கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன? – இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் (தமிழில் ஆர்.ஷாஜகான்)

 

இந்திய பொது சுகாதாரச் சங்கம்
(Indian Public Health Association – IPHA),
தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துக்கான இந்தியச் சங்கம்
(Indian Association of Preventive and Social Medicine – IAPSM)
இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் (Indian Association of Epidemiologists)
இணைந்து வழங்கும்

இந்தியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் குறித்தான 2ஆவது கூட்டறிக்கை — கோவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான பொது சுகாதார அணுகுமுறை
(2nd Joint Statement on CoVID-19 Pandemic in India – Public Health Approach for COVID19 Control)
25 மே 2020

கோவிட் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக IPHA, IAPSM, IAE ஆகிய மூன்றும் இணைந்து கூட்டுப் பணிக்குழு ஒன்றை உருவாக்கின. அந்தக் குழுவுக்கு கீழ்க்கண்டவாறு செயல்முறைத் திட்டம் வழங்கப்பட்டது.
1) தேசிய, மாநில, மாவட்ட அளவில் கொள்ளைநோய் குறித்தான தகவல்களைத் திரட்டுவது; 2) கோவிட் கொள்ளை நோய் மற்றும் அதன் பரவல் குறித்து வல்லுநர்கள் இடையே ஒத்த கருத்தை உருவாக்குவது, அதன் அடிப்படையில் செயல்திட்டம் வகுப்பது; 3) அவ்வாறு தயாரித்த அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்களை பொது சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை சங்கங்கள் மற்றும் தொடர்புடைய எல்லாருக்கும் பரப்புவது; 4) மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்வது.

கூட்டுப்பணிக்குழுவில் இடம்பெற்றவர்கள் :

1. Dr. A. C. Dhariwal, Former Director, NVBDCP & NCDC, and Advisor NVBDCP, MoHFW, GoI, New Delhi
2. Dr Anil Kumar, President, IAE & Dy DGHS (Deafness), Nirman Bhawan, New Delhi
3. Dr. A.M. Kadri, Secretary, IAPSM, Ahmedabad
4. Dr. Chandrakant S. Pandav, Past President IPHA & IAPSM, former Professor & Head, Centre for
Community Medicine (CCM), AIIMS, New Delhi, and President, ICCIDD
5. Dr. D.C.S. Reddy, Former Professor & Head, Community Medicine, IMS, BHU, Varanasi
6. Dr. Farooq Ahmed, Former Director NEIGRIMS, and Pro VC KBN University, Gulbarga
7. Dr. Kapil Yadav, Additional Professor, CCM, AIIMS, New Delhi
8. Dr. M. K. Sudarshan, Chief Editor, Indian Journal of Public Health (IJPH), Bengaluru
9. Dr. Puneet Misra, Past President, IAPSM & Professor, CCM, AIIMS, New Delhi
10. Dr. Rajesh Kumar, Former Professor & Head, DCM&SPH, PGIMER, Chandigarh
11. Dr. Rajib Dasgupta, Professor, Community Health, Jawaharlal Nehru University, New Delhi
12. Dr. Sanghamitra Ghosh, Secretary General, IPHA, and CMO (SG) Ministry of Defence, Kolkata
13. Dr. Sanjay K. Rai, National President, IPHA and Professor, CCM, AIIMS, New Delhi
14. Dr. Sanjay Zodpey, President, IAPSM and Vice President-Academics, Public Health Foundation of
India (PHFI), New Delhi
15. Dr. Sanjiv Kumar, Former Executive Director, NHSRC, and Chairman, Indian Academy of Public
Health (IAPH), New Delhi
16. Dr. Shashi Kant, Past President IAPSM, and Professor & Head, CCM, AIIMS, New Delhi

மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்க : Prof. (Dr.) Sanjay K. Rai, Room No. 29, Centre for Community Medicine (CCM), All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi-29. Phone – 011-26594416, Ph – 9868397358, email – [email protected]

அறிக்கையின் சுருக்கமும் செயல் திட்டமும்

பின்னணி:

பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவிட்-19 நோயைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு 2020 மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவிலான மருத்துவத்துறை வல்லுநர்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார். IPHA மற்றும் IAPSM தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வல்லுநர்கள் மட்டத்தில் முறையான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு 2020 ஏப்ரல் 11ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், நிதி ஆயோக், சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவ ஆய்வுத்துறைச் செயலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், அதற்குப் பிறகு உலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் திரட்டப்பட்ட புதிய ஆதாரங்களை இந்தப் பணிக்குழு பரிசீலனை செய்தது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பணியாற்றி வரும் இதர சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்பட பலருடனும் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர். பல்வேறு துறைசார் சங்கங்களிடமிருந்து சமூக ஊடகங்கள் வாயிலான தரவுகளும் திரட்டப்பட்டன. அதன்படி அண்மையில் கிடைத்த ஆதாரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது கூட்டறிக்கை இது.

நிலைமையைப் பற்றிய மதிப்பீடு :

கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாகும். உலகளாவிய சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் இந்தியாவும் பேரழிவு தரும் ‘இரட்டைச் சுமை’யால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது : 145,000க்கும் மேற்பட்ட தொற்று நோயாளிகள், 4,000க்கும் மேற்பட்ட இறப்புகள் ஒரு புறம்; மற்றொரு புறம், 271,000 தொழிற்சாலைகள் மற்றும் 65-70 மில்லியன் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, 11.4 கோடிப் பேருக்கு (9.1 கோடி அன்றாடக் கூலிகள், வேலை இழந்த 1.7 கோடி தொழிலாளர்கள்) வேலையிழப்பு ஏற்பட்டு மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2020 ஜனவரி 30ஆம் தேதி, முதல் நோயாளி கண்டறியப்பட்ட பிறகு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், நோயின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்தின; அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களும் கிட்டத்தட்ட முடக்கப்பட்டதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். கொரோனா தீயநுண்கிருமியைக் கட்டுப் படுத்துவது தொடர்பாகக் கிடைத்துள்ள மருத்துவ, கொள்ளைநோய் சார்ந்த மற்றும் பரிசோதனை ஆய்வுகள் சார்ந்த தகவல்கள், மனிதகுலம் ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்பதைக் காட்டுகிறது; ‘கட்டுப்படுத்துவது’ என்ற பார்வையிலிருந்து மாறி, ‘குறைப்பது’ என்பதை நோக்கி செயல்பாட்டுத் திட்டங்களை விரைவாக மறுவடிவாக்கம் செய்தாக வேண்டும் என்பதையும் காட்டுகிறது. அண்மையில் கிடைக்கும் ஆதாரங்கள், மருத்துவ சேவைத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கோவிட்-19 மோசமாக்கியுள்ளது என்பதையும், பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் அந்தக் கவலையை நோக்கி மையப்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட் ...

கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த முழுமையான, பயன்தரக்கூடிய, ஆற்றல்மிக்க, நீடித்து நிலைக்கக்கூடிய செயல் திட்டங்களை வகுப்பதில் உலகளாவிய சமூகம் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து, தகவல்களைப் பரிமாறி வருகின்றது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாடும் – அந்தந்த நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் – தனக்கே உரிய தேவைகளுக்கு ஏற்பட பெரியதொரு பொது மாடல் ஒன்றை உருவாக்க வேண்டியும் உள்ளது. தரவுகளை ஒளிவுமறைவின்றி விஞ்ஞானிகள், பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள், ஏன், பொது மக்களுடனும்கூட இயன்ற அளவுக்கு விரைவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்; ஆனால் இன்றுவரை அப்படிப் பகிரப்படவில்லை என்பது கவலைக்குரியது. இவ்வாறு பகிர்வதுதான் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும்; கீழ்மட்டம் வரை ஒத்த கருத்தை உருவாக்கும்; பங்கேற்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சூழலை உருவாக்கும்.

2020 மார்ச் 25 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் கடுமையான செயல்களில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் இந்தக் காலகட்டத்திலும் கோவிட் நோய் விரைவாகப் பரவியது. மார்ச் 25ஆம் தேதி 606 என்று இருந்தது, மே 24ஆம் தேதி 138,845 என உயர்ந்தது. ஏதோவொரு செல்வாக்கு மிக்க நிறுவனம், ‘மிக மோசமான நிலையில் என்னவாகும்’ (worst-case simulation) என்ற உத்தேச மதிப்பீட்டில் தயாரித்தளித்த மாடலின் அடிப்படையில் இந்தக் கொடூரமான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. உலக அளவில் 22 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று அந்த மாடல் மதிப்பீடு செய்தது. அதற்குப் பிந்தைய நடப்பு நிகழ்வுகள், இந்த மாடலின் ஊகங்கள் உண்மை நிலவரத்துக்கு வெகு தூரத்தில் இருக்கின்றன என்பதை நிரூபித்துவிட்டன. புள்ளிவிவரங்களைக் கொண்டு கணக்குப் போடுகிறவர்களை விட, நோய்ப் பரவலைப் பற்றி மேம்பட்ட புரிதல் உள்ள கொள்ளைநோய் வல்லுநர்களிடம் இந்திய அரசு ஆலோசனை செய்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பொதுவெளியில் கிடைக்கின்ற குறைவான தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, களத்தில் பயிற்சியோ திறமைகளோ அதிகம் இல்லாத கொள்ளைநோய் குறித்தான கல்வியாளர்களும் மருத்துவர்களும் அளித்த ஆலோசனைகளின்படி அரசாங்கம் செயல்பட்டதாகத் தெரிகிறது.

பொது நிர்வாக அதிகார வர்க்கத்தின் வார்த்தைகளில் கொள்கை வகுப்பாளர்கள் அதீத நம்பிக்கை கொண்டார்கள் என்று தெரிகிறது. கொள்ளைநோய், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவம், சமூக அறிவியலார் போன்ற துறைசார் வல்லுநர்களுடன் மிகக் குறைவாகவே ஆலோசனை பெறப்பட்டிருக்கிறது. அதனால்தான் நோய்ப்பரவல், பல கோடிப்பேரின் வாழ்வாதார நெருக்கடி என இரண்டு வகையிலும் இந்தியா பெரிய விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒத்திசைவற்ற மற்றும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்த உத்திகள் மற்றும் கொள்கைகள், குறிப்பாக தேசிய மட்டத்திலான நடவடிக்கைகள், தொற்றுநோயியல் அடிப்படையில் நன்கு சிந்திக்கப்பட்ட கூர்மையான செயல்பாடுகளாக அமையாமல், கொள்கை வகுப்பாளர்களின் ‘மறுசிந்தனைகள்’, மற்றும் வரும்முன் காக்காமல் ‘வந்தபிறகான நடவடிக்கை’ என்பதாகவே இருந்ததைக் காட்டுகின்றன.

கோவிட் நோயாளிகளில் பெரும்பாலோருக்கு அறிகுறிகளே இல்லை; அப்படியே அறிகுறிகள் இருந்தாலும், மிகக் குறைவாக உள்ளன, உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை. பெரும்பாலான நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவையில்லை, குடும்பத்துக்குள் ‘கட்டாய தனிநபர் இடைவெளி’ பின்பற்றச் செய்து வீட்டளவிலேயே சிகிச்சை தர முடியும். கொள்ளைநோய் துவங்கிய நேரத்திலேயே, பரவல் மிகக் குறைவாக இருந்தபோதே, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் ஊருக்குத் திரும்ப அனுமதித்திருந்தால், இன்றைய நிலைமை வந்திருக்காது. இப்போது ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நோய்த் தொற்றையும் சுமந்து செல்கிறார்கள் – பெரும்பாலும் கிராம மற்றும் நகரப் புறநகர்ப் பகுதிகளில் பரப்புகிறார்கள். இங்கெல்லாம் பொது சுகாதார அமைப்புகள் – மருத்துவ சிகிச்சை வசதிகளும் – பலவீனமாக உள்ளன.

Coronavirus pandemic | Rate of doubling of COVID-19 cases 4.1 days ...

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் சமூகப் பரவல் நிலைபெற்று விட்ட இந்தச் சூழலில், கோவிட் கொள்ளை நோயை ஒழித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு சாத்தியமற்றது. தற்போதைக்கு தடுப்பு மருந்தோ பயனுள்ள சிகிச்சையோ இல்லை, (நம்பிக்கை தரக்கூடிய சில மருந்துகள் ஆய்வில் உள்ளன என்றாலும்) அண்மை எதிர்காலத்திலும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாடுமுழுவதும் கடுமையான உரடங்கு விதிக்கப்பட்டதன் எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்த நீட்டிக்கப்பட்ட கால இடைவெளியில் நோய்ப் பரவலின் எண்ணிக்கையைக் குறைத்து, மருத்துவ சேவை வழங்கும் துறைகளின்மீது அதிக பளு விழுந்துவிடாமல் காப்பதும்தான்.

நான்காம் கட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு இது ஓரளவுக்கு நிறைவேறி விட்டதாகவே தெரிகிறது, ஆனாலும் பொதுமக்களுக்கு அசாதாரணமான சிரமங்களும் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டன. உலக நாடுகளோடு ஒப்பிட்டால் நோயினால் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாகவே தெரிகிறது, அதிக ஆபத்துள்ள நபர்கள் மத்தியில்தான் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. (அதாவது, வயது முதிர்ந்தவர்கள், ஏற்கெனவே இதர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்றோர்.) ஆனால், ஊரடங்கை காலவரையின்றி நீட்டித்துக்கொண்டே போக முடியாது, ஏனென்றால், ஊரடங்கு காரணமாகவே உயிரிழப்புகள் நேரக்கூடும். (வழக்கமான மருத்துவ சேவைகள் முழுக்கவும் அடைக்கப்பட்டு, இந்திய மக்கள் தொகையின் அடித்தட்டைச் சேர்ந்த பாதிப்பேரின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதால்) ஊரடங்கால் ஏற்படும் உயிரிழப்புகள், கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதன் மூலம் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகப் போகக்கூடும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான வழிமுறைகள் நிறையவே உண்டு. இந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவதுடன், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களும் உறுதிசெய்யப்பட வேண்டும். அத்துடன் கூடவே, அனைவருக்கும்– குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறவர்களுக்கும் – மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்வது அவசர அவசியமாகும்.

பரிந்துரைகள் :

இந்தியாவில் பொது சுகாதாரத்துறை கல்வியாளர்கள், மருத்துவத்துறையினர், ஆய்வாளர்கள் என பல்வேறு துறைகளையும் சார்ந்த நாங்கள், கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்துக்கேற்ற கீழ்க்கண்ட 11 அம்ச செயல்திட்டத்தை பரிந்துரை செய்கிறோம்:
1. குழு அமைத்தல் : மக்களின் ஆரோக்கியம், வாழ்வாதார நெருக்கடி ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் கவனிக்கக்கூடிய வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ வல்லுநர்கள், சமூக அறிவியலார் ஆகியோரைக் கொண்ட குழுவை மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்க வேண்டும்.

2. தரவுகளை வெளிப்படையாக பொதுவில் பகிர்தல் : பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் (மருத்துவம், பரிசோதனைச் சாலைகள், பொது சுகாதாரம், சமூக அறிவியல்) ஆய்வு சமூகம் அணுகி, பகுப்பாய்வு செய்து, பிரச்சினைகளுக்கேற்ற தீர்வுகளைத் தருகிற வகையில் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். அரசுக்கு உடனுக்குடன் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் வகையில் குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைக்குழுக்கள் அடங்கிய பொது ஆரோக்கிய ஆணையம் ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும். தரவுகள் விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றும் மறைமுகத் தன்மையானது, கொள்ளை நோய் குறித்து சுதந்திரமாக ஆய்வு செய்வதற்கும், உரிய எதிர்வினைகளுக்கும் பெரும் தடைக்கல்லாக உள்ளது.

3. ஊரடங்கை நீக்குதல், அந்தந்தப் பகுதியளவில் (கிளஸ்டர்) கட்டுப்பாடுகள் விதித்தல் : தேசிய அளவில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நீக்கப்பட வேண்டும்; மாறாக, கொள்ளை நோயியல் மதிப்பீட்டு அடிப்படையில் அந்தந்தப் பகுதிக்கேற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அடுத்தடுத்து நோயாளிகள் எண்ணிக்கை கூடலாம் என்பதையும் கணக்கில் கொண்டு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான அளவுகோல்களும் இலக்குகளும் நிர்ணயிக்க வேண்டும். ஊரடங்கின் பிரதானக் காரணமே மருத்துவ சேவைத் துறையை தயார் நிலையில் வைப்பதுதான். இந்த விஷயத்தில் அரசு தெளிவான இலக்குகளை அறிவிக்க வேண்டும்.

Two dead in West Bengal, one in Uttar Pradesh due to coronavirus ...

4. வழக்கமான சுகாதார மருத்துவச் சேவைகளை துவக்குதல் : பிரைமரி, செகண்டரி, டெர்டியரி உள்ளிட்ட எல்லா மட்டத்திலுமான மருத்துவச் சேவைகளை வழக்கம்போல இயங்கவைப்பது மிகமிக முக்கியானதாகும். மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் இதை உடனே துவக்கியாக வேண்டும். இதய நோய்கள், வாத நோய்கள், காசநோய் போன்ற நாள்பட்ட தொற்றுநோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் இருப்பவர்களுக்காக சேவைகள், தடுப்பு மருந்துகள் வழங்குதல் போன்றவற்றை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்புகள் கோவிட்-19 நோயால் ஏற்பட்ட இழப்புகளைவிட அதிகம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. வழக்கமான மருத்துவ சேவைகளை நிறுத்தியன் தீய விளைவுகள் வருகிற நாட்களில் இன்னும் அதிகரிக்கும்.

5. விழிப்புணர்வை அதிகரித்தல், தடுப்பு நடவடிக்கைகளால் நோயின் மூலத்தைக் குறைத்தல் : கொரோனா வைரஸ் பரவலின் எல்லா நிலைகளிலும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி – கிருமியின் மூலத்தைக் (சோர்ஸ்) குறைப்பதே ஆகும். முகமூடிகளைப் (வீட்டில் செய்தவை, மற்றவை) பயன்படுத்தல், கைகளின் சுகாதாரம் (சோப்புப் போட்டுக் கழுவுதல், கிருமிநீக்கம் செய்தல்), இருமும்போது மற்றவர் மீது படாமல் மறைத்தல் ஆகிய வழக்கங்களை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் – குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்கள் பின்பற்றியாக வேண்டும்.

6. உடலால் இடைவெளியும், சமூகப் பிணைப்பும் உறுதி செய்தல், சமூக ஒவ்வாமைகளைத் தவிர்த்தல் : தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்க நபர்களுக்கு இடையிலான உடல இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். (இதுவரை சோஷியல் டிஸ்டன்சிங் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது சமூக இடைவெளி என்று தவறான பொருள் தரக்கூடியது. ஏற்கெனவே தீண்டாமையும் மதவெறியும் சாதிவெறியும் நிலவுகிற சூழலில், சோஷியல் டிஸ்டன்சிங் என்ன சொல் அபத்தமானது. இந்த அறிக்கை physical distancing என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு – மொழிபெயர்ப்பாளர்.) அதே சமயத்தில், லாக்டவுன் காரணமாக வரும் பதற்றம் மற்றும் உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகளை சமாளிக்க சமூகப் பிணைப்பை மேம்படுத்தவுது அவசியம். குறிப்பிட்ட சில குழுக்களுடன் (மதக் குழுக்கள் அல்லது திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றவர்கள்), அவர்களில் எல்லாருமே ஆபத்துக்கு உள்ளானவர்கள் இல்லை என்றாலும் – அவர்களுடன் கோவிட்-19 நோயைத் தொடர்புபடுத்தும் சமூகப் பாகுபாட்டு ஒவ்வாமைகள் இருக்கும். கோவிட்-19 நோய்க்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு குவாரன்டீனிலிருந்து வெளிவருபவர் மீதும் இதுபோன்ற ஒவ்வாமைகள் காட்டப்படக்கூடும். மக்களை விழிப்புணர்வடையச் செய்வதிலும், நோய்க்கு ஆளானவர்களை அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்துவதிலும் அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் முனைப்பாகச் செயல்பட வேண்டும்.

7. முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு : ASHA/ANMs/MPWs மற்றும் மருத்துவ மையங்கள் (தனியார் மருத்துவமனைகள் உள்பட) மூலம் காய்ச்சலை ஒத்த நோய்கள் Influenza like Illnesses (ILI), தீவிர சுவாச நோய் Severe Acute Respiratory Illness (SARI) போன்ற நோய்களை தீவிரமாக கண்காணிப்பதும், தொற்று மூலத்தைக் கண்டறிய புவியியல் ரீதியான மற்றும் தற்காலிக குழுத்தொகுதிகளைக் கண்டறிதலும் அவசியம். உள்ளூர் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த கொள்ளைநோயியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களின் ஆதரவுடன் இதை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் எச்ஐவி நிணநீர் கண்காணிப்புத் தளமானது, கோவிட் நோய் கண்காணிப்புக்கு உதவக்கூடிய சிக்கனமான வழியாகும்; இதைக் கொண்டு நோயின் பளு எவ்வளவு, போக்கு எப்படியிருக்கிறது, தடுப்பு மருந்துகளின் தேவை, மற்றும் இதர தடுப்பு முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை மதிப்பிட முடியும்.

8. பரிசோதித்தல், கண்டறிதல், தடமறிதல், தனிமைப்படுத்தல், பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்தல் : பரிசோதனை விகிதத்தை பெருமளவுக்கு அதிகப்படுத்தியிருந்தாலும் சில மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. கொள்ளைநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் சரியான பாதையில் போவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் பரிசோதனைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன; எல்லா மாநிலங்களுக்கும் சீரான நேர நிர்ணயிப்பு அவசியம். தனியார் பரிசோதனை மையஹ்களில் இலவச பரிசோதனை செய்யவும் அரசு ஒத்துழைக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்படுத்தக்கூடிய தொடர்பு நபர்களின் எண்ணிக்கை, திரும்பிவரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வரும் வேளையில், வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கப்பட வேண்டும்; முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தீவிரப் பங்கேற்புடன்இதைச் செய்ய வேண்டும்.

Coronavirus in Hubei, China: 242 deaths, 15,000 new patients in 1 day

9. தீவிர சிகிச்சைத் திறனை வலுப்படுத்தல் : நன்கு பயிற்சி பெற்ற, போதுமான அளவுக்கு பாதுகாப்புப் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே தீவிர சிகிச்சை தர வேண்டும். நோய் அறிகுறிகளையும் தீவிர சுவாசப் பிரச்சினைகளையும் ஆக்சிஜன் மற்றும் இதர உயிர்காக்கும் நடவடிக்கைகளால் திறம்பட சமாளிக்க முடியும் என்று அண்மை சான்றுகள் காட்டுகின்றன. மகாராஷ்டிராவின் மும்பையில் இடம்பெயர் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தை அடையும்போது தேவைகளை சமாளிக்க இதர நகரங்களிலும் இதேபோன்ற மருத்துவமனைகள் அமைக்கப்படலாம்.

10. முன்னணி ஊழியர்களுக்கு போதுமான பிபிஈ சாதனங்கள் : மருத்துவமனைத் தொற்று (Nosocomial infection) என்பதே மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பையும் மன உறுதியையும் கடுமையாக பாதிக்கிற சவால் ஆகும். இந்தப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாகி ‘தீவிரப் பரப்பாளர்கள்’ ஆகிவிட்டால், தொற்றுப் பரவல் பன்மடங்கு அதிகரிக்கவும் விரைவாகப் பரவ்வும் முக்கியமான வழியாகி விடும். எனவே, மருத்துவப் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் போதுமான பிபிஈ சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்; மருத்துவர்களுக்கு ஏற்படக்கூடிய களைப்பு, நோய்ப்படும் ஆபத்துக்கு ஆளாகுதல், குவாரன்டீன் செய்யப்படுதல் போன்றவற்றை சமாளிக்க மாற்றுக் குழுக்கள் தயாராக கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியா இப்போது பிபிஈ தயாரிக்கும் திறனை மேம்படுத்தியுள்ளது, உற்பத்தியை இன்னும் வேகமாக அதிகரிக்க வேண்டும்.

11. பொது சுகாதார அமைப்புகள்/நிறுவனங்கள்/துறைகளை வலுப்படுத்தல் : பல காலமாகவே திட்டமிட்ட வகையில் பொது சுகாதாரம் என்பதை ஒரு துறை என்று கருதாமல் புறக்கணித்தது, கொள்கைகள் வகுப்பதிலும் செயல்திட்டங்கள் உருவாக்குவதிலும் பொது சுகாதார வல்லுநர்களை ஈடுபடுத்தாமல் ஒதுக்கி வைப்பது, ஆகியவற்றால் நாடு, குறிப்பாக இந்த கொள்ளைநோய் நேரத்தில், பெருத்த விலையைத் தர வேண்டியுள்ளது. சேவைகள் மற்றும் ஆய்வு என இரண்டிலும் பொது சுகாதார வசதிகளை (மருத்துவ கவனிப்பு உள்பட) விரைவாக மேம்படுத்துவதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் ஜிடிபியில் 5% இதற்காக ஒதுக்கப்பட வேண்டும்.

நம்பிக்கையுடனும், அதே சமயத்தில் எச்சரிக்கையுடன் இதனை முடிக்கிறோம். மனித உயிர்களுக்கும் சமூகக் கட்டமைப்புகளுக்கும் பொருளாதாரங்களுக்கும் குறைந்தபட்ச இழப்புடன் இந்தப் பேரிடரை வெல்வதற்கு ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் மற்றும் மனிதம் சார்ந்த கொள்கைகள்தான் உதவும். பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இயற்கை மீண்டும் ஒருமுரை நமக்கு நினைவூட்டியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை மனிதகுலம் கவனத்தில் கொண்டு, திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரே குடும்பம்தான்) என்னும் கொள்கையின் அடிப்படையில் எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உகந்த நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு “ஒரே உலகம் ஒரே மாதிரியான ஆரோக்கியம்” (One World One Health) என்னும் அணுகுமுறைதான் மையமாக இருக்க வேண்டும். இந்தப் பூமியின் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் மதிப்பதும் கவனத்தில் கொள்வதும்தான் கோவிட்-19க்குப் பிந்தைய உலகின் வழியாக இருக்க வேண்டும். நூறாண்டுகளுக்கு ஒருமுரை உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த சவாலாக வரும் கொள்ளைநோய்களைப் பார்த்த பிறகும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், நமது வாழ்க்கை முறைகளிலும் கொள்கை வகுப்பிலும் – குறிப்பாக சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகளிலும் – அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், – அதன் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும், இப்போதைய கொள்ளை நோயில் வரலாறு காணாத உயிரிழப்புகளைக் காண நேரிடும், இதைவிடக் கவலை தரக்கூடிய ஒன்றை விரைவிலேயே காணவும் நேரிடும்.

கட்டுரையின் ஆங்கில மூலம் காண இங்கே கிளிக் செய்க