ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன் எடுக்க இயலாமல் போன சூப்பர் பேட்ஸ்மென் ரஞ்சித்((1780–1839) நினைவு போற்றப்படுகிறது?.ஏன் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை?
“கிரிக்கெட்டில் சாதித்த இந்திய சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூ.” என்ற 90 பக்க இ.பா சிந்தன் எழுதிய புத்தகத்தில் இவைகளுக்கான விடைகள் உள்ளன.. இன்றைய இளம் பருவத்தினர் மன நிலைக்கேற்ப எழுதப்பட்ட சுவாரஸ்யமான அதே வேளையில் எதிலும் ஊடுருவி நிற்கும் அரசியலையும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் மன வலியையும் நுண்மான் நுழைபுலத்தோடு ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
இதைப் படித்த பிறகுதான் ஏன் கிரிக்கெட் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்படவில்லை என்ற விவரத்தை நான் அறிய நேர்ந்தது.
பந்தை வீசுவது மட்டையால் அடிப்பது என்ற விளையாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட், அமெரிக்காவின் பேஸ்பால் பிரபலமான விளையாட்டுகளாகும் வெகு நாட்களாக இந்த இரண்டு விளையாட்டுகளும் ஒலிம்பிக் பட்டியலில் சேர்க்கப் படவில்லை. 1992 முதல் 2008 வரை பேஸ்பால் சேர்க்கப்பட்டு அதன் பிறகு கைவிடப்பட்டது, 2020 மீண்டும் பேஸ்பால் சேர்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் சேர்க்கப்படவே இல்லை.
ஒலிம்பிக் பட்டியலில் சேர விளையாட்டு விதிகளில் என்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பது விவாதப் பொருளாக ஏன் ஆகவில்லை என்பதைப் புரியவும் இப்புத்தகம் உதவுகிறது!.
கிரிக்கெட் விளையாட்டு உருவான வரலாறு மட்டுமல்ல, ஏகாதிபத்திய அரசியல் பேணிய இந்து சனாதன கலாச்சாரம், மத மோதல்களை ஊக்குவிக்கும் நடை முறை பற்றிய தகவல்கள் நம்மை வியப்படையச் செய்கின்றன சாதி மத பேதங்கள் தொடர கிரிக்கெட் ஜிம்கான கிளப்புகளை உருவாக்கிட மைதானங்களை அரசு ஒதுக்கியது . ஆனால் எந்த ஜிம்கான கிளப்பிலும் தலித்து இளைஞர்கள் விளையாட முடியாது, மைதானத்தைச் சுத்தம் செய்யப் பந்துகளை எடுத்துக் கொடுக்க எடுபிடி வேலை செய்யச் சிறுவர்களை வேலைக்கமர்த்துவர் இவற்றை ஆதாரங்களுடன் இச் சிறு நூல் பதிவு செய்கிறது.
இன்றைய கிரிக்கெட்டின் வர்த்தக மதிப்பு அரசியல் வாதிகளின் ஆதிக்கம். இவற்றைப் புரியவும் இந்த புத்தகம் சிறந்த கையேடாகும், இந்த புத்தகத்தில் பலூவின் அரசியல் கண்ணோட்டம் பற்றி எதுவுமில்லை. காங்கிரசின் பகடையாக ஆகி 1937ல் அம்பேத்கருக்கு எதிராகப் போட்டிப் போட்டு தோற்றது மட்டுமல்ல ஒடுக்கபட்டமக்களின் ஒப்பற்ற தலைவனை எதிராக நின்றவர் என்ற அவப் பெயரைச் சம்பாதித்துவிட்டார். தீண்டாமைக்குப் பலியான ஒருவர் மேல்தட்டு வர்க்கத்தின் அரசியலுக்காக பகடையானது ஒரு சோகமே. இன்று சுரண்டும் வர்க்கங்களின் அரசியலை நம்பும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் பிரிவிக்கும் இவரது அரசியல் வாழ்க்கை ஒரு பாடமாகும்.
இளம் பருவத்தினர் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்புவோருக்கு அவசியமான புத்தகம்.