முனைவர் இல.சுருளிவேல் எழுதிய "உற்பத்தி இல்லா நுகர்வு கலாச்சாரம்" கட்டுரை | culture of consumption without production | www.bookday.in

உற்பத்தி இல்லா நுகர்வு கலாச்சாரம் – முனைவர் இல.சுருளிவேல்

உற்பத்தி இல்லா நுகர்வு கலாச்சாரம்

– முனைவர் இல.சுருளிவேல்

உலகிலேயே நுகர்வோர் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. அரிசி, கோதுமை, மக்காச்சோளம், கரும்பு, பால், மீன் போன்ற சில உணவு பண்டங்கள் உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் இருந்தாலும், தனிநபர் நுகர்வில் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது. சிறிய நாடாக இருந்தாலும் சரி பெரிய நாடாக இருந்தாலும் இந்தியாவை சந்தைக்கு உரிய இடமாக பார்ப்பதற்கு காரணம் நுகர்வோர். குழந்தைகள் விளையாடும் பொம்மை முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் கனரக வாகனங்கள் உட்பட வாங்குவோர் அதிகம் உள்ள நாடு இந்தியா. குறைந்த விலையில் தொழிலாளர் கிடைக்கும் நாடு இந்தியா. அதன் காரணமாக வளர்ந்த நாடுகள் தங்களது தொழில் உற்பத்தி மையத்தை இந்தியாவில் துவங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவின் இரு முகங்கள்:

இந்தியாவிற்கு இரு முகங்கள் இருப்பதாக கூறலாம். ஒன்று இருப்பவர்கள். மற்றொன்று இல்லாதவர்கள். ஆரோக்கியம் உள்ளவர்கள், ஆரோக்கியம் இல்லாதவர்கள். வருவாய் அதிகம் உள்ளவர்கள், வருவாய் குறைவாக உள்ளவர்கள். அதிகம் படித்தவர்கள், குறைவாக படித்தவர்கள். தொழில்நுட்பம் பயன்படுத்தக் கூடியவர்கள், தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாதவர்கள் என்று இருக்கிறவர்கள் இல்லாதவர்கள் என்று பிரித்து கூற முடியும். இந்த இடைவெளியை குறைக்க பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், நிலைத்த வளர்ச்சி இலக்கினை அடைவது சவாலாகவே இருக்கிறது.

அனைவருக்கும் தரமான கல்வி, உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சி இல்லா வெற்று அரசியலுக்கு முக்கியத்துவம் தரும் எந்த ஒரு சமூகமும், நாடும் வறுமையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் என்பதுதான் உண்மை. மக்கள் தொகையில் முன்னோடியாக இருக்கிறோம். 80வது சுதந்திர தின விழா கொண்டாடி விட்டோம். இந்திய பொருளாதாரத்தில் தன்னிறைவு என்பது வெறும் கனவாகவே இருக்கிறது. எல்லோரிடமும் செல்போன் வசதி, எல்லா இடங்களிலும் சாலை, வசதி மின்சார வசதி இருப்பது போன்று தெரிந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடுக்கு குறைவு. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளது. முக்கியமாக, எரிபொருள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள். குடும்ப நுகர்வில் உணவு அல்லாத பொருட்களுக்கான செலவு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தனிநபர் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உற்பத்தி இல்லை. தற்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 95 ரூபாய் என்றால் ஒரு அமெரிக்கர் 95 இந்தியர்களுக்குச் சமம் என்று பொருள். அப்படி என்றால் நாம் பொருளாதாரத்தில் இன்னும் பல மடங்கு முன்னேற வேண்டிய நிலையில் உள்ளோம். டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. பண மதிப்பில், கல்வித்தரத்தில், உற்பத்தியில் மேம்பாடு அடையாமல் என்னதான் விளம்பர அரசியல் மேற்கொண்டாலும் பெரிய மாற்றத்தை உண்டு பண்ண முடியாது.

விளம்பர அரசியல்:

நம் நாட்டில் பாலினம், ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற பல்வேறு காரணிகளை வைத்து அரசியல் செய்யப்படுகின்றன. இந்த அரசியல் ஆரோக்கியமான அரசியலாக இருக்க வேண்டும். மனித இனத்தின் மாண்பை காக்க வேண்டும். வெற்று அரசியல் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது.
விளம்பரங்கள் சமூக மாற்றத்தை உண்டு பண்ணுமா?

கிராமங்கள், நகரங்கள், எல்லா பகுதிகளிலும் குடும்ப விழாக்கள், சமூக விழாக்கள், மாநாடு, அரசியல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இவற்றில் போட்டிகள் நிலவுகின்றன. சுவரொட்டிகள், பெரிய பதாகைகள் வைப்பதை பார்க்கிறோம். அவற்றில் சில அடுத்தவர்களை கோபத்தை உண்டாக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் இருப்பதையும் பார்க்கிறோம். ஒளிவு மறைவாக பேசும் வார்த்தைகளையும், வெளிச்சம் போட்டு எழுதி வருவதையும், புகைப்படங்கள், வழிபடும் தெய்வங்களின் உருவங்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை வைப்பது வழக்கமாகி வருகிறது. இது தனிமனித உரிமையாக இருந்தாலும், பிறரை ஏன் காயப்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

சுவரொட்டிகள், பதாகைகள் வைப்பது விழிப்புணர்வாக இருந்தால் சிறப்பாக இருக்கும். அது வன்முறையை தூண்டுவதாக அமைந்து விடக்கூடாது. விளம்பரம் என்று வைக்கப்படும் பதாகைகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இடம்பெறுகின்றனர். அது அவர்களுக்கு விளம்பரமாக தெரியலாம். அவைகள் பிறருக்கு பாதிக்காமல் இருக்கும் வரை யாரும் கண்டு கொள்வதில்லை. பிறர் மனதை காயப்படுத்தும் வகையில் இருக்கும் போது சாபங்களுக்கு கோபங்களுக்கு ஆளாகின்றனர். அதனைப் போன்ற படங்களுக்கு விளம்பரங்களுக்கு செலவுகள் அவர்களுடையதாக இருந்தாலும், அவர்களின் சமூக அக்கறை இதுவா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. நாம் குடியிருக்கும் தெருவில், ஊரில் அடிப்படை வசதிகள் பல தேவையாக இருக்கும். அதனை யாரும் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. கிராம சபை கூட்டங்களின் மூலம் அதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நல்ல விஷயங்களுக்கு ஒன்று கூடுவது குறைவாக உள்ளது. ஆனால் பல தேவையற்ற விஷயங்களுக்கு ஏன் இவ்வளவு பண விரயம் செய்கிறோம். இதனால் சமூகத்தின் மதிப்பு, நாட்டின் மதிப்பு உயர்ந்திடுமா?

உதாரணத்திற்கு, ஒரு தனி மனிதனுக்கு, ஒரு நாளைக்கு கால் கிலோ அரிசி மற்றும் அதற்கேற்ப பருப்பு காய்கறிகள் தேவைப்படுகிறது. பணமாகவோ பொருளாகவோ செலவழிக்கிறோம். அதற்கேற்ப உற்பத்தி இருக்க வேண்டும். அது சேவையாகவோ, அறிவாக கூட இருக்கலாம். உற்பத்தியே இல்லாமல் நுகர்வு அதிகரித்துக் கொண்டு வந்தால் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம். சார்பு நிலைக்கு ஆளாகிறோம். இது நிலைத்த பொருளாதாரம் வளர்ச்சிக்கு சவாலாகும். இது ஒரு குடும்பத்திற்கு, ஒரு சமூகத்திற்கு, நாட்டிற்கும் பொருந்தும்.

அடிப்படை வசதியே இல்லாத கிராமங்களிலும் திருவிழா என்று வரும்போது அனைவரும் ஒன்று சேருகிறார்கள். குடும்ப விழாவாக இருந்தால் கடன் வாங்கியாவது, ஊர் திருவிழாவாக இருந்தால் மற்ற ஊர்க்காரர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு விழா நடத்துகின்றனர். அதற்கான பணம் தங்களின் வருவாய்க்கு உட்பட்டதா, கடன் வாங்கி செலவு செய்கிறோம். ஒலிபெருக்கி பயன்படுத்துவது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த விளம்பரங்களை பொது இடங்களில் வைப்பதற்கு அரசு வரி விதித்தால் சிறப்பாக இருக்கும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். ஒரு சமூகம், ஒரு நாடு உற்பத்திக்கான முயற்சிகளை சரியாக மேற்கொள்ளாமல், வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லாமல் வெறும் சாதனை விளக்கக் கூட்டங்கள் நடத்துவதும், பெருமை பேசுவதாலும் எந்த மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை.

இந்தியாவில் உற்பத்தி இல்லை என்று சொல்வதற்கில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உற்பத்தி எல்லா காலங்களிலும் இருக்கிறதா என்பதைத்தான் சிந்திக்க வேண்டும். முக்கியமாக உணவு பாதுகாப்பு எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். மனிதனின் ஆரோக்கியம் மிக முக்கியம். மனிதன் சுயசார்புடன் வாழ்வதின் அவசியத்தை பன்னாட்டு போர், இயற்கை பேரிடர், நோய்கள், பொருளாதார சூழ்நிலை போன்றவைகள் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன. நாம் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும். பிரச்சனை வந்த பிறகு உணர்வதால் ஒரு பயனும் இல்லை. வெள்ளம் வருமுன் தடுப்பது போன்று தான் இது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு. மனித சமூகம், அனைத்து உயிரினங்கள், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கையை பாதுகாப்பது நமது கடமை. எது தேவை, எது அவசியம் என்ற சிந்தனை வளர வேண்டும். சமூகப் பொறுப்பு பெருக வேண்டும்.

எனவே குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் பிறர் மதிக்க வாழ வேண்டும் என்பதை விட சுயசார்பு, நிலையான வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம். சிந்திப்போம். செயல்படுவோம்!

கட்டுரை எழுதியவர்: 

– முனைவர் இல.சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
surulivel@tnfu.ac.in

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *