சிறுகதை:  இருளில் இருந்து வெளிச்சத்திற்கு (ஒரு வரலாற்று சிறு கதை) – ராமன் முள்ளிப்பள்ளம் 

சிறுகதை:  இருளில் இருந்து வெளிச்சத்திற்கு (ஒரு வரலாற்று சிறு கதை) – ராமன் முள்ளிப்பள்ளம் 

 

நெல்லூர் பச்சை பசேர் நெல் வயல்களுக்கே உரித்தான இடம். அதன்  அருகேயே இருந்த மங்கள கிரி பெரிய கிராமம். என்றும் போல் அன்றும் அந்த தெருவிற்கு வந்த தபால்காரர் கோபாலய்யா வீட்டில் ஒரு அஞ்சல் அட்டையை கொடுத்தார். அதுவும் தருமு கையில். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எப்போதும் எதிர் வீட்டு பவானியே பெருமைப்படும்படி அவளுக்கே அஞ்சல் அட்டை வரும். ஆனால் அன்று தருமுவின் அதிர்ஷ்டம். அப்படித்தான் அவள் நினைத்தாள். கூவலுடன் வீட்டினுள் ஓடினாள், ‘’அம்மா நாக்கு போஸ்ட் கார்டு மனகு போஸ்ட் கார்டு சூடு சூடு ஏமி ராசினாரு ( அம்மா எனக்கு போஸ்ட் கார்டு, நமக்கு போஸ்ட் கார்டு பாரு பாரு என்ன எழுதியிருக்காங்க) அந்த போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட மொழி தெலுங்காய் இருந்திருந்தால் தருமு படித்திருப்பாள். ஆனால் அது தமிழில். எனவேதான் தருமு கார்டை அம்மாவிடம் கொடுத்தாள்.   

வெங்கடலட்சுமி கார்டை வாங்கி படித்தாள். சேலையை எடுத்து வாயை மூடிக் கொண்டு அழுதாள். பின் அழுகை பெரிதானது, இன்னும் பெரிதானது. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் வரவில்லை. ஆகவே கைக் குழந்தையை கீழே விட்டாள்  இன்னும் உரக்க அழுதாள்.  பக்கத்து வீட்டு மாமி அவருடைய கணவன் இன்னும் நான்கு பேர் ஒரு கூட்டமே வந்து விட்டது. பக்கத்து வீட்டு மாமிதான் வெங்கட லட்சுமியை அணைத்துக் கொண்டு கேட்டாள் , ‘’சொல்லு வெங்கடம் யாருக்கு என்ன ஆச்சு யாருக்கு அந்த சிவபதவி பாக்கியம்’’ அவளீடம் இருந்து விடுபட்ட வெங்கட லட்சுமி தருமுவை கட்டிக் கொண்டு கேவினாள் உரத்த குரலில் அழுது கொண்டே சொன்னாள் 

’’ஊன சொடஷ வர்சே ராமோ ராஜீவ லோசனஹா’’*a 

‘’யாருக்கு பட்டாபிஷேகம்’’ கேட்டாள் பக்கத்து வீட்டு மாமி

’’இவ புருஷனுக்கு, தருமு புருஷன், நாட்டாமை ஆகல்ல, ஆனா அதுக்குள்ள காட்டுக்கு கூப்பிட்டுக் கொண்டார் பகவான்’’

’’எந்த காட்டுக்கு’’

‘’சுடுகாட்டுக்கு, தருமு புருஷன் பதினாறு இன்னும் முடியல்ல அவன் அடுத்த நாட்டாமை ஆவான்னு நினைச்சு தருமுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் ஆனா இப்படியாச்சு’’

தருமுவுக்கு மட்டும் புருஷன் என்ற பேச்சு எடுத்தால் பிடிக்காது. அவ்வப்போது அம்மா கேலி செய்வாள். ’’நீ பெரிய பொண்ணு ஆனதும் உன்ன கொண்டு போய் அந்த மேலக்கால் நாட்டாமை வீட்ல விட்டுடுவேன், அப்புறம் ஓ சேட்டையில இருந்து எங்களுக்கு எல்லாம் விடுதலை’’ இப்போது வந்த அஞ்சல் அட்டை கொடுத்த ஷேம சமாச்சாரம் தருமு கணவன் மேலக்காலில் இறந்து விட்டான். இறுதி சடங்குகளும் நடந்து முடிந்து விட்டிருந்தன. அஞ்சல் அட்டையில் இருந்த தேதி சனவரி 1907 ஒரு நாள், அது அங்கு கிடைத்த தேதி ஃபிப்ரவரி 8, 1907. ஆனால் சம்பிரதாயப்படி தருமுவுக்கு மொட்டை அடிக்க வேண்டும். ஆகவே அந்த அமங்கலமான அஞ்சல் அட்டையில் வந்த பையன் வீட்டார் உத்திரவு ஒரு மங்களகரமான நாளில் தருமுவை  அழைத்து வர வேண்டும் மேலக்காலில் அவளுக்கு மொட்டை அடிக்க வேண்டும். தருமுவுக்கு ஒன்றும் புரியவில்லை குதூகலத்துடன் பவானி வீட்டுக்கு ஓடினாள். அவளிடம் சொல்ல வேண்டும் தங்கள் வீட்டுக்கும் அஞ்சல் அட்டை வந்ததை. மேலக்கால் மதுரையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நெல்லூர் மதுரையிலிருந்து எழு நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. 

’’சரி முதல்ல எல்லாரும் ஸ்நானம் செய்யுங்கோ, இன்னைக்கு உங்க வீட்ல எதுவும் பண்ண வேணாம் எங்க வீட்லயிருந்து சமச்சி அனுப்பறேன்’’ ஆறுதல் தரும் வகையில் பக்கத்து வீட்டு அரவ*1 மாமி கூறினாள். வெங்கட லட்சுமி தன் மகளை தேடினாள். எதிர் வீட்டிலிருந்து தருமுவின் பெருங் குரல் வந்து கொண்டிருந்தது. அஞ்சல் அட்டை வந்த பெருமையை சொல்லிக் கொண்டிருந்தாள். அதை கேட்ட வெங்கட லட்சுமி வேகமாய் எதிர் வீடு சென்று மகளை அழைத்தாள், ‘’ராவே விதவமுண்ட தருமு நீ மொஹுடு சச்சி போயினாடு நுவ்வு இக்கட குதூகலிச்சுன்னாவு’’ ( வாடி விதவை தருமுவே உன் கணவன் இறந்து விட்டான் நீ இங்கே மகிழ்ச்சியில் திளைக்கிறாய்) வெளியே வந்த தருமுவை தரதரவென இழுத்து சென்றாள் அவள் தாய். 

‘’லேதும்மா பவானி சாமக்கா சரளக்கா கத*2 சொப்பினு”’ (இல்லையம்மா பவானி சாமக்கா சரளக்கா கதை சொன்னாள்)

எத்தனவாட்டி சாமக்கா சரளக்கா கத கேப்படி நீ எந்த ராஜாவோட யுத்தம் செய்யப்போற எவனவயாவது கொல்லப் போறியா’’ 

வீட்டினுள் சென்றதும் அவளுக்கு தலைக்கு நீர் ஊற்றினார்கள். 

 தருமுவின் அப்பா நெல்லூரில் தாசில்தார். அன்று அவர் கேம்ப் போயிருந்தார். அவர் பிறந்தது தஞ்சாவூரில், வேலை பார்த்தது நெல்லூரில். அன்று வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. ஈரோடு போஸ்ட் மாஸ்டர் பிஜப்பூர் மாற்றப்படுவதும், மதுரை தாசில்தார் நெல்லூர் மாற்றப்படுவதும் மிக இயல்பானது. ஆங்கிலேய ஆட்சி. படித்த ஜனம் எல்லாரும் வேலைக்கு போயிருந்தால் ஆங்கிலேயனுக்கு பிரச்னை வந்திருக்காது, அவன் இன்றும் இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்திருப்பான். ஆனால் படித்தவர்களில் ஒர் பிரிவினருக்கு ஆங்கிலேய எதிர்ப்பே வாழ்க்கையாகா இருந்தது. இந்த நெல்லூர் தாசில்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் மூன்று பையன்கள் தீவிரவாத பிரிவில் ஆங்கிலேயரை எதிர்த்து சாகசங்கள் செய்தனர். தந்தை என்னவோ தாசில்தாராக வாழ்ந்து இறந்தும் போனார். ஆனால் சாவதற்கு முன் நெல்லூர் வந்து தருமுவை மனைவியுடன் மெட்ராஸுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டே மேலோகம் போனார்.

கடந்த நான்கு வருடங்களில் தருமு எட்டாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் முடித்திருந்தாள். அந்த விதவை பட்டம் கொடுத்த அஞ்சல் அட்டை வந்தும் நாலு வருடங்கள் ஆயிற்று.  தருமு தம்பி கிட்டுவையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு மதுரை வந்தாள்.  முதலில் விஜயவாடா சென்று மெட்ராஸ் ரெயில் கம்பெனியின் புகை வண்டியில் ஏறினாள், அது இரு நாட்கள் கழித்து மெட்ராஸ் ரோயபுரம் வந்தது. பின் இன்னொரு புகை வண்டியில் தஞ்சாவூர் வந்தாள். பின் மாயவரம் சென்று உறவினர் இராமனாதய்யா வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தாள். பின் மதுரைக்கு ஒரு புகை வண்டியில் வந்தாள்.

புகை வண்டி நிலையத்தில் இருந்து நடந்தே காக்கா தோப்பு தெருவில் இருந்த தாய்வழி பாட்டானார் வீடு சென்றனர். அது வீடல்ல, பெரும் குடியிருப்பு.சந்தை போல் இரைச்சல். வீட்டினுள் இருபத்தி ஐந்து குழந்தைகள்; ஒரு வயதிலிருந்து இருபது வயது வரை. எல்லாம் கிரமப் புறத்தில் இருக்காமல் மதுரை நகரின் இயற்கை அழகில் தஞ்சம் புகுந்திருந்தனர். தருமுவை மிகவும் கவர்ந்தவள் வெக்கலட்சுமி. பதினாறு வயது, நல்ல சிவப்பு. மழித்து மொட்டை அடிக்கப்பட்ட தலையும்., காவி சேலையும் அவள் நீலக் கண்களை மறைக்கவில்லை. அவள் தருமுவை கவர்ந்தாள். இரண்டு மணி நேரத்தில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர். மதிய உணவு முடிந்தது. குழந்தை பட்டாளத்தின் கூக்குரல் இரைச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் வா வெளியே என தருமுவை வீட்டின் பின்னால் அழைத்து சென்றாள். கொல்லையில் மல்லிகை பந்தலில் மட்டுமல்லாது எங்கு காணினும் படர்ந்து நறு மணத்தை பரப்பியது. இந்த மல்லிகையை விதைவகளாகிய நாம் தொட முடியாது என்றாள் வெக்கலட்சுமி. வேலிப் படலை நீக்கி திறந்து வெளியே வந்தனர். வண்டிப்பாதை*3 அகலத்திற்கு ஒரு வழி. எதிரே ஒரு பெரிய குளம். நீரே தெரியாமல் செந்தாமரைகள் மட்டுமே மிதந்து அசைந்தன. தருமுவின் மனதினுள் நளினிதளகதி ஜலமதி தரலம்*4 என்ற சங்ரனின் பஜ கோவிந்த வரிகள் வந்து போயின. அந்தப் பெரும் வட்ட வடிவ குளத்தின் கரை நீர் அளவு வரை சரிந்து இறங்கியது. ஆனால் அவர்கள் வீட்டின் பின்புற வழிக்கு எதிரே கல் படிக்கட்டுக்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இருவரும் கடைசி படிக்கட்டில் அமர்ந்து கால்களை நீரில் அமிழ்த்தினர். அவர்கள் தெலுங்கு உரையாடலின் தமிழ் வடிவம் பின் வருகிறது.

’’தருமு நாம ரெண்டு பேரும் ஒரே தாத்தா பாட்டிக்கு பேரக் குழந்தங்க, எனக்கு மொட்டை அடிச்சிட்டாங்க ஆனா நீ மொட்டைக்கு ஒத்துக்குறாத மேலக்கால் போனதும் தமிழ் அரிச்சுவடி படி, தமிழ் படி. என்ன கூட சில நாள் கழிச்சு மேலக்கால் வீட்டுக்கு அனுப்பிருவாங்க’’  

’’வெக்கலட்சுமி நீயே எனக்கு தமிழ் எழுத படிக்க சொல்லிக் கொடு நான் இங்கேயே இருக்கேன்’’

’’இல்ல நீ இங்க இருக்க முடியாது.  நானும் இங்க இருக்க முடியாது 

’’ஏ’’

நம்ம வீட்டு பெரியவங்க விதைவ ஆயிட்டவங்கள மேலக்கால் வீட்டில் தள்ளப் போறாங்களாம்’’

’’ஆனா இந்த அழகான மதுரையும் இந்த தாமரைக் குளமும் ரொம்ப பிடிச்சிருக்கு’’

 தருமுவும் அவள் அம்மாவும் மதுரை காக்கா தோப்பு தெரு வீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் தம்பி கிட்டுவை அந்த வீட்டில் விட்டு விட்டு அடுத்த நாள் மேலக்காலில் இருந்து வந்த இரட்டை மாட்டு வண்டியில் புறப்பட்டனர். இரட்டை மாடுகளால் இழுக்கப்பட்டு வேகமாக சென்றது அந்த வண்டி. வழி நெடுக வைகை நதியில் நீர் தளும்பிக் கொண்டிருந்தததை பார்த்த தருமுவுக்கு முந்திய இரவின் நிகழ்வுகள் மனதில் ஓடின. அவளும் வெக்கலட்சுமியும் அருகே நெருங்கி படுத்திருந்தனர். அவள் அறிந்தோ அல்லது அறியாமலோ தன் கைகளை வெக்கலட்சுமியின் இடுப்பை சுற்றி வளைத்தாள். வெக்கலட்சுமி உடனே திரும்பி அவள் புறம் பார்த்தாள். இருவர் உதடுகளும் இரு தீக்குசிகள் ஆயின.  தற்போதும் அவள் உடல் கொதித்தது. மனதினுள் ஒரு உறுதி பூண்டாள். அதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். ஆனால் சூடு இன்னும் பற்றிக் கொண்டுதான் இருந்தது.  

‘’அம்மா ஏட்ல ஸ்நானம் சேவல’’ ( அம்மா ஆற்றில் குளிக்க வேண்டும்)

 கண்களில் நீருடன் சொன்னாள்

’’ஏ அழுதுகிட்டு கேக்குற’’

’’பெண்ணேரு ஞாபகம் வச்சிந்தி’’ (பெண்ணாறு நினைவுக்கு வந்தது)

’’இனிமே இந்த வைகைதான் உனக்கு பெண்ணேரு. இதுல அதவிட நீர் அதிகம், ஓ மேலக்கால்ல ரெண்டு ஆறு. ஒன்னு வைகை கிளை ஆறு. இன்னொன்னு பெரிய வைகை நதி, ரெண்டுமே நம்ம வீட்டுக்கு முன்னாடி ஓடுது. அங்க போனதும் குளி. நெல்லூர் மங்களகிரி பெண்ணேரு வீட்ல இருந்து ஒரு மைல். ஆனா இங்க வீட்டுக்கு முன்னாடி ரெண்டு ஆறு. நீ கொடுத்து வச்சவ. ஆனா ஓ புருஷந்தான் கொடுத்து வைக்கல்ல. மேலக்கால் போனதும் உனக்கு மொட்டை அடிப்பாங்க ஒத்துக்க, முரண்டு பிடிக்காத, புருஷன் செத்தா பொண்டாட்டி மொட்டை அடிக்கனும்.’’

’’ஆய்தே அம்மா நேனு மொகுடு சூடலேது, வாடு அந்தகாடா ? ( ஆனா அம்மா  நான் புருஷன பாத்ததில்ல அவன் அழகனா ?)

’’செத்தவன் அழகனா இருந்தா என்ன அசிங்கமா இருந்தா என்ன ?’’

’’ அய்தேகானி நேனு கொருக்கோனு”’ (ஆனா நான் மொட்டை அடிக்க மாட்டேன்)

பேசிக்கொண்டே இருந்தவர்கள் வண்டி ஒரு பாலத்தில் ஓடியதை பார்த்தனர். எட்டிப் பார்த்தாள் தருமு. ஒரு ஆறு. அவ்வளவு அகலம் இல்லை. 

‘’அம்மா இதி சின்ன ஏறா’’

’’ஆமா இது நம்ம தெருவுக்கு எதுத்தாப்புல ஓடுது அதோ வலது பக்கம் பார்’’

வண்டி வலது புறம் ஒரு சரிவில் இறங்கி வேகமாக சென்றது. சிறிதே மைதானம், அதன் பிறகு ஒரு அக்கிரஹார தெரு. தெருவின் முன்னே சலசல ஒலியுடன் ஓடியது வைகை கால்வாய். ஏராளம் பேர் அதில் குளித்துக் கொண்டிருந்தனர். இடதுபுறம் தொலைவில் சிவப்பாக நாக மலைத் தொடர். விழும் கதிரவன் மலையின் சிகப்பிற்கு இன்னும் கொஞ்சம் மெருகு கொடுத்தான். வண்டி ஒரு வீட்டின் முன் நின்றது. சுமார் ஐந்து அடி உயரம், நல்ல சிவப்பு, காது இரண்டிலும் கடுக்கண். கழுத்தில் தங்க காசு மாலை. எட்டு விரல்களில் தங்க மோதிரங்கள். வெள்ளை வேட்டி. மாரை மறைத்த செம்பட்டு சால்வை. அவர்தான் தொம்பரை. யாருக்கும் அவர் பெயர் தெரியாது. அனைவரும் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவர் வயல்களில் நெல் அறுவடையானதும் நெல் மணிகளை குவித்தால் அது கோபுரமாய் மலை போல் குவியும் ஆகையால் அந்த குவியலை தொம்பரை என்றவர்கள் அவரையும் தொம்பரை என்றனர். சீதாராமாய்யா கூட பெற்றோர் இட்ட பெயரை மறந்து தன் பெயரை தொம்பரை என்றே நினைத்துக் கொண்டார்.

அவர்தான் அந்த ஊர் நாட்டாமை. அடுத்து நாட்டாமை ஆக வேண்டிய அவர் மகனே இறந்து தருமுவை விதவை ஆக்கியவன். முந்திய முறை தருமு மேலக்காலுக்கு வந்த போது அவள் வயது நான்கு, அவள் கணவன் வயது ஆறு, காலண்டரில் வருடம் 1897. அவர்கள் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. கணவன் இறந்தது 1907 ல் ஆனால் பதினெட்டு வயது தருமு அங்கே வந்த போது வருடம் 1911. என்ன இருந்தாலும் கணவன் வீடு வந்து மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நியமம்.*5 அந்த இறந்த கணவனும் முறைப் பையன்தான். தருமுவின் தந்தை இந்த கண்டம் விட்டு கண்டம் வரும் பயணத்தை மட்டும் ஏற்பாடு செய்தாரே தவிர தன் மறைவுக்கு பின் மனைவியும், கடைசி இரு குழந்தைகளான தருமுவும் கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தியும் பிழைத்து வாழ்வதற்காக ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. ஆகவே தாயும் மகளும் மேலக்கால் வந்ததில் மறைக்கப்பட்டிருந்த உள் நோக்கம் உணவு, உடை, இருப்பிடம். 

அண்ணன் தொம்பரையின் காலில் வெங்கட லட்சுமி விழுந்தார். அவரை தூக்கி நிறுத்தினார் தொம்பரை பின் தமிழில் கேட்டார்.

’’ஏ இங்க வந்த அங்கயே இருந்தா இந்த குழந்த தலை மொட்டையடிக்க மாட்டா, மாச மாசம் அந்த உபாத்யேலு*6 ஆள்க வந்து கேக்குறாங்க எப்ப ஓ மருமக வரா, மொட்டை அடிக்கிறத விட அந்த சடங்குல கிடைக்கிற தட்சினையே அவங்க நோக்கம்’’

’’அண்ணா அங்க அவர் போன பின்னால நா வயித்து பாட்டுக்கு பல வீடுகள்ள வேலை செஞ்சேன்’’

’’கூடாது கூடாது தொம்பரை தங்க இங்க வந்ததே சரி’’

அவர்கள் பேசியது எதுவுமே தருமுவுக்கு விளங்கவில்லை. முழித்தாள். தொம்பரை புரிந்து கொண்டார், பின் கேட்டார்

‘’ வெங்கிடு இவளுக்கு தமிழ் தெரியாதா’’

‘’இல்ல தெரியாது’’

’’ தமிழ் கத்துக்கனும் இனிமே தமிழ்தான் நம்ம தாய் மொழி, நல்ல வேளையா இது தெலுகு அக்ரஹாரம், அரவ பிராம்மணன் கிடையாது. நல்ல தமிழ் உள்ளூர் தேவர், அப்புறம் பிள்ளை மக்கள் கத்து தருவாங்க. அவாள் இவாள்னு பேசற சங்கேத்தி தமிழ் வேண்டாம்’’

ஒரு வாரம் பிரச்னை இல்லாமல் ஓடியது. அம்மாவோ மாமாவோ அவள் வழிக்கு எப்போதும் செல்வதில்லை. ஆனால் ஒரே ஒரு வேலை அவளுக்கு கொடுத்தனர். உசிலம்பட்டி, செக்காணூரணி பகுதியிலிருந்து வந்த குடியானவர்கள் கருனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, துவரம் பருப்பு ஆகியவற்றை தலைச் சுமையாக கொண்டு வந்தனர். அதை வாங்கிக் கொண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட நெல்லை மரக்காலில் கொடுக்கும் வேலை தருமுவுக்கு கொடுக்கப்பட்டது. பல தமிழ் சொற்களை உள் வாங்கிக் கொண்டாள் தருமு. அவள் சிவப்பு நிறத்தை அவள் அழகை கண்டு பிரமித்தார்கள் செக்காணுரணி பெண்கள். அதில் சிலர் திரும்பி ஊர் செல்கையில் இப்படி பேசிக் கொள்வார்கள்

‘’சே சாமி தப்பு பண்ணீட்டாரு இவ்வளவு அழகா படச்சவரு பொண்ண குட்டையா படச்சிட்டாரு’’

‘’யே சீனியம்மா பிறக்கும் போது நீ குட்டையாவா பிறந்த சாமி செஞ்ச தப்பு வேற’’

‘’வேற என்ன தப்பு பண்ணினாரு சாமி’’

’’அந்த பொண்ணு அவ்வளவு அழகு ஆனா விதவ’’

‘’அய்யோ அந்த சாமிய விளக்கமாத்தால அடிக்க’’

’’ஏ சீனியம்மா நம்ம சனம் மாதிரி புருசன் செத்தா அவங்க சாதியில இன்னொரு ஆள கட்டிக்கிற மாட்டாங்களா ?”’

’’ஏய் பேச்ச நிறுத்து அவங்க கேட்டா நாம இங்க வந்து கிழங்கு பருப்பு கொடுத்து நெல் வாங்க முடியாது’’

சரியாக தருமு வந்த ஒன்பதாவது நாள் சோழவந்தான் உபாத்யேலு*7 (புரோகிதர்) வந்தார். சோழவந்தான் நாராயண வாத்தியாருக்கு இரு சீடர்கள், ஒருவன் பெயர் கல்யாணம், கருமாதி, விதவை மொட்டை காரியங்களுக்கு அனுப்பப்பட்டான். இன்னொருவன் பெயர் எமலோகம். திருமணம், வளைகாப்பு காரியங்களுக்கு அனுப்பப்பட்டான். இரு சீடர்களின் பெயர்களும் பட்டப் பெயர்கள்தான். அந்த கால சூழ்நிலயில் பெரும்பாலோருக்கு பட்டப் பெயர்களே. அதிகாரபூர்வ பெயர் பெறுவதற்கான அவசியம் இருக்கவில்லை. கல்யாணமோ, எமலோகமோ எங்கும் போய் கையெழுத்து இடப் போவதில்லை. ஆகவே பட்டப் பெயருடன் பலர் திருப்தி அடைந்தனர். வீட்டின் முன் நின்ற தொம்பரை தெருவின் வலது கோடியில் கல்யாணம் வருவதை பார்த்ததுமே வயிற்றில் சங்கடத்தை உணர்ந்தார். அவர் மனதில் அவருடைய அழகிய தங்கை மகள் தருமு வந்தாள். அவள் தலை மொட்டையாவதை நினைக்கையில் நெஞ்சில் அனல் தோன்றி மூச்சு வழியே வந்தது. நாற்பது ஏக்கர் நெல் வயலுக்கும் நாற்பது ஏக்கர் தென்னந்தோப்பிற்கும் சொந்தம் கொண்டாடிய அவர் ஒரு அரை நிர்வாண புரோகித ஊழியனை பார்த்து வயிற்றில் கலக்கம் கொண்டார். அருகே கல்யாணம் வந்ததை கூட பார்க்காமல் தொம்பரை ஆழ்ந்த யோசனையில் இருந்தார். கல்யாணம் இருமி தன் வரவை தெரிவித்தான். தொம்பரையே முதலில் பேசினார்.

Tamasoma Jyotir Gamaya | The upanishadic chant "Tamasoma Jyo… | Flickr

’’ஏமி கல்யாணம் இத்த தூரம் நேடு நின்ன சோழாந்தக சதுர்வேதி மங்கலம்லோ யொவுரும் சச்சி போலேதா ( என்ன கல்யாணம் இவ்வளவு தூரம் நேற்றோ இன்றோ சோழந்தக சதுர்வேதி மங்கலத்தில் யாரும் இறந்து போகவில்லையா) ஆம் அதுதான் சோழவந்தானின் பழைய பெயர். கல்யாணம் எல்லா பல்லையும் காட்டினான். பிறகு சொன்னான், ‘’ பெத்த ஆய்ன பப்பிச்சினு மீ மேன கோடளு வச்சிந்தி வினிக’’ ( பெரியவர் அனுப்பிச்சார் உங்க மருமக வந்திருக்காள்னு கேள்விப்பட்டோம்) தொம்பரை பாதுகாப்பான இடைவெளி கருதி தமிழில் தொடர்ந்தார். 

’’சரி என்ன விஷயாமா வந்த சொல்லு’’

’’உங்களுக்கு தெரியாதா உங்க மகன் போயிட்டார், மருமகள் ஆந்திராவில இருந்து வந்திருக்கா சம்பிரதாயப்படி அவங்க தலை மொட்டை அடிக்கனும், இது நம்ம பாரம்பரியம்’’

’’ஏ தங்க பொண்ணுதான் ஏ மருமகள் அவ நெல்லூர்ல இங்கிலீஷ் மீடியத்துல எட்டாம் வகுப்பு வர படிச்சிருக்கா, வந்த அன்னைக்கே சொல்லீட்டாள் மொட்டையெல்லாம் போட முடியாதுன்னு, ஏ பையன் போயி நாலு வருடம் ஆகுது, இப்ப ஏ மொட்டை ?”’

’’நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு பெரியவர் எதிர் பார்த்தார் அதுனால சொல்ல சொன்னத சொல்றேன்’’

’’சொல்லு’’

’’சம்பிரதாயம் அனுஷ்டிக்காட்டி ஜாதிப்பிரஷ்டம் வரும்’’

’’சம்பிரதாயத்துக்கு ஆகிற தட்சினை கொடுத்துடறேன் ஆனா தருமுவுக்கு மொட்டை அடிக்கிறது வேண்டாம்’’

’’பெரியவர் ஒத்துக்குற மாட்டார், கொடிமங்கலம், மேலக்கால், முள்ளிப்பள்ளம் மூனு அக்ரஹாரத்துல வயசுக்கு வராம விதவையான பொண்ணுங்கள் இருபத்தி ஏழு பேருக்கு மொட்டை போட்டு காவி சேலை போட்டுருக்கோம். எங்களுக்கு பணம் முக்யமல்ல நம்ம சம்பிரதாயம், பாரம்பரியம்…………………’’ அவன் முடிக்கவில்லை

ஏதோ அசைவை உணர்ந்து தொம்பரை திரும்பினார். அவர் பின்னால் தருமு கல்யாணம் சற்று வாயை திறந்து பல்லை காட்டி பதினெட்டு வயது தருமுவை அவள் பிரகாசத்தை பார்த்தான். உள்ளுக்குள் ஒரு சூட்டை ஒரு விரப்பை உணர்ந்தான். அவன் தன் தோளில் இருந்த ஈரத் துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு மறைத்தான். ஆற்றை கடக்கையில் துண்டை நினைத்திருந்தான். அது இப்போது உஷ்ணத்தை மறைக்க உதவியது. கம்மிய குரலில் கேட்டான், ‘’குழந்தை யாரு ?”’

’’இவதான் தருமு ஏ மருமகள், இவள பார்த்தா யாருக்கும் மொட்டை அடிக்கனும்னு தோனாது’’

’’மாமா யொவுரு ஈன’’ ( மாமா இவர் யார் ) வேகமாய் வெளி வந்தார் வெங்கட லட்சுமி. அண்ணன் தொம்பரை, வாசலில் நின்ற கல்யாணம் தருமு எல்லோரையும் மாறி மாறி பார்த்த அவர் உடனே புரிந்து கொண்டார். தருமுவின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றார். அமைதியாய் தருமு தாயுடன் உள்ளே சென்றார்.  

 அரை மணி நேரம் கழித்து வீட்டினுள் சென்றார் தொம்பரை. மேக மூட்டம் போட்டதால் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த தருமுவும் அவள் அம்மாவும் எழுந்து அவரை நெருங்கினர். 

‘’பெரிய பட்டியல் சொன்னான், ஆறு வகை காய்கறி, ஒன்பது வகை தானியம் அப்புறம் மூனு பிராம்மணாளுக்கு வேட்டி, துண்டு இன்னும் என்னன்னமோ அசிங்கம்’’

’’இதெல்லாம் எதுக்கு அண்ணா’’

’’அவாள் எல்லாம் ஆறு காய்கறி ஒன்பது தானியம் சாப்பிடுவாங்க, ஆனா தருமு பட்டினியோட இருந்து மொட்டை அடிச்சுக்கனும். விதவை மொட்டை அடிச்சா மட்டும் போதாது விரதம் இருந்து எலும்புக் கூடா மாறனும் அவன் கழுத்த நெறித்து கொல்லனும்னு போல் தோணித்து ’’

’’அய்யோ அண்ணா வாய கழுவு பிராம்மணனை கொன்னாலும் கொல்லனும்னு நினைச்சாலும் பிரம்ம ஹத்ய தோஷம் ’’

தருமுவின் உடல் கொதித்தது. அந்த புரோகித இளைஞன் அவள் கண்களுக்கு பார்க்க அழகனாய் இருந்தான் ஆனால் அசிங்கமாக மொட்டையடிக்க வேண்டும் என்றல்லவா சொல்கிறான்.

ஆனால் தருமுவின் அம்மாவிற்கு ஒரு சந்தேகம் கேட்டேவிட்டாள்

‘’அண்ணா இவளுக்கு யார் மொட்டை அடிப்பார்கள் இப்போது வந்தானே அந்த பிரம்மணனா இல்லை நாவிதனா’’ 

அந்த இக்கட்டிலும் தொம்பரைக்கு சிரிப்பு வந்தது. பெரிதாய் சிரித்தார்., ‘’மொட்டை அடிக்கிறதுன்னு நடந்தா நாவிதன் செய்வான் நாவிதன் வேலை பத்து நிமிடம், பிராம்மணர்கள் மந்திரம் ஓதுறது, சடங்கு சாப்பாடு பன்னிரண்டு மணி நேரம். ஆனால் இப்ப வந்தானே புரோகிதப் பையன் அவன் என் கை விரல்களையும் மார்பையும் பாத்தூட்டே இருந்தான்’’

‘’ஏன் அண்ணா உங்க கை விரல்ல புண் ஏதும் இல்லையே’’

’’புண் இல்லை ஆனால் பொன் இருக்கே, இந்த பார்ப்பன புரோகிதர்கள் கண்ணுல முதல்ல படுறது பொன்னும் செல்வமும், என்ன தட்சினை ஆகுமோ அதை கொடுக்கிறேன் மொட்டை வேண்டாம்னேன், அதுக்கு அவன் ஜாதிப்பிரஷ்டம் வரும்ங்றான்’’

‘’அதென்ன அண்ணா ஜாதிப்பிரஷ்டம்’’

‘’ஜாதிய விட்டு விலக்கிருவாங்க’’

தருமுவுக்கு அம்மா அண்ணன் உரையாடல் நன்றாகவே புரிந்தது. மூவரும் மூன்று மூலைக்கு சென்றனர். அது பெரிய வீடு, இல்லை அரண்மனை. மேலே மரவேலைக்கு மேல் நாட்டு ஓடு. தாழ்வாரம் மிக நீளமானது. அதை சுற்றி நான்கு புறமும் ஓடிய வராண்டா. வராண்டாவை அடுத்து நீளமான பட்டக சாலை. நான்கு கோடியிலும் நான்கு பெரும் அறைகள். தாழ்வாரத்தில் ஒன்று, கொல்லையில் ஒன்றுமாக இரு கிணறுகள்.. இதையெல்லாம் தாண்டி போனால் மேலும் தொடரும் மரக் கூரையின் கீழே குதிர்கள். அதில் நெல் மணிகள். அந்த நெல் மணிகளை அரைத்தால் ஒட்டுமொத்த மேலக்கால் மக்களுக்கு பந்தி வைத்து சாப்பாடு போடலாம். ஆனால் சமூகம் இருளில் இருந்த கால கட்டம் அது. இருள் உள்ள இடத்தில்தான் ஆங்கிலேயன் புகுவான் ஆட்சி செய்வான்.

அன்று இருட்டியது. நிலா வந்து அரைத்த அரிசி மாவைக் கொட்டியது போல் வெளிச்சத்தை பரப்பியிருந்தது. அப்போதே தருமு வீட்டின் எதிரில் இருந்த வைகை கால்வாயில் நீந்தி குளித்து விட்டு வந்திருந்தாள். அம்மாவும், மாமாவும் கடிந்து கொண்டார்கள். ஆற்றில் யாரும் இல்லை தனி ஒருவளாகவே ஆற்றை தன் சொத்து என நினைத்துக் கொண்டு நீந்தி குளித்தேன். இந்த ஆற்றை நெல்லூர் பெண்ணேறு என பாவித்தேன் என தெலுங்கில் பொரிந்து தள்ளினாள் தருமு. ஏதோ குரல் கேட்டு தொம்பரை வாயில் பக்கம் போனார். 

தருமு ஐந்தடி நீள தன் தலை முடியை சுற்றியிருந்த துவாலையை எடுத்து விட்டு அடித்து உலர்த்தினாள். பெரு மூச்சுடன் வெங்கட லட்சுமி அந்த முடி நீளத்தை பார்த்தாள். அவள் பெரு மூச்சை கண்ட தருமு தனக்கு தெரிந்த மொழியில் சொன்னாள்

’’அம்மா நீ நிப்பு ஊபிரி நா செம்ம ஜடைன எண்ட பெட்டுனு’’ ( அம்மா உன் நெருப்பு சுவாசம் என் ஈர சடையை உலர வைக்கும்) தாய் என்ன நினைத்தாளோ எதேச்சையாக அவள் வாயிலிருந்து வந்த சொற்கள்

‘’தமசோமா ஜ்யோதிர் கமய’’

(இருளில் இருந்து வெளிச்சத்திற்கு)>

தொம்பரை வாயில் பக்கம் போனவர் உள்ளே வந்தார்.. ’’அந்த புரோகிதப் பையன் ஆத்துல தண்ணி ஜாஸ்தி நீச்சல் வேற தெரியாது அதனால இப்ப திரும்பல்ல, நீர் வத்தினதும் காலமே சோழவந்தான் போவானாம், படித்துறையில சந்தியாவந்தனம் பண்ணீட்டு, நம்ம திண்ணையில ராவுல படுத்துக்கிறேன்னான், நான் சரின்னேன், பாவம் ஒரு நாள் நம்ம திண்ணையில படுத்தால் என்ன ஆகப் போறது.’’

தருமுவுக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது. ஒரே புள காங்கிதம். மனதுக்குள் நினைத்து பார்த்தாள். அந்த அழகிய புரோகித இளைஞன் தனியே ஆற்று படித்துறையின் கடைசிப் படிகளில் அமர்ந்து ஜலத்தை அள்ளி நீரை தெளித்து சந்தியாவந்தனம் செய்கிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது. அவள் தன் தலை முடியின் ஐந்தடியையும் வருடினாள்.

’’அம்மா நா துவின ஏட்டி கெட்டல பெட்டேனு’’ ( அம்மா என் சீப்பை ஆற்று கரையில் வைத்துவிட்டேன்) சொல்லிக் கொண்டே வாயில் நோக்கி சென்றாள். 

பதினைந்து நிமிடங்கள் கழிந்தது. மகிழ்ச்சியுடன் தன் நீண்ட தலை முடியை வருடி கோதியவாரு தருமு உள்ளே வந்தாள்.அவள் முகத்தில் ஒளி கூடியிருந்தது. அவள் அழகு நிலவை வெட்கமடைய செய்யும். சிவந்த அவள் மேலும் சிவந்திருந்தாள், ஏதோ ஒரு தியாகராஜ கிருதியை மெல்லிய ரகசிய குரலில் பாடினாள். அன்று ஏகாதசி. காலை பதினோரு மணிக்கு சாப்பிட்டாள். பின் மாலை குளிக்கும் முன் சில வாழைப் பழங்கள் சாப்பிட்டிருந்தாள். நடந்த இன்ப அனுபவத்திற்கு பிறகு வேறேதும் தேவையில்லை என்ற உணர்வு வந்தது. நேரே தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள். அம்மாவோ மாமாவோ அவள் வழிக்கு எப்போதும் செல்வதில்லை. அறைக்குள் சென்று கயிற்று கட்டிலில் விழுந்தவள் தன் தலை முடியை எடுத்து ஒவ்வொரு அடிக்கும் ஒரு முத்தம் என ஐந்து முத்தங்கள் இட்டாள். அச்சம் வந்தது. நடந்ததை நினைத்து கண்களை மூடினாள். உறக்கம் மெல்ல தழுவியது. 

இருள் அகன்றது ஒளி வெள்ளம் வந்தது.. நாட்டு ஓட்டின் கீழ் மரச் சட்டங்கள். எப்படியோ ஒளியை இறக்க சில ஓட்டைகள் விழுந்து விட்டன. ஒளிக் கற்றை ஒன்று கூர்மையாக நேர் கோட்டில் வந்து தருமுவின் நெற்றியை தொட்டது. விழித்தவள் காதுகளில் கேட்டது ஆராவாரம். மக்கள் பலரின் உரத்த குரல்கள். வீட்டிற்கு வெளியே கால்வாய் கரையில் யாரோ கூவினாரகள், ‘’தலையாரிய கூப்பிடனும்’’ அவளுக்கு உள்ளுக்குள் ஒரு பகீர் உணர்வு. ஆனால் கையை எடுத்து விரித்து பேசுவது போல் ஒரு அபிநயம் பிடித்தாள். எழுந்து அறைக்கு வெளியே வந்தாள். கூக்குரல்கள் அதிகம் வந்தது. ஆனால் அவளுக்கு அச்சமும் இல்லை நாணமும் இல்லை. கிணற்று அருகே சென்று ஒரு வாளி நீர் இறைத்தாள். முகம் கழுவினாள்.  

அந்த அக்ரஹார தெருவின் ஆண்கள் அனைவரும் படித்துறையில் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உடலின் அருகே செல்லவில்லை. மற்ற சமூகத்தினர் நான்கு பேர் அந்த உடலை கடைசிப் படியில் இருந்து எடுத்து படித்துறையின் முதல் படியில் வைத்திருந்தனர். சடலம் யாருடையது என்பதை நீங்கள் ஊகிக்க வேண்டாம். அதுதான் பேசிக் கொண்டார்களே. சுந்தரம் பிள்ளை முதலில் அடையாளம் கண்டவர் கூறினார், ’’இவர கல்யாணம்னு கூப்பிடுவாங்க, ஊரு சோழவந்தான், ஐயமார் வீட்ல எழவு கருமாதி எல்லா காரியம் பாக்கிறவரு, கொஞ்ச வயசு, எப்படி முங்கி செத்தாரோ. தலையாரி வரட்டும்.’’ அந்தக் காலத்தில் தலையாரிதான் போலீஸ். அவருக்கு மேல் ஊர் நாட்டாமை. ஆனால் தொம்பரை நாட்டாமை ஒதுங்கி நின்றார். எல்லாம் தலையாரியே செய்வார் என்றார். தொம்பரை வீடு இன்னும் அடுத்த இரு வீடுகள் முன்னே படித்துறை இணையாக இறங்கியது.

வெங்கடலட்சுமி ஒரு முறை ஐந்து விநாடிகள் பார்த்து விட்டு வீட்டினுள் சென்று குளித்தாள். மகளை எழுப்பவில்லை. இறுதியாக உடல் எடுக்கும் போது உச்சியாகி விட்டது. பெரிய வைகையாற்று கரையில் அந்த பிரம்மச்சாரி பிராம்மணனை எரித்தார்கள். சோழவந்தானில் இருந்து வந்த யாரோ ஒரு ஒன்று விட்ட உடன் பிறப்பு சிதைக்கு தீ வைத்தான். எரிக்க விறகு கேட்ட போது தன் தோப்பிலிருந்து தொம்பரை ஏராளமாக தாராளமாய் கொடுத்தார். தன் உள் மகிழ்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. மனசுக்குள் நினைத்தாரே தவிர வெளியே சொல்லமுடியாது. அந்த பகவான் கொடுத்த தண்டனை என தனக்குள் சொல்லிக் கொண்டார். கணவன் இறந்து நான்கு வருடம் ஆகி விதவை ஆந்திராவிலிருந்து வருகிறாள் உடனே ஓடோடி வருகிறான் இந்த புரோகிதன். சாவு தர்மம் கொடுத்தது.  மாலை கதிரவன் சாயும் முன் எல்லாம் முடிந்தது. ஆற்று நீரை குடங்களில் மோண்டு படித் துறையை நன்றாக கழுவினார்கள். என்ன இருந்தாலுல் தீட்டு தீட்டுதான். உயிர் இருக்கும் வரையில் பிராம்மணனை சாமி என அழைத்தனர்; செத்தால் சவம், சடலம், நினைக்க நினைக்க அவருக்கு வியர்த்தது.  

மாலை , மேற்கே நாகமலையின் சிவப்பின் மீது மேலும் ரத்த நிறம் ஊற்றினான் கதிரவன். மஞ்சளும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் ஆனால் இரண்டும் கலந்த ஒரு நிறம். மெதுவாய் வெளி வந்த தருமு முந்திய நாள் நீந்தி குளிக்க படித்துறை இறங்கிய நேரத்துக்கு முன்னதாகவே வந்து விட்டாள். முந்திய நாள் நிலவொளியில் வந்தாள். இன்று அவள் படித்துறை இறங்குகையில் இன்னும் வெயில் சூடின்றி இதமாய் விழுந்தது. அம்மா தன் அறையில் படுத்து கிடந்தாள். மாமா மூங்கில் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அந்த நாளை மறைக்க முயற்சித்தாரோ என்னவோ. அண்ணன், தங்கை இருவரும் அவள் வெளி வந்ததை உணர்ந்தாலும் ஏதும் கேட்கவில்லை. மெதுவாய் முந்திய மாலை நிகழ்ச்சியை மனதுக்குள் கொண்டு வந்து அசைவு படங்களாக மீண்டும் கண்டாள்.

மாமா சொன்னார்,’’ ’’அந்த புரோகிதப் பையன் ஆத்துல தண்ணி ஜாஸ்தி நீச்சல் வேற தெரியாது அதனால இப்ப திரும்பல்ல, நீர் வத்தினதும் காலமே சோழவந்தான் போவானாம், படித்துறையில சந்தியாவந்தனம் பண்ணீட்டு, நம்ம திண்ணையில ராவுல படுத்துக்கிறேன்னான், நான் சரின்னேன், பாவம் ஒரு நாள் நம்ம திண்ணையில படுத்தால் என்ன ஆகப் போறது.’’ அவள் தன் தலை முடியை பாதுகாக்க விரும்பினாள். ’’தன கேசம் தன ரக்‌ஷ’’. ( என் முடியே எனக்கு பாதுகாப்பு) அம்மா அவளை பார்க்கவில்லை என அறிந்த அவள் கூடில் இருந்த சீப்பை எடுத்து தலையில் சொருகிக் கொண்டாள்.’’அம்மா நா துவின ஏட்டி கெட்டல பெட்டேனு.(அம்மா என் சீப்பை ஆற்றங் கரையில் வைத்து விட்டேன்) நடையில் வரும் போது நின்று சாமாக்கா சாரக்காவை*8 மனதினுள் வணங்கினாள், ஜான்சி ராணியை மனதிற்குள் துதித்தாள். படித்துறை வீட்டிற்கு எதிரே. பூனை போல் சத்தமின்றி நடந்து தெருவை கடந்தாள். மூன்று வீடுகளுக்கு எதிராக படித்துறை. பதினெட்டு படிகள். அவள் ஏற்கனவே எண்ணியிருந்தாள். வடக்கு தெற்காக ஓடும் கால்வாய். அம்மா விளக்கமாக சொல்லியிருந்தாள். அந்த நதி முள்ளிப்பள்ளம் கிராமத்தின் ஊர் எல்லையில் வைகை ஆற்றிலிருந்து பிரிந்து தனி கால்வாயாக வருகிறது. படு வேகமாக நீர் ஓடியது. அழகிய மதுரையின் தெற்கே இருந்த ஒரு கண்மாயை நிரப்புகிறது. நீர் ஒலியுடன் ஓடிக்கொண்டிருந்தது. இடது புறம் கைப்பிடி சுவர்; முழுதும் கல்லால் ஆனது சரிவாக இறங்கி கொண்டிருந்தது. நிலவொளி மிகப் பிரகாசமாக விழுந்து எல்லாவற்றையும் காட்டியது. அவள் கைப்பிடி சுவரை பிடித்து கொண்டே வேகமாக இறங்கினாள். கடைசிப் படிக்கட்டில் அவன். குனிந்து நீரை தெளித்தான். அவள் தன் அசைவுகளை திட்டமிட்டு விட்டாள். அறுவடைக் காலத்தில் விளைச்சலை நிஜாமுக்கு கொடுத்து விட்டு பஞ்ச காலத்தில் நிஜாம் சேனையுடன் தெலுங்கானா விவசாயிகள் ஆயுதத்துடன் மோதும் கதைகளை படித்திருக்கிறாள். போதுமான ஆண்கள் இல்லாவிட்டால் பெண்களும் ஆண் வேடத்தில் வாள் வீசும் கதைகளை கேட்டிருக்கிறாள், படித்தும் இருக்கிறாள். நீரிலிருந்து மூன்றாவது படி. அவள் சிந்தனை உடைந்தது. வீறிட்டு குரல் எழுப்ப  விரும்பிய தன் வாயை பொத்திக் கொண்டாள். வந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்தினாள். மேலும் படியிறங்காத கால்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அப்போது அல்ல. கொம்பேறி மூக்கன் நாகப் பாம்பை விட கொடியது. வெள்ளி நிற நாகத்தில் நிலவொளி பட்டு பிரகாசித்தது. அதன் பெயர் அவளுக்கு தெரியாது. ஆனால் அதுதான் அவள் படி இறங்குவதை நிறுத்தியது. கால்களுக்கு அனிச்சை நடுக்கத்தை கொடுத்தது. மூச்சு பெரிதாய் வந்தது. அவள் மூச்சின் ஒலி அவனுக்கு கேட்குமோ என அஞ்சினாள். அடுத்து கால் வைத்தால் அது கைப்பிடி சுவரின் சரிவில் வால் பகுதி  நீளத்தையும் மீதி நீளத்தை முகத்துடன் படிக்கட்டில் ஒரு பொந்தின் அருகிலும் வைத்திருந்த பாம்பின் தலை மீது இட்ட அடியாக இருக்கும். அந்த படித்துறை முழுதும் கற்களால் ஆனது. பல இடங்களில் இடுக்குகளில் புற்கள் மண்டியிருந்தன. நீரின் ஒலியும் அவளின் ஓசையற்ற நடையும் பாம்பை அவள் பக்கம் பார்க்காதவாறு செய்தது. இரு கெஜம் தள்ளி கடைசிப் படியில் முதுகை காட்டியவாறு புரோகிதன் கல்யாணம். அது சந்தியாவந்தனம் செய்யும் காலம் அல்ல பாம்பு இரை தேடும் காலம். இவன் காலம் தாழ்த்தி சூரியன் விழுந்த பின் ஏன் சந்தியாவந்தனம் செய்கிறான். ஏன் அவள் கணவன் இறந்த நான்கு வருடம் கழித்து அவளுக்கு மொட்டை அடித்து காவி உடை கொடுக்க வற்புறுத்துகிறான். பாம்பு, பிராம்மணன். பாம்பை அவளால் அடிக்க முடியாது. அது அவளை கவனிக்கவில்லை. ஒருவேளை பொந்துக்குள் புகுந்து ஒளிந்த தவளை மீது பாம்பின் கவனம் போயிருந்தால் அது அவளின் அதிர்ஷ்டம். மெதுவாய் கைப்பிடி சுவரிலிருந்து இரு கெஜம் தள்ளி கல்யாணத்திற்கு நேரே நின்றாள். அவன் வந்தனத்தை முடித்தவன் எழுந்து திரும்பி நின்றான். அவளை ஒரு நொடி பார்த்திருப்பான் அல்லது பார்க்காமலும் இருந்திருப்பான். இரண்டாவது படிக்கு வந்த தருமு தன் வலது காலை அவன் நெஞ்சு அளவிற்கு உயர்த்தி முழு பலத்தையும் பிரயோகித்து உதைத்தாள். அவன், கல்யாணம், மல்லாக்க விழுந்தான். தலை பின் வாக்கில் போய் நீரில் விழுகையில் ஆழமற்ற ஆற்றின் கற்களில்  விழுந்து ஒரு உலோக ஓசையை ஏற்படுத்தியது. தருமு வேகமாய் ஆற்றில் இறங்கி அவன் குடுமியை பற்றி இழுத்து நடு ஆற்றுக்கு நீந்தி சென்றாள். அவன் தலையை நீரினுள் அமிழ்த்தியவள் மற்ற கையாலும் கால்களாலும் நீந்தினாள். அவன் ஆத்மா அகன்றதை உறுதிப்படுத்திக் கொண்டாள். மீண்டும் அவனை இழுத்து வந்து முதல் படியில் கிடத்தி விட்டு மெதுவாய் பதினெட்டு படிகளை ஏறி தெருவை கடந்து வீட்டினுள் சென்றாள். அவள் முகத்தில் ஒளி கூடியிருந்தது. அவள் அழகு நிலவை வெட்கமடையச் செய்யும். சிவந்த அவள் மேலும் சிவந்திருந்தாள். அம்மா மாமா அவரவர் வேலைகளில் இருந்தனர். அவளுக்கு நீச்சல் தெரியும் என்பது அம்மா மாமா இருவருக்கு மட்டுமே தெரியும். இன்று நேற்றல்ல அவள் மேலக்கால் வந்த நாளில் இருந்து எப்போதுமே பொழுது சாய்ந்த பின்னரே கால்வாயில் இறங்கி குளித்தாள். அதுவே அந்த கால்வாயில் அவள் குளித்த கடைசி மாலை பொழுது. நிலையூர் கண்மாயை நீர் அடைகிறது, நிலையற்ற அவள் வாழ்வும் ஒரு இலக்கை அடைந்தது. அவள் மகிழ்ச்சிப் பரவசத்துடன் தன் நீண்ட முடியை வருடினாள். அந்த நீளம் அவள் உயரத்தை விட சற்றே குறைவு. அவள் குட்டையாய் இருக்கலாம். ஆனால் அவள் முடி குட்டையல்ல. அது வருடம் 1911 ஆனால் விதவைகள் மொட்டை அடிக்கத் தேவையில்லை என்ற புது நியமம்*9 ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னரே வந்தது. மாமாவிற்கும் அம்மாவிற்கும் சிறிது சந்தேகம் சில நாட்கள் இருந்து மறைந்தது. 1991ல் தனது 98 வயதில் தருமு காலமாவதற்கு முன் தனது 47 ஆம் வயதில் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்து பின் அதிலிருந்து விலகி, இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து பின் அதிலிருந்து விலகி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு பல வகை புரட்சிகளை செய்தார்

* * * * * * *

*a பதினாறு வயது நிரம்பாத ராமனை அரசன் ஆக்குவதற்கான ஆலோசனை நடந்தது.

*1 அரவ மாமி (தமிழ் மாமி)

* 2, 8  தெலுங்கானாவில் வலிமை மிக்க காகதீய மன்னர்களை எதிர்த்து போரடிய அக்கா தங்கைகள் சாமக்கா சளரக்கா.

*3 வண்டிப் பாதை அகலத்திற்கு வழி, செந்தாமரைக் குளம்; தற்போதைய டவுன் ஹால் ரோடும், அதில் பெட்டிக் கடைகளால் சூழப்பட்டு சாக்கடை குழியான குளமும்.

*4 தாமரை இலையில் ஆடும் நீர்த் துளி போல்

*5,9 நியமம்  —— சம்பிரதாயம் தினித்த சட்டம்

*6,7 உபாத்யேலு — புரோகிதன்

 

Show 1 Comment

1 Comment

  1. jananesan

    ராமன் முள்ளிப்பள்ளம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . சனாதனம் அறிந்தவர்கள் கூடுதலாக சனாதனத்தை விமர்சிக்கமுடியும் என மெய்ப்பித்து இருக்கிறார்.பொருத்தமாக நிஜாமுக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் காகத்திய அரசை எதிர்த்துப் போராடிய சம்மக்கா, சாரக்கா கதைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *