ப. தனஞ்ஜெயன் கவிதைகள்1.ரகசியம்
−−−−−−−−
ரகஸியம் பொருந்திய
என் அகரூபத்தில்
பூட்டியிருக்கும் கதவுகளுக்குள்
பிரபஞ்சத் துகளின் சப்தங்கள்
ஒவ்வொன்றாய் அனுபவித்து
நித்திரையில் ஓர் மறதி
மீண்டும் விழித்துத் துளிர்க்கும்
கால முடிச்சுகளில் ஓர் அரவணைப்பு
பஞ்ச பூத பெரு விழிப்பில்
ஓர் நகர்வு
கோடி யுகங்களின் சாலையில்
என்றுமே பேரமைதி
ஆளற்ற அந்தரத்தில் ஆடுகிறது
துகள் விரியல்
அனுமதியில்லாமல்
என் அகரூபம் திறந்தது
தெரிந்ததோ வெளி
என் ரகஸியம் கரைக்கப்பட்டது
இப்பொழுது
எல்லாம் திறந்தே இருக்கிறது.


2. பூமி எனும் மேசைமீது
அருந்தும் விருந்தாளிகளே
விரித்து வைக்கப்பட்டுள்ள
அனைத்தும்
கருகிவரும்
தரிசுநிலத்தைப்பாருங்கள்
நீர் வந்த வாய்க்கால்களில்
காய்ந்து போன
ஒரு கூழாங்கற்களோடு
நீர் சேர்ந்த பாடல் ஒன்று
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
எனக்கு
ஒரு மலரின் வருத்தமான
குரல் கேட்கிறது
அழித்துக்கொண்டே
புனிதப்படுத்துவதாகப் பேசும்
மனிதனுக்குள்
எத்தனை வறண்டு போன
பள்ளங்கள்
அதில் நீரை நிரப்புகிறேன் நான்
ஒரு இலையைப் பார்ப்பதற்கு அல்ல
ஒரு விதையை அறுவடை செய்ய
அற்புதமான ஒளியில்
சில விதைகள் மண்ணை முட்டித்தள்ளட்டும்
மண் அழகான நிழலில்
இளைப்பாறட்டும்
இதயம் மரத்தின் நிழல்போல்
பூமியை முத்தமிடட்டும்.


3.எனக்குள் இருக்கும்
இரண்டுமனிதர்களைச் சந்திக்கிறேன்
வேறொருவன் அகிம்சையைப் போதிக்கிறான்
அவன் சிலநேரங்களில்
நான் ஆவதுண்டு
நான் என்பவன் இறந்து
இறந்து பிறக்கிறான்
இப்படியே
நீயும் வந்துவிட்டாய் எனக்குள்
நீ வந்தபிறகுதான்
கையாள்வதற்குச் சிரமப்படுகிறேன்
எனக்குள் நானையும்
எனக்குள் நீயையும்
எவ்வித பாகுபாடின்றி
நிகழ்த்த நினைக்கும் பொழுது
மீண்டும் சிரமப்படுகிறேன்
இரண்டு பேரையும் விட்டு
வெளிவந்த போது
பைத்தியக்காரன் என்கிறீர்கள்
உங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே
கடந்து செல்கிறேன்
கடலைப்போல்.


4.பாறையை உடைப்பதாய் புறப்பட்ட சொற்கள் இன்னும்
தொடவில்லை அதன் அணுக்களை
மௌனமாய் காத்திருந்த காகிதத்தை அசைத்துப் பார்த்து
திசை தெரியாமல் நின்றுவிட்டது
அசைவுகள்
கால் பதிந்து
அதிரும் மண் விட்டது
பெரு மூச்சு
அதன் முடிச்சுகள் அவிழாமல்
அதில் ஒரு நித்தியம்
தட்டி தட்டி உடைந்த பாறையின்
உச்சியில் அமர்ந்த பறவையின்
இறகில் ஒரு சாந்தி
சொல்ல முடியவில்லை
அந்தப்பறவையால்
இதுதான் வாழ்வென்று
இதுதான் திசையென்று
கூடு விட்டுக் கூடு பாயும் ஒருவனுக்காக
எத்தனையோ சவங்கள் காத்திருந்து எரிந்துபோனது
அந்த நெருப்பிற்குத் தெரியுமா
இந்த மண்ணிற்குத் தெரியுமா
வாழ்வின் பிரதிகளைப்பற்றி
பார்த்துகொண்டிருக்கும் பித்தன் மனிதர்களை
அகாலத்தால் அணைக்கிறான்
அதில் சிறு சிறு வாழ்வின் கீற்றுகள்
இருளில் இசைத்து
ஒளியைக் குடிக்கிறது.


5.அதிர்வு
−−−−−−−−
மழையும் வெய்யிலும் தணிந்து
சுழல்கிறது
ஆபிஸ் வாழ்க்கை மரணத்தில்
ஜனிக்கிறது
அதிசயம் அனைத்தும்
மனிதர்களை உற்றுப்பார்க்கிறது
லேசான காற்றில் மிதந்த
இறகை அசைத்துப்போட்டது புயல்
காற்றுக்கு உயிர் கொடுக்கிறான்
நீரைக் கடல் நீராக்கினான்
வெப்பத்தைச் சுமந்து
நிலத்தின் பக்கங்களில்
பாதத்தால் எழுதித் தீர்த்து
ஆகாயத்தை நோக்கிய வழிகளில்
வழிகிறது
கருணையின் கரு
மனதில் சிறைப்பட்டுப்போன கடவுளுக்கு
உருவங்கள் நிரம்பி நின்றது
தேடிய வழியெங்கும்
வழிதெரியாமல் மடிந்துவிடுகிறது
கண்கள்
ஒவ்வொரு விதையிலும்
மறைந்துள்ள உயிரானது வெளி
சீராக ஓடிக்கொண்டிருக்கும்
பெரு வெளியின் இயக்கத்தில்
மனம் தடுமாறி
காயங்களின் தீண்டலோடு
புனிதத்தின் சுடர் ஏற்றி
சொற்களைச் சிதைத்து எரியவிடுகிறது
புனிதம் மறைகிறது
மனம் அதிர்கிறது
காலத்திற்கு வடிவம் கொடுத்த
கடிகாரம் துடித்து துடித்து பெருஞ் சுணை சொற்களோடு  இசைக்கிறது.


6.என் காடுகளை மேய்ந்திடும்
பெருஞ்சுவர் நீங்கள்
கடித்தெடுக்கும்
உங்களுக்கான ஈரச் சொற்களை
சேமித்துவைத்திருக்கிறேன்
நீங்கள் கொடுத்ததோ
இதழற்ற ஒரு காம்பு மட்டும்
நான் பூத்து இடமடைத்து
காம்படைந்து
நறுமணம் தந்து
ஒளிர்கிறேன்
கொஞ்சம் இளைப்பாறி
இதழ் உடையாது
மலர்ந்து வீசுங்கள்
காடு குளிரட்டும்
உங்கள் பெருஞ்சுவர் இடியட்டும்.


7.தூரத்துப் புன்னகையை
தினம் தேடும்
மௌன கால்வாய்களின் வழியே
தினம் தொடுகிறேன் உன்னை
இதய நாரில்
ரோஜா வனங்களைத் தொடுக்கிறேன்
மெல்லக் கவிகிறது இதய இதழ்கள்
இதய நாதத்தின் அதீத ராகம் மெல்ல நகர்ந்து உன் கூந்தலில்
வெடித்தெழுகிறது
உன் காருண்ணிய பார்வையில்
ஜீவன் ஒடுங்கி
கடுவெளியில் ஜால மருந்தை
திரட்டுகிறது
உன் ஸ்படிக ரேகை மெல்லப் படர்ந்து
என்னைக் கட்டிப்போடுகிறது
உன் பிரவாகத்தில்
மோகன அக்கினி ததும்பி வழிகிறது
பூக்களில் முட்கள் செய்யும்
உன் அழகு ரூபத்தின் முன்
சமுத்திரமாய் விழுங்குகிறது
குருதியின் மிச்சத்தை சதை பிளவுகள்
இதய வானத்தில் எதிரொலிக்கிறது வண்டின் குரல்கள்
மௌனம் கரையும்
காதல் சமுத்திரமெங்கும்
அரூபத்தின் குரல்களாய்
மடிகிறது கனல்.


8.இருளின் அகாலத்தில்
வெளிச்சத்தின் ரேகைகள்
மிச்சமிருக்கிறது
இருளின் ஊடேயிரங்கும்
விண்மீன் தடயத்தை
விழுங்கி நகர்கிறது இருள்
நிலவு படகு கால நதியில்
திசை மறந்து சூரியனின்
மற்றொரு முகமாய் மலர்கிறது
அணுக்களின் துயிலற்ற பயணத்தில்
ஆழமான மௌனமாய்
நிலவு பூ பூக்கிறது பூமியெங்கும்
நிலவும் சூரியனும் பூத்துக்கொண்டேயிருக்கும்
சூனிய சக்கரத்தில்
பிறந்து பூத்திருக்கிறது
பிறப்பு
இறந்து பூத்திருக்கிறது
இறப்பு
மலர காத்துக்கொண்டேயிருக்கிறது
உயிரெனும் மலர்.


9.பிரபஞ்சத்தின் கணங்கள்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பூமி சதைகளில் ஒரு மௌன அதிர்வு
சுழலும் அச்சில்
ஒரு ஆழமான புன்னகை
அதிசயமான உடல் இசை
தட்டாய் சுழல்கிறது
நீர் தெறிக்கும் இசை மோதி மடிகிறது உடலெங்கும்
பூமித்தாயை பிளக்கும்
விதைகளில் இருக்கிறது
பச்சை சதையுதடு
பூமி இருள் குடித்து
பகல் அருந்தி வழிகிறது
மணித்துளிகள்
சாயை கோடுகளில் புறப்பட்டு
நடந்து செல்கிறது பூமி
துணைக்கு சில கோள்களின்
ரீங்காரம்
கோள்களைப் பெற்றெடுத்த
கருவறையா பிரபஞ்சம்
மனித மனதில் எரிகிறது
பிரபஞ்ச விளக்கு
மாயை எண்ணெய்யானது
சாயை திரியானது
இரண்டும் கலந்து மனித உயிரானது
கடந்து செல்ல முனையும்
கோள்களை
கட்டிவைத்துள்ளான் மனிதன்
மனக் கயிற்றைக் கழட்டி எரிந்தால்
ஒளியின் தூரத்தில் தெரிகிறது
முத்திரை
மனித மூச்சில் வழிகிறது
அணுதானியம்
அணுக்களைக் குடித்து   மகிழ்கிறது
வெகுதூரத்தில் கருந்துளை.
ப.தனஞ்ஜெயன்