டார்வின் டார்வின் என்று  கூவும் குயில்கள்..! – ஆயிஷா. இரா. நடராசன்பலம் வாய்ந்தவையோ புத்திக்கூர்மை உள்ளவையோ அல்ல. ஒரு உயிரிக் கூட்டத்தில் எத்தகைய  சூழலுக்கும் தன்னை தகவமைத்துக் கொள்பவையே பிழைத்து உய்விக்கின்றன.

சார்லஸ் டார்வின்
(உயிரிகளின் தோற்றம் நூல்)

சார்லஸ் டார்வினின் ‘உயிரிகளின் தோற்றம்’  நூல் வெளிவந்து 160 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. புவியில் உயிரிகள் தங்கள்  தங்களது ஆதிப் பிறவிகளிடமிருந்து  படிப்படியாக எப்படி பரிணாமம் அடைந்தன என்பது மட்டுமல்ல. டார்வின் உயிரிகளின் தகவமைப்பு கோட்பாடு, இயற்கை தெரிவுக்கோட்பாடு, தக்கனவே பிழைக்கும், எனும் அறிவியல் சித்தாந்த விளக்கம் என பல அடிப்படைகளை முன் மொழிந்தார். உலகின் உயிரிகள் எதுவுமே தற்போது இருப்பது போலவே உருவாக்கப்படவில்லை. அவையாவுமே தோன்றும்போது ஏதோ ஓர் அமைப்பில் உருவாகி கால வெளியில் பல சிக்கலான வடிவங்களைக் கடந்து தற்போது தனக்கெனத் தனித்துவமான இருப்பை நிலைகொண்டன. இயற்கை தெரிவு செய்கிறது காலம் தகவமைக்கிறது. இயற்கை போராட்டத்தில் பொருந்தும் தக்கன பிழைத்திருக்கும்.

ஆனால் டார்வினுக்கு பிறகு பரிணாமவியலில் மரபியலும் இணைந்தது பிரமாண்ட அறிவியல் புரட்சி ஆகும். டார்வினின் சம காலத்தவர் கிரிகோர் மெண்டல். இருவரும் சந்தித்தது இல்லை. மரபுப்பண்புகளை சந்ததிக்குச் சந்ததி கடத்தும்  மரபணு எனும் ஜீன்கள் குறித்த அறிவியல் தான் டார்வினியத்தை வீழாமல் தாங்கிப்பிடித்து நிரந்தர மெய்மை ஆக்கியதென்றால் மிகையில்லை. இன்று மரபியலில் நடக்கும் ஆழமாக ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் பல நம்மை வியக்க வைக்கின்றன.

மனித குரங்கு மனிதனின் ஆதி மூதாதையர் கிளையில் பின்னோக்கிய கால ஓட்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் நமது மூதாதையாக இருந்திருக்கும் எனும் டார்வினின் அறிவியல் கூற்றை ‘குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்’ என்று புரிந்துகொண்டு.. இதோ குரங்கு மனிதனாக்கிக் காட்டுங்கள் என பேசப்படும் முட்டாள்தனமான விதண்டாவாதம் இன்றும் கூட தொடர்ந்தாலும் மரபியலின் தனிப்பட்ட வளர்ச்சி டார்வினியத்தின் அடிப்படை அனைத்திலுமே ஆதாரப்பூர்வமான அறிவியல் சான்று இருப்பதை நமக்கு தொடர்ந்து வழங்கியே வருகிறது. எச். எம். எஸ் பீகிள் கப்பலில் ஐந்து ஆண்டுகளில் 3200 கிலோமீட்டருக்கு மேல் பயணித்து , 5000க்கும் மேல் உயிரின மாதிரிகளை, எலும்பு எச்சங்களை, புதுப்படிவங்களைச் சேகரித்து, ஏறத்தாழ பிறகு இருபது வருடங்கள் பல வகையில் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி டார்வின்  தனது பரிணாமக் கோட்பாட்டை அடைந்தார். மாதிரிகளுக்கு இடையிலான மரபு ஒற்றுமை, இடத்தால் சூழலால் அமைந்த உடலியல் வேறுபாடு என பலதரவுகளின் கீழ் அவரால் அவற்றை ஆராய முடிந்தது. தென் அமெரிக்காவில் அவர் பார்த்த தீக்கோழிகள் இனம் முதல் கால – பாகஸ் தீவில் அவர் உற்றுநோக்கிய ஆமை இனம், அர்ஜெண்டினாவில் பார்த்த தேவாங்கு ஆகியவற்றின் உயிர் மாதிரிகளும்  புதை படிவ மாதிரிகளும் ஒப்பீட்டளவில் பல ஆச்சரியங்களை அவருக்கு அளித்தன. கிட்டத்தட்ட அனைத்துமே ஏனைய இடங்களில் நாம் பார்க்கும் அதே இனத்தோடு ஒத்துப்போயின ஆனால் அந்தந்த சூழலால் அவை உடலளவிலும், செயலாற்றும் வகையிலும் மாறுபட்டன.ஆனால் டார்வினின் பரிணாம படிநிலைகளில் பல, தொடர்ச்சி அறுந்த விட்டுப்போன இடைவெளிகள் இருந்தன. அவற்றை முதலில் புதை படிவ இயலாளர்கள்தான் இட்டுநிரப்பினார்கள். சார்லஸ் வில்சன் பீலே பிலடல்ஃபியாவின் ஒப்பற்ற ஆய்வாளர்  , பாறை படிவங்கள் புதை வடிவ விலங்குயிர்களின் எச்சங்களை திரட்டி ஒரு முழுநீள அருங்காட்சியகமே அமைந்தார். அது உலகபிரசித்திபெற்று அன்றும் டார்வினியத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. டார்வின் காலத்திலேயே ஆங்கிலேயப் பெண் புதை படிவ இயல் அறிஞர் மேரி அன்னிங் கடல் உயிரினங்களின் ஊடாக டார்வின் கணித்த யிச்சியோசரஸ் (ichyosaurs)  எனும் மீன் – பல்லிகளின் புதைபடிமங்களைக் கண்டுபிடித்திருந்தார்.

பீகிள் கணவாய் வழியே பயணித்த போது (பீகிள் கணவாய் வழியே பயணித்ததாலேயே  அந்தக்கப்பல் எச். எம். எஸ் பீகிள் என்று பெயர் கொண்டது) 16 புதை படிவ மாதிரிகளை டார்வின் திரட்டி இருந்தார், அவை பனிமலைகளின்  ஊடாக கிடைத்தவையாகும். பால்க்லாந்து தீவுகளில் 1833 மார்ச் ஒன்றாம் தேதி அன்று 400 மில்லியன் ஆண்டு பழைய புதை படிவ மாதிரிகள் ஆறு டார்வினுக்கு கிடைத்தன. உடலியல் மாற்றம் (adaptation)  எனும் சொல்லைத் தனது கோட்பாட்டின் அங்கமாக்கிட, டார்வின் 61 நாட்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த 1836ன் ஜனவரி முதல் மார்ச் இறுதிவரையிலான நேரடி கள அனுபவம் உதவியதாக 20ம் நூற்றாண்டின் டார்வினிய அறிஞர் ரிச்சர்டு லீக்கி கருத்து தெரிவித்தார்.

புதை படிவ இயலுக்கு அடுத்தபடியாக மரபியலே டார்வினியத்தின் அங்கமாகவும் தொடர்ச்சியாகவும் மாறியது. இன்று மரபியல் ஆய்வுகள் நம்மை வியக்கவைக்கின்றன. டார்வினின் உயிரிகளின் தோற்றம் நூல் வெளிவருவதற்கு (1859) மூன்றாண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியின் ஆதிகால குகைகளின் உள்ளே சுத்தம் செய்த தொழிலாளர்களால் நியாண்டர்தால் பள்ளத்தாக்கிலிருந்து (துசல்டார்ஃப் எனும் நகரிலிருந்து ஏழுமைல் தொலைவில் ) – மிக பழங்காலத்திய எலும்புகள் அகழ்வாய்வின் மூலம் எடுக்கப்பட்டன. 30,000 வருடங்கள் முன் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களின் எலும்பு எச்சங்கள் என்று அறிவியல்  கண்டறிந்து அறிவித்தது. கார்பன் டேட்டிங் எனும் வகை கதிரியக்க கரிமக் காலக்கணிப்பு முறைப்படி அந்த எலும்புகளின் வயது அறிவிக்கப்பட்டது . ஆனால் மனித மரபணு கட்டுடைப்பு நடந்த பிறகு இரண்டு அற்புதங்கள் அறிவியலில் நடந்தன. ஒன்று மனித டி.என்.ஏ விற்கும் தற்போது வாழும் உயர்ரக மனிதக் குரங்கான சிம்பன்சியின் டி.என்.ஏ விற்கும் 99% ஒரே போல ஒத்துப்போகிறது. ( இது 2005ல் அறிவிக்கப்பட்டது). சரியாகச் சொல்வதனால் மனிதர்களாகிய நாம் 99,6 சதவிகிதம் சிம்பன்சிகளே என மரபியல் நிரூபித்துள்ளது. பாபூன் எனும் வகை மனிதக்குரங்குகள் ( 89 சதவிகிதம்) உராங்குட்டான்(93 சதவிகிதம்) எனபல வாழும் மனிதக்குரங்குகளின் டி.என்.ஏ கட்டுடைப்பு நிகழ்த்தப்பட்டது.

ஆனால் மனிதகுரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் வாழ்ந்த நியாண்டர்தால் உண்மையா.. என்பது பற்றிய பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆஸ்திரேலியோபித்தகஸ், குரோ – மாக்னான். ஹோமோஎரக்டஸ் (வகை) போல பல கண்டடையப்பட்டன. இவையாவுமே  மனிதனின் ஏக வளர்ச்சியால் அழிவைச் சந்தித்திருக்கலாம் என்று டோனால்ட் ஜொஹன்சன், நோவா ஹராரி என பல அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் மிகப்பெரிய வெற்றி ஸ்வாந்தே பாக்பு எனும் டார்வினிய அறிஞரால் சாதிக்கப்பட்டது. நியாண்டர்தால் மனித எலும்பிலிருந்து 1.7 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட டி.என்.ஏ வை தனித்தெடுத்துஅவரும் அவரது சகாக்களும் ஜெர்மனியின் லிப்ஸிக்கின் ஆய்வகத்தில் அந்த டி.என்.ஏ கட்டுடைப்பை நிகழ்த்தி சமிக்கை பதிவு செய்து அந்த டி.என்.ஏ வுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது என்பதை அறிவித்தனர். ஹோமோ சாப்பியன் எனும் மனிதனின் டி.என்.ஏ வோடு ஒப்பிடும்போது 99,87 சதவிகித மனிதனாக நியாண்டர்தால் மனிதன் இருந்திருக்கிறான். அவன் முழு ஹோமே சாப்பியன் அல்ல என்பது நிரூபணமாகிறது. 12.1 சதவிகிதம் அதன் டி.என்.ஏ சமீப மரபணு பிறழ்வுக்கு உட்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.

Charles darwin - Scientific Revolution - Thamizhbooks.com - Buy Tamil books online

மரபணு பிறழ்வு என்பதே தகவமைப்பு மாற்றத்தை உருப்புகளுக்கு வழங்குகிறது என்பதை டார்வின் அறியவில்லை. மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தின் ரிச்சார்டு லென்ஸ்கி 31 ஆண்டுகளுக்கு முன் தனது ஆய்வகத்தில் ஒரு பரிணாமவியல் நெடுங்கால சோதனையைத் துவக்கினார். முடிவுகள் 2009 ல் வெளிவந்தன. இ. கோலி வகை பாக்டீரியாக்களை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். இன்றும் பரிணாமம் தொடர்கிறது என்பது நிரூபணமானது. இ.கோலி பாக்டீரியாக்கள் பில்லியன் கணக்கான செல்களை குறுகிய காலத்தில் ஈன்றெடுக்கின்றன.இதன் மூலம் அவரது ஆய்வகம் 30 ஆண்டுகளில் 45,000 சந்ததி  இ. கோலி பாக்டீரியாக்களைப் பிறப்பித்தது. இந்த ஆய்வு கிரிகர் மெண்டலின் ஆய்வைப் போலவே மிகுந்த பொறுமை  தேவைப்படும் நீண்டகால போராட்டம் ஆகும். ஆனால் ரிச்சர்டு லென்ஸ்கியின் நோக்கம் அவரை அதி பொறுமைசாலியான பரிணாம மரபியல்வாதியாக கட்டமைத்து இருந்தது. அவரது நோக்கம்  பரிணாமவியலில் அசலாக நடக்கும் ஒன்றை நேரடியாகக் கண்டு உணர்வது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக படிப்படியாக நடக்கும் பரிணாமத்தை நேரில் காணும் வசதி எந்த உயிரிக்குமே வாய்க்காது. ஆனால் இ. கோலி பாக்டீரியாக்கள் தங்களது அடுத்தடுத்த சந்ததியை உருவாக்கிய வேகத்தால் ரிச்சார்டு லென்ஸ்கி அந்த வாய்ப்பை பெற்றார்.

லென்ஸ்கி சைட்ரேட் கலந்த குளுகோஸ் உட்கொண்டு பாக்டீரியாக்கள் வளரும் வகையில் தன் ஆய்வை வடிவமைத்தார். குளுகோஸ் மிக குறைவாகவும் சைட்ரேட் மிக அதிகமாகவும் தரப்பட்டது. வேறு எந்த வகை உணவும் அருகே வராமல் ஆய்வு மூடப்பட்டது. சாதாரண ஆக்ஸிஜன் வெளியில் சைட்ரேட்டை கார்பனாக மாற்றி செரிக்க  இ.கோலி பாக்டீரியாக்களால் முடியாது. 12 வேறுவேறு இ.கோலி பாக்டீரியா காலணிகள் ஒன்றுபோல உருவாக்கப்பட்டன. 30,000 சந்ததிகள் கடந்தும் ஒரு சந்ததியால்கூட சைட்ரேட்டை உணவாகக் கரைக்க முடிய வில்லை. ஆனால் 33,000வது சந்ததியில் இ.கோலி பாக்டீரியாக்களின் டி.என். ஏ வில் (cit +) மரபணு பிறழ்வு தலைதூக்கியது. ஆயிரத்தில் ஆறு பாக்டீரியாக்கள் சைட்ரைட்டை செரித்து நொதித்து கார்பனாக மாற்றும் மரபணு மாற்றத்தைப் பெற்றன. இந்த மரபணு பிறழ்வு அடுத்தடுத்த சந்ததிகளில் மிகவேகமாகப் பரவியது. விரைவில் 36,000வது சந்ததியில் சைட்ரைட்டை செரிமானம் செய்ய முடியாத வகை இ.கோலி பாக்டீரியாக்கள் உய்த்திருக்க முடியாமல் முற்றிலும் அழியத் தொடங்கின. இ. கோலி பாக்டீரியாக்கள் முழுமையான மரபணு – வரலாற்றை இன்று நம்மால் எழுத முடியும்.

தகவமைப்பு (adaptation) குறித்த மரபணுவியலின் புதிய ஆய்வு ஒன்றும் நம்மைத் திகைக்க வைக்கிறது. இந்த ஆய்வை நடத்தியவர் பேராசிரியை ஹோக்ஸ்ட்ரா. இவர் ஹாவர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த டார்வினிய – மரபியல் அறிஞர். ‘தக்கனவே உய்த்திருக்கும்’  எனும் பதத்தை நேரடியாக மெய்ப்பித்த சோதனை அவருடையது. ஒரே உயிரினமாக இருந்தாலும் வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு பெறுவது எப்படி. ஹோக்ஸ்ட்ரா எலிகளின் கூட்டத்தை ஆராய்ந்து அவற்றின் தோல், இடத்திற்கு இடம் நிறம் மாறி உள்ளதை உற்று நோக்கி பதிவுசெய்ய முடிவெடுத்தார். பெரோமைஸ்கஸ் பொலியோனோட்டஸ் ( Peromyscus Polionotus) எனும் வகை எலிகள் தென்கிழக்கு அமெரிக்காவின் கடற்கரை ஓரம் காணப்படுகிறது. அவை பழுப்பு – நிறம் கொண்டவை.

பீச் எலிகள் (கடற்கரை எலிகள்) என்றே உள்ளூர் வாசிகள் அழைக்கிறார்கள். அதேவகை எலிகள் வளைகுடா கடற்பிராந்தியத்தில் வெளிர் மணல் பிரதேசத்திலும் உள்ளன. அங்கே அவை வெளிர் நிறம் (வெண்மை நிறமாக) உள்ளதை ஹோக்ஸ்ட்ரோ பதிவுசெய்தார். தோலின் நிறமிகள் அவர்களது பல சந்ததிகளின் ஊடாக மரபணு மாற்றம் பெற்றுள்ளன. மிக எளிய சோதனை ஒன்றை அந்த மணல் பிராந்தியத்தில் ஹோக்ஸ்ட்ரா நடத்தினார். ஒரே வகை எலியினங்கள் அவை தங்களுக்குள் இனப்பெருக்கமும் செய்துகொள்கின்றன. ஆனால் அந்த இரு எலி குழுக்களிடையே அவை வாழும் இடம் மட்டுமே வேறுபடுகிறது என்பதை ஹோக்ஸ்ட்ரா கவனித்தார்.20 பழுப்புநிற எலிகளை – தென்கிழக்கு அமெரிக்காவிலிருந்து வளைகுடா மணல் பிராந்தியத்தில் விடுவித்தார். அடுத்த சில நிமிடங்களில்  ஒரு எலியும் பிழைக்கவில்லை கழுகு , ஆந்தை  மற்றும் பாம்புகளுக்கு  அவை பிடிபட்டு இரையாகி இருந்தன. வெண் மணலில் எலிகளின் பழுப்பு நிறம் அவற்றைக் காட்டிக்கொடுத்தது. ஆனால் அந்த இடத்தோடு பல சந்ததிகளைக் கழித்திருந்த அதே வகையினத்தின் வெளிர் நிற எலிகள் மணற்பரப்பில் பிழைத்து உய்யும் நிற தகவமைப்பைப் பெற்றுள்ளன. அவைகளின் நிறமி டி.என். ஏக்களான மெலனோ கோர்ட்டின் -1 காலப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் தப்பி பிழைக்கத் தேவைப்படும் விதத்தில் பிறழ்வுக்கு உள்ளாகி வெளிர் நிறம் பெற்றதை ஹோக்ஸ்ட்ரா நிரூபித்தார்.

சூழலுக்கு தக்கனவே பிழைத்திருக்கும் (The Survival of the Fitest) என்கிற டார்வினின் கோட்பாட்டு அம்சத்தை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியியல்  பேராசிரியர் ரஸல்டி பெர்னால்டு சமீபத்திய தனது ஆய்வுக்கட்டுரை மூலம்  புதிய வகையில் நிலைநாட்டினார். 2009ல் நடந்த சர்வதேச பரிணாம உயிரியியல்  மாக்ஸ்பிளாங்க் மாநாட்டில் (முனீச்-ஜெர்மனி ) வெளியிடப்பட்ட ஆய்வுரை அது. சிச்லிடு எனும் மீன்களை முன்வைத்து நடத்தப்பட்ட கள ஆய்வு அது. சிச்லிடு(Chichlid)  மீன்களை நாம் தமிழில் தேவதை மீன்கள் என்று அழைக்கிறோம். அமெசான் காடுகளின் சுத்தமான நீர்நிலைகளில் இவ்வகை மீன்களை பெர்னால்டு ஆய்வு செய்தார். இவை மாமிச உண்ணிகள்.

இவற்றில் இருவகை. ஒரு வகை சிச்லிடு மீன் தனக்கென்று ஒரு  வாழும் பரப்பை கொண்டது. எல்லைகளை வகுத்துக்கொள்ளும். மற்றொருவகை மீன் எங்கும் சுற்றித்திரியும். எல்லைகளை வகுத்துக்கொள்ளும் வகை சிச்லிடு தங்களது எல்லைக்குள் தவறி நுழையும் ஆண்சிச்லிடு மீன்களை ஆக்ரோஷமாகத் தாக்கி துரத்துகிறது.

இதே சமயம் எல்லைக்குள் நுழையும் பெண் சிச்லிடு மீன்களோடு அவை உறவாடுகின்றன. தங்கனிக்கா எனும் ஏரியில் தொடர்ச்சியாக பன்னிரெண்டு ஆண்டுகள்  நடத்தப்பட்ட ஆய்வில் பெர்னால்டு அதிர்ச்சியூட்டும் சில முடிவுகளைக் கண்டார். எல்லை இன்றி சுற்றித்திரியும் சிச்லிடு ஆண்மீன்கள் கால போக்கில் ஆண்மை இழந்தன. அவைகளது ஆண்குறிகளது அளவு 19வது சந்ததியிலிருந்து  சிறிதாகத் தொடங்கி விரைவில் உணவு தேடுவது தவிர வேறு பயன்களை மீன் துரந்தது. 40வது சந்தியில் எல்லைகளை ஏற்படுத்தும் சிச்லிடு மீன்கள் மட்டுமே மிஞ்சின. இனப்பெருக்கம் செய்தல் என்பதே பரிணாமத்தின் மிக அடித்தள நோக்கம். அதற்கான சூழலோடு பொருந்திப்போகும் உயிரிகள் மட்டுமே உயிர்த்து மிஞ்சும் தக்கனவே பிழைத்திருக்கும்  என டார்வின் இதைத்தான் கூறுகிறார்.

ஆனால் உள்ளதிலேயே ஆச்சரியமான சமீபத்திய ஆய்வு டார்வினிய அறிஞர் ரிச்சார்டு டாக்கின்ஸால் (Richard Dawkins) முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு நீண்டகால ஆராய்ச்சியே. ஆனால் நம் இந்திய பறவையியல் நிபுணர் சலீம் அலியின் பதிவுகளையும் இணைத்த ஆய்வு. குயில் எனும் பறவை பற்றியது. ஆசிய குயில்கள்  குக்குலஸ் மைக்ரோ ப்டெரஸ் (Cuculus micropterus) என்றும், ஐரோப்பிய  குயில்கள் குக்கலஸ் கனோரஸ் (Cuculus Canorus)  என்றும் விலங்கியல்  பெயர் பெற்றுள்ளன. பெரும்பாலான குயில்கள் பூச்சி உண்ணிகள். ஆசிய குயில்கள் பழ உண்ணிகள். மடாகாஸ்கரில் கோக்குவரல் வகைக் குயில்கள் தரையிலேயே (கோழிகளைப் போல) வாழ்கின்றன.

ArtStation – On the Origin of Species, José Antonio Zapata

அவை எதுவுமே கூடுகட்டுவது கிடையாது. எல்லைகளிட்டு வாழ்வதும் கிடையாது. சுதந்திர பறவைகள். நமக்கு ஒரு விஷயம் தெரியும். காக்கைகளின் கூடுகளில் அவைகளுக்குத்  தெரியாமல் முட்டையிடும். காக்கைகள் தன் குஞ்சென நினைத்து குயில் குஞ்சுகளை வளர்த்து ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துத் துரத்தி விடுகிறது.ரிச்சர்டு டாக்கின்ஸ் – குயில்கள் குஞ்சு பொறிந்த்தும என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தார். முட்டையில் இருந்து குயில் குஞ்சுகள் காக்கை குஞ்சுகளை விட முன்னதாக பொரிந்து உலகிற்குள் வந்து விடுகின்றன. அவ்விதம் வந்த உடனேயே குயில் குஞ்சுகள் பின்னோக்கி தன் கால்களை உதறி கூட்டில் உள்ள ஏனைய (காக்கை) முட்டைகளை கூட்டைவிட்டுத் தள்ளி விட்டுவிடுகின்றன. இந்த தந்திரமான நடவடிக்கை அவைகளது டி.என்.ஏ விலேயே பரிணாமம் ஏற்றி வைத்திருக்கிறது. இது மிக தத்ரூபமான தகவமைப்பு. ஆச்சரியமான பரிணாமவியல் பண்பும்கூட  ஆண்குயில்களைவிட பெண் குயில்களே இத்தகைய தந்திரமான முட்டை உடைப்பில் அதிகம் ஈடுபடுகின்றன. அதற்கு டபிள் யூ குரோம்சோம்களில் உள்ள எச்.எஃப் எனும் மரபணுக்களில் காலப்போக்கில் நடந்த பிறழ்வு காரணம் என்று மரபியல் கண்டுபிடித்துள்ளது.

‘நேச்சர்’ அறிவியல் இதழில் 2016ல் வெளிவந்துள்ள மற்றொரு அற்புதமான கண்டுபிடிப்பும் குயில்கள்  பற்றியவையே. ஆசிய குயிலும், ஐரோப்பிய  ஆப்பிரிக்கக் குயிலும் ஒரே இனம்தான். ஆனால் வாழும் சூழலுக்குத் தகுந்த  தகவமைப்பு நமக்கு பல அதிர்ச்சிகளைத் தருகிறது. ஒருவகை குயில்கள் காக்கை கூடுகளில் தனது முட்டைகளை இடுகின்றன. அதை தவிர இன்னொரு வகை குயில் ராபின் பறவைகளது (கருஞ்சிட்டு) கூடுகளில் முட்டை இடுகிறது. காக்கைகளின் முட்டை லேசான அழுக்கு படிந்த வெண்மை நிறம். ராபின் பறவைகளின் முட்டைகளது நிறமோ கருநீலம் ஆகும். பரிணாமம் காக்கை கூடுகளில் தங்களது முட்டைகளை இடும் குயில்களுக்குப் பழுப்புநிற வெண்மை நிற முட்டைகளையும் ராபின் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் குயில்களுக்கு  கருநீல நிற முட்டைகளையும் இடுமாறு தகவமைத்துக் கொடுத்துள்ளதை ரிச்சர்டு டாக்கின்ஸ் நேரில் பதிவுசெய்து அத்தகைய முட்டைகளின் வண்ணம் குறித்த தகவமைப்பிற்கு  மிமிக்ரியிஸ் (போலச்செய்யும்) முட்டை தகவமைப்பு என பெயரிட்டார். டபிள்யூ- தொடர்புடைய டி.என்.ஏக்கள் இத்தகைய பிரழ்வை அடைந்தன. ஆசிய குயில்களிலேயே நீலமுட்டை ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னேற்றம் கண்டு அவைகளது கலப்பினாலும் ராபின் பறவைகளது ஐரோப்பிய ஆப்பிரிக்க இடம்பெயர்வினாலும் அங்குள்ள குயில்களிடத்திலும் பரவியது. என்பதும் ஆய்வில் தெரியவந்தது.

டார்வினின் மறைவுக்கு பிறகான பரிணாமவியல் இது போன்ற ஏராளமான ஆச்சரியங்களோடு மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. ரிச்சர்டு டாக்கின்ஸ் சொல்வது போல ‘டார்வின்… டார்வின்’ என்றே குயில்கள் கூவுகின்றன.

துணை நின்றவை :

  1. நியாண்டர்தால் மனிதன் டி.என்.ஏ கட்டுடைப்பும் நவீன மனிதனின் தோற்றமும் 1997. www.cell.com.
  2. டார்வினுக்கு பிறகு பரிணாமவியல் – மாஸ் பிளாங்க் இதழின்  சிறப்பு கட்டுரை – கிரிஸ்டினா பெக் -2009
  3. இன்றும் பரிணாம்ம் தொடர்வதற்கு ஆதாரம் உள்ளதா 2010 ஆய்வுக்கட்டுரை ஆலன். ஆர். டெம்லட்டான். www.medical.news.com
  4. Cuckoos and the history of life ரிச்சர்டு டாக்கின்ஸ்  www.nch bondon.ac.uk.

•••

நன்றி: அறிவியல் ஒளி