Danadjeane Six Poems in Tamil Language. Book Day (Website) And Bharathi Tv (YouTube) are Branches of Bharathi Puthakalayam Publication.



1

மனதை முந்தி ஓடுகிறது
பெரும் நகரங்களின் பிரமிப்பு
எளிமையான கிராமத்தில்
தீண்டிக்கொண்டே இருக்கின்றன
மண்வாசனையின் கண்கள்

கண்கள் முழுவதும் கருணையும்
இதயத்தின் அறைகளில்
முத்தங்கள் பதித்த காதலும்
பிறப்பு இறப்பு
குறித்த கருத்துகள் நிரம்பியும்
எதிர்ப்புகள் கொதிக்கும் கனலும்
ஒரு அட்சயப்பாத்திரத்தின் தேடலோடு
அடித்துக்கொள்கிறது

பிணங்களின் வாசனையில்
துடிக்கிறது நாசிகள்
பெரும் மௌனத்தின் கேள்விகளற்று
அடங்கிக் கிடக்கிறது நாக்கு
தோலின் நிறத்தில் மொழி ஊடுருவி
மாற்றங்களைச் சகித்து வருடுகிறது
காற்று

குருதித்திறன் ஒரு பொழுதும்
ஒன்றிணைந்து துளிர்ப்பதில்லை
எலும்புகள் ஒரு நாளும் இசைப்பதில்லை
நரம்புகள் ஒரு நாளும் அறுவதில்லை

நகரத்தில் சிப்பியை ரசிக்க மறக்கும் கண்களும்
கிராமத்தில் நத்தையை ரசிக்க மறந்த கண்களுமாகக் காயங்களுடன்
வண்ணத்துப்பூச்சியொன்று தன் வண்ணங்களை மறந்து பறக்கிறது
திசையெங்கும்

ஒரு கிராமத்து உடல் அடக்கம் செய்யப்படும்போது வண்ணத்துப்பூச்சியையும்
ஒரு நகரத்து உடல் அடக்கம் செய்யப்படும்போது
அதீத விளக்கின் துகள்களும்
மறைந்துபோகின்றன.



2

இரு கண்கள் பொதிந்த
விசாலமான வீட்டில்
மாதொருபாகனாய்
பிறை நிலவை
நூல் கட்டி இழுக்கிறது
அழகான நட்சத்திரம் ஒன்று



3

பிரமிப்பான வெளிச்சத்தைவிட
பிரகாசமான நிழல்
அழகான லயத்தில்
அப்பாடா எனச் சொல்லவைத்து
நகர்கிறது அவ்வளவு பிரியமாக.



4

அழகான தீபமொன்று
உன்னை
என் இதயத்தில் எழுதிக்கொண்டிருக்கிறது
கண் கொத்திக் கவிதை நீ



5

கண்கொள்ளும் அளவு
நீல நிற வானம்
தேவையைத் தீர்க்கும்
கார்மேகம்
விரல் நூலில் கட்டிமுடிக்கும்
ஒரு முழம் நட்சத்திரங்கள்
காற்றில் எழுதும் இறகு
இறகு எழுதிச்சென்றவரைக்காற்று
கைப்பிடி அளவு கடல்
நடந்து செல்லும்
தூரம்வரை மணல்
துளிர்த்துக்கொண்டே
இருக்கும் அன்பு
பார்வையின் எல்லைவரை
கைப்பிடி அளவு மலை
பசுந்தரை
சூரிய இரவுகள்
காதலிக்க நிலவு
ஈரம் காயாத இதயம்
அன்பிற்கு ஒரு நாய்
கவிதைக்கு ஒரு பறவை
நடந்து செல்லும் தூரம்வரை
திகட்டாத அன்பு
புத்தனின் கண்கள்
ஆசையற்ற ஆசை போதும்
தீர்ந்துவிட்டது இந்த வாழ்வு.




6

திண்ணையில்
பழைய பாட்டு
அடிக்கடி பாடும்
தாத்தாவிடம் நான்
கதைகள் கேட்பதுண்டு
அவரும் வரிகளை வாயில் அசைத்து
நகர்ந்து நகர்ந்து கதைகளை
நடித்துக் காட்டினார்

ராமனான தாத்தா
அந்த கணம்
திடீரென ராமவேடம் களைந்து
மாங்காய் பறிக்க வந்த
சிறுவர்களையும்
மணிலா பிடுங்கும்
சிறுவர்களை நோக்கிக்
கற்களை எறிந்து
கோபங்களை வார்த்தையில் சிந்திய
விழிகளுடன்
பத்துதலை அவதாரமான
ராவணன் பாட்டை
பாடிக்கொண்டே ஓடினார்

ராமன் வேடத்தில்
அதிகமாக வாழும்
ராவணைவர்களை
அடிக்கடி சந்திக்கவைக்கிறது
எப்பொழுதும் வாழ்வு
புதிய இதிகாசங்களை
ஆளுக்கொரு முறையில்
எழுதிக்கொள்வதும்
ஆச்சரியப்படத்தான்
வைக்கிறது.

ப.தனஞ்ஜெயன்.
[email protected]
9751800333.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *