மே 5 அன்று, உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்த சில நாட்களுக்குள், அதுவரை இந்தியாவில் இருந்து வந்த கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் 3,829 புதிய நோயாளிகள், 194 இறப்புகள் என்று அதிகரித்தன. தொற்றுநோய் குறித்து நரேந்திர மோடி அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்திருந்த தேசிய பணிக்குழுவிடம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இரண்டாவது முறையாகவும் ஆலோசிக்கப் படவில்லை என்று அந்தக் குழுவின் பல உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஊரடங்கின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையும் போதும், அவர்களிடம் மத்திய அரசு விவாதித்திருக்கவில்லை. மே 1 அன்று, மூன்றாம் கட்ட அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 21 அறிவியலாளர்களை உள்ளடக்கிய அந்த பணிக்குழு சந்தித்தது. ஆயினும், கொள்கை முடிவுகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுவுடன் அரசாங்கம் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவே இல்லை என்று பணிக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

தொற்றுநோய் வந்து மூன்று மாதங்களாகி, அதிகரித்து வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா போராடி வருகின்ற நிலையில், நிபுணர்களின் ஆலோசனைகளை இவ்வாறு ஓரங்கட்டுவது, இந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து மோடி அரசிடம் இருக்கின்ற எதிர்வினைகளுக்கான முத்திரையாக மாறியுள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கைகள் இந்திய அறிவியல் சமூகத்திற்கும், அரசிற்கும் இடையிலான பதட்டங்களை அதிகரிக்கவே செய்திருக்கின்றன. ’அரசின் கொள்கை முடிவுகள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவற்றையும் உள்ளடக்கியிருக்க வேண்டியிருந்தாலும், முற்றிலும் அறிவியல் உள்ளீடுகள் எதுவும் இல்லாமல், அரசின் முடிவுகளில், அது அளித்து வருகின்ற தகவல்களில் அறிவியல் மனப்பான்மை சற்றும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் தருவதாகவே இருக்கிறது’ என்று கோவிட்-19க்கு எதிர்வினையாற்றுவதற்காக மத்திய அரசால்  அமைக்கப்பட்டுள்ள பதினொரு  அதிகாரம் பெற்ற குழு ஒன்றின் உறுப்பினராக இருப்பவர் என்னிடம் கூறினார். ஏப்ரல் 24 அன்று தேசிய அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்த ​​தொற்றுநோய் மே 16 அன்று முடிவடைந்து விடும் என்று தெரிவித்த மத்திய அரசின் கணிப்பு, இந்த நெருக்கடி மீது அறிவியல் ரீதியான எதிர்வினைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை மிகத் தெளிவாக காட்டுவதாக இருக்கின்றது.

During a press briefing on 24 April, Vinod Paul, a member of the NITI Aayog and the chairperson of the national task force, presented a slide that ambitiously claimed that India would see no new cases of COVID-19 after 16 May.. PIB Mumbai Twitter

 

During a press briefing on 24 April, Vinod Paul, a member of the NITI Aayog and the chairperson of the national task force, presented a slide that ambitiously claimed that India would see no new cases of COVID-19 after 16 May.

 PIB MUMBAI TWITTER

 

 ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​நிதி  ஆயோக் உறுப்பினரும், தேசிய பணிக்குழுவின் தலைவருமான வினோத் பால் காட்டிய நழுவுபடம் பிஐபி மும்பை ட்விட்டர்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​நிதி ஆயோக் உறுப்பினரான வினோத் பால், மே 16க்குப் பிறகு, கோவிட்-19 நோயுடன் புதிய நோயாளிகள் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்று  பேரார்வத்துடன் ஒரு நழுவுபடத்தைக் காட்டினார். கணிப்பு  மாதிரியாக்கத்தில் மதிப்பிழந்து போயிருக்கின்ற கோட்பாட்டையே அவருடைய கணிப்பு நம்பியிருந்ததாக அதிகாரம் பெற்ற குழுவின் உறுப்பினர் என்னிடம் கூறினார். அந்த சந்திப்பின் போது, பால் அளித்த விளக்கக் காட்சியின் ஒரு பகுதியாக இருந்த வரைபடத்தில், தொற்றுநோயின் வீழ்ச்சியை முன்னறிவிக்கின்ற வகையில் கணித மாதிரி சித்தரிக்கப்பட்டிருந்தது. புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை மே மாத தொடக்கத்தில் குறையத் தொடங்கும் என்று அது கணித்திருந்தது. ஊரடங்கின் இரண்டாம் கட்டம் முடிவடையும் நேரத்தில் 1,500க்கும் சற்று அதிகமான அளவில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று அந்த கணிப்பு காட்டியது. மே 10க்குள் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரமாக குறைந்து விடும் என்றும், மே 16க்குப் பிறகு இந்தியாவில் புதிய நோயாளிகள் யாரும் இருக்கவே மாட்டார்கள் என்றும் இருந்த அவரது விளக்கம், மிகவும் நம்பிக்கையான கணிப்பைச் செய்திருந்தது. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப் பிறகு, பத்திரிகை தகவல் பணியகம் அந்த கணித மாதிரியை ட்வீட் செய்திருந்தது. அந்த செய்தியில்,  ’#கோவிட் நிகழ்வுகளில் மறைந்திருக்கும் கூர்முனை (ஸ்பைக்) குறித்து பயப்படத் தேவையில்லை, நோய் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது’ என்று பால் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

21 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவின் தலைவராகவும், மருத்துவ அவசரநிலை மேலாண்மை திட்டத்தில் அதிகாரம் பெற்ற முதல் குழுவின் தலைவராகவும் பால் இருக்கிறார்.  ’இந்தியா கோவிட்-19 பரவலைத் திறம்படச் சமாளித்திருக்கிறது’ என்ற தலைப்பில் அவரது விளக்கக்காட்சி இருந்தது. அவருடைய பெரும்பாலான விளக்கங்கள், ஊரடங்கு திட்டவட்டமான வெற்றி என்று கணித்துச் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ’ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை நாடு காட்டியுள்ளது’ என்று பால் கூறினார். அவருக்குப் பின்னால் இருந்த பெரிய திரையில் தோன்றிய  வரைபடத்தில் இருந்த முன்கணிப்பைப் பற்றி விவாதிப்பதை அவர் தவிர்த்திருந்தாலும், ஊரடங்கையும், தொற்றுநோய் குறித்த அரசாங்கத்தின் எதிர்வினைகளையும் பாராட்ட  அவர் அந்த நழுவுபடத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். ’இந்த தொற்று நோயைச் சமாளிக்க நாடு எடுத்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, நல்ல நடவடிக்கைகள் என்றும், அவை   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றும் இன்றைக்கு எங்களால் கூற முடியும், இந்த நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், அதனை வீழ்த்தவும் நாங்கள் மிகுந்த பலத்துடன் தயாராக இருக்கின்றோம்’ என்று பால் கூறினார்.

ஆனால் பால் காட்டிய வரைபடத்தில் இருந்த கணிப்பு உண்மைக்கு வெகு தொலைவில் இருந்தது. அது முற்றிலும் தவறு என்று, குறைவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டாத, சற்றும் தளராது இருந்த வைரஸால் இரண்டு வாரங்களுக்குள் நிரூபிக்கப்பட்டது. இந்தியாவில் 24 மணி நேரத்திற்குள்ளாக, 2000க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மே 2 அன்று பதிவாகின. தொற்றுநோய்  தொடங்கியதிலிருந்து இதுபோன்ற உயர்வை நாடு அப்போதுதான் கண்டது. அன்றைய தினம், மொத்தம் 37,776 என்ற அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் பதிவு செய்தது. அது முந்தைய நாளைவிட கூடுதலாக 2,411 நோயாளிகள் அதிகரித்திருப்பதையும் பதிவு செய்திருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் குறைவான  இறப்புகளை ஏப்ரல் நடுப்பகுதி வரை பதிவு செய்து வந்த இந்தியா, அதற்குப் பிறகு மே 5 வரையிலும்  ஒரு நாளைக்கு நூற்றுக்கு அருகில் இறப்புகளைச் சந்தித்தது. திடீரென்று அன்று மட்டும் 24 மணி நேரத்தில் 194 இறப்புகள் பதிவாகின. மே 7 அன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 52,952 நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களும், 1,783 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு, குறிப்பாக இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று விரைவாக அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், பால் நடத்திய அந்த சந்திப்பில் நோய்த்தொற்று கடுமையான வீழ்ச்சி அடையும் என்று அந்த நழுவுபடம் மூலமாக கூறப்பட்டிருந்தது, உண்மையில் அரசாங்கத்திற்கு மிகுந்த சுமையாகிப் போனது. பத்திரிகையாளர் சந்திப்பின் போதும், அடுத்தடுத்த நேர்காணல்களிலும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஏன் அவ்வாறு மிக அதிகமாக குறையும் என்பதற்கும், மோடி அரசு அறிவித்த ஊரடங்கு நாட்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பால் விளக்கவே இல்லை.

அந்த நழுவுபடத்தைத் தயாரித்த டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் சித்தார்த் ராம்ஜியுடன் மே 4 அன்று நான் பேசினேன். பால் விடுத்த  வேண்டுகோளுக்கிணங்க, உள்பயிற்சிக்காக அந்த நழுவுபடத்தைத் தான் தயாரித்ததாகவும், அது தேசிய அளவிலான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பயன்படுத்தப்படும் என்பது தனக்குத் தெரியாது என்றும் ராம்ஜி என்னிடம் கூறினார். அந்த சந்திப்பில் அந்த நழுவுபடம் காட்டப்பட்டபோது தான் ஆச்சரியப்பட்டதாக அவர் கூறினார். அவருடன் பேசிய போது, அந்த கணிப்புகள் ஏற்கனவே தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதை ராம்ஜி ஒப்புக்கொண்டார். கணித மாதிரி வளைவுகள் நம்மிடம் உள்ள அனுமானங்கள் மற்றும் தரவுகளால் வரையறுக்கப்படுவதாக என்னிடம் அவர் விளக்கினார். ’நீங்கள் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால், வரைபடம் அதிவேகமாக உயர்வதைக் காணலாம். இனிமேல் அது அந்தப் படத்தில் இருப்பதைப் போன்று வளையப் போவதில்லை. கடந்த சில நாட்களாக நாம் அதிக வேகத்தில் உயர்வதைக் கண்டுள்ளோம். நாம் இன்னும் உச்சத்தை அடையவில்லை; இன்னும் மேலே சென்று கொண்டிருக்கிறோம்’ என்றார்.

Why we need to know 'Farr Law' to understand the pattern of ...

வரைபடத்தில் இருந்த கணிதரீதியான தவறான வாதம், ஃபார் தொற்றுநோய் விதி (Farr’s Law of Epidemics) என்றழைக்கப்படும் கோட்பாட்டை நம்பி வரையப்பட்டதாகும். அது முதன்முதலாக, 1840ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த தொற்றுநோயியல் நிபுணரான வில்லியம் ஃபார் என்பவரால் உருவாக்கப்பட்டது. தோராயமாக சமச்சீர் வடிவத்தில் அதிகரித்து, பின்னர் குறைவதாக, மணி வடிவம் போன்று தோற்றமளிக்கும் வளைவை தொற்றுநோய்கள் கொண்டிருக்கும் என்று அந்தக் கோட்பாடு கூறுகிறது.  ஆனால் தோராயமாக உயர்வும், வீழ்ச்சியும் சமச்சீராக இருக்கும் என்று கருதுகின்ற அந்த  கணித மாதிரி, சமூகங்களுக்குள் நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்ற யதார்த்தத்தை பிரதிபலிக்கத்  தவறியிருந்தன. 1995ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுநோயின் முடிவைக் கணிப்பதற்கு இந்தக் கோட்பாடு மிகவும் பிரபலமாக, ஆனாலும் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எச்.ஐ.வி தொற்றுநோய் சுமார் 200,000 நோயாளிகளை உருவாக்கும் என்று அது கணித்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு  நிலவரப்படி, 3.79 கோடிப் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மே 4 அன்று வினோத் பாலைச் சந்தித்த போது, ​​மே 16 அன்று புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறையும் என்று தான் கூறியதை அவர் மறுத்தார். ’அது ஒரு போக்கு’ என்று கூறிய பால், ’நீங்கள் அதை தவறாக விளக்குகிறீர்கள். ஒரு வரைபடத்தை எவ்வாறு வாசிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்பதையே அது நிரூபிக்கின்றது. அந்த படத்தில் பூஜ்ஜியம் என்று சொல்கின்ற இடத்தை நீங்கள் எனக்கு காட்டுங்கள்’ என்றார். மே 16 அன்று, வரைபடத்தின் எக்ஸ்-அச்சில், புதிய நிகழ்வுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்குச் செல்லும் என்று சித்தரிக்கின்ற கோட்டை அந்த வரைபடம் தெளிவாகவே காட்டுகிறது என்பதால், அந்த வரைபடத்தை பால் அந்த கூட்டத்தில் எவ்வாறு விளக்கினார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

அந்த விளக்கக்காட்சியை அறிவியல் பணிக்குழு அல்லது அதிகாரம் பெற்ற குழு பரிசீலித்ததா என்று கேட்டபோது, ​​பணிக்குழு தனது வேலையைச் செய்ய பத்திரிகையாளர்கள் அனுமதிக்கவில்லை என்றும், அழைப்பை அணைத்து விட்டார்கள் என்றும் பால் கூறினார். ஆனால் அதிகாரம் பெற்ற குழுவில் பணிபுரியும் தொற்றுநோயியல் நிபுணர்கள், ஒருபோதும் தாங்கள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், அந்த நழுவுபடம் மிகவும் தவறானது என்று கூறினார். அந்த தொற்றுநோயியல் நிபுணர் மேலும் கூறுகையில், ’நாங்கள் அன்றாடம் சந்தித்து வருகிறோம் என்றாலும், அந்த ஆய்வில் எங்களை யாரும் ஒருபோதும் கலந்தாலோசிக்கவில்லை’ என்றார்.

அறிவியல் அடிப்படையில் முடிவெடுப்பதை புறக்கணித்து வருகின்ற அரசாங்கத்திடம் இருக்கின்ற பெருநோயின் அறிகுறியாகவே அந்த வரைபடத்தை பால் பயன்படுத்திய செயல் இருக்கின்றது. ’அந்த நோக்கத்திற்காகவே தொற்றுநோயியல் நிபுணர்களின் ஒட்டுமொத்த குழுவையும் தங்கள் வசம் வைத்திருக்கும் போது, குழந்தை மருத்துவர் ஒருவரிடம் கணித மாதிரியை அவர்கள் கேட்டது அர்த்தமற்றது’ என்று மற்றொரு அதிகாரம் பெற்ற குழுவின் உறுப்பினர் ஒருவர் என்னிடம் கூறினார். அதிகாரம் பெற்ற முதல் குழு உறுப்பினர், ’இந்தியாவில் மே மாதத்தில் தொற்றுநோயின் உச்சம் இருக்கும் என்பதை பரிந்துரைக்கும் எந்தவொரு மாதிரி பற்றியும் எனக்குத் தெரியாது,  முடிவு மட்டுமே தெரியும்’ என்று கூறினார். அந்த முதல் குழு உறுப்பினர்  மேலும் கூறும் போது, ’அங்கே இரண்டு புள்ளிவிவர மாதிரிகள் இருந்தன. ஆனால் அவை மிகவும் சாதாரணமான தவறுகளால் நிரம்பியிருந்தன. மேலும் அவை தொற்றுநோயியல் அடிப்படையில் இருக்கவில்லை. கோவிட்-19 குறித்து அதிக அளவிலான ஆய்வுகள் வெளி வரும் போது, அவற்றை வடிகட்டவும், தேவையுள்ள முடிவுகளைப் பிரித்தறியவும் சம்பந்தப்பட்ட அறிவியலாளர்களின் உதவியை நாட வேண்டியது கொள்கை வகுப்பாளர்களுக்கு மிக முக்கியமான தேவையாகும்’ என்று தெரிவித்தார்.

unannounced curfew in these areas of Lucknow due to Situation ...

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு நான் நேர்காணல் செய்த பல அறிவியலாளர்கள், அதிகாரம் பெற்ற குழுக்கள் உட்பட பணிக்குழுவின் உறுப்பினர்கள், இந்த பொது சுகாதார நெருக்கடியின் போது நடைபெறுகின்ற அரசியல் மற்றும் நாடகங்களுக்கு பின்னணி இசை வாசிக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக கூறி, தங்களுடைய விரக்தியையும் திகைப்பையும் வெளிப்படுத்தினர். இத்தகைய நாடகங்களைக் குறிக்கும் வகையில், மே 3 அன்று இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை நடத்திய நிகழ்ச்சியில், ஹெலிகாப்டர்களில் இருந்து மருத்துவமனைகள் மீது தூவப்பட்ட மலர் இதழ்களை, பின்னர் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இதற்கு முன்பு தொற்றுநோயை எதிர்த்து முன்வரிசையில் நின்று போராடுகின்ற சுகாதார ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில், இந்தியர்கள் தட்டுகளைத் தட்ட வேண்டும், அகல்விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைப் போலவே அந்த நிகழ்ச்சியும் இருந்தது.

தொற்றுநோய்களின் போது, ​​ பொது சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை அரசாங்கம் கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது. அவ்வாறு செய்யத் தவறினால், அது வென்டிலேட்டர்கள், படுக்கைகள், சோதனைக் கருவிகள் மற்றும் பிற வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் இந்தியா தயாராவதன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதேபோன்று, தொற்றுநோயின் தன்மை குறித்து வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதன் மூலமே, சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்பதால், அவ்வாறு தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது. இருந்த போதிலும், தேசிய எல்லைகள் பெரும்பாலும் ஐந்து வாரங்களாக மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் சமுதாய பரவல் இல்லை என்றே சுகாதார அமைச்சகம் உறுதியாக மறுத்து வருகிறது.

மே 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவின் தொற்றுநோய் வளைவு ஒப்பீட்டளவில் தட்டையாக இருக்கிறது என்றும், பொதுமக்கள் இந்த வைரஸ் மீது எதிர்வினையாற்றுவதைப் பொறுத்து, உச்சநிலை ஒருபோதும் வராது என்றும் கூறினார். விரைவான அதிகரிப்பு இருக்கின்ற காலகட்டத்தில், ஒப்பீட்டளவிலோ அல்லது வேறு எந்த வகையிலோ தொற்றுநோய் வளைவு  தட்டையாக இருக்கிறது என்று கூறுவது அப்பட்டமான தவறாகும். மேலும் உச்சம் ஒருபோதும் வராது என்று அகர்வால் கூறியது எந்த அர்த்தத்தில் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய நிலைமையில், இந்தியா இதுவரை புதிய நோயாளிகளைப் பொறுத்தவரை, உச்சத்தில் இருக்கிறது. மேலும் இந்த உச்சநிலை தொடர்ந்து உயரும் என்றே தெரிய வருகிறது. ஆனாலும் இந்தியாவில் இருக்கின்ற நெருக்கடி குறித்த மறைவுத்தன்மையை அதிகரிக்கும் வகையில், மற்றொரு நடவடிக்கையை மே 5 அன்று சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. வைரஸின் பாதிப்பு குறித்த எண்ணிக்கையை, இதுவரை செய்ததைப் போன்று இரண்டு தடவை என்றில்லாமல், இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வெளியிடப் போவதாக அறிவித்தது,. இந்த முடிவை எடுத்ததற்கான எந்த விளக்கத்தையும் அமைச்சகம் அளிக்கவில்லை.

கொசுக்களினால் கொரோனா பரவாது ...

அன்றாட பத்திரிகையாளர் சந்திப்புகளில் அறிவியலைப் புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரும், குழுவில் உள்ள அறிவியல் சமூகத்தின் ஒரே பிரதிநிதியுமான டாக்டர் ஆர்.ஆர்.கங்ககேத்கரை அரசாங்கம் ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான சந்திப்புகளில் ஏப்ரல் 21 வரை, கங்ககேத்கர்  வழக்கமாகத் தோன்றிக் கொண்டிருந்தார். கங்ககேத்கர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலான பல்ராம் பார்கவா மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பதாலும், கங்ககேத்கர் ஏன் இதுபோன்ற விளக்க கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. மே 4 அன்று, ஹிந்து பிசினஸ்லைன் பத்திரிக்கையின் சுகாதாரப் பகுதி நிருபரான மைத்ரி பொரேச்சா, ’@MoHFW_India நடத்துகின்ற பத்திரிகையாளர் சந்திப்புகளில் @ICMRDelhi இல்லாதது வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மிடமிருந்த அறிவியல்பூர்வமான அறிவார்ந்த குரலை எப்போதாவது கேட்கக்கூடிய வாய்ப்பு, இப்போது நம்மிடமிருந்து திருடப்பட்டுள்ளது. அறிவியல்/ மருத்துவ முன்னேற்றத்தைப் பற்றி புதிய தகவல்களைத் தரக்கூடிய அறிவியலாளர்கள் அல்லது மருத்துவர்கள் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம் பெறுவதில்லை?’ என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்தியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிவேக உயர்வு இருப்பதை மே மாதத்தின் முதல் வாரம் காட்டியிருக்கிறது. அறிவியலில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம், அறிவியலாளர்களுக்கு காது கொடுத்து கேட்பது, ஆதாரங்களுடனான கொள்கைகளுக்கு இடமளிப்பது போன்று சுதந்திர இந்தியாவில் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கும் பிரச்சினைகளை இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தொற்றுநோயியல் நிபுணர்கள், அறிவியலாளர்கள், சுகாதார கொள்கை நிபுணர்களுக்கு மாற்றாக, இருதயநோய் மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை தொழில்முனைவோர்கள் போன்றவர்கள்  ஒருபோதும் இருக்க முடியாது. அறிவியலற்ற அரசியல் மற்றும் நாடகத்தனமான நடவடிக்கைகளை மட்டுமே நம்பி, அறிவியலாளர்களை இந்த அரசாங்கம் ஓரங்கட்டுமேயானால், அத்தகைய நடவடிக்கைகள் பேரழிவைத் தருகின்ற வைரஸ் காப்பகமாக  இந்தியாவை மாற்றுவதற்கான வாய்ப்பையே நிச்சயம் ஏற்படுத்தித் தரும்.

https://caravanmagazine.in/health/surge-in-covid-cases-proves-centre-wrong-pandemic-response-marked-by-theatrics-not-science

2020 மே 07, தி கேரவான் இதழ்

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *