ஒவ்வொரு நாளும் நிமிடமும் டார்வின் வென்று வருகிறார் – பெண் டார்வின் ஜேன் குடால் (Jane Goodall) (அவரோடு பேசுவோமா?!)
அறிவியலின் லெஜண்ட் என்று போற்றப்படும் பெண் சார்லஸ் டார்வின் ஆக வரலாற்றில் பதிவாகி உள்ள டாக்டர் ஜேன் குடாலை நாம் சந்திக்க இருக்கிறோம்!
தான்சானியாவில் சிம்பன்சிகளின் குடும்பத்தோடு ஒருவராக வாழ்ந்து அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அற்புதமான ஆய்வுகள் பலவற்றை நிகழ்த்தி வன விலங்குகளைப் பற்றி நாம் நினைக்கும் விதத்தையே மாற்றி அமைத்த பேரறிஞர் ஜேன் குடால் (Jane Goodall). அவர் சார்ந்திருக்கும் துறை பிறைமாடாலஜி. அதாவது பிறைமேட்ஸ் என்று அழைக்கப்படும்.. மனித குரங்குகளை ஆய்வு செய்யும் துறை ஆகும்…
ஜென் மோரிஸ் குடால் 1934 ஏப்ரல் 3 அன்று பிறந்தவர்.. மூத்த விஞ்ஞானி காடுகளில் சிம்பன்சி குரங்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய முதல் மனிதர் என்று இவர் போற்றப்படுகிறார்.. குரங்குகள் கொரில்லாக்கள் போன்ற மனிதரல்லாத மனித அம்சங்கள் கொண்ட விலங்குகளை பற்றி ஆய்வு செய்வதில் இவர் முதன்மையானவர்.. இவரோடு குழந்தை விஞ்ஞானிகள் நிகழ்த்திய நேர்காணலை நேஷனல் ஜியாக்ராஃபிக் கிட்ஸ் இதழ் வெளியிட்டது.. தமிழில் ஆயிஷா இரா நடராசன்.
கேள்வி: நீங்கள் விலங்குகளுடன் வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்று எப்போது முதலில் உணர்ந்தீர்கள்.?
பதில்: நான் ஆப்பிரிக்காவுக்கு சென்று வன விலங்குகளுடன் வாழ வேண்டும் என்றும் அவற்றை பற்றிய புத்தகங்களை ஆய்வுகளை எழுத வேண்டும் என்றும் முடிவு செய்தபோது எனக்கு 10 வயது அது இப்போது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் அப்போதெல்லாம் நாங்கள் வாழ்ந்த இங்கிலாந்தில் பெண்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லை அதனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள் ஜேன் கனவு காண முடிந்த ஒன்றை பற்றி யோசிக்க கூடாதா என்று என் அம்மா கூட குறிப்பிட்டார்.. வகுப்பறையில் சர் சார்லஸ் டார்வின் அவர்களைப் பற்றி அவரது கடல் பயணத்தை பற்றி அவர் கேலஃபோகஸ் தீவுகளில் விலங்குகளுடன் கழித்த நாட்களைப் பற்றி படித்த பிறகு நான் வனவிலங்குகளுடன் தான் வாழ வேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற் பட் டது.. கடுமையாக போராடி தான் நான் என்னுடைய அடுத்த படிநிலையை அடைய முடிந்தது உங்களுக்கு உண்மையிலேயே ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் மனம் தளரக்கூடாது யார் சொன்னாலும் கேட்க கூடாது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
கேள்வி: அருமையான அறிவுரை நீங்கள் அப்போது சிம்பன்சி குடும்பம் உன்னோடு வாழச் சென்றீர்கள் உங்களுக்கு பயமாக இருக்கவில்லையா?
பதில்: நான் விலங்குகளை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக பார்க்க சிறு வயதில் இருந்தே பழகி கொண்டேன்.. அவை விலங்குகள் அல்ல நம் சக உயிர்கள்..1960 களில் நான் கோம்பேவில் தான்சானியாவில் அத்தகைய ஒரு குடும்பத்தோடு ஆய்வுகளில் ஈடுபட்டபொழுது மற்ற விஞ்ஞானிகள் என்னிடம் சிம்பன்சிகள் பற்றிய எனது முழு ஆய்வுமே தவறு என்று சொன்னார்கள்.. உதாரணமாக நான் சிம்பன்சிகளுக்கு பெயர்களை கொடுத்து இருக்க கூடாது அவைகளை எண்கள் இட்டு அழைக்க வேண்டும்.. என்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல.. வெறும் விலங்குகள் என்று எனக்குச் சொன்னார்கள்.. ஆனால் நான் அதை ஏற்கவில்லை .. எங்கள் வீட்டில் நான் வளர்த்த நாயிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் இது உண்மை அல்ல மனிதர்களும் விலங்கு ராஜ்யத்தில் ஒரு பகுதி அதில் இருந்து பிரிக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்வதற்கு என்னுடைய ஆய்வுகள் உதவின.. ஒரு விஷயத்தில் நான் பிடிவாதமாக இருந்தேன் நான் ஏதோ உயர்ந்த பிறவி போலவும் அவை ஆய்வகத்தில் ஒருவகை ஆய்வு பொருட்கள் என்றும் நான் கருதவில்லை அவர்கள் தான் தங்கள் குடும்பத்தில் அற்பப்பிறவியான என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அர்த்தத்தில் நான் இந்த விஷயத்தை அணுகினேன்.. அதை எனக்கு கற்றுக் கொடுத்தது என் சக உயிரியாக என் வீட்டில் வளர்ந்த நாய் தான்.
கேள்வி: சிறு வயதில் செல்ல பிராணி வைத்திருப்பது உங்களுடைய கல்வியில் உங்களுக்கு உதவியதுபோல தெரிகிறது நீங்கள் எதைப் பற்றி மிகவும் பெருமைப் படுகிறீர்கள் உங்கள் ஆய்வில் மிக மிக அற்புத தருணமென்று எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: மனிதன் விலங்கு என்கிற உயிரியல் ராஜ்யத்தின் ஒரு பகுதிதான் சிறப்படைந்து பிரிக்கப்பட்டவன்.. அல்ல என்கிற டார்வின் கருத்தை உலகம் புரிந்து கொள்ள மக்களுக்கு உதவிய சிம்பன்சிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் … இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் டார்வின் வென்று வருகிறார்.நான் அதைத் தொடங்கிய பொழுது வேறு யாருமே காடுகளில் சென்று சிம்பன்சிகளை படிக்கவில்லை.. அவர்களுடைய நடத்தை குடும்பம் அனைத்துமே நம்மைப் போன்றதுதான் என்பதை என்னால் உணர முடிந்தது முத்தமிடுவது அரவணைப்பது கைகளை பற்றிக் கொள்வது ஒருவரை ஒருவர் தட்டிக் கொள்ளுதல் உறுதி அளித்தல் ஏன் அழுவது கூட சிம்பன்சிகளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது..
கேள்வி: தான்சானியாவின் கோம்பே தேசிய பூங்காவில் உங்களுக்கு பிடித்த சிம்பன்சி யார்?
பதில்: என்னைப் பற்றிய அச்சத்தை இழந்த முதல் நபர்.. அவரை பின் தொடர என்னை அனுமதித்தவர் அவர் பெயர் டேவிட் கிரே பியர்டு .. முதன்முதலில் கருவிகளைத் தயாரித்து தனது இனத்தால் பயன்படுத்த முடியும் என்பதை எனக்கு நிரூபித்தவர் அவர் மிகவும் அழகாக இருந்தார் மேலும் அவர் ஒரு மென்மையான ஆனால் உறுதியான இயல்புடைய சிம்பன்சியாக இருந்தார்.. டே.. என்று நான் அவரை அழைப்பதை விரும்பினார்.. தனக்கு உணவாக எது கிடைத்தாலும் .. நான் அதை சாப்பிட விரும்புகிறேன்னா என்பதை பரிசீலிக்க தொடங்கியவர் ஏனைய முரட்டு குடும்பத்தினரிடமிருந்து .. நான் தாக்கப்படாமல் இருக்க எனக்கு பாதுகாவலர் போல ஒரு உறவாக ஏற்றுக்கொண்டவர்.. டேவிட் எனும் அந்த அற்புத சக உயிரியை நான் எப்படி மறப்பது!
கேள்வி: இந்த சிம்பன்சிகளிடம் உங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் எது?
பதில்: மனிதர்கள் சிம்பன்சிகளை வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை விட கேவலமாக நினைக்கிறார்கள் அவர்கள் ஆக்ரோஷமாக.. தனி இனக்குழுக்காக ஒரு குடும்பமாக வேட்டை ஆடுபவர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் அன்பு இரக்கம் அக்கறை எல்லாம் உண்டு ஒரு உதாரணம் சொல்கிறேன் அம்மா இறந்த பிறகு மெல் என்று நான் அழைத்த சிம்பன்சி அனாதையாகி விட்டார் அவருக்கு மூன்று வயது அவர் ஒரு ஆண் சிம்பன்சி திட உணவுகளை உண்ணத் தொடங்கினார்.. எனவே தனது தாய் இல்லாமல் கோட்பாட்டு அளவில் உயிர் வாழக்கூடிய வயதை அவர் அடைந்திருந்தாலும் அவர் உயிர்பிழைப்பது சாத்தியமில்லை என்பதுதான் நம்முடைய உயிரியல் நம்புகிறது… துரதிஷ்டவசமாக அவரை பராமரிக்க மூத்த சகோதரரோ சகோதரியோ இல்லாத ஒரு நிலையில் அவர் உயிர் பிழைத்து இருப்பது சாத்தியமில்லை தான் ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில்.. ஸ்பிண்டில் என்ற 12 வயது சிம்பன்சி.. அவரோடு தொடர்பு இல்லாத ஆண்.. அவரை தத்தெடுத்தார். ஸ்பிண்டல் அவரை தன் முதுகில் சுமந்து கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு கைநீட்டி இரவில் தனது கூட்டுக்கு அழைத்துச் சென்று அவனுடன் தனது உணவை பகிர்ந்து கொண்டார் சிறு அனாதையின் உயிரை காப்பாற்றிய ஸ்பிண்டல்! தொடர்பில்லாத சிம்பன்சிகள் இடம் நான் அதை பார்ப்பது இதுவே முதல்முறை ஸ்பிண்டில் தன் சொந்த தாயை இழந்துவிட்டதால் இது மிகவும் நெகிழ்ச்சியான விஷயம்.. ஒரு சிறு குழந்தை தனது துக்கத்தை போக்க உதவக்கூடும் என்று அவர் கருதியிருக்கலாம்.
கேள்வி: ஆச்சரியமாக இருக்கிறது உங்களை போன்ற வன வாழ்க்கையை பெற விரும்பும் குழந்தை வாசகர்களுக்கு என்ன உதவி குறிப்புகளை வழங்க விரும்புகிறீர்கள்?
பதில்: முதலில் நீங்கள் உண்மையிலேயே இப்படி வாழ்வதை விரும்புகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்று நேரடியாக ஆய்வுகளை செய்யலாம் ஆனால் தன்னார்வ தொண்டு செய்வது என்பது நல்ல உயிரியல் பூங்காக்களில் பணி புரிய நிறைய வாய்ப்புகள் இன்று உள்ளன உங்கள் பகுதிகளில் மிகவும் மோசமாக நடத்தப் படும் உயிரினங்கள் குறிப்பாக வன உயிர் இனங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரராக நீங்கள் மாற வேண்டும்.. வாய்ப்புகளுக்காக உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.. அறிவியல் அமைப்புகளில் இணைந்து செயல்படுங்கள்.. குறிப்பாக நீங்கள் நிறைய வனவிலங்கு தொடர்பான புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க வேண்டும் இது குறித்த செய்திகளை துழாவி உங்களுடைய கைபேசிகளில் நீங்கள் நிறைய வைத்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: நீங்கள் எழுதிய மை லைஃப் வித் தி சிம்பாஞ்சீஸ் என்கிற புத்தகத்தை பரிந்துரைப்பீர்களா..
பதில்: அதுமட்டுமல்ல.. நான் நடத்திக் கொண்டிருக்கும் ரூட்ஸ் அண்ட் ஷூட்ஸ் இன்னும் குழந்தைகளுக்கான கல்வி திட்டத்தில் சேருவதற்கும் நான் உங்களை அழைக்கிறேன்.. rootsshoots.org.uk என்கிற இணையத்தின் குடும்பத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.. நன்றி.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.