‘நான் எங்க போயி முட்டிக்கிறது .புத்தி கெட்ட மனுஷன கட்டிகிட்டு நான் பட்ற வேதனைய இந்த கடவுள் பார்த்துக்கிட்டு தானே இருக்கான் அவன் மட்டும் எதிர்ல வந்தா உண்டு இல்லைன்னு பண்ணி விடுவேன். ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கமே . அதுக்கு காலாகாலத்துல ஒரு நல்லது நடக்கணும்… நாலு காசு சேர்த்து வைக்கணும்…. நகைநட்டு எடுத்து வைக்கணும்_ அப்படின்னு ஏதாச்சு நினைப்பு இருக்கா… இருந்தா.. இப்படி குடிச்சுட்டு வந்து உழுந்து கிடப்பானா நானு கரடியா கத்திக்கிட்டு இருக்கேன் சூடு சொரணை இல்லாமல் எதையுமே காதுல போட்டுக்காம இப்படியே இருந்தா என்ன பண்றது. கம்மல் ஜிமிக்கி வாங்க வச்சிருந்த பணத்தை எடுத்துட்டு போய் குடித்துவிட்டு வந்துட்டானே உங்க அப்பன். ஏண்டி செல்லம்… அந்த ஆளை எழுப்பி எல்லா பணத்தையும் செலவு பண்ணிட்டானா கேளு’.
அடிக்கடி நடக்கிற பொலம்பல் தான் இது. அம்மா முடித்ததும், அப்பாவின் குரல் கேட்டது அவளுக்கு.
“செல்லம்மா …உங்க அம்மா பேசினது எல்லாம் நான் கேட்ணுதான் இருக்கேன். எனக்கு மட்டும் உனக்கு ஒரு நல்லது பண்ணி பாக்கணும் அப்படி என்ற எண்ணம் இல்லையா. என்னம்மா பண்றது. ஜாண் ஏறுனா முழம் சறுக்குது .வேலையே இல்லாமல் இருந்ததா .மெயின் ரோட்டில் சாக்கடை அடைப்பு இருக்குன்னு சொன்னாங்க அதாம்மா இறங்கணமே… அந்த சாக்கடை கப்பு தாங்கிக்கணமே, அதுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திக்கினாத்தான் முடியும் கையில காசு இல்ல உங்க அம்மா வச்சிருந்த பணத்திலிருந்து 200 ரூபாய் எடுத்துக்கிட்டேன். மீதி பணத்தை உன் பொட்டில வச்சிட்டு போனம்மா, எடுத்துப் பாரு, ஒனக்கே புரியும்… திரும்பி வந்ததும் எல்லா பணத்தையும் உங்க அம்மா வச்சிருந்த இடத்திலேயே வச்சிடலாம் அப்படின்னு போயிட்டேன். சாக்கடை தொட்டியில இறங்கி அடப்பு எடுத்ததுக்கு அப்புறம் நான் மயக்கம் ஆயிட்டேன்… சாக்கடை தண்ணிய குடிச்சிட்டேன் போல இருக்கு. கூட இருந்தவங்க என்ன வீட்டில் கொண்டுவந்து படுக்க வச்சிட்டு போயிருக்காங்க. இன்னைக்கு வேலை செஞ்சதுக்கு கூலியா ஆயிரம் ரூபாய் கெடச்சது. உங்க அம்மா என்ன பண்ணுவா பாவம் பத்து பாத்திரம் தேய்க்கிறா .. பிளாட் எல்லாம் கூட்டிப் பெருக்கிறா.. அவ கத்தறது வாஸ்தவம்தான். உனக்கு செல்லம்ன்னு பேர் வெச்சது நான்தான். எவ்வளவு சாக்கடை தண்ணீர் குடிச்சாலும் உன்ன கரை ஏற்றாமல் என் உயிர் போகாது”.
என்ன சொல்வதென்று அறியாமல், இன்னதென்று முழுதும் புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள் பள்ளிக்கூடச் சிறுமி செல்லம்.
எழுதியவர்
கவிஞர் வ சு வசந்தா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.