ஜூலை மாதம் 2022ல் ஹாட் ஸ்டாரில் வெளிவந்த மலையாள திரைப்படம். வி. எஸ். இந்து அவர்கள் எழுதி இயக்கிய முதல் படம். நித்யா மேனன், விஜய் சேதுபதி, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர். மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆன்டோ ஜோசப்பும் நீட்டா பின்ட்டூவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
நகலகம் நடத்தும் ஒரு பெண்ணிடம் எழுத்தாளர் கவுரி சங்கர் என்பவர் தன்னுடைய புதினத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றை தந்துவிட்டு செல்கிறார். அன்று இரவே அவர் சுடப்பட்டு இறக்கிறார். சாதி மதப் பிரச்சனைகளை தீவிரமாக விமர்சிக்கும் எழுத்தாளர் அவர். சாதாரணப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் நித்யா மேனன் கவுரி சங்கர் வந்து சென்றது, அவரது வாழ்க்கை, அவரது இறப்பு ஆகியவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார். தன் தோழியிடம் திருமணம் குறித்த அவரது விருப்பத்தை எப்போதாவது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறாரா என்று கேட்கிறார். பாதியில் விட்ட படிப்பை தொடர முடிவு செய்கிறார். எழுத்தாளரின் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டாளரிடமோ கவுரிசங்கரின் சகோதரியிடமோ கொடுக்க சென்று பின்வாங்கிய அவர் இறுதியில் அதை அவர்களுக்கும் ஊடகவியலாளர், காவல்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்புகிறார். இதுதான் கதை.
முதல் படம் என்பது தெரியாமல் சிறப்பாக இயக்கியுள்ளார். சுற்று சூழல், சாதி மதப் பிரச்சினை, பெண்கள் திருமணம் ஆகியவற்றை திரைப்படத்தின் போக்கில் காட்டுகிறார். நித்யாமேனன் வகிக்கும் பாத்திரத்திற்கு பெயர் கூறப்படுவதில்லை. ஆகவே அது சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு பொதுவான பிரச்சனையாகவும் அதே சமயம் சில சமயம் அவற்றால் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் சிலராகவும் எடுத்துக் கொள்ளலாம். வெளியீட்டாளருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் ‘நீ ஏன் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்து எழுதுகிறாய்? சாதாரண கதை, கட்டுரைகள் எழுதேன்’ என்ற கேள்வியை பல முன்னணி எழுத்தாளர்கள் சந்தித்திருப்பார்கள்.
பெண் சம்பாதித்து தந்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் கதைகள் தேய்வழக்காக போய்விடும். ஆனால் இதில் அந்த தந்தையின் வறுமைக்குப் பின் உள்ள சோகம், மகள் இரவு வராதபோது கடை வாசலில் காத்திருப்பது என அந்த பாத்திரம் சற்று வேறுபட்டு சமைக்கப்பட்டுள்ளது. தோழியின் திருமணத்தின்போது தந்தையும் மகளும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் பல விஷயங்களைச் சொல்வது போல் தோன்றுகிறது.
கவுரிசங்கர் கையெழுத்துப் பிரதியாக கொடுக்கும் கதையில் ஒரு பெண் பிணமாக குளத்தில் மிதக்கிறாள். அவளை தேடி செல்லும் ஒன்பது பேரும் பிணமாக இறந்து கிடக்கின்றனர். இது ஒரு காட்சியாக மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கும் அவரது கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை சுடும் இருவரைப் பார்த்து அவர் புன்னகைக்கிறார். அதன் பொருள் என்ன? நீங்கள் என்னை சுடலாம். ஆனால் என் எழுத்தை அழிக்க முடியாது என்று சொல்கிறாரா? அவரது இறுதி செய்தியும் அதுவே. ’நான் இறந்த பின்னும் என் எழுத்துகள் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்.’
கவுரி லங்கேஷை நினைவுபடுத்தும் இந்தப் படம் சமூக உணர்வுள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். 19(1)(a) என்கிற தலைப்பும் பொருத்தமான ஒன்றே.
– இரா. இரமணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.