நூல் அறிமுகம்: குற்றமும் தண்டனையும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் செவ்வியல் நாவல் (தமிழில்: எம்.ஏ.சுசீலா) – பெ.விஜயகுமார் உலகப் புனைவிலக்கியத்திற்கு ரஷ்ய எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, அண்டன் செக்காவ், கோகால், மாக்சிம் கார்க்கி, ஜிங்கிஸ் ஐத்மத்தாவ் போன்றோர் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். உலகின் முதல் பத்து சிறந்த நாவல்களின் பட்டியலை எந்தவொரு இலக்கிய விமர்சகர் தேர்ந்தெடுத்தாலும் அதில் கட்டாயம் இடம்பெறும் நாவலாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ இருக்கும். உலகின் 170 மொழிகளில் படிக்கக் கிடைக்கும் அற்புதமான இந்நாவலை தமிழில் அழகுற மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா.

C:\Users\Chandraguru\Desktop\unnamed.jpg

குற்றம், தண்டனை எனும் இருவினைகளுக்குப் பின்னுள்ள சமூகவியல், குற்றவியல், உளவியல் சிந்தனைகளை புனைவிலக்கியத்தில் வெற்றிகரமாக வடித்துள்ளார் தஸ்தயெவ்ஸ்கி. ’குற்றமும் தண்டனையும்’, ’கரமசோவ் சகோதரர்கள்’, ’வெண்ணிற இரவுகள்’, ’அசடன்’ போன்ற மிகச் சிறந்த நாவல்களை வழங்கியுள்ள தஸ்தயெவ்ஸ்கி புனைவிலக்கிய உலகில் நட்சத்திரமென மின்னுகிறார். தன்னுடைய படைப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலை உளவியல் அடிப்படையில் உற்று நோக்கி அதனைச் சொற்சித்திரங்களாக்கி வெற்றி பெற்றுள்ளார்.

1821இல் மாஸ்கோவ் நகரில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு கடுந் துயரங்களுக்குள்ளானது. சார் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்தார் என்று கைதாகி மரண தண்டனைக்குள்ளான தஸ்தயெவ்ஸ்கி சாவின் விளிம்பிலிருந்து தப்பினார். கடைசி நொடியில் மரண தண்டனை, சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டு சைபீரியாவில் கொடுஞ்சிறையில் நான்காண்டுகளையும், கட்டாய இராணுவ சேவையில் ஆறாண்டுகளையும் கழித்தார். தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்ததிலிருந்து தன் வாழ்நாள் முழுவதையும் எழுத்துலகிற்கே அர்ப்பணித்த அவர் 1881ஆம் ஆண்டு மறைந்தார். தன்னுடைய எழுத்துப் பணிகளுக்கிடையில் சூதாட்டத்தின் பிடியில் சிக்கி, வருமானங்களை இழந்து வறுமையில் உழன்றார். சிறை வாழ்வில் தொற்றிக் கொண்ட வலிப்பு நோய் வாழ்நாள் முழுவதும் அவரை வதைத்து வந்தது. அவ்வளவு தடைகளையும் மீறி சிறந்த எழுத்தாளராக அவர் பரிணமித்தது மனித வாழ்வின் வினோதங்களில் ஒன்று.

ஐரோப்பிய இலக்கியங்கள், தத்துவங்கள் அனைத்தையும் கற்றறிந்தார். அதிலும் குறிப்பாக பிரான்சு நாட்டு சோசலிச சிந்தனையாளர்களான புரூதான், செயின்ட் சைமன், ஃபூரியர், கேபெ ஆகியோரின் தாக்கம் அதிகம் இருந்தது. தான் பெரிதும் மதித்த ரஷ்ய எழுத்தாளர் பெலின்ஸ்கியின் நாத்திகக் கோட்பாடு, சிறு வயதிலிருந்து பழக்கத்திற்குள்ளான ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்துவக் கோட்பாடு என்று இவ்விரு எதிர்மறைக் கோட்பாடுகள் ஏற்படுத்திய குழப்பம் அவரிடம் நீண்ட நாட்கள் நிலைத்திருந்தது. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் கதாநாயகனான ரஸ்கோல்னிகோவ் மனதிலும் இத்தகு தத்துவார்த்தப் போராட்டம் நிகழ்வதைக் காண்கிறோம். உளவியல் கூறுகள் மேலோங்கி நிற்பதால் தஸ்தயெவ்ஸ்கி படைப்புகள் கலை அம்சத்தை இழக்கின்றன என்ற விமர்சனமும் உண்டு. ”தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களில் மனநோயில் பாதித்தவர்களே அதிகம் உலவுகிறார்கள்” என்று இலக்கிய விமர்சகர் விளாடிமிர் நபக்கோவ் கருதுகிறார். தத்துவ விசாரணைகளில் அளவுக்கு மீறி தஸ்தயெவ்ஸ்கி மூழ்கிவிடுவதால் புனைவிலக்கிய அழகியல் தொலைந்து போகிறது என்று வாதிடுவோரும் உண்டு.

C:\Users\Chandraguru\Desktop\images-46.jpeg

தஸ்தயெவ்ஸ்கியின் ஆகச்சிறந்த படைப்பாகப் (Magnum Opus) போற்றப்படும் ’குற்றமும் தண்டனையும்’ ஆறு பாகங்களுடன், ஒரு முடிவுரையும் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களுடனான  நாவலாகும். நாவலின் தொடக்கத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய அறையில் வறுமையிலும், விரக்தியிலும் வாடும் ரஸ்கோல்னிகோவ் என்ற சட்டக் கல்லூரி மாணவனைச் சந்திக்கிறோம். நாவலின் இறுதியில் சைபீரியாவின் சிறைக் கொட்டடியில் கொலைக் குற்றத்திற்காக எட்டாண்டுகள் தண்டனை அனுபவிக்கும் ரஸ்கோல்னிகோவைச் சந்திப்பதுடன் நாவல் முற்றுப் பெறுகிறது. இவ்விரண்டு கொடூர நிலைமைகளுக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளே நாவலின் களமாகும்.

C:\Users\Chandraguru\Desktop\A1BWbRPWHzL.jpg

மிகுந்த பணநெருக்கடியினால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமலும், தங்கியிருக்கும் எலிப்பொந்து போன்ற அறைக்கு வாடகையைக் கொடுக்க முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி எதிலும் நாட்டமின்றி, யாரிடமும் பேசவும் மனமின்றி தனிமையில் தூக்கத்திலும், பசி மயக்கத்திலும் நேரத்தைக் கழிக்கிறான் இளைஞன் ரஸ்கோல்னிகோவ். கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்பதற்கிணங்க ரஸ்கோல்னிகோவ் சொல்லொண்ணாத் துயர் அடைகிறான். வாடகை கேட்டு நச்சரிக்கும் வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணியை எப்படிச் சமாளிப்பது என்பதறியாமல் கவலையில் ஆழ்ந்திருக்கிறான். கிராமத்திலிருக்கும் பாசமிகு தாய் பல்கேரியா, அன்பின் வடிவமான சகோதரி துனியா, ஆருயிர் நண்பன் ரஸுமிகின் இவர்களின் நினைவுகள் நிழலாட உடலும், உள்ளமும் சோர்வடைய, செய்வதறியாது அவன் படுத்திருக்கிறான். தங்கை துனியா அன்புடன் கொடுத்த மோதிரத்தையும், தந்தையின் வெள்ளி கைக்கடிகாரத்தையும் அடகு வைத்துப் பெற்ற பணமும் காலியாகிவிட்டது. வட்டிக்கு மேல் வட்டி வாங்கி கடனாளிகளைச் சுரண்டிக் கொழுக்கும் கிழவி அல்யோனா ஞாபகம் வருகிறது. அவளைக் கொன்று பணத்தைக் கொள்ளை அடித்து இந்தப் பணக் கஷ்டத்திலிருந்து வெளிவரலாமே என்ற தீய எண்ணமும் அவனுடைய மனதில் பளிச்சிடுகிறது.

C:\Users\Chandraguru\Desktop\puthakam peesurthu wrapper.jpg

அறையைவிட்டு வெளியேறி பீட்டர்ஸ்பெர்க் நகரின் நெரிசலான தெருக்களில் நடக்கிறான். வோட்கா அருந்தலாம் என்றெண்ணி ஒரு பாருக்குள் நுழைகிறான். அங்கு அவனிலும் மோசமான நிலையிலிருக்கும் ஏழைக் குடிகாரன் மர்மெலாதோவ் என்பவனைச் சந்திக்கிறான். மர்மெலாதோவ் குடிபோதையில் தன் குடும்ப சோகத்தை ரஸ்கோல்னிகோவிடம் கொட்டித் தீர்க்கிறான். வறுமையை மறக்க போதை மட்டுமே அவனுக்கு மருந்தாகிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவன் மனைவி காதரீனா அவனுக்கு வாக்கப்பட்டதால் படும் துயரத்தைச் சொல்லி ஆறுதல் அடைகிறான். அவர்களின் மூன்று குழந்தைகளைப் பராமரிக்க முடியாமலும், அவளுக்குப் பீடித்துள்ள கொடிய காச நோயிலிருந்து  மீளமுடியாமலும் அவள் தவிப்பதை ரஸ்கோல்னிகோவிடம் பகிர்ந்து கொள்கிறான். இதற்கெல்லாம் மேலாக  அவனுக்கும் அவனின் முதல் மனைவிக்கும் பிறந்த சோஃபியா என்ற பதினாறு வயதுப் பெண் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி விலைமகளாகிச் சீரழிவதையும், அவள் கொண்டுவரும் சொற்ப பணத்தைக் கொண்டு தன் குடும்பச் செலவுகளைச் சமாளித்து வருகின்ற அவலத்தையும் சொல்லிக் கதறி அழுகிறான் மர்மெலாதோவ். இரண்டு ஏழைகள் சந்திக்கும்போது அவரவர் கவலையைப் பற்றி பேசிக்கொள்வது இயல்புதானே.

மர்மெலாதோவ் சென்ற பின் பாருக்குள் இளைஞர்கள் சிலர் பெருத்த கூச்சலுடன் நுழைகிறார்கள். அவர்களில் ஒருவன் ”அசுர வட்டி வாங்கி ஊர் மக்களை வாட்டி வதைக்கும் அல்யோனாவைக் கொன்றாலென்ன”  என்று உரக்கப் பேசுகிறான். இளைஞனின் திட்டம் தன்னுடைய மனநிலையைப் பிரதிபலிப்பதக்கவும், தன்னுடைய திட்டத்தையே வழிமொழிவது போல் இருப்பதுவும் கண்டு ரஸ்கோல்னிகோவ் திடுக்கிடுகிறான்.

போதையேறியதும் துக்கம் மேலிட ரஸ்கோல்னிகோவ் அறைக்குத் திரும்புகிறான். வீட்டுக்குச் சொந்தக்காரியின் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் நஸ்டாஸியா அவனுக்கு வந்த கடிதம் ஒன்றைக் கொடுக்கிறாள். பசியில் வாடும் அவனின்  முகத்தைப் பார்த்து சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பாந்தத்துடன் கேட்கிறாள். பீட்டர்ஸ்பர்க் நகரில் தனிமையில் வாடும் ரஸ்கோல்னிகோவை பரிவுடன் கவனிக்கும் ஒரே ஜீவன் நஸ்டாஸியா மட்டுமே. தன் தாய் பல்கேரியாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்து மேலும் வருத்தமடைகிறான். கடிதத்தில் அவனின் தங்கை துனியா கிராமத்திலிருக்கும் லூசின் என்ற பணக்காரரை மணம் முடிக்கவிருப்பதாகவும், அவர்களின் குடும்ப வறுமை ஓரளவுக்கு அதன் மூலம் முடிவுக்கு வரும் என்று தான் நிம்மதி அடைவதாகவும் பல்கேரியா தெரிவித்துள்ளார். அவன் படிப்பிற்கு வேண்டிய செலவுகளையும் லூசின் ஏற்றுக்கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  திருமணத்திற்குப் பின் லூசின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் குடியேற இருப்பதால், அவர்களிருவரும் பீட்டர்ஸ்பெர்க் நகருக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் தங்குவதற்கான வீட்டை லூசின் ஏற்பாடு செய்து விட்டாரென்றும் எழுதியுள்ளார். வீட்டின் வறுமையை மனதிற்கொண்டு துனியா இப்படியொரு முடிவெடுத்திருப்பது கண்டு ரஸ்கோல்னிகோவ் மனம் பதறுகிறான். தன் தங்கையின் தியாகத்தை நினைத்துப் பெருமிதம் கொண்டாலும் தனக்காக அவள் வாழ்வைத் சீரழித்துக் கொள்வதில் அவனுக்கு மனமொப்பவில்லை. துனியா மணக்கவிருக்கும் லூசின் தன்னலமிக்க வஞ்சகன் என்பதையும், தங்கை துனியாவுக்கு எந்த வகையிலும் அவன் தகுதியானவன் அல்ல என்பதையும் நண்பன் ரஸுமிகினிடமிருந்து அறிய வருகிறான். குடும்ப வறுமையைப் போக்கிட தான் கொலை செய்யத் திட்டமிட்டது சரிதானோ என்ற எண்ணம் மீண்டும் அவன் மனதில் துளிர்க்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தக் கொடிய திட்டம் நிறைவேறி விடுகிறது. அல்யோனா வீட்டிற்குச் சென்று கோடாரியால் அவளை அடித்துக் கொன்று விடுகிறான். கதவைப் பூட்டிக்கொள்ளத் தவறியதால், சற்றும் எதிர்பாராமல் அல்யோனாவின் சகோதரி லிஸாவெதோவ் உள்ளே நுழைய அவளையும் கொல்ல நேர்கிறது. அவ்வளவுதான் அந்த நொடியிலிருந்து ரஸ்கோல்னிகோவ் வாழ்வு தொலைந்தது.

இரட்டைக் கொலைக்கு ஆளானதும் செய்வதறியாது அவன் பதறுகிறான். கொள்ளையடிப்பதற்கு நகைகளும் பணமும் ஏராளமாகக் குவிந்திருந்தன. ஆனாலும் கையில் கிடைத்த ஏதோ ஒன்றிரண்டு நகைகளையும், பணத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறான். கொலை நடந்த போது பக்கத்து அறையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளின் கண்களில் படாமல் தப்பித்தது அதிசயம்தான். கொள்ளை அடித்த நகைகளையும், பணத்தையும் ஊருக்கு வெளியே ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு அறைக்குத் திரும்புகிறான். குற்றமிழைத்த மனது பதறுகிறது. தூக்கமின்றித் தவிக்கிறான். பித்துப் பிடித்தவன் போல் அலைகிறான்.

பீட்டர்ஸ்பெர்க் தெருக்களில் இலக்குகள் ஏதுமின்றி நடந்து திரிகிறான். தற்செயலாக தெருவில் நடக்கும் ஒரு விபத்தில் மர்மெலாதோவ் அடிபட்டுக் கிடப்பதைப் பார்க்கிறான். அவனை வண்டியில் ஏற்றி வீட்டில் சேர்த்த சில நிமிடங்களில் மர்மெலாதோவ் இறந்து விடுகிறான். மர்மெலாதோவ்வின் மனைவி, குழந்தைகள் அனைவரையும் முதன்முறையாகப் பார்த்து பரிதாபப்படுகிறான். மர்மெலாதோவ்வின் நோய்வாய்ப்பட்ட மனைவி கதறி அழுகிறாள். அவன் மகள் சோஃபியா மற்ற குழந்தைகளை அரவணைத்து நிற்கிறாள். தன் பையிலிருக்கும் அனைத்துப் பணத்தையும் சோஃபியா கைகளில் கொடுத்து ஈமக் காரியங்களை கவனிக்குமாறு சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குத் திரும்புகிறான். அறையில் அவன் தாய், தங்கை, நண்பன் ரஸுமிகின் அனைவரும் அவனுக்காக காத்திருக்கிறார்கள். துனியாவின் திருமணம் குறித்து நீண்ட விவாதம் நடக்கிறது. லூசினின் ஏமாற்று வித்தைகளைப் புரிந்துகொண்ட துனியா திருமண முடிவைக் கைவிடுகிறாள். பெரிய விபத்திலிருந்து தப்பித்தது போல் துனியா மன நிறைவுகொள்கிறாள்.

C:\Users\Chandraguru\Desktop\25395429.jpg

ஆனால் அடுத்த ஆபத்து ஸ்விட்ரிகைலோவ் வழியில் துனியாவை வந்தடைகிறது. கிராமத்திலிருந்த போது ஸ்விட்ரிகைலோவ் பண்ணையில்தான் துனியா பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தாள். தன் மனைவி மார்ஃபா இருக்கும்போதே துனியாவைச் சுகிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான் காமுகன் ஸ்விட்ரிகைலோவ். இதனால் துனியாவை தவறாகப் புரிந்துகொண்டு அவள் மீது மார்ஃபா கோபப்பட்டாள். ஆனால் விரைவில் தவறை உணர்ந்து துனியாவிடம் மன்னிப்புக் கேட்டாள். மார்ஃபா இறந்ததும் அவள் கல்லறை ஈரம் காய்வதற்குள் துனியாவை அடைந்திட ஸ்விட்ரிகைலோவ் பீட்டர்ஸ்பெர்க் வருகிறான். ரஸ்கோல்னிகோவ் அவனிடமிருந்தும் துனியாவைக் காப்பாற்றி விடுகிறான். விரக்தியில் ஸ்விட்ரிகைலோவ் தற்கொலை செய்து கொள்கிறான்.

C:\Users\Chandraguru\Desktop\kutramum-thandanaiyum_FrontImage_967.jpg

தன் சகோதரனின் நண்பன் ரஸுமிகினின் காதலை துனியா ஏற்றுக் கொள்கிறாள். தன் கணவன் மர்மெலாவ்வின் மரணத்திற்குப்பின் காதரினாவும் ஒரு சில நாட்களிலேயே இறந்து விடுகிறாள். மூன்று குழந்தைகளையும் அனாதை விடுதியில் சேர்த்து விட்டு சோஃபியாவுக்கு ஆதரவாக ரஸ்கோல்னிகோவ் நிற்கிறான். தன்னுடைய கொலைக் குற்றத்தை முதன்முதலில் சோஃபியாவிடம் சொல்லி ஆறுதல் அடைகிறான். குற்றத்தை ஒத்துக் கொண்டு அவனை போலீசிடம் சரணடையச் சொல்கிறாள். குற்றத்திற்கான தண்டனையாக அவனை சைபீரியாவுக்கு நாடு கடத்தினாலும் அவனுடன் வருவதற்கு சோஃபியா உறுதியாக இருக்கிறாள். வாழ்வைத் தேடி தான் வெகுதூரம் செல்வதாகவும் ஒரு சில ஆண்டுகள் கழித்து நிச்சயம் வந்துவிடுவேன் என்று தாய் பல்கேரியாவிடம் சொல்லி ரஸ்கோல்னிகோவ் விடை பெறுகிறான். பல்கேரியா கண்ணீர் மல்க அவனை வழியனுப்பி வைக்கிறார் . கொலைக் குற்றத்தை அவனே ஒத்துக் கொண்டு சரணடைந்ததாலும், அவனின் அப்பழுக்கற்ற கடந்த வாழ்க்கையைக் கணக்கில் கொண்டும், ரஸ்கோல்னிகோவ் பலருக்கும் செய்த உதவிகளை நண்பன் ரஸூமிகின் பட்டியலிட்டு சமர்ப்பித்ததாலும், கொள்ளை அடித்த பணத்தை பயன்படுத்தவேயில்லை என்பதாலும் குற்றத்திற்கான தண்டனையாக எட்டாண்டுகள் சைபீரியா சிறையில் அடைக்கப்படுகிறான்.

சோஃபியாவும் சிறைக்கு மிக அருகில் வீடெடுத்து தங்கி ரஸ்கோல்னிகோவைக் கவனித்துக் கொள்கிறாள். அவ்வப்போது துனியா – ரஸுமிகின் தம்பதிகளுக்கு ரஸ்கோல்னிகோவ் பற்றிய செய்தியை கடிதங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறாள்.  ஆரம்பத்தில் தான் செய்த குற்றத்தை அரை மனதோடு மட்டுமே ஏற்றுக்கொண்ட ரஸ்கோல்னிகோவ் மனம் மாற்றமடைந்து குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளும் பக்குவமடைகிறான். தன் தாயின் மரணச் செய்தியையும் சோஃபியா மூலம் அறிந்து கொள்கிறான். ரஸ்கோல்னிகோவ் சிறை சென்றதை அவன் தாய் அறிந்திருந்தாரா இல்லையா என்பது யாருக்கும் இறுதிவரை தெரியாத ரகசியமாகவே இருந்தது. எட்டாண்டுகள் கழித்து ரஸ்கோல்னிகோவ் விடுதலை பெற்றதும் தம்பதிகளாக வாழ்ந்திடுவோம் என்ற நம்பிக்கையுடன் சிறைக்குள் ரஸ்கோல்னிகோவ்வும், சிறைக்கு வெளியே சோஃபியாவும் காத்திருக்கிறார்கள்.

                                      —-பெ.விஜயகுமார்.