குஜராத்தில் கோவிட் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் நாட்டிலேயே மிக அதிகமான மரண விகிதம் அந்த நெருக்கடியை மிக மோசமாக குஜராத் கையாண்டிருப்பதற்கு சான்றாக உள்ளது. ஆனால் பாஜக அரசு துல்லியமான புள்ளிவிவரத்தை வெளியிடவில்லை என்பது வெளிப்படை. அது மரண விகிதத்தைத் திரித்துக் கொண்டிருக்கக் கூடும்
கோவிட் 19இலிருந்து குஜராத்துக்கு எந்த இடைவெளியும் கிடைக்கவில்லை. மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத் தொற்றின் மையமாக நீடிக்கிறது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப் பட்டவுடன், குறிப்பாக மாவட்டத்திலிருந்து மாவட்டம் செல்லுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டவுடன், தொற்று மிக வேகமாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக ஜூன் தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கோவிட் தொற்று ஏற்பட்டுக் கொண்டிருந்த நர்மதா, கேடா, பஞ்ச்மகால், படான் மாவட்டங்களில் இப்போது தொற்று எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.
மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிடும் புள்ளிவிவரங்கள் ஜூன் 20இலிருந்து மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றில் அகமதாபாத்தின் பங்கு 64 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாகக் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.
தில்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத்தான் கோவிட் தொற்று எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் தொடர்ந்து இருக்கிறது. இது மாநில அரசு சரியான முறையில் நோய்த்தொற்றைக் கையாளும் திறனில்லாதிருப்பது காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு அளிக்கும் உதவி, உயர்நீதிமன்றத்தின் கண்டனம் ஆகியவற்றையும் மீறி நிர்வாகத்தால் குலைந்து போய்க் கிடக்கும் சுகாதாரத் துறையை சரிப்படுத்த முடியவில்லை.
மரணவிகிதம்
ஜூன் 25 அன்று குஜராத்தில் கோவிட் மரண விகிதம் 1753ஐத் தொட்டது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 27000 ஆக இருந்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கணக்குப்படி, நோய்த்தொற்றின் தினசரி சராசரி எண்ணிக்கை 483. இது மே மாதத்தின் சராசரியை விட 20 சதம் அதிகம். மிகவும் கவலையளிப்பது என்னவென்றால் மாநிலத்தின் இறப்பு விகிதமாகும். 10,000 பேர் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையே கூட இந்த எண்ணிக்கை நாட்டிலேயே அதிகபட்சமான எண்ணிக்கை. இறப்பு விகிதம் (CFR) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் என்ற விகிதமாகும். ஜூன் 25 அன்று நாட்டிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டு, மிக அதிகமான இறப்பைக் கொண்டிருந்த மகாராஷ்திரத்தில் இந்த விகிதம் 3.73 சதமாக இருந்தபோது, குஜராத்தில் இந்த இறப்பு விகிதம் 6.25 ஆக இருந்தது.
கோவிட் 19 ஐ சரியானபடி மாநிலம் கையாளாதது, குஜராத்தைத் தமது சொந்த மாநிலமாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு சங்கடத்தை அளித்துள்ளது. இதை மூடி மறைக்கும் விதமாக, மாநில அரசு துல்லியமான விவரங்களை வெளியிடுவதில்லை எனவும், சோதனைகளைக் குறைத்துள்ளதாகவும், மரணங்களின் காரணம் பதிவு செய்யப்படுவதில்லை எனவும் அகமதாபாத்திலிருந்து நமது தொடர்புகள் கூறுகின்றனர். “அவர்கள் (ஒரு அரசு மருத்துவமனை) வேண்டுமென்றே மரணம் கோவிட் 19ஆல் நிகழ்ந்தது என்று பதிவு செய்யாமல் விட்ட ஒரு மரணம் எனக்கே தெரியும். அவர்கள் கோவிட் மரண விகிதத்தை மூடி மறைக்க அவர்கள் இதைப் பரவலாகச் செய்கிறார்கள்” என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு பொதுமருத்துவமனை மருத்துவர் குறிப்பிட்டார்.
தனியார் சோதனை நிலையங்கள் தமது சோதனைக் கட்டணத்தை ரூ.4000இலிருந்து ரூ.2500 ஆகக் குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது குடிமக்களுக்குக் கொஞ்சம் நிவாரணம் கொடுப்பதாக உள்ளது. இந்த நடவடிக்கை கொஞ்சம் துல்லியமான விவரங்களை அதிகமாகக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேசிய அளவில் தொற்று இருமடங்காகும் விகிதம் 19 நாட்களாக இருக்கும்போது, குஜராத்தில் அது சராசரியாக 31 நாட்களாகி, நிலைமை சீரடைந்து வருகிறது என்று சமீபத்தில் மாநில அரசு அறிக்கை விட்டது. குறிப்பிடத்தக்க வகையில், மிக அதிகமான பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டதுடன் மரண விகிதமும் இணைந்து (100 பேர் சோதிக்கப்பட்டால் 8.01 பாதிக்கப்பட்டதாக மாநில அரசு கூறியது) தனது பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மாநில அரசின் முயற்சியை முறியடித்தது.
மிக அதிகமான நோய்த்தொற்றைக் கொண்ட மூன்று மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்ட உயர்மட்ட மத்திய அரசுக் குழு குஜராத்துக்கும் வந்தது. மிக நெருக்கமாக அதிக மக்கள் வசிக்கும் அகமதாபாத்தில் தொற்று ஏற்பட்டோரைக் கண்டறிய முடியாதது வேகமான பரவலுக்கு ஒரு முக்கியமான காரணம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூன் 25 வரை, அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் மரணங்களில் 1390 உடன் 3399 நோய்த் தொற்று ஏற்பட்டவர்களையும் கொண்டிருந்தது. 142 மரணங்கள், 1152 தொற்றாளர்களுடன் சூரத் இரண்டாமிடத்தில் இருந்தது. 48 மரணங்கள், 620 நோய்த்தொற்றாளர்களுடன் வடோதரா மூன்றாமிடத்திலும், 27 மரணங்கள், 157 நோய்த்தொற்றாளர்களுடன் அடுத்து காந்திநகரும், 5 மரணங்கள், 98 நோய்த்தொற்றாளர்களுடன் ராஜ்கோட்டும் இருந்தன.

சூரத்தில் வேகமான அதிகரிப்பு
குஜராத்தின் தெற்கு மாவட்டமான சூரத் அகமதாபாத்திலிருந்து எப்படி நோய்த்தொற்று நுழைந்தது என்பதன் உதாரணமாக இருக்கிறது. ஊரடங்கு முதல் தளர்வுடன் சூரத்தின் மொத்தவியாபார சந்தைகளும், வைரத் தொழில் நிறுவனங்களும் இயங்கத் தொடங்கின. எனினும் இதனால் தொழிலாளர்கள் நகருக்குத் திரும்பத் தொடங்கியதால் ஜூன் கடைசி வாரத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிகரித்ததைக் காண முடிந்தது.
ஜூன் 25 வாக்கில் சுமார் 300 வைரத் தொழிலாளர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். முழுவதும் சானிடைஸ் செய்யப்பட்டாலும் தொற்றைத் தவிர்க்க முடியவில்லை என்று சூரத் வைர வியாபாரிகள் சங்கம் கூறியது. எனினும் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே பெற்ற ஆர்டர்களை நிறைவேற்ற வேண்டியிருந்ததால் தொழிலை மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது என்று வைர வியாபாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
”இப்போது அகமதாபாத்துக்கு எதிரான உணர்வு மிக அதிகமாக உள்ளது” என்று ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு கார் விற்பனையாளர் கூறினார். “அங்கிருந்து வரும் பஸ்கள், டிரக்குகள், கார்கள் நிறுத்தப்படுகின்றன, எங்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையில், எங்கள் குடியிருப்புப் பகுதியில் யாராவது அகமதாபாத்திலிருந்து வந்திருப்பது தெரிந்தால் உடனடியாக அந்த வீட்டைப் பற்றி அதிகாரிகளிடம் சொல்லி விடுகிறோம்.”
பல சமூகக் காரணங்கள்
அகமதாபாத் ஊரடங்கின் தொடக்கத்திலேயே அதிக நோய்த்தொற்று ஏற்படும் இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. முக்கியமாக எல்லைச்சுவருக்குள் இருந்த பாதுகாப்புப் பகுதிகளை அடைத்து விட முயற்சிகள் மேற்கொண்டாலும், வைரஸ் மேற்கு அகமதாபாத்துக்குப் பரவி விட்டதாகத் தோன்றுகிறது. அங்குதான் நன்கு கட்டப்பட்ட நகரத்தின் மேட்டுக்குடி வீடுகள் உள்ளன. அங்கு சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு டஜன் வீடுகள் சீல் செய்யப்பட்டன.
அகமதாபாத் அதிகத்தொற்று ஏற்படும் இடமாக ஏன் உள்ளது என்பதற்கு அறிவியல் ரீதியாகக் காரணம் இன்னும் தெரியா விட்டாலும், அதிகமாக பாதிக்கப்பட்டதற்கான சமூகக் காரணங்கள் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மக்களின் அடர்த்தியிலிருந்து ஏராளமான மக்களைக் குவித்த பிப்ரவரியில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி, அதிக அளவிலான சரவதேசப் பயணங்கள் வரையிலான பல கொடுக்கப்பட்டுள்ளன. கோவிட் 19 உடன் இணைந்த களங்கமும் தாமதமாக சோதிப்பது, சிகிச்சை எடுப்பதற்கு இட்டுச் சென்றதும் நகரத்தில் அதிகமான பாதிப்புக்களுக்கு இட்டுச் சென்றதில் ஒரு காரணம். இதனுடன் சேர்ந்து குஜராத்திக்கள் அதிகமாக இணை நோய்களால் அவதிப்படுகின்றனர் என்ற கோட்பாடும் சேர்கிறது. நோய்த்தொற்றால் இறந்தவர்களில் 80% இணை நோய்கள் உள்ளவர்கள்.
தொழிலாளர் பற்றாக்குறை
நோய்த்தொற்றால் குஜராத் அனுபவிக்கும் இன்னொரு பிரச்சனை மாநிலத்தின் பரந்த தொழில், விவசாய மண்டலங்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் ஏற்பட்டுள்ள பெரும் தொழிலாளர் பற்றாக்குறை. தனிமைப்படுத்தும் விதிகள் தளர்த்தப்படாத வரை வெளியேறிய தொழிலாளர்கள் திரும்பது சாத்தியமில்லை என்று உரிமைகளுக்கான செயல்வீரர்கள் கூறுகின்றனர். அதுவரை, பெரிய தொழில்கள் தவிர, பெரும்பாலான தொழிற்சாலைகள் வெறும் 40% தொழிலாளர்களுடனேயே இயங்கும். இது பெருமளவு தொழில்மயமான மாநிலத்துக்கு மிகப்பெரும் அடியாகும்.
தமிழில்: கி.ரமேஷ்
நன்றி: ஃப்ரண்ட்லைன் 17, ஜூலை, 2020

