சிறுகதை: தினமும் ஆயிரம்…. ச.சுப்பாராவ்

சிறுகதை: தினமும் ஆயிரம்…. ச.சுப்பாராவ்

 

அண்ணாவிற்கு நான் புத்தி சொல்வதா? இதென்ன புதிதாய்?

காலையில் அண்ணி போன் செய்ததிலிருந்து இதுதான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. “மாலையில் ஃப்ரீயாக இருந்தால் வீட்டிற்கு வாருங்கள். அறுபது வயதிற்கு மேல் ஆனவர்கள் இந்த கொரோனா காலத்தில் வெளியில் போகவே கூடாது என்கிறார்கள். இவர் இப்போதுதான் பத்து நாளாக தினமும் ஏதேனும் ஒன்றைச் சொல்லிக் கொண்டு கோர்ட்டுக்குப் போய் வருகிறார். நான் சொன்னால் சத்தம் போடுகிறார். நீங்கள் சொன்னால்தான் கேட்பார்,” என்றார் அண்ணி. நான் சொன்னால் கண்டிப்பாக்க் கேட்பார்தான். ஆனால், அவருக்கு அறிவுரை நான் சொல்ல முடியுமா?

நான் விபரம் தெரிந்து பள்ளி செல்லும் நாட்களில் அவர் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். நான் உயர்நிலை வகுப்புகளுக்கு வந்த போதே வக்கீல் ஆகிவிட்டார். தொழில் தர்மத்தைப் பேணும் பழைய தலைமுறையைச் சேர்ந்த மியூசியம் ரகம் பார் கவுன்சில் நூலகத்தில் வழக்கிற்கான ஆதாரத்திற்காக ஏதேனும் ஒரு நூலிலிருந்து நகல் எடுக்க வேண்டும் என்றால், ஒரு பக்கத்திற்கு பார் கவுன்சில் எவ்வளவு வாங்கிக் கொண்டதோ அவ்வளவுதான் கட்சிக்காரரிடம் வாங்குவார். இரண்டு வரி மனு எழுத இரண்டாயிரம் ரூபாய் எல்லாம் கேட்க மாட்டார். எத்தனையோ சிக்கலான வழக்குகள் ஜெயித்திருக்கிறார். ஆனால், கோர்ட்டு வாசலில் நின்று செய்தியாளர்களிடம் பேசமாட்டார்.  வக்கீல் கோர்ட்டில் மட்டும்தான் வழக்கு சம்பந்தமாகப் பேச வேண்டும் என்பார். என்னைப் படிக்க வைத்தவர். பள்ளி, கல்லூரிப் படிப்பு மட்டுமல்ல. அதைத் தாண்டிய படிப்பும். அவருக்கு நான் எப்படி புத்திமதி சொல்வது?

அடுத்த தெருவில்தான் அண்ணன் வீடு. நான்கு மணி வாக்கில் நான் போகும் போதுதான் அண்ணாவின் கார் வாசலில் சரியாக வந்து நின்றது. டிரைவர் சண்முகம், ‘வாங்க சார். அம்மா, பாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா? ‘ என்றார். அண்ணாவின் கைப்பையை உள்ளே கொண்டு வந்து வைத்தார்.

அண்ணி காப்பியுடன் வந்தார்கள். தினமும் இந்தக் கதைதான். கொரானாவிற்கு முன்னால் கூட இப்படி தினமும் கோர்ட்டுக்குப் போனதில்லை. வீட்டில் உட்கார்ந்தபடி எழுத்து வேலைதான்.  ஜுனியர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். யாராவது ஒரு கட்சிக்காரர் ஜுனியர்கள் கூடாது, பெரியவர் தான் வந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றால் மட்டுமே போய்க் கொண்டிருந்தார். இப்போது என்னமோ தெரியவில்லை, தினமும் ஏதாவது ஒரு வேலையைச் சொல்லிக் கொண்டு போய் விடுகிறார். அண்ணிக்குக் கோபமான கோபம். என்னவோ, பிபி, சுகர் மாதிரியா, வந்தா நம் மட்டுக்கும் இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும் என்று இருப்பதற்கு ! இது நம்மோடு முடிகிற விஷயம் இல்லையே ! சுற்றி இருக்கிறவர்கள் எல்லோரையும் பாதிக்கும் விஷயமல்லவா? தமிழ், இங்கிலீஷ் ஹிண்டு, பிரண்ட்லைன், போதாதற்கு டிவி விவாதம் என்று எல்லாம் படித்து, பார்த்து, கொரோனோ பற்றி பேசச் சொன்னால், தண்ணீர் குடிக்காமல் இரண்டு மணி நேரம் முழங்குவார். தானே ஏதாவது மருந்து கண்டுபிடிக்காதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி சித்தாவில் என்ன சொல்கிறான், ஆயுர்வேதத்தை நம்பலாமா? ஹோமியோபதியில் எல்லோருக்கும் சரியாகுமா? என்று நாள் முழுக்க பேசுவார். எல்லாம் தெரியும். ஆனால், வயதானவர்கள் வீட்டோடு கிடக்க வேண்டும் என்பது மட்டும் தெரியாது. அண்ணி பொரிந்து தள்ளுகிறார்.

Latest Tamil News Online | Breaking News in Tamil | newstm

அண்ணா அப்படியே சோபாவில் உட்கார்ந்தபடி காப்பியை வாங்கிக் கொண்டார். ‘புத்தி சொல்ல உன்னை கூப்பிட்டாளோ?‘ என்ற மாதிரி பார்த்தார். வார் வைத்த பேண்ட் மட்டும் போட்டால் அப்படியே ரங்காராவ்தான். நான் நாட்டாண்மை பசுபதி சரத்குமார் மாதிரி ‘இல்லண்ணா… ‘ என்று ஆரம்பித்தேன். ‘இன்றைக்கு அவர் கோர்ட்டுக்கு எதற்காகப் போனார் தெரியுமா? சேம்பரில் ஒரு பழைய கட்டைத் தேட வேண்டுமாம். சேம்பரைத் திறந்துவிட, வாட்ச் மேனுக்கு நூறு ரூபாய் தந்து, பின்வாசல் வழியாகப் போய், சேம்பரில் உட்கார்ந்து இருந்து விட்டு வந்திருக்கிறார். இந்த மனிதருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,‘ அண்ணி கோபத்திலிருந்து அழுகைக்கு படிப்படியாக மாறி வருவது மாதிரி இருந்தது.

‘அபவ் ஃபிப்டின்னு நானே பாதி நாள் ஆபீஸ் போக பயந்து லீவ் போட்டு வீட்ல இருக்கேன். இப்ப நீங்க கோர்ட்டுக்கு வர்லன்னு யாரு என்ன சொல்லப் போறாங்க?‘ என்றேன். ‘எதையாவது இழுத்து விட்டுக் கொண்டால் எல்லாருக்கும்தானே கஷ்டம்‘,

‘சரி, ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன். இவள் உன்னை கூப்பிட்டு இப்படி ரகளை செய்வதால் சொல்கிறேன்,‘ என்றார் அண்ணன்.

டிரைவர் சண்முகத்தின் அப்பாவிற்கு கிட்னி மாற்று ஆப்பரேஷன் செய்திருக்கிறார்களாம். அவருக்கு தினமும் மாத்திரை செலவிற்கு ஆயிரம் ரூபாய் ஆகுமாம். பெரியாஸ்பத்திரியில் மாதாமாதம் ஒன்றாம் தேதி ஓசியில் குடுப்பார்களாம். இவரை மாதிரி 80 – 100 பேர் இப்படி மாத்திரை வாங்கிக் கொள்கிறார்களாம். அந்த மாதிரி நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி ரொம்பக் குறைவாம். முணுக்கென்றால் இன்ஃபெக்ட் ஆகிவிடுமாம். தெருவில் ஒரு நாய் செத்துக் கிடந்தால் கூட அன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாதாம். இந்தக் கொரோனா வந்ததிலிருந்து அந்த மாத்திரையை ஜிஹெச்சில் சரியாகத் தருவதில்லையாம். இன்று, நாளை என்று அலைக்கழிக்கிறார்களாம். அங்கே உள்ள கூட்டத்திற்கு அங்கே போகவே இவர்களுக்கு பயம். வெளியில்தான் வாங்குகிறார்கள். சாதாரண டிரைவர் அப்பாவிற்கு மாசம் முப்பதாயிரம் எப்படி செலவழிப்பான்?

அண்ணா காலி டம்ளரை காலடியில் வைத்தார். சண்முகம் ரோசக்காரன். வண்டி ஓட்டாத நாளுக்கு சம்பளம் வாங்கிக் கொள்ள மாட்டான். உனக்கு பணம் தருவதற்காக, கோரிப்பாளையம் வரை காரில் சும்மா ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவோம் என்று அவனிடம் சொன்னால் சங்கடப் படுவான். அதுதான் ஏதேதோ காரணம் கண்டுபிடித்து தினமும் ஒரு நடை கோர்ட்டுக்கு போய்விட்டு வருகிறேன்,‘ என்றார்.

Image may contain: 1 person, eyeglasses
Subba Rao

‘காரை விட்டே இறங்க மாட்டேன். சண்முகத்திடமே வந்த வேலையைச் சொல்லி அனுப்பி முடித்து விடுவேன். எல்லாம் நானாக ஏற்படுத்திக் கொண்ட வேலைதானே, அவன் வேலை பார்த்து தான் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். நம் பணத்திமிருக்கு அவனுக்கு அள்ளிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டான் ரோஷக்காரன்,” என்றார் ரங்காராவ் வழுக்கையைத் தடவிக் கொண்டே.

எனக்கும் அந்த வழுக்கையைத் தடவ வேண்டும் போல் இருந்தது.

Show 3 Comments

3 Comments

  1. JEYASREE S.

    மிகவும் அருமை.

    • ச.சுப்பாராவ்

      நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *