”தேசிய அரசு செயலாற்றத் தவறிய நிலையில், கேரளா, நோயாளிகள் மற்றும் பொருள்களைக் கண்காணித்தல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போர் அறைகளின் வலைப்பின்னல் ஆகியவற்றை கோவிட்-ஐ வெற்றி கொள்ளப் பயன்படுத்துகிறது.”
இந்தியாவின் இரண்டாவது கொரோனா பெருந்தொற்று அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியபோது, பல நகரங்கள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் படுக்கைகள், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்தன; ஆனால் சஜீவ்.வி.பி – இதற்குத் தேவையான உதவி கிடைத்தது.
உள்ளூர் சுகாதார ஊழியர்கள் 52 வயது மெக்கானிக்கான திரு. சஜீவ்-ஐ வீட்டில் தனிமைப்படுத்தி, தொலைபேசியில் ஒரு மருத்துவருடன் இணைத்தனர். அவரது நோய் அதிகமானபோது, அவர்கள் அவசர ஊர்தி ஒன்றை ஏற்பாடு செய்து, அவரை படுக்கை வசதி இருந்த ஒரு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தேவைக்கு அதிகமாகவே ஆக்ஸிஜன் இருந்தது. 12 நாள்களுக்குப் பிறகு கட்டணம் ஏதுமின்றி நலமுடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
”இந்த அமைப்பு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி எனக்குத் தெரிவில்லை, நான் செய்ததெல்லம் எனக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோது எங்கள் பகுதி சுகாதார ஊழியருக்குத் தெரியப்படுத்தியதே; அப்போதிருந்து எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள், என்றார் திரு.சஜீவ்.
திரு. சஜீவின் அனுபவம் அவர் வசிக்கும் இடத்துடன் அதிகம் தொடர்புடையது: தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு நகரமான கொச்சியின் புறநகர் பகுதி அது. உலகின் மிக மோசமான கொரோனா தீநுண்மி வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் கீழ் இயங்கும் இந்தியாவின் மைய அரசு பல வழிகளிலும் தோல்வியுற்ற சூழலில் கேரள அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவினாலும் கேரள மருத்துவ மனைகள் தேவையான ஆக்ஸிஜனைப் பெறுகின்றன, அலுவலர்கள் பல மாதங்களுக்கு முன்பே உற்பத்தியை விரிவுபடுத்தியிருந்தனர். ஒருங்கிணைப்பு மையங்கள், ’போர் அறைகள்(war rooms) என அழைக்கப்படுகின்றன, அவை நோயாளிகளுக்கும் வளங்களை ஒருங்கிணைக்கவும் வழிகாட்டுகின்றன. அங்குள்ள மருத்துவர்கள் நோயுற்று வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகின்றனர். கேரளாவின் தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நோயாளர்களைக் கவனிப்பதற்கும் மருந்துகளை வழங்குவதற்கும் களத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள்.
“பெருந்தொற்றுக்கு எதிரான செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை நோக்குகையில் கேரளா தனிச் சிறப்பு மிக்க ஆய்வுப் பொருளாகவே விளங்குகிறது” என்கிறார் வட இந்திய நகரமான குருகிராமில் அமைந்துள்ள ’இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளை(PHFI)’யின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிரிதர் பாபு. “அவர்களின் அணுகுமுறை மனிதாபிமானம் மிக்கது ” என்று அவர் கூறினார்.
நடுவண் அரசு மற்றும் பல மாநிலங்களின் தடுமாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகளை இட்டு நிரப்ப உள்ளூர் அலுவலர்கள், இணையப் பிணைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் தற்காலிக அமைப்பு இந்தியாவில் உருவாகியுள்ளது. படுக்கைகள் விரைவாக நிரம்புவதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்தியாவெங்கும் நோயாளிகள் இறந்துள்ளனர்.
கேரளா இன்னும் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பணியாளர்கள் நீண்ட நேரப் பணி மற்றும் கடினமான நிலைமைகளை எதிர்க்கொள்கின்றனர். தொற்றுப் பரவுகையில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும்.
பதிவுகளின்படி, கேரளாவின் இறப்பு விகிதம், 0.4 சதவீதத்திற்கும் குறைவு, இது இந்தியாவின் மிகக் குறைந்த அளவுகளில் ஒன்று. ஆனால் உள்ளூர் அலுவலர்கள் கூட அரசின் தரவுகளில் குறைபாடு இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். எண்களைக் கண்காணிக்கும் மருத்துவர் டாக்டர் அருண் என்.எம், கேரளா ஐந்து இறப்புகளில் ஒன்றை மட்டுமே கண்டுபிடிப்பதாக மதிப்பிடுகிறார்.

Credit…R S Iyer/Associated Press
ஒப்பீட்டளவில் வளமான மாநிலம். 35 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள கேரளா குறிப்பிட்ட சில சவால்களைக் கொண்டுள்ளது. அதன் மக்கள்தொகையில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள், பெரும்பாலும் மத்தியக் கிழக்கில். அதிகப்படியான பயணம், ஒரு நோய் பரவும் போது மக்கள் இருக்கும் இடத்தைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தை உள்ளூர் அலுவலர்களுக்கு உருவாக்குகிறது.
2020 சனவரியில் சீனாவின் வுஹானில் இருந்து அங்கு திரும்பிய ஒரு மாணவர் இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட கொரோனா தீநுண்மி தொற்றாளராக மாறியபோது, நோய் வெடித்த ஆரம்ப நாள்களில், கேரளா மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக அதன் கொள்கைகளை அறிந்துகொள்ள முடியும். 2018 – இல் நிகழ்ந்த அரிய மற்றும் ஆபத்தான நோயான நிபா தீநுண்மி வெடிப்பை வெற்றிகரமாகச் சமாளித்ததிலிருந்து அலுவலர்கள் பாடங்களைக் கற்றிருந்தனர்.
கடந்த ஆண்டு எல்லைகள் மூடப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியதால், மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு உடனடியாகச் செயலில் இறங்கியது. திரும்பி வந்த பயணிகள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு நபரின் சோதனை நேர்மறை என்றால், உள்ளூர் அலுவலர்கள் அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்தனர். சுகாதாரத் தரவுகளின்படி, கேரளாவின் சோதனை விகிதம் தொடர்ந்து இந்தியாவின் சராசரியை விட அதிகமாக உள்ளது.
இந்த அமைப்பிற்கான பெருமையின் பெரும்பகுதி சென்ற வாரம் வரை கேரள சுகாதார அமைச்சராக இருந்த கே.கே.ஷைலாஜா என்னும் 64 வயதான முன்னாள் பள்ளி ஆசிரியையே சாரும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். நிபா தீநுண்மியை எதிர்த்துப் போரிட்டதில் அவரது பங்கு 2019-இல் ஒரு திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரத்திற்குக் காரணமாக அமைந்தது.
“அவர் போராட்டத்தை முன்னணியில் இருந்து வழி நடத்தினார்”, என்றார் கொச்சியில் உள்ள ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியின் சுகாதாரப் பொருளாதார நிபுணர் ரிஜோ எம். ஜான். “தொடர்புகளைச் சோதித்தல், கண்டறிதல் மற்றும் கண்காணித்தல் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் கடுமையாக இருந்தன.”
செல்வி ஷைலாஜா போன்ற உள்ளூர் அலுவலர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு, திரு. மோடி உலகின் மிகக் கடுமையான பொதுமுடக்கம் ஒன்றை நாடு முழுவதும் திணித்தார், இது தீநுண்மியை மெதுவாக்கியது, ஆனால் இந்தியாவை மந்தநிலைக்குத் தள்ளியது. இந்த ஆண்டு, திரு. மோடி நாடு தழுவிய பொதுமுடக்கத்தைத் தவிர்த்தார், உள்ளூர் அரசாங்கங்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளை எடுக்க விட்டுவிட்டார்.
ஆக்ஸிஜன், மருந்து மற்றும் தடுப்பூசிகளுக்காக இந்தியாவின் மாநிலங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன.
“விசயங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றும் போது முடிவுகளை மையப்படுத்துவதும், விசயங்கள் இல்லாதபோது பொறுப்பை மாநிலங்கள் மீது திசை திருப்புவதுமான போக்கு உள்ளது”, என்று அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கில்லஸ் வெர்னியர்ஸ் கூறினார்.
வளங்களை ஒருங்கிணைக்க, கேரள அலுவலர்கள் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒன்று என போர் அறைகளை அமைத்தனர். சஜீவ் வி.பி. வசித்த எர்ணாகுளம் மாவட்டத்தில், 60 ஊழியர்கள் கொண்ட குழு ஆக்ஸிஜன் பொருள்கள், மருத்துவமனைப் படுக்கைகள் மற்றும் அவசர ஊர்திகள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. மாவட்டத்தின் 52,000 இற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளை முப்பது மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள்.

ஒரு தனிக் குழு ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்கிறது, ஒவ்வொரு மருத்துவமனையின் பயன்பாடு மற்றும் கையிருப்பு வீதத்தையும் கணக்கிடுகிறது. ஒரு திரையைச் சுட்டிக்காட்டி, போர் அறை ஒருங்கிணைப்பாளரான எல்டோ சோனி கூறியது: “யாருக்கு அவசரமாக விநியோகம் செய்ய வேண்டும், எங்கிருந்து அவற்றைப் பெற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்”
போர் அறையை வடிவமைத்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அதுல் ஜோசப் மானுவல், நோயர்களை வகைப் பிரித்தல்(triage) மிகவும் முக்கியமானது என்று கூறினார். “உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில், மருத்துவ வளங்களின் பற்றாக்குறை முதன்மைப் பிரச்சினை அல்ல”, “நோயர்களின் சீரற்ற பகிர்மானம்தான் பல மருத்துவமனைகள் நிரம்பி வழியக் காரணமாகிவிட்டது.” என்று அவர் கூறினார்.
பிற இடங்களில் மாறுபட்ட செயல்திறனுடன் இதேபோன்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் முதலீடு செய்த வரலாற்றை மாநிலம் கொண்டிருப்பதால், கேரளா இவ்வாறு பணியாற்றியிருப்பதாகச் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு மற்றும் உலகச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கேரளா 1,00,000 பேருக்கு 250 இற்கும் மேற்பட்ட மருத்துவமனைப் படுக்கைகளைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் சராசரியை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். கேரளா பெரும்பாலான மாநிலங்களை விட ஒரு நபருக்கு அதிகமான மருத்துவர்களைக் கொண்டுள்ளது.
அலுவலர்கள், மாநில சுகாதார மருத்துவ மையங்கள் மற்றும் ’அங்கீகாரம் பெற்ற சமூகச் சுகாதார ஆர்வலர்களின்’ தேசிய வலையமைப்பின் உள்ளூர் உறுப்பினர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளனர், இது இந்தியாவில் ஆஷா(ASHA- Accredited Social Health Activist) என அழைக்கப்படுகிறது. நோயாளிகள் வீட்டுத் தனிமைப்படுத்தல்களில் இருந்துகொண்டு உணவு மற்றும் மருந்தைப் பெற முடியும் என்பதைப் பணியாளர்கள் உறுதி செய்கின்றனர். முகக்கவசம் அணிவது, சமூக விலகல் மற்றும் தடுப்பூசியின் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றியும் அவர்கள் போதிக்கின்றனர். (முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட மக்களில் கேரளாவின் பங்கு தேசிய சராசரியான 3 சதவீதத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.)
வேலை, குறைந்த ஊதியமும் கடினமும் கொண்டது. 420 குடும்பங்களுக்கு முதல் தொடர்பாளரான, 47 வயதான சமூகச் சுகாதார ஆர்வலர் கீதா ஏ.என்., காலை 9 மணிக்குத் தனது சுற்றலைத் தொடங்குகிறார். அவர் வீட்டுக்கு வீடு மருந்து வழங்குகிறார், ஏதேனும் வீடுகளுக்கு உணவு தேவையா என்று கேட்கிறார். அவரது தொலைபேசி இடைவிடாது ஒலிக்கிறது, நோயாளிகள் ஆலோசனைக்காக அல்லது படுக்கையைக் கண்டுபிடிக்கும் உதவிக்காக அழைக்கிறார்கள்.

Credit…R S Iyer/Associated Press
அவரைப் போன்ற பணியாளர்கள் தன்னார்வலர்களாக இருக்க வேண்டும், எனவே திருமதி கீதாவின் ஊதியம் குறைவாகவும் இடைவெளி கொண்டதாகவும் உள்ளது. அவர் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.6000 சம்பாதிக்கிறார், ஆனால் அவருடைய சொந்தப் பாதுகாப்புப் பொருள்கள் வாங்க வேண்டும். “ஆரம்ப நாள்களில், எங்களுக்கு முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள் மற்றும் கையுறைகள் கிடைத்தன,” என்று அவர் கூறினார். “இப்போது, அவற்றை நாங்களே வாங்க வேண்டும்.”
மற்ற இடங்களில் பற்றாக்குறை இருந்தபோதிலும், கேரளாவில் இப்போது போதுமான மருத்துவ ஆக்ஸிஜன் உள்ளது. கடந்த ஆண்டின் குறைந்த இருப்பு மற்றும் மருத்துவமனைகளில் இறக்கும் நோயாளிகளைப் பற்றிய வெளிநாட்டுச் செய்திகள் ஆகிவற்றால் எச்சரிக்கையடைந்த, கேரளாவின் உள்ளூர் மற்றும் தேசிய அலுவலர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை அதிகரிக்க ஆணையிட்டனர், இதனால் ஓராண்டுக்கு முன்பு 149 மெட்ரிக் டன்னாக ஆக இருந்த ஒரு நாள் உற்பத்தி 197 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இரண்டாவது அலை தாக்கியபோது, தேவை மூன்று மடங்காக உயர்ந்ததைச் சமாளிக்க மாநிலத்திற்கு இது உதவியது.
தீநுண்மித் திரிபுகளைக் கண்காணித்ததற்காக கேரளா பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திரிபு நாட்டின் வெடிப்பை மோசமாக்கியுள்ளதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர், இருப்பினும் அவை தரவுகள் இல்லாததால் தடைபட்டுள்ளன. திரிபுகளைக் கண்டறிய கேரளா நவம்பர் முதல் மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது, இது கொள்கை முடிவுகளைச் செயல்படுத்த உதவுகிறது என்கிறார் புது தில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன(CSIR-Institute of Genomics and Integrative Biology) விஞ்ஞானி டாக்டர் வினோத் ஸ்கேரியா.
“எந்த நேரத்திலும் கைவிடாத ஒரே மாநிலம் இதுதான்” என்று டாக்டர் ஸ்கேரியா கூறினார், “கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு ஆதாரங்களைப் பயன்படுத்த அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.”

(ஷாலினி வேணுகோபால் பகத் 2014 ஆம் ஆண்டு ’தி நியூயார்க் டைம்ஸின்’ தெற்காசிய அலுவலகத்தில் இணைந்தவர். இதற்கு முன்பு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படங்களுக்கான எழுத்தாளராகவும் தயாரிப்பளராகவும் திகழ்ந்தவர்)
நன்றி: ’தி நியூயார்க் டைம்ஸ்’ 23.05.2021