கலாச்சார தொழிற்சாலை - அட்டைபெட்டிகளும் ‘கட்டுடைத்தல்’ தந்திரமும் Culture factory - R.Badri பழங்குடி மக்கள்(Tribe) - https://bookday.in/

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 4

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 4

அட்டைபெட்டிகளும் ‘கட்டுடைத்தல்’ தந்திரமும்

புறவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேகமான மாற்றங்களை அவதானிக்கக் கூட முடியாமல்,  நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு அட்டைப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகக் குழுக்கள் என்பது ஒரு அலகாக (Unit)  கருதப்பட்ட நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஒவ்வொரு தனிநபரும் தனித்தனி அலகாக (Unit) மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  பின்நவீனத்துவம் ’கட்டுடைத்தல்’ எனும் புதியதொரு கோட்பாட்டை முன்வைக்கிறது. அதாவது அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ,  குடும்பங்களோ என எவ்வித அமைப்புகளும் அவசியமில்லாதவை எனவும் ஒரு குழு எனும் அடிப்படையில் எந்தவொரு பொது அபிலாஷையையும் உருவாக்க வேண்டியதில்லை என்பதே பின்நவீனத்துவத்தின் மையமாக அம்சமாகும்.

Hegemony of Survival,  Manufacturing Consent உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதிய அறிஞர் நோம் சாம்ஸ்கியின் கூற்று ஒன்று மிக முக்கியமானது.  ’சமூக விழிப்புணர்வு இல்லாத மக்கள் கூட்டத்திற்கு அவர்களை சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. அதை விட முக்கியமானது, தங்களுக்கு தெரியாது என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை”  என்று குறிப்பிடுவார்.  ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இஃது என அறிந்திலார்’ என  மகாகவி பாரதி பாடியதும் இதைத்தான். ஒரு புறத்தில் உலகமே ஒரு உள்ளூரைப் போல சுருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் மக்களிடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. நகைச்சுவை மன்ற கூட்டமொன்றில் பேச்சாளர் ஒருவர் வேடிக்கையாக சொல்லிக் கொண்டிருந்தார். ”அந்த காலத்திலெல்லாம் போன் மணி அடிச்சா எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் போனை பாத்து ஓடுவாங்க, ஆனா, இப்பவெல்லாம் செல்போனில் மணி அடிச்சா அதை எடுத்துக்கிட்டு வெளிய ஓடறாங்க” எனும் அவரது பேச்சைக் கேட்டு மொத்த கூட்டமும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஓடுவதென்பது ஏன் எதிரும் புதிருமானதாக மாறியிருக்கிறது என ஒன்றிரண்டு பேராவது யோசித்திருப்பார்களா என தெரியவில்லை.

சேமிப்பு என்பது ஒரு பாவம் (Saving is a Sin) எனும் கட்டளை எங்கும் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சேமிக்க நினைத்தாலும் கூட எதுவும் மிஞ்சுவதில்லை எனும் உண்மை இருந்தாலும் கூட, நம்மிடம் மிச்சமிருப்பதையும் சுரண்டுவதற்கான ஏற்பாடுகள் பக்காவாக இருக்கிறது. “ஒரு ரூபாய் கொடுத்து பைக்கை ஓட்டி செல்லுங்கள்” என நம்மிடம் இரக்கம் காட்டுகின்றன பைக் கம்பெனிகள். இது ஏதோ நம் மீதான பரோபகாரத்தினால் அல்ல. தயார் செய்து ஆலைகளில் நிறுத்தப்பட்டுள்ள பைக்குகளை வாங்கச் செய்வதற்கான ஏற்பாடு தான் அது. க்ரெடிட் கார்டுகள் எனும் பிளாஸ்டிக் அட்டைகளை நம் கைகளில் திணித்திருக்கிறார்கள். நாமும் தேய்த்துக் கொண்டேயிருக்கிறோம். மொத்த சமூகத்தையும் நுகர்வு மனநிலைக்குள் தள்ளிவிட்டு குரூரபிப்  புன்னகை புரிந்து கொண்டிருக்கிறது முதலாளித்துவம்.  சந்தையில் புதிதாக எது வந்தாலும் அதன் தேவை மற்றும் பயன்பாட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் நவீன மேல்தட்டு மற்றும் நடுத்தர சமூகத்திற்குக் கீழே உள்ளவர்களைப் பற்றி கவலையிருக்காது தானே.

இயற்கை வேளாண் நிபுணர் நம்மாழ்வரோடு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் இடைவெளியில் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்தார். “ தாத்தா, அப்பா காலத்தில வெள்ளாமையின் அளவை மூடை கணக்கில சொன்னாங்க, ஆனா இப்ப அடுத்த தலைமுறை ஆட்களெல்லாம் பண மதிப்புல தான் சொல்றாங்க. எல்லாத்தையுமே பணமா பார்க்கற நிலைமை உருவாகிடுச்சுங்க” என்றார். உண்மை பொதிந்த வார்த்தைகள் அவை. தொழிற்சங்க பொறுப்பில் பணியாற்றிய எங்களை போன்றவர்களுக்கு வேறு வகையில் அந்த அனுபவம் உண்டு. இந்திரா காந்தி அவசர நிலையை அமலாக்கிய போது, அரசுத்துறை ஊழியர்களுக்கு பஞ்சப்படி முடக்கப்பட்டது. அதை உரிமை மறுப்பாக உணர்ந்த ஊழியர்கள் கொதித்தெழுந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். இப்போது நிலைமை வேறாக மாறியிருக்கிறது. வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் (No Work No Pay) எனும் நடைமுறையை அரசாங்கம் பின்பற்றத் தொடங்கிய பிறகு வேலைநிறுத்த அறைகூவல் விடுப்பதே சிரமமானதாக மாறியிருக்கிறது.  ஊதியத்தில் ஓரளவு உயர்வு வந்திருப்பதால் வேலை நிறுத்தத்தைச் செய்து ஒரு நாள் ஊதியத்தை இழக்க வேண்டுமா எனும் கேள்வி பரவலாக எழுவதை காண முடிகிறது.  உரிமையை கோருவதற்கான போராட்டங்களை ஊதிய இழப்பு எனும் கணக்கோடு இணைத்து பார்க்கும் புதிய கண்ணோட்டம் எழுந்திருப்பது ஆளும் வர்க்கத்திற்கு தானே சாதகமாக அமையும்.

நீலகிரி மாவட்டத்தில் மூப்பர் காடு எனும் சிறிய பழங்குடி கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களோடு குடியரசு நாளை கொண்டாடுவது எனும் முடிவின்படி அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் சென்றிருக்கிறார்கள். அந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொடி மட்டுமே பறக்கிறது. வேறு கொடிக்கம்பங்கள் இல்லை. குடியரசு கொண்டாட்டத்திற்கு வந்த அதிகாரிகளுக்கு தாமதமாகத்தான் கொடியேற்ற வேண்டுமே என தோன்றியிருக்கிறது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொடிக் கம்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து ஒரு காவலர் மலைவாழ் மக்கள் சங்கக் கொடியை இறக்க முயற்சித்திருக்கிறார். அதை பார்த்த ருக்மணி எனும் பழங்குடி பெண் பாய்ந்து அவரது சட்டையை பிடித்திருக்கிறார். “எங்களைக் கேட்காமல் எங்க கொடி மரத்தில நீங்க எப்படி சார் கை வைக்கலாம். கொடி ஏத்தணும்னா நீங்க தனியா ஒரு கொடிக் கம்பம் கொண்டு வரணும் தானே” என கோபமாக சண்டையிட, உயர் அதிகாரிகள் தலையிட்டு “நிகழ்ச்சி முடிஞ்சவுடனே மீண்டும் உங்க கொடியை ஏத்திடுவோம்மா” என ருக்மணியை சமாதானம் செய்திருக்கிறார்கள். அதை தொலைபேசியில் அழைத்து சொன்னபோது, கோதாவரி பருலேக்கரின் “மனிதர்கள் விழிப்படையும் போது புத்தகத்தில் வரும் சம்பவமொன்று காட்சியாக மனதில் ஓடியது.

மகாராஷ்டிராவில் வார்லி பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட சொல்லொணா கொடுமைகளை கண்டித்து செங்கொடி இயக்கம் நடத்திய வலுவான போராட்டங்களை கண்டு நிலச்சுவாந்தார்களும் உள்ளூர் நிர்வாகமும் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. எப்படியாவது அம்மக்களை அடக்கு வேண்டுமே என யோசித்து ஒரு வஞ்சக திட்டத்தை தீட்டினார்கள் அவர்கள். ” செங்கொடி இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுறாங்க, எனவே கையில் கிடைச்ச ஆயுதத்தோடு திரண்டு வாங்க என பழங்குடி மக்களுக்கு அவர்களே பொய்யாக ஒரு தகவலை கொடுத்து விட்டு, மறுபுறத்தில் ஆயுதங்களோடு ஏராளமான பழங்குடி மக்கள் திரண்டு வந்திட்டாங்க என போலீசுக்கும் தகவல் சொன்னார்கள். துப்பாக்கிகளோடு திரண்டு வந்த போலீஸ் படை அமைதியாக செங்கொடியோடு அமர்ந்திருந்த எளிய பழங்குடி மக்கள் மீது தொடர்ச்சியாக சுமார் பதினைந்து மணிநேரமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள். அதில் சிலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த தகவலை கேள்விப்பட்டு தலைவர்கள் ஓடிச்சென்று மக்களை பாதுகாத்தனர். “போலீஸ் இப்படி கண்மூடித்தனமா துப்பாக்கிச்சூடு நடத்தறாங்களே, நீங்க ஏன் நகராம இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க” என அவர்களிடம் கேட்ட போது பழங்குடி மக்கள் அளித்த பதில்    ‘எங்களை வர வேண்டும்னு சொன்னது செங்கொடி, அந்த செங்கொடி சொல்லாமல் நாங்கள் கலைந்து போக முடியுமா..?

ரெளத்திரம் பழகு என்று சொன்னார் பாரதி. அநீதி இழைக்கப்படும் இடங்களுக்கெல்லாம் என் கால்கள் இயல்பாக பயணிக்கும் என்றார்  சேகுவாரா. இத்தகைய நம்பிக்கைகளைச் சுமந்து, அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.   அதீத லாபத்தை ஈட்டுவதற்காக முதலாளிகளும், அரசும் இணைந்து தொடுக்கும் ஈவு இரக்கமற்ற தாக்குதலை  எதிர்புறத்தில் நிகழ்கிறது.  ஏற்றத்தாழ்வு கூர்மையடைந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவளித்தாலும் கூட தொள்ளாயிரம் வருடங்கள் அம்பானி குடும்பத்தால் செலவிட முடியும் என  அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்திக்கும், உலக நாடுகளின் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவிற்கான இடம் 111 எனும் செய்திக்கும் தொடர்பு இருக்கிறது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம் தான். கருத்தியல் போராட்டத்திற்கான புதிய களங்களை அமைப்பது எவ்வளவு முக்கியமோ, நமது அன்றாட வாழ்வில் நாம் புழங்குகிற ஒவ்வொரு இடத்தையும் கருத்தியல் போராட்டத்திற்கான தளங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானதே. அதற்கான மாற்று முயற்சிகளைப் பற்றி பேசுவோம்.

கட்டுரையாளர்: 
Information, Communication, Entertainment Corporations are one integrated with the others create a new Culture Factory (கலாச்சார தொழிற்சாலை) - விளம்பரங்கள் (Advertisements) https://bookday.in/
                            ஆர்.பத்ரி

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *