“போராடும் கியூபா” எனும் நூல் வெளியீட்டு விழாவில் உ.வாசுகி ஆற்றிய உரை | Cpim Polit Bearuio Member U Vasuki Speech in Poradum Cuba Book Release Event | www.bookday.in |

“போராடும் கியூபா” எனும் நூல் வெளியீட்டு விழாவில் உ.வாசுகி ஆற்றிய உரை

ஜூலை 10 அன்று சென்னையில், கிரிஸ்டன் வெல்கர் எழுதி, ஜெ.தீபலட்சுமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள “போராடும் கியூபா” எனும் நூல் வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரை

ஏகாதிபத்திய எதிர்ப்பும் கியூபாவின் நிஜ நிலவரமும்

“இந்த நூல் 30 பக்கங்களே இருந்தாலும், புரட்சிகரமான உணர்வுகளைப் பாய்ச்சுகிறது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் கியூபா சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், போராட்டத்தை எப்படித் தீவிரப்படுத்துவது, இந்தியச் சூழலில் உள்ள வாய்ப்புகளை எப்படி கையாள்வது போன்ற பல கருத்துகளை முன்வைக்கிறது. சோசலிசம் மற்றும் கியூபாவின் மீதும் தீவிர பற்று கொண்ட ஒருவரால்தான், ஜனாதிபதி தியாஸ் கேனல் முன்வைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் நுட்பமான அரசியலை இவ்வளவு ஆழமாகத் தமிழில் கடத்த முடியும். இது வெறும் இயந்திரகதியான மொழிபெயர்ப்பு அல்ல, இதயப்பூர்வமான பணி.

ஏகாதிபத்தியம் பரப்பும் அவதூறுகளை உடைத்து, கியூபாவின் நிஜமான நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்த, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின்படி தியாஸ் கேனல் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார். மேற்குலக ஊடகத்தின் ஆத்திர மூட்டும் கேள்விகளை அவர் மிகச் சரியாகக் கையாண்டு, நேரடியாகவும் துல்லியமாகவும் பதில்களைப் பதிவு செய்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் நசுக்கப்பட்டு வருகிறது. கோவிட் காலத்திலும், சமீபத்திய எரிசக்தி முற்றுகையாலும் கியூபா கூடுதல் நெருக்கடிகளைச் சந்திக்கிறது. உற்பத்தி சக்திகளை வளர்க்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கியூபா 23 துறைகளில் அந்நிய மூலதனத்தை அனுமதித்தாலும், ஒட்டுமொத்த சோசலிசக் கட்டுப்பாடு மாறாது. சோசலிசத்தை அவர்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் சரிவு என கம்யூனிஸ்டுகள் சோர்வடைபவர்கள் அல்ல”. வரலாறு நெடுகிலும் காரல் மார்க்ஸ், லெனின் போன்ற தலைவர்கள் எத்தகைய நெருக்கடிகளையும் சோர்வின்றி எதிர்கொண்டு தான் நமக்குப் பெரிய பொக்கிஷங்களை தந்து சென்றனர். கியூபாவில் கல்வி, மருத்துவம் அனைத்தும் இலவசம். அங்கிருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகள் எந்தவிதமான கவலையுமின்றி இலவசமாகச் சிறந்த சிகிச்சை பெறுகிறார்கள். அந்த நிம்மதி முதலாளித்துவ நாடுகளில் கிடைக்குமா? கைகால்களைக் கட்டிப்போட்டுவிட்டுப் பந்தயத்தில் ஜெயிக்க வில்லை என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ, அதேபோல்தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும். “இந்த சிஸ்டம் (சோசலிசம்) தோல்வியா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “சிஸ்டம் தோல்வியல்ல, ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளே இந்த நிலைக்குக் காரணம்” என்று தியாஸ் கேனல் மிகச் சரியாகப் பதிலளித்துள்ளார்.

உலக அரசியலின் நகர்வுகளும் காசா இனப்படுகொலையும்

இளைஞர்கள் மாற்றத்தைத் தேடி வருகிறார்கள், அவர்களுக்கு எது ‘மாற்றம்’ என்பதை கம்யூனிஸ்டுகள்தான் விளக்க வேண்டும். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவுடன் சமமாக நின்று பேசும் சோசலிச கர்வம் மற்றும் வளர்ந்து வரும் சக்தியான சீனா, தேய்ந்து வரும் சக்தியான அமெரிக்கா என்ற அவரது முழக்கம் உலக அரசியலில் மாற்றத்தை உணர்த்துகிறது. புடின் மற்றும் ஜி ஜின்பிங் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அமெரிக்காவின் ஒரு துருவ உலக ஆதிக்கத்திற்குத் தரும் பதிலடியாகும். வெனிசுலா, ஈரான் மற்றும் கியூபா மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, கடந்த காலத்தில் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு வந்த அதன் நட்பு நாடுகளே தற்போது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. இது அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே சிறிய விரிசல் விழுந்திருப்பதை உணர்த்துகிறது.

மறுபுறம், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதியில் போர்நிறுத்தத்திற்குப் பிறகும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முரளிதரன் தலைமையிலான ஐநா சபையின் விசாரணை ஆணைய அறிக்கை, இஸ்ரேலிய ராணுவம் காசா குழந்தைகளைத் திட்டமிட்டுக் கொன்றதை அம்பலப்படுத்தியுள்ளது. 14 வயது சிறுவன் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருக்கும் போது, அவனைச் சுற்றி நின்று இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் புகைப்பிடித்துக்கொண்டு சிரித்து அரட்டை அடிப்பதும், பள்ளித் தேர்வுக்குச் சென்ற சிறுமி சுட்டுக்கொல்லப்படுவதும், தாய்-சேய் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள் திட்டமிட்டு ஏவுகணைகளால் தகர்க்கப்படுவதும் எனப் பல கோர சம்பவங்கள் நடந்துள்ளன. எதிர்கால பாலஸ்தீன சந்ததியே உருவாகக் கூடாது என்ற நோக்கத்தோடு நடத்தப்படும் இது ஒரு கொடூரமான இனப்படுகொலை ஆகும். உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை விமர்சிக்கும் சூழலில், இந்திய அரசு இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. அழிப்பதிலும், பிறகு நடக்கப்போகும் மறுகட்டுமானத்திலும் லாபம் தேடும் நோக்கில் இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல இஸ்ரேல் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களின் உற்பத்தியில் பங்கு வகிப்பது வேதனைக்குரியது.

தமிழக அரசியல் சூழலும் கம்யூனிஸ்டுகளின் கடமையும்

தற்போதைய தமிழக அரசியல் சூழலில், சமூக வலைதளங்களில் பேசப்படும் லாவணிக் கச்சேரிகளில் சிக்கிக்கொள்ளாமல், கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டியது அவசியம். புதிய அரசாங்கத்தை ஒரு குறிப்பிட்ட சூழலில் விமர்சனப்பூர்வமாக ஆதரித்தோமே தவிர, எந்தவிதக் கொள்கை சமரசமும் செய்யவில்லை. திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளை இடதுசாரிகள், பிரச்சனைகளின் அடிப்படையில் அணுகுகிறார்கள். இருப்பினும், வரும் காலங்களில் பாஜகவின் அரசியல் சட்டத் திருத்த முயற்சி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளை எதிர்க்க, திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். அதே சமயம், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கட்சி குறித்து திமுக முரசொலியில் 3 பாகங்களாகத் தரம் தாழ்ந்து எழுதியது. அதற்கு நாமும் பதில் எழுதியுள்ளோம். விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போது, அரசியல் தெளிவையும் நிதானத்தையும் இடதுசாரிகள் கடைப்பிடிக்கிறோம். உண்மையான மாற்று என்பது இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் தான் உள்ளது. அதற்கான நடவடிக்கையாக இடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளன. வரவிருக்கும் செப்டம்பர் மாதம் தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்து ஒரு வலுவான மக்கள் பேரணியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாஜகவின் நவதாராளவாத மற்றும் பாசிசப் போக்குகள் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்ற இலக்கை நோக்கியே பயணிக்கின்றன. நூறு நாள் வேலைத் திட்டம், தொழிலாளர் உரிமைகள், உணவு உரிமை மற்றும் வாக்குரிமை என மக்கள் பல தியாகங்களுக்குப் பின் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆபத்தை உணர்ந்து, போராட்டக் களத்தின் மூலம் மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். விவசாயிகள் எப்படி உழுது, விதைத்து, பயிர் வளர்ந்த பின் அறுவடை செய்கிறாரோ, அதுபோல போராட்டங்கள் மூலம் மக்களைக் கவர்ந்த பின் அவர்களை முறையாக அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அந்தந்த அமைப்புகளில் உறுப்பினர்களாகத் திரட்ட வேண்டும். முதலாளித்துவக் கட்சிகளிடம் பணம், சாதி, மத பலம் இருக்கலாம், ஆனால் கம்யூனிஸ்ட்களிடம் உண்மை, நேர்மை, தியாகம் மற்றும் மனித குலத்தை விடுவிக்கும் மார்க்சியத் தத்துவம் உள்ளது”. இவ்வாறு உ.வாசுகி உரையாற்றினார்.

திரளானோர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சிக்குக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.மிருதுளா வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.முரளி, எஸ்.வி.வேணுகோபாலன் மற்றும் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ஜெ.தீப லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் ஜா.பார்த்திபன் நன்றி கூறினார்.

முன்னதாக, தத்துவ வீரியம் மிக்க இந்நூலின் முதல் பிரதிகளை ஜி.ஆனந்த் (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), ஆர்.பி.சுரேஷ் (மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்), ஏ.முக மது அனீஸ் கான் (அகில இந்திய வழக்கறிஞர் சங்கம்), டி.ரவிக்குமார் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்), உஷா வேலாயுதம் (கேரளா சமாஜம்) ஆகியோர் உ.வாசுகியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

📚 – தொகுப்பு : கவிமணி

நன்றி :  தீக்கதிர் நாளிதழ் 

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:போராடும் கியூபா | மிகுவேல் மாரியோ டியாஸ்-கனெல் பெர்மூடெஸ் நேர்காணல்
ஆசிரியர்:
வெளியீடு:
விலை:30.00
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *