கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் நூலிலிருந்து…..
நெடுவான வாசலிலே நித்திலப் பூங்கோலங்கள்!
– தேனிசீருடையான்
ரொட்டேரியன் முனைவர் இரா. மனோகரன் அவர்கள் பன்முகப் பேராற்றல் பெற்ற மாமனிதர். அவர் சமூக சேவகரும் உதவும் மனோபாவம் கொண்டவரும் மட்டுமல்ல; மிகச்சிறந்த இலக்கிய விற்பன்னர் மற்றும் எழுத்தாளரரும் ஆவார். இதுவரை 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நாவல், பயண இலக்கியங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவை அடக்கம். எல்லாவற்றையும்விட அவருடைய மிகப் பெரிய இலக்கியப் படைப்பு என்றால் “கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப் புற பாடல்கள்” தொகுப்புத்தான். பத்து வருடங்கள் ஊர் ஊராய் அலைந்து சாமான்ய விவசாயப் பெருங்குடி மக்களைச் சந்தித்து, அவர்களுக்குள் ஊற்றெடுத்துக் கிடக்கிற நமது மக்களின் அனுபவத் தேடலில் கிடைத்த இசையுடன் கூடிய பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆவணமாக்கியுள்ளார். \
அனைத்துப் பாடல்களையும் உழுதொழில் செய்யும் பெண் பாட்டாளிகளே பாடியுள்ளனர். குடும்பத்தையும் மண்ணையும் வானமாக நின்று பாதுகாப்பதும் ஊற்றாக நீர் சுரந்து போஷிப்பதும் பெண்களே. இத்தகைய வாழ்வியல் அனுபவங்களை இசைவடிவ ஆவணமாக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் அவர்கள்தான். அந்தக் கடல்நீரைத் தனது படைப்பியக்க ஆற்றல் மூலம் அடுத்த தலைமுறைக்கு உதவும்படி மழையாகப் பொழிய வைத்திருக்கிறார் முனைவர் மனோகரன். சுமார் 1200 பக்கங்கள கொண்ட பெரிய ஆவணம். இது அவரின் சுய கற்பனையில் உதித்த படைப்புகளைவிட உழைப்பையும் சிந்தனைத் திறத்தையும் அதிகம் உட்கொண்டிருக்கிறது. அதாவது நாவல்கள் எழுதுவதை, அல்லது பயண அனுபவங்களைப் பதிவு செய்வதைவிட கடினமான பணி.
”சரித்திரம் தேர்ச்சிகொள்” என்றான் மகாகவி பாரதி. வரலா\று என்பது இ|றந்தகால வாழ்க்கையை உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிற வாழ்வியல் ஆவணம். அதைப் புரிந்துகொண்டால்தான் நிகழ்காலத்தை உணர்ந்து எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான புதிய சிந்தனை உருவாகும். அந்த வகையில் நமது சாமான்ய மக்களின் சென்ற கால வாழ்க்கையைத் தன்னகத்தே ப்திவு செய்து வைத்துள்ள நாட்டுப்புற பாடல்களை ஆவணப் படுத்தியுள்ள முனைவர் மனோகரன் அவர்களுக்கு நன்றி சொல்ல இலக்கிய உலகமும் ஆய்வுலகமும் கடமைப் பட்டிருக்கின்றன. அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இந்த நூல் ஜொலிக்கிறது.
மக்கள் வழிபடும் தெய்வங்களை “சிறுதெய்வம்” என்றும் ”பெருந்தெய்வம்” என்றும் இருகூறுகளாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அது உண்மையா என்று ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இயற்கை வழிபாடு என்பதும் அதைத் தொடர்ந்து குலவழிபாடு என்பதும்தான் இந்த மண்ணின் வழிபாட்டுமுறை. இயற்கையையும் இயற்கையோடு இரண்டறக் கலந்த மனித மூதாதையரையும் வணங்குவதும்தான் நமது ஆன்மீகப் பண்பாட்டின் அடிநாதம்.
ஒரு வம்சத்தின் மூத்த மனிதர் இறந்துபோன பிறகு அவரின் நினைவு நாளில், நீர்நிலைகளுக்குச் சென்று, அவரை நினைத்து வணங்கி வருவது தமிழ்க் குல மரபு. ஆனால் பின்னாளில் அந்த வழிபாட்டுமுறை மாறி, கோயில் கட்டி, சிவன்-பார்வதி, பெருமாஅள்-மகாலட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்குவது என ஆகிவிட்டது. இப்படி வழிபாட்டு முறையை நிறுவனப் படுத்தியது ஆரியக் கலாச்சாரம். தேர் என்ற வாகனத்தைக் கண்டுபிடித்து, தெய்வங்களை அதில் ஏற்றி ஊர்வலம் வந்து மீண்டும் கோயிலுக்குச் சென்று யாரும் நுழைய முடியாத கருவறைக்குள் பூட்டி வைக்கும் நிலை உண்டானது. கால மாறுதல் என்பதைவிட பண்பாட்டு மாறுதல் என்று இதை எடுத்துக் கொள்ளலாம். (ஆனால் இன்றைக்கும் தேர் ஏறாத நமது ஆதி குலதெய்வங்கள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்..)
பலகாலம் வரை ஆரியப் பண்பாட்டை ஏற்காத மக்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். 1933ஆம் ஆண்டு நெல்லைச் சீமையில் இசக்கியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. தேர் இழுக்கும் நாளில் மக்கள் திரள் கோயில் வளாகத்துக்கு வரவில்லை. கோயில் நிர்வாகம் ஒரு யோசனை செய்தது. அது சுதந்திரப் போராட்ட காலமும் அண்ணல் காந்தியடிகளை அதிகம் நேசித்த மக்கள் வாழ்ந்த காலமும் ஆகும். “காந்தியடிகள் இந்தக் கோயிலுக்கு வர இருக்கிறார்” என்று ஊர்முழுக்கத் தண்டோராப் போட்டு அறிவித்தனர். தேருக்கு மதிப்புத் தராத மக்கள் காந்திமகானைக் காண ஆர்வம் கொண்டு கூடிவிட்டனர். அதைப் பயன்படுத்தித் தேர் இழுக்கப் பட்டது. தேர் எதிர்ப்புச் சிந்தனை என்பதைவிட அது சூத்திரர்களின் ஆன்மீக முறை இல்லை என்ற புரிதல் இருந்தது.
அது ஒருபக்கம் இருக்கட்டும். தேர் என்பது இன்றைக்கும் தெய்வ வாகனமாய் நீடிக்கிறது என்பதை நாம் அறிவோம். சைக்கிள்களும் பைக்குகளும் மோட்டார்களும் வந்த பின்னும் தேர் தேவையா என்ற கேள்வி ஒரு பகுதி மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது என்பது ஓர் அறிவியல் சிந்தனை அல்லவா? அப்படியான சிந்தனயைத் தாங்கிய ஒரு ஆன்மீகப் பாடல் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிது. ”வெங்கலப் பானையில பொங்கலிட்டு….” என்ற அந்தப் பாடல், சூலப்புரத்தில் வாழும் கம்பளத்து நாய்க்கர்களின் வழிபடு தெய்வம் மாரியம்மனைத் துதிக்கும் கும்மிப் பாட்டு.
”யானை வாரதப் பாருங்கம்மா; யானை அசஞ்சு வாரதப் பார்ங்கம்மா;
யானமேல நம்ம மாரித்தாய்க்கி அட்டியல் மின்னுது பாருங்கம்மா.
குதிரை வரத பாருங்கம்மா; குருத குலுங்கி வாரதப் பாருங்கம்மா;
குருத வாரத பாருங்கம்மா; குருத குலுங்கி வாரதப் பாருங்கம்மா.”
அடுத்த வரிதான் மிகவும் முக்கியம். யானையும் குதிரையும் தெய்வ வாகனங்களாக மனிதர்களால் நியமிக்கப் பட்ட விலங்குகள். விஞ்ஞானம் வளர்ந்து அதிவேக வாகனங்கள் வந்த பின்னும் இந்த மிதவேக வாகனங்கள் எதற்கு என்ற கேள்வி யாரோ ஒரு மனிதனுக்குத் தோன்றியதன் விளைவே அடுத்து வரும் வரிகள் என்று எண்ணத் தோன்றுகிறது.
”மோட்டார் வாரதப் பாருங்கம்மா; மோட்டார் மோதி வாரதப் பாருங்கம்மா;
மோட்டார் மேல நம்ம மாரித்தாய்க்கி மோதிரமின்னலப் பாருங்கம்மா;
சைக்கிள் வாரதப் பாருங்கம்மா; சைசா வாரதப் பார்ங்கம்மா;
சைக்கிள் மேல நம்ம மாரித்தாய்க்கி சங்கிலி மின்னலப் பாருங்கம்மா.”
கால மாறுதலில் வரும் எல்லா அனுபங்களையும் மனிதமனம் ஏற்றுக் கொள்கிறது என்பதன் பிரதிபலிப்பே இத்தகைய சிந்தனைப் பாடல்கள். (மொழியும் பாடும் முறையும் மாறவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் அதற்கான தேவை இன்னும் உண்டாகவில்லை.)
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பின் மிக முக்கியப் பகுதி முளைப்பாரிப் பாடல். முளைப்பாரி உழவுப் பண்பாட்டின் பிரதிபலிப்பு. எப்படி விதை நடுவது, நீர் தெளிப்பது, பயிர் வளர்ப்பது என்று பாடம் நடத்துவது போல பல பாடல்கள் அமைந்துள்ளன. இது இந்த மண்ணின் ஆன்மீகப் பண்பாடு ஆகும். முதல் இரண்டு நாட்கள் சாமி கும்பிட்டுவிட்டு மூன்றாம் நாள் முளைப்பாரி தூக்கி ஊர்வலம் போவார்கள். பெரும்பாலும் கன்னிப் பெண்கள் முளைப்ப்பாரி தூக்குவார்கள். தங்கள் காதல் இளைஞர்களுக்கு முகம் காட்டும் நிகழ்வகவும் அது அமைந்துவிடுகிறது.
இதையே ஆரியம் வேறு தினுசாய் மாற்றியமைத்து இன்றும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது (பூ) தீக்குழி இறங்குவது. மூன்றாம் நாள் வழிபாட்டில் யாகம் போல் தீ வளர்த்து அதில் இறங்கித் தமது புனிதத்தை நிரூபிக்கும் விழா. யாருக்காவது காலில் தீக்காயம் பட்டுவிட்டால் அவர் குற்றம் செய்தவர் ஆகிறார். மனித சமுதாயத்தை ஆன்மீகத்தின் பெயரால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பழக்கம் தமிழ் தொல்குடி மரபில் என்றைக்கும் இருந்ததில்லை. குளுமையும் நீர்மையும் மட்டுமே நமது வழிபாட்டுக்கான உள்ளடக்கம்.
முளைப்பாரி வளர்க்கப் பயறு வகைகளைப் பயன்படுத்துவதுதான் மரபு. எத்தனைவகைப் பயறு சேர்த்து நீர் தெளிக்கவேண்டும் என்று வகைப் படுத்தும் பாங்கு கலையழகு மிக்கது.
”ஒண்ணாங்கடை தெறந்து ஒரு செரங்க பயறெடுத்து
ரெண்டாங்கட தெறந்து ரெண்டு வகைப் பயறெடுத்து
மூணாங்கட தெறந்து முத்துப் பயறு அள்ளி வந்து
நாலாங்கட தெறந்து நல்ல பயர் அள்ளி வந்து
அஞ்சாங்கட தெறந்து அஞ்சுவகப் பயரெடுத்து.
………………………………………………………………………………………………………………
வட்ட வட்ட ஓடொடச்சு திட்டமுள்ள முளை பரப்பி
முளைபோட வேணுமுன்னு முகூர்த்தமிட்டார் பெங்களெல்லாம்.”
இலக்கிய அழகியல் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கிற எல்லா எல்லைகளையும் கடந்த அழகியல் அல்லவா இந்த வரிகள். பயறு வகைகளைத்தான் முளைப்பாரிக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை முக்கியமானது. சோளம், கேப்பை, நெல் என்று அந்தப் பெண்கள் முடிவெடுக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வேகமாய் வளரக் கூடியது பயறு. அடுத்து சீக்கிரம் வாடாது.
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பின் பெரும்பாலான பாடல்கள் உழவு சமுதாயம் சார்ந்த கிராமத்துப் பெண்களால் பாடப்பட்டவை. காதல், காமம், தெய்வ வழிபாடு ஆகிய அம்சங்கள் உள்ளடக்கக் கூறுகள். காதலில் வெற்றிகளும் தோல்விகளும் இருப்பதுபோல காம வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன. ஆண்களைப் போல பெண்களும் காமத் தோல்வியால் வேறுதிசை நோக்கி நிற்பதும் உண்டு. அதை அவர்கள் எந்த இடத்திலும் மறைப்பதில்லை. காமத்தின் தோல்வியின் விளைவுகளை உழவுப் பெருங்குடிப் பாட்டாளிகள் இலகுவானதாக எடுத்துக் கொண்டனர். வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வாழ்க்கையில் கொலைபாதகச் செயல்களுக்கோ வக்ர மனோபாவத்துக்கோ இடமிருப்பதில்லை.
அதுபோல ஒப்பாரிப் பாடல்களும் விரக்தியின் வெளிப்பாடாய் அமையாமல், இறந்தவரை வழியனுப்பும் விழாவாகவே கொண்டாடினார்கள். “பானை எங்களுக்கு;/ கைலாசம் ஒங்களுக்கு;/ சோத்துப்பானை எங்களுக்கு;/ சொக்கலோகம் ஒங்களுக்கு” என்று வாழும் மனிதர்கள் உயிரிழந்தவர்களுக்கு வழிகாட்டிய தருணம்தான் பாடைகட்டிப் பிணம் தூக்கும் பண்பாடு.
முன்னூறுக்கும் அதிகமான பாடல்கள் கொண்ட தொகுப்பில் ஓரிடத்தில் கூட கொலை பாதகச் சிந்தனையோ தற்கொலை மனோபாவமோ நுழையவில்லை. வாழ்க்கையில் இடையீடு செய்யும் எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் முள் பாதையைக் கெல்லி எறிந்து சமன் செய்யும் கோட்பாட்டையே பிரதிபலிக்கின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு இறந்த காலத்தையும் நிக்ழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் வரலாற்றுக் கைவிளக்கு. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டுமல்ல; கொங்கு மண்டலம், நாஞ்சில் நாட்டுப் பகுதிகள், நெல்லைச்சீமை, நடுநாட்டுப் பரப்பு, வண்டல்வெளி நெல்நாடு, கடலோரப் பகுதிகள் என்று எல்லா நிலங்களிலும் இதுபோன்ற தெம்மாங்குகள் நிறைந்து கிடக்கின்றன.
தமிழ்நாடு அரசு முனைவர் மனோகரன் போன்ற ஆர்வமுள்ள ஆசான்களை நியமித்துத் தொகுத்து முழுமையான ஆவணத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதோடு, ஆய்வு மாணவர்களை ஊக்கப் படுத்தி, அவர்களின் தேடல் ஞானத்தின் வழியாக நமது பழைய வரலாற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகின் ஆதிநிலமாகிய திராவிட நிலத்தின் தொல்குடி மக்களின் வாழ்வியல் நீட்சியைத் தொடர்வதற்கும் அறிவியல்பூர்வமான புதிய பாதைகளைக் கண்டடைவதற்கும் அது உதவக்கூடும்.
தெம்மாங்கு உள்ளிட்ட பாடல்களைத் தொகுத்துத் தமிழ்ப் புலத்துக்குப் பரிசளித்திருக்கிற முனைவர் மனோகரன் அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் அது போதுமானதாய் இருக்கப் போவதில்லை.
நூலின் விவரம்:
நூல்: கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் (Cumbum Pallathakku Nattupura Padalgal)
தொகுப்பாசிரியர்: டாக்டர் இரா. மனோகரன்
வெளியீடு: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
பக்கம்: 1176
விலை: ரூ. 1100/.
நூல் அறிமுகம் எழுதியவர்:
தேனிசீருடையான்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.