு டோஸ்மருந்துகளை ஸ்டாக்காக வைக்க ஒப்பந்தம் போட்டுள்ளன.கனடா மக்கள் தொகையைப் போல் 5மடங்கு டோஸ்களை மடக்கியுள்ளன.
330 மில்லியன் மக்கள் தொகை அமெரிக்காவின் மருந்து வர்த்தக நிறுவனங்கள் 2600 மில்லியன் டோஸ்களை மடக்கியுள்ளது. அமெரிக்கா முதல் இந்தியாவரை தடுப்பூசி போடுவது துவங்கிவிட்டது மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகமும் பயமும் நீங்கும் நிலை வந்தவுடன் மக்கள் நீ முந்தி நான் முந்தியனெ கியூவில் நிற்க நேரும் பொழுது மருந்து விலை தானாக உயரும் அதனால் மானுடத்தைக் காப்பாற்றும் இலக்கு லாப நோக்கத்தால் தடுமாறப் போவதை நிபுணர்கள் எச்சரிப்பதை ஊடகங்கள் காட்டுகின்றன.
இன்றைய நிலையில் வாக்சின் உற்பத்தியும், இவைகளை பாதுகாப்பாகக் கொண்டுசெல்லக் குளிர்பதன ஏற்பாடுகளும் அடுத்த 10 மாதங்களுக்குள் 60 முதல் 70 சத உலக மக்களுக்கு மருந்து செலுத்தும் ஆற்றலைப் பணக்கார நாடுகள் ஒத்துழைத்தால் திரட்ட முடியும்.,. பணக்கார நாடுகளின் சுய நல அணுகுமுறை இதற்குத் தடையாக இருக்கிறது. வாக்சினை கொள்ளை விலைக்கு விற்கவே சூழ்ச்சி செய்கின்றன.
தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி சைரில் ராமஃபோசா மேலை நாடுகளின் சுயநலத்தைக் கண்டித்துள்ளார், தென் ஆப்பிரிக்காவோடு டாலர் ஆதிக்கத்தை எதிர்க்கும் கூட்டமைப்பில் இருக்கும் மோடி அரசோ வாய்திறக்க மறுக்கிறது.
இந்திய அரசும் தனியார் மருந்து நிறுவனங்களும் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து டாலர் சம்பாதிக்கத் திட்டமிடுகின்றனர். மறுபக்கம் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் மருந்தைவிற்க டாட்டா, அம்பானி ரிலையன்ஸ் மூலம் விற்க ஒப்பந்தங்கள் தயாராய் விட்டன. இந்தியாவில் கொரானாவிற்கு சிகிச்சை என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளை இனி தடுப்பூசியை வைத்துத் தொடரும்
மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே தடுப்பூசி போடும் செலவை அரசு தாங்க வேண்டும் என்ற இயக்கம் வலுக்காமல் ஏழைகளாக இருக்கும் நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தடுப்பூசி மருந்து கிடைக்காது. அவர்கள் கடன்படவேண்டும் அல்லது சேமிப்பை இழக்க வேண்டும்..
பணக்கார நாடுகளின் சுயநல அணுகுமுறையைக் கண்டிப்போம்
அவர்கள் வழியிலே போகும் மோடி அரசைத் தண்டிக்க மக்களைத் திரட்டுவோம்.