
நீ விட்டுச்சென்ற சொற்கள்
இன்னும் பத்திரமாக
இந்த மணல் பரப்பில்
அப்படியே இருக்கின்றன
அதில் நானும்
தொலைத்துவிட்ட
என் நினைவுகளோடு
அலைகள் முன் நிற்கிறேன்
கீழே கிடந்த நம் சொற்கள்
உப்பு நீரில் முளைத்து
உப்புச் சிறகைப் பொருத்திக்கொண்டு
பறந்துவிட்டன திசைகளில்
கண்ணீர் மழையில்
முளைத்துக்கொண்டே
இருக்கின்றன
நம் நினைவின் தடங்கள்.

உங்கள் வழியாக
என் ஒத்திகை
நடந்தேறியது
இப்பொழுதெல்லாம்
என்னிடத்தில்
எந்த ஒத்திகையும் இல்லை
உங்கள் வழியாக
என்னைப் பார்ப்பதுமில்லை
இங்கே மட்டும்
பார்க்கிறேன்
என் சிறகுகளில் வீசுகிறது
சிறு துளி காற்று
என் கண்களில் இருந்து
விலகியது ஒத்திகை
எனது துளிகள்
எனது இதயத்திலிருந்து
ஆரம்பமாகின்றன.
![]()
கொல்லையிலும்
கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிலும்
காவல்காக்க நிற்கிறான்
திருஷ்டிக்காரன்
கிழிந்த சட்டையொன்றும்
அழுக்கான பேண்ட்டும்
அணிந்து நிற்கிறான்
அவன் முகத்தில்
கோபப் பார்வையில் கண்களையும்
தன் உடலைச் சௌகரியமற்று
நிறைந்திருக்கும் வைக்கோலுடன்
கட்டப்பட்டிருப்பதை நினைத்து
புன்னகைத்தான்
ஒவ்வொரு முறை முதலாளி வரும் பொழுதெல்லாம்
தன் கட்டுகளை அவிழ்க்கவே
விரும்பினான்
எப்பொழுதும் முதலாளிகள்
இப்படித்தான் என
பறவைகளை தன் மீது அமர
அனுமதித்தான்
காவல்காரன் மீது பறவைகள்
விளையாடி எழுந்து பறக்கும் பொழுது
அவன் பறந்து செல்வதாக
நினைத்து மகிழ்ந்தான்
மழை
வெயில்
பனி
எனக் காலங்கள்
மாறிச்செல்லும் பொழுது
அவன் கிழிந்த சட்டைகளைக்கூட மாற்றவில்லை முதலாளிகள்
அறுவடை முடிந்தது
வீடும் கட்டி முடிந்தது
திருஷ்டிக்காரன் எரிந்துகொண்டே
தீயினால் ஆன சித்திரம்
ஒன்றை வரைந்து சென்றான்
அது முச்சந்தியில்
உதவி கேட்டுக் கிடக்கிறது
அதைக் கவனிக்காமல் பயத்துடன்
சித்திரத்தைப் பார்த்தவாறே நகர்கிறது
கண்கள்.
ப.தனஞ்ஜெயன்.
danadjeane1979@gmail.com
9751800333.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

