ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம்

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம்

கலாச்சார தொழிற்சாலை தொடர் – 11

ஆர்.பத்ரி

வலையை பின்னி தனக்கான இரையை அதில் சிக்கவைக்கும் சிலந்தி பூச்சிகளால் அவற்றை நேரடியாக உண்ண முடியாது. ஏனெனில் இரையை சவைத்து உண்ணுவதற்கான திடமான வாய்ப்பகுதி சிலந்தி பூச்சிகளுக்கு இல்லை. எனவே வலைகளில் சிக்கிய இரைகளின் மீது நொதி போன்ற ஒரு திரவத்தை சிலந்தி பூச்சிகள் பாய்ச்சும். ஒரு சில சிலந்தி பூச்சிகள் உமிழும் நொதி திரவங்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். திரவம் உமிழப்பட்ட இரை நெகிழ்ந்து கூழ் போன்ற நிலையை அடைந்த பிறகு சிலந்தி பூச்சிகள் அவற்றை உறிஞ்சி உட்கொள்ளுமாம்.

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/

இரையை பிடிக்க சிலந்தி பூச்சிகள் கட்டுகிற வலைகளைப் போலவே, நம்மை சுற்றிலும்  கண்களுக்கு தெரியாத வலைப்பின்னல்களை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. அவை கண்களுக்கு தெரியாத வலைப்பின்னல்களாக (Invisible Spidernet) இருப்பதால் நாம் அதில் எளிதில் சிக்கிக் கொள்கிறோம். வலையில் சிக்கிக் கொண்ட பிறகு இரையின் மீது நொதி திரவத்தை சிலந்திகள் உமிழ்வதைப் போலவே மூலதனமும் பலவிதமான  ”மாயை”  (Illusions) எனும் நொதியை நம்மீது உமிழ்ந்து நமது வாழ்வை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் நவீனமயமாகிப்போன இன்றைய சூழலில் இத்தகைய வலைப்பின்னல் என்பத, நுட்பமான மெய்நிகர் வலைப்பின்னலாக (Virtual Spidernet) நவீன வடிவம் பெற்றிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் ஊடகங்களில் வந்த செய்தி இது. உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் சேவைகளில் ஈடுபடும் செயலி நிறுவனங்களில் (APP) ஒன்று தனது நிறுவனத்தின் மூலம் ஒரு பிரியாணியை ஆர்டர் செய்து பத்து நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அதை கொண்டு சேர்க்காவிட்டால் அதற்கான பணம் தர வேண்டியதில்லை என விளம்பரம் வெளியிடுகிறது. அவ்விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் APP மூலமாக ஆர்டர் செய்கின்றனர். அப்படி ஒரு உணவகத்திலிருந்து பிரியாணி கொண்டு சென்ற இளம் ஊழியர் ஒருவர் பத்து நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரிடம் சேர்க்க வேண்டுமே எனும் பதற்றத்தோடு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் விரைந்த போது விபத்தில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே செத்துப் போனார். பிரியாணியை தயாரித்த உணவகம், அந்த விளம்பரத்தை தனது நிறுவனம் செய்யாததால் அவரது மரணத்திற்கு பொறுப்பேற்க முடியாது என கைவிரிக்க, அந்த ஊழியரின் வேலைக்கான ஊதியத்திற்கு மட்டுமே தாங்கள் பொறுப்பே தவிர, சாலை விபத்தில் அவர் செத்துப் போனதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என காரணம் சொல்லி தட்டிக் கழித்தது சேவையை வழங்கும் அந்த செயலி (APP) நிறுவனம். உண்மையில் அந்த இளம் ஊழியரின் மரணத்திற்கு யார் காரணம். விளம்பரம் செய்த நிறுவனமா, பிரியாணி தயாரித்து கொடுத்த உணவகமா..?

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/

புதிய வியாபார உத்தி, அதன் மூலமாக கிடைக்கும் விரைவான லாபம் என திட்டமிட்ட இருவருமே குற்றவாளிகள் தான். அதுமட்டுமல்ல. எவ்வித சட்ட மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாத இத்தகைய சேவைகளை அனுமதிக்கும் அரசும் குற்றவாளியே. அவர்கள் மட்டுமல்ல. இத்தகைய விளம்பரங்கள் தூண்டுகிற காசு இல்லாமலேயே பிரியாணி என விரிக்கப்படும் ஆசை வலையில் சிக்கிக் கொள்ளும் மக்களும் கூட ஒரு வகையில் குற்றவாளிகள் தாம். எப்போதுமே ஏதோவொன்றை விற்றுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதும், அதற்காக விதவிதமான ”ஆஃபர்களை” அறிவிப்பதும் முதலாளிகளின் வணிக உத்தி.   அவர்கள் விரிக்கும் சிலந்தி வலையில் மிக இயல்பாக நாம் சிக்கிக் கொள்வதற்கு நமக்குள் தூண்டப்படும் “ஆசை” தான் காரணமாகும். ஆசைகளே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் ஆஃபர்களே ஆசைகளுக்கான காரணமாக இருக்கிறது.  “ஆஃபர்களுக்கும் ஆசைகளுக்கும்” இடையிலான போட்டியில் தான் மூலதனம் தன்னை மேலும் மேலும் வளர்த்து கொள்கிறது. சேவைகள் என்ற பெயரால் இயங்கும் பெரும்பாலான  ’செயலி’கள்  வியாபார தந்திரத்தில் கொடிகட்டி பறக்கின்றன.

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/

ஊபர், ஓலா போன்ற போக்குவரத்து செயலிகளை ஓரிரு முறை நாம் பயன்படுத்தி விட்டால், அடுத்து மழை வருகிற போது ‘மழையில் நனையாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டுமா’ எங்கள் செயலியை அழுத்துவங்கள் என அக்கறை காட்டுகிறார்கள். பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்ய டிக்கட் செய்தால், நாம் செல்லும் ஊர்களில் உள்ள தங்குமிடம், உணவங்கள் ஆகியவற்றின் விளம்பரங்கள் வரிசையாக வரத்தொடங்கி விடுகின்றன. எங்களது செயலியின் மூலம் நீங்கள் Return Jouney டிக்கெட்டை வாங்கினால் சலுகைகள் கிடைக்கும் என வலையை விரிக்கிறார்கள். நம்மை பொறுத்தவரை ஒரு நிறுவனத்தை நாடி நமக்கான சேவையை பெற்றுக் கொள்கிறோம். அதற்கு மேல் என்ன இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அவர்களை பொறுத்தவரை நாம் பெரிய சந்தை. 24 / 7 நம்மை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். நம்மிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு தரவும் அவர்களுக்கு BIG DATA ஆகும். அந்த DATA க்களை கொண்டே வணிகச்சந்தை இயங்குகிறது. நாம் கூட்டங்களிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்று திரும்பினால் அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலரது புகைப்படங்களை அனுப்பி இவர்களை உங்கள் நட்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமா என கேள்வி எழுப்புகிறது ஃபேஸ்புக் நிறுவனம். அவர்களின் மெய்நிகர் வலைகளில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/

அபாயங்களையும் நெருக்கடிகளையும்
சமூகமயமாக்குவது..
லாபத்தை தனியார் வசமாக்குவது…
என்பதே நவீன அரசுகளின்
பொதுவிதியாக மாற்றப்பட்டுள்ளது.
சேவைகளிலிருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. அரசு. சேவை அனைத்தையும் வணிகமாக மாற்றியதோடு தனியாரிடமிருந்து அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு சொல்கிறது அரசு. தங்க நகைகளை வாங்கும் மக்கள் அதற்கான செய்கூலியையும், சேதாரத்தையும் நகைகளை வாங்கும் மக்களின் தலையில் கட்டிவிட்டு, நகைக்கடை முதலாளி லாபத்தை முழுசாக எடுத்துக் கொள்வதைப் போலதான் அரசின் நடவடிக்கைகளும் இருக்கிறது.

 

சற்றே யோசித்து பாருங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக நாம் யாரிடமாது சென்று, குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள், வேண்டுமானால் காசு தருகிறேன் என சொல்லியிருந்தால், ‘ஏங்க குடிக்கற தண்ணிக்கு கூடவா காசு வாங்குவாங்க’ என பதில் கிடைத்திருக்கும் தானே. ஆனால் இன்றைய நிலை என்ன? குடிநீர் என்பதும் கூட காசு கொடுத்து வாங்கும் பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. அதுமட்டுமல்ல, இன்றைக்கு காசு கொடுக்காமல் இலவசமாக குடிநீர் கிடைத்தால் அது சுத்தமானதாக இருக்காது எனும் மனநிலைக்கு நம்மையும் தள்ளிவிட்டார்கள் தானே.  இப்படியாகத்தான் சமூக மனநிலை என்பது கட்டமைக்கப்படுகிறது.  அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தால் நிர்வகிக்கப்படும் இத்தகைய பிரமாண்டமான வணிக கட்டமைப்பை தகர்த்தெறியும் போராட்டங்களில் நமது ஒவ்வொருவரின் பாத்திரமும் ஒரு சிறு உளியைப் போன்றதாகும். சிறிய உளிதானே பெரிய பாறைகளை தகர்க்கிறது.

கற்பனையானதொரு உலகை கட்டியமைத்து அதில் மகிழ்ச்சியாக சஞ்சரிப்பதை நினைப்பதை விடவும், யதார்த்தமான உலகை நாம் விரும்பும் வகையில் அமைக்க போராடுவதே முக்கியமானதாகும். அதற்கான பாதை மிகவும் அழகானது. அனைவருக்குமானது.

கட்டுரையாளர்: 

ஆஃபரே (Offer)  ஆசைக்கு காரணம் - Offer is the cause of desire - culture factory - R.Badri - Commercial - Capitalism - https://bookday.in/
                               ஆர்.பத்ரி

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க : அரசின் கைகளில் “இரண்டு கருவிகள் “



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *