ப. தனஞ்ஜெயன் கவிதைகள்
1.
சிலர்
பெண் குழந்தைகளை
தேவதை என்றார்கள்
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
நான் அவளை
தெய்வம்
என்கிறேன்.
2.
குழந்தை வரையும்
ஓவியத்தில்
ஒரு பறவையாவது
இடம் பெற்றுவிடும்
நாம் தான் குழந்தைகளை
பறக்கவிடுவதேயில்லை.


3.
கிழிந்துபோன மனங்களை
தைக்க வார்த்தைகளை
தேடும் நேரத்தில்
கிடைத்ததோ அலைநூல்
நான் கடலாகி கரையை
கவனிக்கிறேன்
தையல்காரனாய்.
4.
சருகுதானே என்று எண்ணாதீர்கள்
சாகசம் செய்துவிட்டுத் தான்
மண்ணை முத்தமிடுகிறது
காய்ந்த இலைகளாய் சருகுகள்.


5.
கண்டுகொள்ளாத
மனிதர்களை
காற்றாகி
இதயத்தில் மோதி காதலித்துக்கொண்டேயிருக்கின்றன
மரங்கள்.
6.
இறந்தும் புன்னகையோடு
இருக்கிறன்றன பூக்கள்
வாழ்ந்தும் அழுகையோடு
இறக்கின்றன கண்கள்.


7.
புத்தனின்
யாசக பாத்திரத்தில்
வீழ்ந்துகொண்டேயிருக்கின்றன
இன்று வரை ஆசைகள்.
8.
குழந்தைகளோடு
விளையாடும்
நாள்தான் அழகான
விடுமுறை.
 9.
இதயத்தில் புதைந்துள்ள
ஆயிரமாயிரம் முகங்களை
செதுக்குவதுதான்
எழுத்துக் கலை.
–ப.தனஞ்ஜெயன்