நேர்காணல்: கோவிட் தடுப்பூசி…. ஆராய்ச்சிகளும் அனுபவங்களும்…. – த.வி.வெங்கடேஸ்வரன் | சந்திப்பு: நர்மதா தேவிகோவிட் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் பற்றிச் சொல்லுங்கள்…

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 120 தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிஆராய்ச்சி, உருவாக்கம் குறித்த விதிகள் அடிப்படையில் அவற்றில் நான்கு ஊசிகள், போதியபயன் மற்றும் பாதுகாப்பு இல்லை என்பதால் முதற்கட்ட ஆராய்ச்சிலேயே கைவிடப்பட்டன. 120 தடுப்பூசி முயற்சிகளில் இப்போதைக்கு 7-8 மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மற்றவை எல்லாம் இன்னும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளில் பெரும்பாலான தடுப்பூசிகள் ஆர்.என்.ஏ அல்லது டி.என்.ஏ ஜீனோம் தடுப்பூசிகள். கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத ஜீனோமை வெட்டி எடுத்து, எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாத சாதாரண வைரஸுடன் ஒட்டி, உடலுக்குள் செலுத்துவார்கள். பிரச்சனைகளை விளைவிக்காத இந்த மரபணு மாற்ற வைரஸ் உடலுக்குள் சென்றதும், கொரோனா வைரஸ் நோயை உருவாக்கும் ஜீனோம் உற்பத்தி நடக்காது,வெறும் ஸ்பைக் புரதம் உற்பத்தி மட்டும் நடக்கும். இதனால், கொரோனா நோய் வராது. ஆனால் ஸ்பைக் புரதத்தைக் கண்டதும் கொரோனா வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை நம் உடல் உற்பத்திசெய்யும். அஸ்ட்ரோஜெனா, ஸ்புட்னிக் இந்த வகை தடுப்பூசிகள் தான்.

கோவாக்சின் தடுப்பூசியில் செயலிழப்பு செய்யப்பட்ட வைரஸ் (Inactivated Virus Strain)இருக்கிறது. இதை உருவாக்குவதற்கு கொரோனா வைரஸை முதலில் ஆய்வகத்தில் வளர்க்கவேண்டும். மனித செல்களுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிக நேரம் செயல்பட முடியாது, ஒரு சில மணி நேரங்களில் அது அழிந்துவிடும். எனவே, ஆய்வகத்தில் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட மனித நுரையீரல் செல்களில் கொரோனா வைரஸை செயற்கையாக வளர்க்க வேண்டும். பிறகு அந்தக் கொரோனா வைரஸை செயலிழப்பு செய்ய வைக்க குறிப்பிட்டசேர்மங்களில் போடுவார்கள். அப்படிச் செய்வதால், வைரஸ் பெருவதற்கு அடிப்படையான அதன் ஆர்.என்.ஏ அமைப்பு அழிக்கப்பட்டு, ஸ்பைக் புரதம் போன்ற அதன் புரதங்கள் மட்டும் பாடம் செய்யப்பட்டு, செயலிழப்பு செய்யப்பட்ட வைரஸ் உருவாக்கப்படும். இந்த செயலிழப்புசெய்யப்பட்ட வைரஸை உடலில் செலுத்தும்போது ஸ்பைக் புரதத்தைப் பார்த்ததும் நமது உடல்கொரோனா வைரஸ் என நினைத்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.எத்தனை சோதனை கட்டங்களைத் தாண்டி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது?

தடுப்பூசி ஆய்வில் முதலாவது நிலை, விலங்குகளில் பரிசோதிக்கப்படும் மருத்துவ முன்ஆய்வு நிலை (ப்ரி-கிளினிக்கல் நிலை). இதன் முதற்கட்டம் ஒரு வகை எலிகளில் மேற்கொள் ளப்படுகிறது. மனிதர்களில் கொரோனா வைரஸை செல்களுக்குள் எடுத்துச்செல்லும் ஏற்பிகளாக (Receptor) ACE2 எனும் புரதங்கள் இருக்கின்றன. மனித ACE2 ஏற்பிகளை நுரையீரலில் கொண்ட, மரபணு மாற்ற எலிகளில், பெரும்பாலான தடுப்பூசிகளின் முதற்கட்ட சோதனைநடத்தப்படுகிறது. இந்த எலிகளின் பெயரே hACE2. ‘h’ என்பது மனிதர்களைக் குறிக்கிறது. சாதாரண எலிகளை மனித கொரோனா வைரஸ் பாதிக்காது. ஆனால், மனித ACE2 ஏற்பிகளை இந்தமரபணு மாற்ற எலிகள் கொண்டிருப்பதால், இவற்றை கொரோனா வைரஸ் தாக்க முடியும்.

இந்த எலிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, பிறகு கொரோனா வைரஸைச் செலுத்தி தடுப்பு மருந்து வேலை செய்திருக்கிறதா என சோதனை செய்வார்கள். தடுப்பூசியின் அளவு, இடைவெளி, பக்கவிளைவு எனப் பல விஷயங்களை இந்த சோதனையில் ஆராய வேண்டும். ஒரு தடுப்பூசியில் 3 கூறுகள் இருக்கும். தடுப்பூசி கூறு. அதுதான் மருந்துக்கூறு. அடுத்துஅட்ஜுவன்ட் (Adjuant) எனும் துணைக்கூறு. நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பைத் தூண்டுவதற்காக அது தேவைப்படுகிறது. மூன்றாவது ஒரு மில்லி என மிகக் குறைந்த அளவில் இருக்கும் தடுப்பூசிக் கூறை செலுத்துவதற்கான கரைசல். எனவே, அட்ஜூவன்ட்மற்றும் கரைசல் ஆகியவற்றை நாம் சோதிக்க வேண்டும். அந்தக் கரைசலில் தடுப்பூசி நிலையாக இருக்கிறதா, எவ்வளவு நாட்கள் இருக்கிறது, அதனுடன் இணைந்து எப்படி வேலை செய்யும் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். மருத்துவ முன் ஆய்வின் இரண்டாம் கட்ட ஆய்வு பரிணாம ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமான மக்காவ் போன்ற ஒரு குரங்கு வகையில் நடத்தப்படும். அவற்றின் நுரையீலும், மனிதர்களுடைய நுரையீரலும் ஒத்திருக்கும். முதலில் அவற்றிற்கு தடுப்பூசியைப் போட்டு, குறிப்பிட்டகால இடைவெளிகளில் வைரஸைச் செலுத்தி, மருந்து வேலை செய்திருக்கிறதா, எந்த அளவு நோயைத் தடுத்திருக்கிறது, எவ்வளவு காலம் தடுப்பூசியின் திறன் உடலில் இருக்கிறது,

எவ்வளவு முறை தடுப்பூசி, எந்த இடைவெளியில் கொடுக்கப்பட வேண்டும், வேறெந்த விளைவுகளையாவது தடுப்பூசி ஏற்படுத்துகிறதா என்றெல்லாம் சோதிப்பார்கள். இதற்கு சவால் சோதனை (Challenge test) என்று பெயர்.மூன்றாவது மருத்துவ ஆய்வு நிலை (Clinical Phase). இந்த ஆய்வு பல கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட ஆய்வு 100-150 மனிதர்களிடம் நடத்தப்படும். தடுப்பூசி மனிதர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறதா, நோய் எதிர்ப்புக் காரணிகளை உருவாக்குகிறதா, எதிர்ப்புசக்தி நினைவாற்றல் திறன் எவ்வளவு காலம் (எவ்வளவு நாட்களுக்கு நோய்க் காரணிகளை நம் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பு நினைவில் வைத்து வேலை செய்யும் என்பது) என்பன போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் தடுப்பூசி அளவு அதாவது டோஸ் எவ்வளவு இருந்தால் நல்ல பயன் ஏற்படுகிறது என்பதையும் பரிசோதனை செய்வார்கள்.இந்த ஆய்வில் கலந்துகொள்பவர்கள் வேறு எந்த நோயும் இல்லாத, உடல் ஆரோக்கியம்உள்ள இளையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்றும் வந்திருக்கக்கூடாது.தடுப்பூசி செலுத்தியபின் ரத்த மாதிரிகள் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது- தடுப்பூசி போடப்பட்ட அன்று, ஓரிரு நாட்கள் கழித்து, 14 நாட்கள் கழித்து, 28 நாட்கள் கழித்து, 48 நாட்கள், 104 நாட்கள் கழித்து என ஆய்வுகள் செய்யப்படும்.பெரும்பாலானவர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு ஊசிகுத்திய இடத்தில் வலியோ, லேசானதலைவலியோ, லேசான அரிப்போ, காய்ச்சலோ வரக்கூடும். இவையெல்லாம் மருத்துவக் கண்ணோட்டத்தில் மோசமான பக்கவிளைவுகள் இல்லை; இதற்காக அச்சப்படத் தேவையில்லை.
28 நாட்கள் காலத்திற்குள்ளாக தடுப்பூசியின் கூறுகள் உடலில் இருந்து முற்றிலும் வெளியேறிருக்கும். அதன் பிறகு தடுப்பூசியின் உட்கூறுகளால் நேரடி பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

அதனால், கடைசி தடுப்பூசி போட்ட பிறகு, 28 நாட்கள் கழித்து, போதுமான அளவில் நோய்எதிர்ப்புப் பொருட்களை உடல் உற்பத்தி செய்திருக்கிறதா, அதன் செறிவு என்ன, உடலில் தடுப்பூசி என்ன மாதிரி வேலை செய்கிறது, பக்க விளைவு பாதிப்புகள் ஏதும் வந்துள்ளதா, என்ன மாதிரியான பாதிப்புகள் வந்தது என்றெல்லாம் விரிவாக ஆய்வு செய்வார்கள். இதுவேமிகப்பெரும் சவால்தான். இந்தியாவில் இந்த ஆய்வைச் செய்வதற்கான கட்டமைப்புகள் அவ்வளவாக  இல்லை. அதனால், கொரோனா தொடங்கிய உடனேயே, இப்படி ஒரு கட்டமைப்பு தேவைப்படும் என்பதைஉணர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள, மத்திய உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்,புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், தில்லியில் உள்ள மத்திய அரசின் THSTI போன்றவை, தங்கள் வளாகங்களில் இத்தகைய ஆய்வு அமைப்புகளை உருவாக்கின. மருந்துதயாரிக்கும் தனியார் நிறுவனங்களே இந்த ஆய்வைச் செய்தால் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால், இப்படிப்பட்ட நிறுவனங்கள் இந்த முக்கிய ஆய்வைச் செய்கின்றன.

சில மருந்துகள் வாழ்நாள் முழுவதும் கூட வேலை செய்யும். ஆனால் அவ்வளவு காலம் நாம்காத்திருந்து சோதிக்க முடியாது அல்லவா? அதனால், குறைந்தது இத்தனை காலம் வேலை செய்யும் என்பதை இந்த ஆய்வில் நிறுவுவார்கள். இது மருத்துவ ஆய்வின் முதல் கட்டம். மருத்துவ ஆய்வின் இரண்டாம் கட்ட ஆய்வில் 1600, 2000 நபர்கள்பங்கேற்பார்கள். இவர்களை இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள். முதல்குழுவிற்கு தடுப்பூசி கரம் என்று பெயர். இவர்களுக்கு உண்மையானதடுப்பூசியைச் செலுத்துவார்கள். இரண்டாவது குழுவுக்கு பிளாசிபோகரம் என்று பெயர். இவர்களுக்கு சாதாரண சலைன் போன்ற திரவங்களைச் செலுத்துவார்கள். ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்குத் தங்களுக்கு செலுத்தப்பட்டது மருந்தா, பிளாசிபோவா என்பது தெரியாது. எடுத்துக்காட்டாக சோதனையில் பங்கெடுத்தவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு இயற்கையாகவே கொரோனா வரும் வரைக் காத்திருந்து, வந்ததும் அவர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டவர்கள்,எத்தனை பேர் தடுப்பூசி போடாதாவர்கள் (பிளாசிபோ மட்டுமே வழங்கப்பட்டது) எனப் பார்ப்பார்கள். தடுப்பூசி போடாதவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு நோய் வந்தது, தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு நோய் வந்தது என்ற தரவுகள் மூலம், மருந்தின் திறன் நிறுவப்படுகிறது. 60 சதவிகிதம், 80 சதவிகிதம் என்றேல்லாம் சொல்லப்படும் தடுப்பூசி திறன் இந்த ஆய்வின் மூலம் நிறுவப்படுகிறது. ஸ்புட்னிக் மருந்து 95 சதவிகித திறனைக் கொண்டிருக்கிறது என்பது இப்படி ஓர் ஆய்வின் மூலம் நிறுவப்பட்டதுதான். பொதுவாக தடுப்பூசிகளுக்கு 60 சதவிகித திறன்இருந்தாலே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்ற பொதுவானவிதி இருந்தாலும், நிறுவனங்கள் 70, 80 சதவிகித திறனை எதிர் பார்க்கின்றன.மருத்துவ ஆய்வின் மூன்றாம் கட்ட சோதனையில் 20,000- 30,000 தன்னார்வலர்கள் கலந்துகொள்வார்கள். மூன்றாம் கட்டஆய்விலும் எத்தனை சதவிதம் திறன் இருக்கிறது என்ற ஆய்வு நடக்கும். இந்தஆய்வில் கலந்துகொள்பவர்களின் வயதும் 18-45, 18-60, 18-90 எனப்பரந்த அளவில் இருக்கும். கோவாக்ஸின் 18-60 வயதினரிடையே ஆய்வு செய்யப்பட்டது. ஸ்புட்னிக் ஆய்வில் 18-90 வயதுக்கு உட்பட்டோர் கலந்துகொண்டார்கள். இங்கும் தடுப்பூசி கரம் மற்றும் பிளசிபோ கரம் என இரண்டாக பிரித்து மெய்யாக தடுப்பூசிபயன் தருகிறதா என ஆய்வு மேற்கொள்வார்கள்.

மூன்றாம் கட்ட ஆய்வு வெற்றி பெற்றவுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு மருந்து அனுமதிக்கப்படும். மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகும் மருந்தின் திறன் கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட வேண்டும். மிகப் பெரும் மக்கள்தொகைக்கு தடுப்பூசி செலுத்தப் படும்போது, பாலினம், பல்வேறு பொருளாதார வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினர்களிடம் மருந்து எப்படி வேலை செய்கிறது என்ற தரவுகளைப் பெற்று ஆய்வுகளைச் செய்வார்கள். இது நான்காம் கட்ட ஆய்வு. ஐரோப்பாவில் அஸ்ட்ரோஸெனா தடுப்பூசியால் சிலருக்கு இரத்தம் உரைதல் பிரச்சனை ஏற்பட்டது என்ற ஆய்வு அறிக்கை வந்ததல்லவா? அது நான்காம் கட்டஆய்வு முடிவுகள்தான். அந்த இரத்தம் உறைதல் நிகழ்வு தற்செயல்நிகழ்வா, மருந்தால் நிகழ்ந்ததா எனக் கண்டறிவதற்காக, அந்த நாடுகள் தற்காலிமாக தடுப்பூசி பயன்பாட்டைத் நிறுத்தி வைத்துவிட்டு ஆய்வு செய்தன. உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சனைக்கான காரணிகளுடன் ஆஸ்ட்ரோஸெனாவின் கூறுகளுடைய தற்செயல் இணைவால் இரத்தம் உறைதல் நிகழ்வு நடந்தது (accidental combination)என ஆய்வுகளில் இருந்து தெரியவந்தது. நான்காம் கட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும்போது, வெகு அரிதாக 10 லட்சத்தில் ஒருவருக்கு இது மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்படலாம். இதுஉறுதியானதும், நார்வே போன்ற நாடுகள் மீண்டும் அந்த மருந்தைப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரோஸெனாவைப் பயன்படுத்த வேண்டாம் எனதற்காலிகமாக அங்கே முடிவெடுத்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற ரத்த உறைதல் சிக்கலை நாம் இதுவரை காண முடியவில்லை.

எல்லா நாடுகளிலுமே, மருந்துகளினால் ஏற்பட்டது என சந்தேகிக்கப்படும் கடுமையான விளைவுகளை பதிவு செய்வதற்கான பாதகமான விளைவு குறித்த பதிவு மையம் (Adverse effect reportingsystem) என்ற அமைப்பு இருக்கிறது. தடுப்பூசியினால் விளைந்ததுஎன சந்தேகிப்படுகிற விளைவுகளை இந்த அமைப்பு ஆய்வு செய்கின்றது. இந்த மாதிரியான விளைவுகள் தடுப்பூசிகளினால் மட்டுமல்ல, பிற மருந்துகளினாலும் நிகழும். தடுப்பூசியால் 10 லட்சத்தில் ஒருமோசமான விளைவு ஏற்படுகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஹெர்பீஸ் மருந்துகளில்கூட 50 ஆயிரத்தில் ஒரு மோசமான நிகழ்வுநடக்கிறது. எனவே, இந்த மாதிரியான நிகழ்வுகளைக் கேள்விப்பட்டவுடனேயே தடுப்பூசிகள் எல்லாமே ஆபத்தானவை என்று பயப்படத்தேவையில்லை.கொரோனா தொற்று வந்தவுடன் தடுப்பூசி எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருந்த மக்கள், தடுப்பூசி வந்தவுடன் அதைப் போட்டுக் கொள்ளத் தயங்கினார்கள். இந்தத் தயக்கத்துக்கான காரணங்கள் என்ன?

நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணமாக, பத்தாண்டுகளில் கண்டுபிடிக்க வேண்டிய மருந்தை ஒரே ஆண்டில் கண்டுபிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்களே. அதெப்படிபாதுகாப்பானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதில் மக்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதுவரை போட்டி அடிப்படையில் தான் பெரும்பாலான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு நிறுவனம் தான் கண்டறிந்ததை வெளியிடாமல் பரமரகசியமாக வைத்திருந்து மருந்தை உற்பத்தி செய்யும். இம்முறை உலக சுகாதார நிறுவனம் டிசம்பர் 26 அன்று,கவலைப்பட வேண்டிய புதிய தொற்று சீனாவில் ஏற்பட்டுள்ளது என அறிவித்தது. 2020 ஜனவரி 10 ஆம் தேதி அன்று சீன அரசாங்கம் வைரஸின் ஜீனோம் (மரபணு வரிசை) முழுவதையுமே வெளியிட்டது. இதனால், பல்வேறு தரப்பினரும் உடனடியாக தடுப்புமருந்துக் கண்டுபிடிப்பில் இறங்க முடிந்தது. எனவே, இதுவரை இல்லாத அளவில் சர்வதேச ஒத்துழைப்பு என்பது அறிவியல் கோணத்தில் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்குக் கிடைத்தது.

இரண்டாவது, கோவிட் ஆராய்ச்சியில் பணியாற்றிய முகமைகள் எல்லாம் இணைந்து சர்வதேச முகமை ஒன்றை உருவாக்கினார்கள்.இதில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கொரோனா வைரஸின்ஜீனோமைக் கண்டறிந்து பகிர்ந்துகொண்டார்கள். அதில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி எல்லாம் மாற்றம் அடைகிறது எனக் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து கொண்டேஇருந்தாலும், அதன் எந்தப் பாகம் மாறாமல் மனிதர்களின் ACE ஏற்பிகளில் போய் ஒட்டிக்கொண்டு நோயை உருவாக்கக் காரணமாக இருக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் மூலம் அறிய முடிந்தது. ஸ்பைக் புரதம் என்ற வைரஸின் பாகம் தான் முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதை அறிந்த பிறகு, அதன் அமைப்பை அறிந்த பிறகு, தடுப்பூசி கண்டறிவது சுலபமாக இருந்தது. சாதாரண காலங்களில் இந்த ஸ்பைக் புரதத்தைக் கண்டறிவதற்கே பல ஆண்டுகள் ஆகும். எனவே, சர்வதேச அளவில் கொரோனா குறித்த அறிவியல் ஆய்வுகள் கூட்டியக்கமாக நடந்ததால் வழக்கமாக பத்து,பதினைந்து ஆண்டுகள் நடக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஓராண்டில்நடந்தது; மருந்தின் தரத்தில், திறனில் எந்த விதக் குறைபாடும் இல்லாத விதத்தில் நடந்தது.இரண்டாவதாக, இயற்கை சார்ந்த வாழ்க்கையில், சத்தான பொருட்களை உட்கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும், தடுப்பூசியெல்லாம் தேவையில்லை என்ற பிரச்சாரம், தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. இன்றைக்கு பெரியம்மை, காலரா, போலியோ போன்ற மோசமான பேரழிவு நோய்களை ஒழிக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்தது என்றால் அது தடுப்பூசிகளால் தான் நடந்துள்ளது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு, ஒரு சிலர் மரணமடைந்த அரிதான சம்பவங்களின் ஆய்வு விவரங்களைப் பார்க்காமல், ’தடுப்பூசியால் தான் மரணம் நிகழ்ந்தது’ என்ற வதந்திகளை நம்புவது, பரப்புவது. பத்து லட்சத்தில் ஒன்று இரண்டு பேருக்கு ரத்தம் உறைதல் போன்ற மோசமான நிகழ்வுகள் இணைவு விளைவுகளாக நடக்க வாய்ப்புள்ளது. அவற்றைக் குணப்படுத்த முடியும். அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வுகள் மூலம், கோவிட் தடுப்பூசிகளால், பத்து லட்சத்தில் 0.04 சதவிகிதம் பேருக்கு ரத்தம் உறைதல் நிகழ்வு நடந்தது என்று தெரிய வந்தது.அதாவது பத்து லட்சம் பேரில் ஓரிருவருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டது.பத்து லட்சம் பேரில் இருவருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுகிறது என்பதால், நாம் யாருக்குமே தடுப்பூசி போடவில்லை என்றால் என்ன
ஆகும்?

பெருமளவில் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசியை போட்டுவரும் நாடுகள் கொரோனா பரவலைத் தடுத்து வருகின்றன என்பதைப்புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.2021 ஏப்ரல் 23 வரை இஸ்ரேல் நாட்டில் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டவர்களின் எண்ணிக்கை 120%. அந்த நாட்டில் 53% சதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. விரிவாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கடந்த பத்து மாதத்தில் முதல்தடவையாக, ஏப்ரல் 23 அன்று ஒரு மரணம் கூட அந்நாட்டில் ஏற்படவில்லை. தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை சடசடவென குறைந்து வருகிறது. எனினும் பாலஸ்தீனபகுதிகளில் முறையாக இஸ்ரேல் தடுப்பூசி வழங்கவில்லை என்றகுற்றச்சாட்டும் உள்ளது. அதே போல அமெரிக்காவில் 77 மில்லியன்பேருக்கு தடுப்பூசி தரப்பட்டது. இவர்களில் வெறும் 5300 பேருக்கு தான் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது, அவர்களில் வெறும் 390 பேருக்கு தான் நோய் கடுமை அடைந்து மருத்துவ உதவி தேவைப்பட்டது அதில் வெறும் 77 பேருக்கு தான் மரணம் ஏற்பட்டது.அதாவது சாவிலிருந்தும் கோவிட்டின் கடுமையான பாதிப்பில் இருந்தும் தடுப்பூசி 99.9999% பாதுகாப்பு தருகிறது எனலாம்.

எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், கொரோனாவை ஒழிக்கவும் நமக்கு இருக்கும் முதன்மையான ஆயுதம் தடுப்பூசிகள்தான். அவை எப்போது வரும் என இவ்வளவு காலம் காத்திருந்தோம். சிறிதும் தயக்கமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோயில் இருந்து தற்காத்துக்கொள்வது அவசியம்.

நேர்காணல் : த.வி.வெங்கடேஸ்வரன்….

(சந்திப்பு: நர்மதா தேவி)

 மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி 

நன்றி : தீக்கதிர் நாளிதழ்