கலாச்சார தொழிற்சாலை தொடர் – 3: ’மூளையை’ கழட்டி ’மூலையில்’ வீசும் தந்திரம்
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் சிறந்த அறிஞருமான அந்தோனியா கிராம்சிக்கு முசோலினி (Mussolini) வழங்கிய தண்டனை விசித்திரமானது. தூக்கில் போடவில்லை, ஆயுள் சிறையும் இல்லை. அவரது மூளையை அடுத்த சில ஆண்டுகளுக்கு சிந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என ஒரு தண்டனை விதிக்கப்பட்டது. ஆம். அபாரமாக சிந்திக்கும் திறன் கொண்ட மூளை தானே மிகவும் ஆபத்தான ஆயுதம். அதை செயலிழக்க செய்து விட்டால் எதிரிகளை எளிதில் வீழ்த்தி விடலாம் தானே. கிராம்சியின் சிந்தனைகளும் எழுத்துக்களும் அபாரமானதாகும். “ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள் முதலில் மக்கள் மனங்களை தங்களுக்கு சாதகமாக தகவமைப்பதில் வெற்றி பெற வேண்டும். மனங்களை வென்று விட்டால் அரியாசனம் தானாக வந்து சேரும்” என்று விளக்கும் கிராம்சி அதற்கு பொறுத்தமான ஒரு உவமையை சுட்டிக் காட்டுகிறார்.
கம்பீரமாக கட்டப்பட்டிருக்கும் கோட்டைகளை சுற்றிலும் ஒரு அகழி இருப்பதை பார்த்திருப்போம். கோட்டை என்பது மக்களின் மனம். அகழி என்பது ஆட்சியதிகாரம். கோட்டையை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களுக்கு இயல்பாகவே அகழி சொந்தமாகி விடுகிறது. எனவே மக்கள் மனங்களை வென்றெடுப்பவர்களுக்கு அதிகாரமும் கிடைக்கிறது என்பார் கிராம்சி (Antonio Gramsci). அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இசைவாக எப்படி சமூகத்தின் மனசாட்சி தயார் செய்யப்படுகிறது என்பதை இப்படி எளிமையாக விளக்கி எழுதியால் தான் கிராம்சியின் மூளையை ஆபத்தானதாக பார்த்தான் முசோலினி. தனது காத்திரமாக சிந்தனைகள் மூலம் எளிய மனிதர்களை சிந்திக்க வைத்தார் கிராம்சி. ஆம். காலம் தோறும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சமூக மனங்களை தகவமைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு, இலக்கியம், சினிமா, எழுத்து, ஊடகம் என அனைத்தின் வழியாகவும் சமூக மனங்கள் அதிகாரத்தின் பால் தகவமைக்கப்படுகின்றன.
சென்னை துறைமுக தொழிலாளர்களுக்கான பயிலரங்கம் ஒன்றில் உரையாட சென்றிருந்தேன். எனது உரை துவங்குவதற்கு முன்பாக கூட்டத்திற்கு தலைமையேற்றவர் சொன்னார். “எல்லாரும் போய் ஒரு டீ சாப்பிட்டு உற்சாகமா வாங்க, கூட்டத்தை தொடங்கலாம்’ என்றார். டீயை ருசித்து முடித்து கூட்டம் துவங்கியவுடன் ஒரு கேள்வியோடு எனது உரையை தொடர்ந்தேன். “ டீ குடிச்சதால் எல்லோரும் உற்சாகமா இருக்கீங்களா ?’ பெரும்பாலானோர் ஆமோதித்து தலையாட்டினர்.. ஆனால் உண்மையில் அவர்கள் பருகிய தேநீரால் உற்சாகம் அடையவில்லை. ‘சூடா ஒரு டீ குடிச்சா உற்சாகமா இருக்கும்ல’ என நமக்குள் உருவாகும் மனநிலை தான் உற்சாகத்திற்கான காரணம். டீ குடிச்சா உற்சாகம் வருமென்றால் தேநீர் பயன்பாட்டிற்கு வரும் வரை மனிதர்கள் உற்சாகமில்லாமலா இருந்திருப்பார்கள். உற்சாகமென்பது உளவியல் அடிப்படையிலானது. அதை நாம் டீயோடு இணைத்துக் கொள்கிறோம். அவ்வளவே. தேநீர் என்பது பணப்பயிராகும். பெரும் நிறுவனங்கள் நம்மை தேயிலை நுகர்வோராக மாற்றுவதற்காக செய்த ஏற்பாடே திடம், மணம், சுவை ஆகிய மூன்றும் நிறைந்த டீ எனும் விளம்பர உத்திகளெல்லாம். மற்றொரு விளம்பரம் அதை விடவும் சுவாரஸ்யமானது. முறைப்படியான டீ, தமிழர் கலாச்சாரத்தின்படி தயாரிக்கப்பட்ட டீ என மார்கெட்டிங் செய்யப்படுகிறது. டீ தயாரிப்புக்கும் தமிழர் கலாச்சாரத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சை போன்றது தான்.
சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம் ஒரு பெரும் கொந்தளிப்பு உருவாகும் எனும் நம்பிக்கை பல நேரங்களில் பொய்த்து போகிறது. பெட்ரோல், டீசல் விலை செங்குத்தாக உயர்ந்த போது கடுமையான போராட்டங்கள் ஒருபுறம் எழுந்தன. அதே வேளையில் சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் பரவலாக பகிரப்பட்டது. இரு சக்கர வாகனத்தோடு பெட்ரோல் பங்க் வரும் ஒருவர் பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக பைக் மீது ஊற்றச் சொல்லி கொளுத்தி விட்டு நடந்து செல்வார். இது பரவலான பார்வையாளர்களை சென்றடைந்தது. விலை உயர்வுக்கு எதிரான மக்கள் கோபத்தை மடைமாற்றம் செய்யும் உத்திதான் இது. அதாவது பகடி செய்வது. நேரடியாக எதிர்ப்பை பதிவு செய்வது ஒரு வடிவம் என்றால் பகடி செய்வது வேறொரு வடிவம். சமூக வலைத்தளத்தின் பிரமாண்டமான வளர்ச்சியினால் எதிர்ப்பும் கோபமும் பல நேரங்களில் பகடியாக மட்டுமே முடிந்து விடுகிறது. இதுவும் கூட சமூக மனநிலையை தகவமைக்கும் ஏற்பாடுகளில் ஒன்றாகும்.

உபி மாநிலம் ஹத்ராசில் ஒரு சாமியாரின் கார் சக்கரத்தின் கீழ் இருக்கும் மண்ணை எடுக்கச் சென்ற கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் செத்துப் போன ஒரு செய்தியை பார்த்தாம். ஒரு சாமியாரோ அல்லது அவரது காலடி மண்ணோ நமது அனைத்து துயரங்களையும் தீர்த்துவிடும் எனும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு என பல வழிபாடுகளில் ஈடுபடும் மக்கள் ஏன் இத்தகைய திடீர் சாமியார்களை நோக்கி படையெடுக்கிறார்கள் எனும் கேள்விக்கான விடையை கண்டறிவது முக்கியமானது. நவீனமயம் புதிய இறையியல் மையங்களை (New Spritual Spaces) உருவாக்கியுள்ளது. பாரம்பரியமான வழிபாட்டு தலங்களோ அல்லது கோவில்களோ போல அல்லாமல் நவீன வசதிகளுடன் கூடிய இத்தகைய இறையியல் மையங்களை நாடிச் செல்ல சமூக மனங்கள் தகவமைக்கப்படுகின்றன. “ஆசை தான் அழிவிற்கு காரணம்” என்றார் புத்தர். ஆனால் ”அத்தனைக்கும் ஆசைப்படு” என நமது ஆசையை தூண்டுகிறார் ஒரு நவீன சாமியார். நமது ஆசைகளை தூண்டி விட்டு தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள நவீன சாமியார்களால் முடிகிறது எனில் அது சமூக மனங்களை தகவமைப்பதினால் கிடைக்கும் வெற்றியே ஆகும்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி மிகவும் நுட்பமானது. “ சார் எதிர்கட்சிகள் இந்த பிரச்னையை முன்வைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்காங்க, போராட்டத்திற்கான அனுமதி அளிக்க வேண்டாம்” என ஒரு அதிகாரி சொல்வார். உடனே தலைமைச் செயலாளர் பதிலளிப்பார். “விடுய்யா, போராட்டம் நடக்கட்டும், நமக்காக போராட ஆட்கள் இருக்காங்கன்னு மக்கள் கொஞ்சாமாவது சமாதானம் ஆவாங்க, மக்களோட கோபம் ஏதாவது வகையில் குறைஞ்சா அது அரசாங்கத்துக்கு நல்லது தானே” என்பார். மக்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் மடைமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைந்திருக்கின்றன. அதாவது குக்கரின் பிரஷரை குறைக்க மூடியின் மேல் பொறுத்தப்படும் சாதனத்தை போன்றதே சமூக மனங்களை தகவமைக்கும் ஏற்பாடும் ஆகும்.
யோசித்து பார்த்தால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனி மனிதனும் இருக்கிறார். ஒரு பொது மனிதனும் இருக்கிறார். நமக்குள் இருக்கும் பொது மனிதனை சிறியதாக்கிக் கொண்டே தனிமனிதனை வளர்த்துவதற்கான வேலைகள் மிக நுட்பமாக அரங்கேற்றப்படுகின்றன. அது எவ்வாறு நிகழ்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன. அடுத்த கட்டுரையில் காண்போம்.
கட்டுரையாளர்:

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர்,
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நுட்பமான கட்டுரை. அடுத்த கட்டுரை எதிர் நோக்கி தோழர்
மொழி மீதுள்ள அருமையான விழி புணர்வின் மூலம் சிறந்த விழிப்புணர்வை ஈன்றெடுத்தோம்… நன்றி ஐயா 🙏
திரு.பத்ரி அவர்களின் கட்டுரை மிகச் சிறப்பு. நவீன சாமியார்கள் மக்களை எவ்வாறு தன்வயப்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக விவரித்துள்ளார். நன்றி.