கலாச்சார தொழிற்சாலை தொடர் – 2
‘கதை’ யாடல்களாகும்
‘கவர்’ ஸ்டோரிகள்
மூலதனமும், லாபவேட்கையும் செய்திகளை ஒரு பண்டமாக மாற்றியிருக்கிறது. ஒரு ஊரில் ஆடைகள் அதிகம் விற்பனையானால் அவ்வூரில் ஆடை விற்பனையாளர்கள் அதிகரிப்பார்கள். ஆபரணங்கள் விற்பனையானால் நகைக்கடைகள் அதிகரிக்கும். இது இயல்பானது. ஆனால் செய்திகளை தரும் ஊடகங்களின் எண்ணிக்கை ஏன் இந்த அளவில் அதிகரித்திருக்கின்றன? ஏனெனில் செய்திகள் பண்டமாக மாற்றப்பட்டதன் விளைவே இது. உப்புச்சப்பில்லாத ஒரு செய்தியை உடைப்பு செய்தியாக, அதாவது பிரேக்கிங் நியூசாக மாற்ற முடிகிறது. இதையும் ஒரு அதிரடி இசையோடு கலந்து கொடுத்து விட்டால் இது முக்கிய செய்தியாகி விடுகிறது. நவீன தாராளமயம் ஊடக உலகத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் (Media Ethics) பிரதானமாக 5 W & 1H எனும் அம்சத்தை குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு செய்தியை தரும் போது என்ன (What) எப்போது (When) எங்கே (Where) யார் (Who) ஏன் (Why) ஆகிய 5 W மற்றும் எப்படி (How) 1 H ஆகியவற்றை உள்ளடக்கி அளித்தால் தான் அந்த செய்திக்கு ஒரு நம்பகத்தன்மை என்பது இருக்கும். ஆனால் இன்றைய ஊடக உலகம் அந்த நெறிமுறைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டிருக்கிறது. Narrative Policy Framework (NPF) என்பது இன்றைய ஊடக உலகின் பொதுவிதியாக உள்ளது. அதாவது ஒரு கதையாடலை உருவாக்குவது, அதுவும் அதை எத்தகைய கண்ணோட்டத்திலிருந்து உருவாக்குவது என்பதை ஊடக நிறுவங்கள் தான் திட்டமிடுகின்றன. People’s View என்பதற்கு மாறாக Policy Maker’s View என்பதை நோக்கி பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டு விட்டன. 2019 ல் புல்வாமா தாக்குதலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் அரசாங்கத்தின் பக்கம் நின்று கொண்டு மக்களை தேசத் துரோகிகள் (Anti Indians) என குற்றம் சாட்டுவதில் குதூகலம் அடைந்தன. டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் எனும் முத்திரையைக் குத்த ஊடகங்களில் வெளியான “கவர் ஸ்டோரிகள்” பயன்பட்டன. ஆம் பெரும்பாலான கவர் ஸ்டோரிகள் “கவர்” பெற்றுக் கொண்டு எழுதப்படும் ஸ்டோரிகளாகத்தானே உள்ளன.
பெரும் கார்ப்பரேட்டுகளின் கையில் ஊடகங்கள் சிக்கிக் கொண்ட பிறகு “இதழியல்” (Journalism) என்பது மிக மோசமாக சிதைவுற்றிருக்கிறது.
1. மஞ்சள் இதழியல் (Yellow Journalism) எனில் உணர்வுகளைக் கிளப்பி விடுவது, திரிக்கப்பட்ட கதையாடல்களை எழுதுவது
2. காசோலை இதழியல் (Cheque book journalism) எனில் பணம் பெற்றுக் கொண்டு எழுதப்படும் பெய்டு நியூஸ்
3. பாராச்சூட் இதழியல் (Parachute Journalism) எனில் ஒரு செய்தி மற்றும் நிகழ்வின் உண்மைத்தன்மை அறியாமல் மேலெழுந்த வாரியாக அவசரமாகத் தருவது என இதழியலின் தன்மைகள் பலவாறாக மாற்றப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான செய்திகள் நான்குபுறமும் சுவர்கள் உள்ள அறைகளுக்குள்ளே தயாரிக்கப்படுகின்றன. இதனால் செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் உண்மைகளை மக்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
திரிக்கப்பட்ட கதையாடல்களையும் ஊதிப்பெருக்கப்பட்டு உணர்ச்சிகரமாக மாற்றப்பட்ட போலியான செய்திகளையுமே நாம் செய்திகள் என பார்த்தும், படித்தும் கொண்டிருக்கிறோம். Fake News எனும் போலிச் செய்திகளும் அளவில்லாமல் பரப்பப்படுகிறது. கோவிட் நோய் பரவலின் போது பூண்டு கலந்த கொதிக்கும் வெந்நீரைக் குடித்தால் நோய் கட்டுப்படுத்தப்படும் என பரவிய போலி செய்திக்கு முந்நூறு விஞ்ஞானிகள் மறுப்பு சொல்ல வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னால் பிள்ளையார் பால் குடிக்கிறார் என கட்டமைக்கப்பட்டதொரு வெற்று நம்பிக்கையால் நமது குழந்தைகளுக்கு தேவையான பாலில் பற்றாக்குறை ஏற்பட்டதை பார்த்தோம். செய்திகளை முறையாக பதிலாக முந்தித் தருவது எனும் போட்டா போட்டியாலும், சமூக பிரக்ஞை ஏதுமற்று, பரந்து விரிந்த வணிகச் சந்தைகளில் விற்பனைக்கான பண்டமாக செய்திகள் மாற்றப்பட்டதாலும் இத்தகைய அவலங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
செய்தி மற்றும் ஊடக உலகின் வணிகமும் மிகப்பெரிதாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் 73,000 செய்தி இதழ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் பத்து கோடி மக்கள் செய்தித் தாள்களை அச்சு வடிவிலோ அல்லது ஆன்லைன் வாயிலாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு சுமார் 26,000 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் செய்தித் தாள்களின் விளம்பர வருவாய் மட்டும் சுமார் 18,000 கோடி ரூபாயாகும். செய்தித் தாள்களுக்கு விளம்பரம் அளிக்கும் அரசியல் கட்சிகளில் பாஜக முதலிடத்தில் உள்ளது. வாசிப்போர் மூலமாக வரும் வருமானத்தை விட விளம்பரங்கள் மூலமாக வரும் வருமானமே மிக அதிகம். அச்சு ஊடகங்களைப் போலவே காட்சி ஊடகங்களும் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கின்றன.
24 /7 என தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் செய்திச் சேனல்கள் மட்டுமே 388 எனும் எண்ணிக்கையில் உள்ளன. நாளொன்று நாம் ஒவ்வொருவரும் சராசரியாக நாளொன்றுக்கு 3.45 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்ப்பதற்காக நேரம் செலவிடுகிறோம். தொலைக்காட்சியைப் பார்க்கும் பதினைந்து கோடி பேரில் ஒவ்வொருவரும் தலா 3. 45 மணி நேரம் செலவிடுகிறார்கள் என்றால் மொத்த பார்வை நேரம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
ஒளிபரப்புக்கும், பார்வை நேரத்திற்கும் இடையிலான இத்தகைய வலுவான தொடர்பில் தான் செய்தி வணிகம் கல்லா கட்டுகிறது. செய்திகள் துவங்குவதற்கு முன்னால் தொலைக்காட்சிகளில் டிஜிட்டல் கடிகாரத்தை ஓடவிடுவார்கள். அது நேரத்தைப் பார்ப்பதற்காக அல்ல. அந்த டிஜிட்டல் கடிகாரத்திற்கு கீழே ஒவ்வொரு பத்து விநாடி இடைவெளியிலும் ஒவ்வொரு நிறுவனத்தின் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்காகத்தான் அத்தகைய ஏற்பாடு. கார்ப்பரேட் நிறுவனங்கள் – செய்திகள் – திரிக்கப்பட்ட கதையாடல்கள் – விளம்பரங்கள் என ஒரு பெரும் வலைப்பின்னலைப் போன்ற ஊடக உலகத்தில் சாதாரண மக்களுக்கான இடம் என்னவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருக்கிறது.
ஊடகம் (Media) என்பது ஆக்ரோஷமானதாகவும் (Aggressive Media) முறைகேடானதாகவும் (Abusive Media) மாறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களில் யாரோ ஒருவர் எதிரில் இருப்பவரை வசைபாடிக் கொண்டேயிருப்பதை நம்மால் காணமுடியும். அது தற்செயலாக நிகழ்வதல்ல, மாறாக நிகழ்த்தப்படுவதாகும். அத்தகைய தன்மையில் நிகழ்த்தப்படுகிற நிகழ்ச்சிகளின் மூலம் தான் காசு பார்க்க முடியும். ஆங்கிலத்தில் Reading Between Lines என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது அச்சடிக்கப்பட்ட இரண்டு வரிகளுக்கு இடையில் உள்ள வெற்றிடத்தையும் வாசிக்கும் நுட்பம் நமக்கு வாய்க்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையிலும் யாரோ ஒருவரின் நலன் ஒளிந்திருக்கும். அது யாருக்கான நலன் என்பதையும் அது யாரால் பாதுகாக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதோடு அது ஏன் பாதுகாக்கப்படுகிறது எனும் கேள்வியையும் தொடர்ச்சியாக கேட்க நம்மை நாம் பழக்கிக் கொள்ள வேண்டும். கேள்வி கேட்க நினைத்தாலும் கூட கேள்விகளை எழுப்ப விடாமல் தடுப்பதற்கும், நமது சிந்தனைகளை மழுங்கடிப்பதற்குமான நுட்பமான ஏற்பாடுகள் நமது சமூகத்தில் நிறைந்திருக்கின்றன. அவை என்ன.? அடுத்த கட்டுரையில் காண்போம்.
கட்டுரையாளர்:

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை தோழர். எந்தெந்த கார்ப்பரேட் ஊடகம் எந்த பெரு முதலாளிகள் கையில் அடக்கப்பட்டுள்ளது என்பதையும் பட்டியல் இட முடியுமானால் வாசகர்கள் முழுமையாக புரிந்து கொள்ள உதவும் தோழர்.
அருமை தோழர்