ப.தனஞ்ஜெயன் கவிதைகள்



1,
விருந்தாளியாக வந்த போது
அழகான வரவேற்பு அனைவருக்கும்
பறந்து வந்து
படர்ந்த உடலெங்கும்
ஆழத்தில் கதவுகள்
இங்குச் சிம்மாசனங்கள்
தேவையில்லை எனக்கு
உன்னிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்
அழகான அர்த்தங்களை
நான் வரவேற்கிறேன்
உன்னை இந்த உடலில்
ஆனால்
புரிந்து கொள்ளமுடியவில்லை
உன் தரிசனத்தை
உன்னைக் காதலிக்கிறது
என் உணர்வுகள்
நான் ஒரு மீனைப் போல்
துடிக்கிறேன்
உன் கடலிலிருந்து
அடிக்கடி
சில கணம் தூக்கி வீசுவதால்.

2,
பழைய சாதத்தை மாட்டுத் தொட்டியில் போடுவது வழக்கம்
இன்று மாடுகள் நிறைய இல்லை
பழைய சாதம் மாடியைப்பார்க்க
வந்தது
வீட்டு மாடிக்கு சில பறவைகளும் காகங்களும் வருவது வழக்கமாகிப்போனது
உணவைத் தேடி அணிலும் வந்தது
பழைய சாதம் என்ற பாகுபாடு பார்க்காமல்
எடுத்துச்சென்றது பறவை
பழத்தைச் சாப்பிட்டுப் பழகிய
அணில் மட்டும்
சாதத்தைச் சாப்பிடப் பழகியதை
தினந்தோறும் பார்த்துக்கொண்டிருந்தேன்
ஒரு கதிர் சில கொட்டைகளை
கொறித்தவை எல்லாம்
சாதத்திற்கு மாறிவிட்டது
எல்லாம் மாறிவருவதும்
அழிந்து வருவதும்
வியப்பாகத்தான் இருந்தது
மாடிக்கு வந்த அணிலுக்கு.




3,
கணித நதியின் கட்டுக்குள்
அடங்காத தூரத்தைப்
பார் என்றால்
எப்படிப் பார்ப்பது
வான் வழி பரிதியின்
ஒன்பது குடும்பங்களில்
சோதிட கணக்குகள்
பிரபஞ்சத் துளியில்
உயிர்களுக்கு
யுகங்களில் சில நாள்
வட்டப்பாதையில் விலகி
காலவெளியின்
கணக்கற்ற நிமிடங்கள்
கண்டறியா விலகல்கள்
பரிணாமம் படபடக்க
டார்வினின் குரங்கொன்று
கெக்கலித்தது
இன்றோ
டோலி ஆடு சோதனையில்
அழகான பிரவாகத்தின்
ஆராய்ச்சியில் கடவுளின் கருணையில்லை
நட்சத்திரத்தின் சிறகுகள்
அழைத்துவிட
ஒளி அழைக்கிறது
பல கோடி மைல்களுக்கும்
திசையெங்கும்
அணுவுக்குள் அணு அடங்கி
பிறந்தது E = mc^2
சோதிட கணக்குகளைப் பொய்க்கச்செய்தது அறிவியல் சூத்திரங்கள்
ஜப்பானில் காகித கொக்கு
செய்து கரைந்து போனாள் சடகோ சசாகி
அந்த கொக்கின் சிறகுகள்
அமைதியை எழுத உலகம் முழுவதும் பறக்கிறது
அவள் உடலில் வசித்த பழைய அணுக்களின் வாசம்
இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது
டார்வினின் புதிய குரங்குகள்
ஈன்ற குட்டிகள் குளறுபடிகள்
எங்கோ ஒரு குரல்
வெடிக்கிறது
இந்த பெருவெடிப்பின் மூலையில்
கரை காணாத கணித நதிக்குள்
நீந்தி மகிழ்கிறது உலகம்
முள்ளிவாய்காலின் உதிர நதி
தமிழ் அணுக்களாய் உறைந்துபோனது
எல்லையில் பதற்றம்
மனதின் எல்லை விரிகிறதா
கண நேரச் சுருக்கம்
மீண்டும் வால் முளைக்கிறது மனிதர்களுக்கு.

4,
காலக் களிம்பாய்
கல் சமைந்து
மலர் சூடிக்கொண்டது
விக்ரஹம்
அவதாரத்தில் ஆயிரம்
கதைகளுக்கு மத்தியில்
நன்மை செய்வதாய்
அம்ச முகங்கள்
அரை நிர்வாணங்கள்
கால வெளியில்
பகலிலும் இருளிலும்
நீர் இசை
காற்று இசையை
பருகி நகர்கிறது விக்ரஹம்
கடவுள் கருவறையில்
பிறக்க முயல்கிறார்
மனிதனுக்கு
இந்த கேலக்ஸியில்
எதுவும் விளங்கவில்லை
சக மனிதன் புலம்பிக்கொண்டிருக்கிறான்
அருள் பாலிக்கும்
ஒரு மனிதனின் வரவைத்தேடி
காலக் களிம்பாய்
மனிதன் சமைந்து
மனிதனைச் சூடிக்கொள்வது
மனிதப் பிரதியின் சாயை
அந்த சாயைப் பார்த்துச்
சிரிக்கிறது விக்ரஹம்.



5.
உடலைத் தொலைத்துவிட்டுத்
தேடுகிறோம்
அது மாத்திரை வில்லையில்
கொஞ்சம் மறைந்துள்ளது
தந்திரமாய் மறைந்துள்ள உடலைப்
பல இடங்களில்
மறைத்துவைத்துவிட்டுத்
தேடுகிறோம்
அது பணத்தில் சிறிது நேரம்
ஏதாவது புகழ்ச்சியில் சிறிது நேரம்
துன்பத்தில் சிறிது நேரமெனப்
பட்டியலிட்டு மறைந்துள்ளது
தூக்கத்திலிருந்து மீட்டெடுத்த உடல்
மீண்டும் மீண்டும்
மாத்திரை வில்லையிலும்
உணவிலும்
பிறர் பார்வையிலும் மறைந்துள்ளது
மனதில் தோன்றியதை
மண்ணில் விட்டுச் சென்றாலும்
நிரந்தரமாகத் தொலைந்துவிடுகிறது
மறைந்திருந்த இடத்திற்கே உடல்
உயிர்.

6.
உதிர நதியின் பிரவாகத்தில்
எரிகிறது திரி
கபாலத்தில் பிரித்துவைக்கப்பட்டுள்ள
அறை மூலையில்
ஆயுதங்கள் வரிசைகளாகின்றன
காலப் பந்தியில் பரிமாறப்படுகின்றன
நிகழ்வுகள்
நாற்காலியின் நான்கு கால்களும்
காபால பற்களில் புதைந்துள்ளன
மீண்டெழாத பந்தி உபசரிப்பில்
உண்டு தூக்கி வீசப்படுகிறது
கால இலை
யுக இருளாய்
களவாடப்படுகின்றன உதிரத்துளிகள்
உதிரம் ஓடுகிறது நதியாக
நதியில் மூழ்கிக் கிடக்கிறது
தர்மச் சக்கரம்
அணு சொற்கள் அடித்துச்செல்லப்படுகின்றன
சமுத்திரத்திற்கு
கரையில் வெடித்துக்
கொண்டேயிருக்கிறது
காலத்தின் சொற்கள்
ப.தனஞ்ஜெயன்



7.
நீங்காத மௌனங்களாய்
மனதில் குன்று நீர்வரத்து
ஓயாத அலை துரத்தும்
அடிவானம் மினுமினுக்க
நீங்காத கேள்வி ஒன்று
யார் என்று கேட்டேன் என்னை
வேரற்ற விழுதுகளாய்
இருள் கொத்தி எரிகின்ற
மௌனத்தில்
தேயாத உறக்கமாய்
வான் நிரம்பிய நட்சத்திரம் போல்
மண் நிரம்பும் உடலென
மண் பார்த்தேன்
தீ விழுங்கும் சுடரெல்லாம்
சாம்பலில் எஞ்சியதெங்கும்
நீர் பார்த்தேன்
காற்றிலெங்கும் கலந்து வீசும்
தொடர்ச் சங்கிலி அறுந்துவிட
வானம் பார்த்தேன்
பாதை ஒன்றும் இல்லை அங்கு
வழி வந்த பாதை எது
வழி செல்லும் பாதை எது
எந்த வழி வந்தேன் இரு உடலில்
யாரென்று நான் கேட்டேன்
வெளியெங்கும் மிதக்கிறது
திரளாகப் பஞ்ச பூதங்கள்
விடையேதும் இல்லாமல்
தேடுகிறேன் என்னை
வீடு ஏதும் இல்லை எனக்கு.
ப.தனஞ்ஜெயன்

8.
வறட்சியிலும்
முட்களிலும் மொழி பூத்து
நிற்கிறது
பாலைவனம் தன் மொழியோடு
விரிந்து கிடக்கும் போது
மணல் விரிப்பில்
நிழலாய்த் தேடுகிறோம்
அங்கு பறக்கும் பறவையிலும்
ஒட்டகத்திலும்
சில மரங்களிலும்
செடிகளிலும்
பாலைவன நிலவிலும் துளிர்த்துக்கொண்டேதான் இருக்கிறது
அந்த நிலத்திற்கான மொழி
பிரபஞ்சத்தின் பின்பக்கத்திலும்
விரிந்து கிடக்கும் மொழியின்
கலையில்
இரு வேறு பிரமிப்பான நகரங்களைத் தேடுகிறோம்
அது இறந்தவர்களின் மொழியைப்போன்று
இறுக்கமற்று இசைக்கிறது
வறட்சியின் மொழி
வெறுப்போடு இறுக்கமாக இசைத்து வெளிப்படுத்தி
கொண்டேயிருக்கிறது
முட்களின் மொழி ஆயுதமிழந்தே
நிற்கிறது.

ப.தனஞ்ஜெயன்.
[email protected]
9751800333.