தலித் மக்கள் இந்துக்கள் அல்ல (Dalits are not Hindus) | மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் - அன்னை மீனம்பாள் (Annai Meenambal)

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல – அன்னை மீனம்பாள்

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல… மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும்  – அன்னை மீனம்பாள் 

ஒரு பெண் தன் வாழ்நாளில் இத்துணை பெரிய உயர்ந்தவை தொட முடியாத அளவிற்கு தன் அறிவால், ஆற்றலால், உழைப்பால், செயல் திறத்தால், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பணியையும் பயன்படுத்தி அந்த பதிவிகளை எல்லாம் அலங்கரித்தவர் அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj).

அது ஒரு சுதந்திரப் போராட்ட காலம். இந்திய திருநாடை வெகுண்டெழுந்து விடுதலை போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது 1938 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மொழி திணிப்பை எதிர்த்து களம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒருபுறம் இந்திய விடுதலைப் போராட்டம். மற்றொருபுறம் மொழிப்போர் இன்னொரு புறம் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் விடுதலை மற்றும் பெண் விடுதலை என்று நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து அரசியல் களம் புகுவது அரிதாக காணப்பட்டபோது, பெண்களின் நிலை குறித்து கூற வேண்டிய அவசியம் இல்லை.

இன்றைக்கும் பெண்களுக்கு பெயர் அளவிற்கு கூட அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க மறுக்கும் சூழலில், திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமான ஆளுமையாக விளங்கியவர் அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj). அவர் ஒருபோதும் பட்டத்துக்காகவும் பதவிற்காகவும் மக்கள் பணியாற்ற முன்வரவில்லை. என்றாலும், தனக்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்காமல் தனக்கு கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அடித்தட்டு மக்களுக்கும் பெண்களைகளுக்கும் சமூக விடுதலை அடைவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாகப் பார்க்கவியலும். அல்லது அந்த வாய்ப்புகளைப் பெருந்தன்மையுடன் ஏற்று அலங்ரித்தார் என்றும் கூறலாம்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் ஒரு சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி, சமூக செயற்பாட்டாளர், கவுன்சிலர், கௌரவ மாகாண நீதிபதி, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர், தொழிலாளர் ஏ ஐ எஸ் சி எஸ் எஃப் உறுப்பினர், சென்னை மாகாண ஆலோசனை குழு உறுப்பினர், முதல் தலித் பெண் ஆளுமை, ஈவெராவிற்கு பெரியார் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர், போருக்குப் பின் புணரமைப்பு குழு உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரிக் கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர், சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நல சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழில் கூட்டுறவு குழு தலைவர், சென்னை மருத்துவ மனைகளின் ஆலோசனை குழு உறுப்பினர், அடையாறு மகளிர் மீனாட்சி விடுதி நடத்துனர், லேடி வெல்டிங் கல்லூரி தேர்வு குழு தலைவர் இப்படி எண்ணற்றப் பதவிகளை அலங்கரித்து பெருமை சேர்த்த ஆளுமை. அவர் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டதைப் போன்று பெண்கள் முன்னேற்றத்திற்கும், நாட்டு விடுதலைக்கும், மொழிப்போருக்கும் பாடுபட்டு கால பேரேட்டில் தன் நற்பெயிரை கலங்கமில்லாமல் கற்பித்து பதிவு செய்தவர்தான் அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj).

அன்னை மீனாம்பாள் 1904 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி வாசுதேவ பிள்ளைக்கு மகளாக பிறந்தவர். அவருடைய குடும்பம் அடிப்படையில் செல்வாக்குமிக்க குடும்பமாகவும் சமூக செயல்பாட்டில் அக்கறை கொண்ட குடும்பமாகும் இருந்துள்ளது. அவருடைய பாட்டனார் மதுரைப்பிள்ளை கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்பட்ட செல்வந்தராக திகழ்ந்தவர்.

பர்மாவில் முடிசூடா மன்னர் என்று எல்லோராலும் புகழப்பட்டவராகவும் மாஜிஸ்ட்ரேட்டராகவும் கவுன்சிலராகவும் 30 ஆண்டுகள் இருந்தவர். இந்து சமூகத்திற்கு தலைவராக இருந்து வரும் இந்து – முகமதியர் முன்னேறுவதற்கு தம் பெயரால் ஓர் உயர்தர பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தியவர். தமிழ் மொழியை பர்மாவில் பரவச் செய்தவர் ராவ் பகதூர் பெ.மா. மதுரைப்பிள்ளை அவர்கள் பேத்திதான் திருவாட்டி மீனம்பாள் சிவராஜ் என்று சிங்கப்பூர் பத்திரிக்கை ஒன்று அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj) அவர்களின் வரலாற்று குறிப்பில் 55 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பதை ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல (Dalits are not Hindus) | மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் - அன்னை மீனம்பாள் (Annai Meenambal)

மேலும் மதுரை பிள்ளையை பற்றி புலவர் பெருமக்கள் பாடிய பாடல்கள் தொகுப்பை மதுரை பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 1045 பக்கங்களை கொண்ட நூலாகவும் வெளிக்கொணரப்பட்டது என்பது சிந்திக்கத்தந்தது.

அன்னையர் இளம் வயது முதற்கொண்டு சமூக விழுமியங்களை உள்வாங்கிய காரணத்தால், அவருக்கும் சமூக அக்கறை உண்டாயிற்று. அதன் பொருட்டு பள்ளி, கல்லூரி கல்வியை முடித்த பின்பு பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினார். அவர் எதற்கும் எப்பொழுதும் அச்சம் கொண்டதில்லை. துணி மிக்கவர். அப்படிதான் அவருடைய பொது வாழ்க்கை எதிர்ப்பு உணர்ப்புணர்விலிருந்து தொடங்கியது.

1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகின்றன? அடுத்த கட்டமாக என்ன மாதிரியான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதை கண்டறிவதற்காக சைமன் குழுவை அமைத்தனர். அந்தக் குழு இந்தியா வருவதை விரும்பவில்லை. அந்த குழுவுக்கு சாதி இந்துக்களும், சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்படி நாடு முழுவதும் சைமன் குழுவே திரும்பிப்போ என்று எதிர்ப்பு கணைகள் எல்லா திசைகளிருந்து வந்தது. ஆனால் சைமன் குழுவை ஆதரித்து பேசியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அவர்களுள் டாக்டர் அம்பேத்கர் முக்கியமானவர்.

டாக்டர் அம்பேத்கரைப் போன்று அன்னை மீனம்பாள் சைமன் குழுவை வரவேற்றும் ஆதரித்தும் பேசினார். பெரும்பான்மையாக உள்ள சாதி இந்து சமூக மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால் நாடு விடுதலை அடைவதையும் வெள்ளையர்களை எதிர்த்து போராடும் சாதி இந்துக்கள் அடிப்படையில் சொந்த நாட்டில் பிறந்த பூர்வ குடிகளை கண்டு தீண்டத் தகாதவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், ஒதுக்கத்தக்கவர்கள் என்று சொல்லி புறந்தள்ளி வைத்தனர். மண்ணின் மைந்தர்கள் சொந்த நாட்டிலே அகதிகளாக பார்க்கும் மனோநிலை மாற வேண்டும் என்றால் சைமன் குழுவை ஆதரித்தாக வேண்டும் என்ற எண்ணம் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கு இருந்தது. அந்த ஒத்த சிந்தனை அன்னை மீனம்பாளிடமும் இருந்ததையும் காண முடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக மீனாம்பாள் மேற்கொண்ட முதல் அரசியல் பணி என இந்நிகழ்வில் கூறவியலும் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

1937 ஜனவரி திங்கள் 31 ஆம் நாள் திருநெல்வேலி ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj) ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உரையில் பிரதான நோக்கம் ஒற்றுமையை வலியுறுத்தியே அமைந்திருந்தது.

சாதி விடுதலை, பெண் விடுதலை, பூனா ஒப்பந்தம் என்று அனைத்து தளங்களையும் உள்ளடக்கி எழுச்சி உரை ஆற்றினார். அதில் சங்கம் அமைத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தன் கையே தனக்குதவி என்றவாறு நாம் யாவரும் ஒன்றுபட்ட நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றுக்கு பாடுபட வேண்டும். நாம் யாவரும் ஒன்று படுவதற்கும் நம் சமூகம் முன்னேற்றம் அடைவதற்கும் நமக்கு வேண்டியவற்றை போராடி பெறுவதற்கும் நமக்குள் போதிய சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும்.
சங்கத்தின் மூலமாக நாம் அளப்பரிய நன்மைகள் அடையலாம். நமது சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் நாம் யாவரும் ஒன்று பட்டு நமக்குள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சங்கங்கள் ஸ்தாபிப்பதின் மூலமாக நாம் எவ்வளவோ நன்மை அடையலாம்.

நாம் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதால் நமக்குள் பரஸ்பரம் ஒற்றுமை ஏற்படும்.

நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய சௌகரியங்களை சாதித்துக் கொள்வதற்கு சங்கங்கள் மூலமாக மனு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

சங்கங்கள் மூலமாக சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் இராப்பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து பகலில் வேலைக்கு போய் திரும்பும் சிறியோர் பெரியோர் யாவரும் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் செய்வதற்கு அனுகூலமாக இருக்கும்.

நமது சமூகத்தினரும் மற்றவர்களால் செய்யப்படும் அட்டூழியங்களை காருண்யம் பொருந்திய அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து கொள்வதற்கு சங்கத்தின் மூலமாக மனு அனுப்பலாம். இன்னும் நமக்கு வேண்டியவனவற்றை எல்லா சௌகரியங்களையும் சங்கத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் (பக்.8,9. தென்னிந்திய புத்த விஹார் பதிப்புக்குழு)

மேலும், ஒரு குடும்பமோ, ஒரு சமூகமோ, ஒரு தேசமோ முன்னேற்றம் அடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதிய பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையை குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய எண்ணமும் பல காலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட வாழ்வில் முன்னேற எல்லா உரிமைகளையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும் என பேசினார்.

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல (Dalits are not Hindus) | மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் - அன்னை மீனம்பாள் (Annai Meenambal)
அன்னை மீனாம்பாள் சென்னை மாநாட்டில் (Annai Meenambal in the Chennai Meeting)

விடுதலை என்னும் பெரும் கனவு அவரிடம் எப்பொழுதும் குடி கொண்டிருந்தது. அதனால் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மக்களை ஒன்றிணைக்கும் எண்ணத்தில் செயல்பட்டார். வெறும் மேடைக்கென்று அலங்கார தொனியில் உரையாடி விட்டு காணாமல் போய்விடவில்லை. மாறாக களப்போராளியாகவும் மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தவர்.

1937 ஆகஸ்ட் 10ல் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி பேசியது முதல் தமிழகம் எங்கும் தமிழ் அறிஞர்களால் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு, சென்னை நகரை மையமாகக் கொண்ட போது தான் போராட்டம் மறியல், கைது என்று அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதுவரை பேசி முன்னெடுத்து வந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றம் கண்டது. அப்பொழுது சென்னை நகர் இந்தி எதிர்ப்பு பிரச்சார பொறுப்பை மீனம்பாள்சிவராஜ் தலைமையேற்று நடத்தி இருந்தார். கற்றறிந்தவர்களின் கருத்தியல் பிரச்சாரமாக இந்தி எதிர்ப்பு வெகுமக்கள் போராட்டமாக மாறியதற்கு அன்னை மீனம்பாள் சிவராஜ் (Annai Meenambal Shivaraj) பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அன்னை மீனாம்பாள் போர் குணம் மிக்கவர் என்பதற்கு பல்வேறு சான்றுகளை கூற முடியும். ஒன்று இந்தி எதிர்ப்பு போரில் உண்ணாவிரதம் இருந்த ஜெகதீசன் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியவர்.

ராஜ மகேந்திரபுரம் ஸ்டாலின் ஜெகதீசன் அவர்கள் 1.5.1938 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். ஒருவேளை அவர் உண்ணா நோன்பு இருந்து இறக்க நேர்ந்தால், அவரை என்ன செய்வது? எங்கு கொண்டு சேர்ப்பது? அவருடைய சவத்தை வைத்து ஆளுநர் மாளிகையில் போராட்டம் நடத்துவது இப்படி எண்ணற்ற கேள்விகளுடனும், எண்ணற்ற குழப்பங்களுடனும், பதட்டத்துடனும் அரசாங்கத்தை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஜெகதீசன் பகலில் உண்ணா நோன்பும், இரவில் யாருக்கும் தெரியாமல் உணவு உட்கொண்டும் நாடகம் நடத்தியுள்ளார். இதை அறிந்த அன்னை மீனாம்பாள் அம்பலப்படுத்தினார். இது இயக்கத்திற்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பெரியாரும் மீனம்பாளும் பேசிக் கொள்ள முடியாத அளவிற்கு தர்ம சங்கடம் ஆயிற்று.

அன்னை மீனாம்பாள் இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாக இருந்தவர். அவர் கௌரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு அன்னையார் அளித்த பதிலும் பின்வருமாறு. உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடு தான். நீதிமன்றத்தில் அவர் வழக்குரைஞர். நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதில் அளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும் வழக்கையும் மக்களின் பல்வேறு பிரச்சனைகளையும் பெரும் அளவு புரிந்து கொண்டார் (ப.19 மேலது).

இப்படி சொல் ஒன்று, செயல் ஒன்று என்று இல்லாமல் தான் கொண்ட கொள்கைக்கு எந்த முரண்பாடும் இல்லாமல் தெளிந்த நீரோடை போன்று வாழ்ந்து காட்டியவர் அன்னை மீனாம்பாள்.

எல்லோருக்கும் எல்லா நேரங்களில் சமூக உணர்வு இருப்பதில்லை. சில நேரங்களில் அது அயர்சிசியைக்கூட தந்துவிடும். உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, நீண்ட பயணம், சலிப்பு, வெறுப்பு, அதிர்ப்தி, ஏமாற்றம் என்று எல்லாம் சூழ்ந்தது தான் பொது வாழ்க்கை. அதனால் தான் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பலர் காணாமல் போவதற்கு காரணமாகவும் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டோ அல்லது சம்பாதித்துக் கொண்டோ ஒதுங்கி விடுகின்றனர். எண்ணம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதே அளவுக்கு மக்கள் பணியாற்ற வருபவருக்கு உயரிய சிந்தனை இருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

உடல் நலிவுற்று ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய பிறகும் 97 வயதில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூத்திர சட்டியைச் சுமந்து சென்று மக்கள் முன்னால் நின்று தன் இறப்பிற்கு முந்நாள் வரை மக்களிடம் எழுச்சியுரை ஆற்றியவர் தான் தந்தை பெரியார். புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பணிகள் இன்னும் மகத்தானது. தன்னுடைய இளமை, அறிவு, ஆற்றல் அனைத்தையும் மக்கள் விடுதலைக்காகவும், சாதி விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் பயன்படுத்தினார். மாமேதை மார்க்ஸ் உலக வல்லாதிக்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்க விடுதலை முன்னெடுத்து களமாடினார். காரல் மார்க்ஸ் வகுத்துத்தந்த பாதையை புரட்சியாளர் லெனின் இறுகப்பற்றிக் கொண்டார். அதனால்தான் உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றார். இப்படி காலம் முழுவதும் மக்கள் பணியாற்றியவர்களை காலமும் கண்டெடுத்து முத்துப்போன்று, மாணிக்கம் போன்று நினைவில் சேகரித்து வைத்துக் கொண்டுள்ளது. இவர்கள் எல்லாம் விலை உயர்ந்த அணிகலன்களை விட உயர்வானவர்கள்… உயர்ந்தவர்கள். அவர்கள் இன்று இல்லையென்றாலும் நினைக்கப்பட வேண்டியவர்கள்,பாராட்டுக்குரியவர்கள், போற்றுதலுக்குரியவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.

இன்று அன்னை மீனாம்பாள் உயிருடன் இல்லை. அவர்கள் இறந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று அவர் பிறந்த நாள் நூற்றாண்டு காணும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். ஆனாலும் பெரியார் என்று உச்சரிக்கும் போது அன்னை மீனாம்பாள் நினைவுக்கு வந்து விடுகிறார். அன்று ஈவெராவிற்கு பெரியார் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் அன்னை மீனாம்பாள் என்பதை வழக்குரைஞர் ஓவியா பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியாக முதன் முதலாக கப்பலோட்டிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னை மீனம்பாள். தேச சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வரும்போது முதலில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தான் இணைகிறார். பெரியாரிடம் மிகவும் அன்பு பாராட்டியவர். பெரியாருடன் இணைந்து பல பணிகளில் செயல்பட்டவர்.

காஞ்சிபுரத்தில் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பெரியார் கலந்து கொண்டார். மீனாம்பாள் தான் அந்த மாநாட்டில் கொடியேற்றுகிறார். நீலாம்பிகை அம்மையார் தான் தலைமை தாங்குகிறார். இப்படி பல பெண்கள் இருக்கின்றனர். அந்த மாநாட்டில் பெரியாரை இனி பெரியார் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என அந்த பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். இது மிகவும் வித்தியாசமான தீர்மானம். வேறு எப்படியும் பெரியாரை அழைக்கக்கூடாது என்பதுதான் அந்த தீர்மானம் என்ற பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.

தலித் மக்கள் இந்துக்கள் அல்ல (Dalits are not Hindus) | மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் - அன்னை மீனம்பாள் (Annai Meenambal)

தந்தை பெரியாரிடம் அன்பு பாராட்டியதைப் போன்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரிடமும் அவருடைய அன்பும் மரியாதையும் உயர்ந்து இருந்தது.

தீண்டாமையை ஒழிப்பது ஆண்களை விட பெண்களின் கையிலேயே உள்ளது என்று 1927 டிசம்பர் 25ல் மனுஸ்மிருதியை எரித்து உரையாற்றிய பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் அன்னை மீனம்பாளை சகோதரி என்று பாசத்துடன் அழைத்தார்.

சென்னை பல்கலைக்கழக செனட்டில் முதல் தலித் பெண் உறுப்பினர் ஏ ஐ எஸ் சி எஸ் எஃப் எனப்படும் அகில இந்திய பட்டியல் சாதிகள் சம்மேலனத்தின் முதல் பெண் தலைவர். இந்த அமைப்பின் தேசிய பெண்கள் மாநாடு சென்னையில் 1944 நடைபெற்றது. அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் கலந்து கொண்ட இந்த மாநாட்டுக்கு அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார். 1945 இல் மகாராஷ்டிராவில் அதே அமைப்பு மாநாடு நடத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இந்த மாநாடுகளில் அவர் பேசியது சாதிய ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை, பெண் விடுதலை குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலை மற்றும் அரசியல் அதிகாரங்கள் பற்றியும் பேசினார்.

மே6, 1945 இல் நடந்த அந்த மாநாடு நிறைவடைந்த பின் டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர் கையாலே சமைத்து உணவளித்ததை மெச்சத் தகுந்த அளவிற்கு அன்னை மீனம்பாள் பாராட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் சட்ட அமைச்சர் பதவி வகிக்க வேண்டுமா என்று அம்பேத்கர் தயங்கிய போது அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றவர் மீனம்பாள் அம்மையார் என்கிறார் வழக்குரைஞர் ஓவியா அவர்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து வெளியே வெளியேறப் போவதாக கூறி வெளியிட்ட அறிக்கையை குடியரசு இதழ் வரவேற்றது. அம்முடிவை ஆதரித்து 30.11.1935இல் எழும்பூர் ஏரியில் ஸ்பர்டாங் ஆதி திராவிட சங்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன் நடந்தது. அதில் அன்னை மீனம்பாள் புரட்சியாளர் அம்பேத்கரின் மதமாற்ற முடிவை வழிமொழிந்து சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் சிறப்புரை ஆற்றினார் (பல.19, ஏ.பி.வள்ளிநாயகம் தென்னிந்திய புத்தகம் பதிப்பகம்).

அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் தலித் மக்கள் இந்துக்கள் அல்லர். மதமாற்றமே அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் என்ற சிந்தையை வழிமொழிந்ததை இங்கு குறிப்பிட்டு கூற வேண்டும்.

காலம் முழுவதும் ஓய்வறியா சூரியனாய் உழைத்து பெண் குளத்துக்கு மட்டுமல்லாமல்,ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அன்னை மீனம்பாள் பெருமை சேர்த்துள்ளார். இந்த நூற்றாண்டிலும் சனாதன சக்திகள் மக்களை சாதியைச் சொல்லியும், மதத்தின் பெயராலும் பிளவு படுத்தி வருவதை கண்கூடாக காண முடிகிறது. ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக முரண்பாட்டின் மொத்த வடிவம் தான் இந்து மதம். இந்து மதம் தனக்கான ஓர் அளவுகோலை வைத்துள்ளது. அந்த அளவுகோலின் பெயர்தான் சாதி. பிரம்மாவின் தலையில் பிறந்தவர் பிராமணர். பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்கள். சூத்திரர்கள் என்றால் முறை தவிறிய பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் என்று பொருள். அவர்களை தேவிடியாளின் பிள்ளைகள் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரும் அவர்களின் பார்வையில் சூத்திரர்கள். இந்த சூத்திர பட்டத்தை ஒழிப்பதற்காக பெரியார் அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் போராடியுள்ளனர்.

திராவிட இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின்றன. சாதி என்பது அடையாளம் அல்ல அது ஓர் அவமானச் சின்னம் என்று மக்கள் மனங்களில் மறுமலர்ச்சி செய்து வருகின்றனர். தங்கள் பெயருக்கு பின்னால் சாதி அடையாளங்களையோ அல்லது சாதிப் பெயரையோ பயன்படுத்துவது தவறு என்று சொல்லி, மக்கள் மனங்களில் இருந்து சாதி வெறியை வெளியேற்றி போராடிய போராளிகளின் உழைப்பால் இன்று தமிழகம் சமய பூசல்களிலும், வகுப்பு வாதங்களிலும், சாதி சண்டைகளிலும் தப்பி பிழைத்து மற்ற மாநிலங்களுக்கு (தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு சில இடங்களைத் தவிர) முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இழிவை எதிர்த்து புத்தர், சாதி எதிர்ப்பைத் தொடங்கி வைத்தார். வள்ளுவரும் தன் பங்கிற்கு சாதியை எதிர்ப்பதற்கு திருக்குறளைப் பயன்படுத்தினார். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் இதை இறுகப் பற்றிக் கொண்டனர். அவர்கள் கட்டிக் காப்பாற்றிய விடுதலை பெரும் நெருப்பை அடுத்த தலைமுறைக்கு கவனமாக கடத்தினர்.

அவர்கள் இறுக பற்றிக் கொண்டதை போன்று அன்னை மீனாம்பாள் உள்ளிட்ட தலைவர்கள் அதைக் காப்பாற்றி இளம் தலைமுறையினரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.

பிரச்சனைகள் நமக்கு பல வழிகளில் வந்து கொண்டு தான் இருக்கும். நாம் எதை குறித்து கவலைப்படாமல் இந்த பூமியில் பிறந்த நல்ல காரணத்திற்காக நாமும் நம்முடைய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். நேரடியாக பொது வாழ்க்கையில் வர இயலவில்லை என்றாலும் கிடைக்கும் நல்வாய்ப்பை பயன்படுத்தி பொதுப்பணி ஆற்ற வேண்டும். இதுதான் டாக்டர் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் அவர்கள் வழிகளில் வெளிவந்த அன்னை மீனம்பாளும் நாம் செய்யும் நன்றி கடன்.

கட்டுரையாளர்:

பேரா. எ. பாவலன்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *