டார்வின் ஸ்கூல் (Darwin School) – நூல் அறிமுகம்
’90களின் பிற்பகுதி. அறிவொளி இயக்கம் பட்டி தொட்டிகளில் பரவியிருந்த காலம். ஏராளமான படித்த தன்னார்வலர்கள் படிப்பின் அவசியம் குறித்து கூலி ஏதுமின்றி பிரச்சாரப்பணியில் ஈடுபட்ட காலம்.
அந்த நேரத்தில் நடராஜன் எழுத்தில் வெளியான அந்த ஆயிஷா குறுநாவல் . பல ஆயிரம் மக்களிடமும் பலநூறு ஆசிரியர்களிடமும் வாசித்து வாசித்து வாசிப்பில் புரட்சி செய்த காலம் .
சம காலக் கல்வி முறையின் பரிதாபத்தை, பள்ளிக்கூடங்களில் நிகழும் உடலியல்-உளவியல் வன்முறையை அதற்கு முன்னரும், பின்னரும் கூட வாசிக்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அந்தக் குறுநாவலின் தளம் அதற்கு மேலும், அவற்றைவிட நுட்பமான கட்டமைப்பிலும், பேசப்படாத செய்திகளினூடும், புறக்கணிக்கப்படும் கோணங்களிலிலும் அமைந்திருந்தது. வாசித்துவிட்டு கீழே வைக்க முடியாத கனத்தை கொண்டிருந்த கதை அது.
பல லட்சம் வாசகர்களை விம்மி விம்மி அழவைத்த “ஆயிஷா”வை வாசித்த முதல் தலைமுறை வாசகர்களில் ஒருவன் என்பதே என் வாழ்வில் நானே சூட்டிக்கொள்கிற மகுடம்.
••••••••••••••••••
ஆயிஷா இரா.நடராஜன் என்னும் இரா.நடராசன் புகழ் பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். இவருடைய குழந்தைகளுக்கான சிறு கதைகள் உலகளாவிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் மொழியில் இவரால் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சில கதைகள் உலகச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய நான்கு கதைகள் குறும்படமாக எடுக்கப்பட்டு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றுள்ளன.
•••••••••••••••••••••••••••••••
ரோச் பீட்டர் என்கிற சிறுவனின் மூளைக்குள்,விலங்குகளின் மொழியைப் புரிந்துகொள்ளும் மைக்ரோ சிப் ஒன்றை, அவன் சிறுவனாகஇருக்கும்போதே பொருத்திவிடுகிறார் அவனது அப்பா.இதனால் அவனுக்கு எல்லா விலங்கு இனங்களின்மொழியும் புரிகிறது. அவற்றுடன் பேசிபழகுகிறான்.ஆந்தை, பூனை, ஆமை போன்றவை அவனுக்குநண்பர்கள்.
இந்த நிலையில் காட்டுக்குள்செயல்படும் ‘டார்வின் ஸ்கூல்’ பற்றி அவனுக்குதெரியவருகிறது. அந்தப் பள்ளிக்குப் புறப்படுகிறான்.அந்தப் பயணத்தில் டார்வினின் பரிணாமக் கோட்பாடு,இயற்கைத் தேர்வுக் கோட்பாடு என, உயிரினங்களின்தோற்றம் மிகவும் எளிமையாக, ஒரு கதை சொல்லும்சுவாரஸ்யத்துடன் விவரிக்கப்படுகிறது. உயிரியல்,தாவரவியல், சூழலியல் என பாடப் புத்தக சங்கதிகளை,சிறுவர்களின் கதைகேட்கும் மனதுக்கு ஏற்றாற்போலசெதுக்கித் தந்திருக்கிறார் நடராஜன் அவர்கள்.
ஆமி ஆமை, முயல் பாரதி , ஆந்தை மாரி , ரிச்சர்ட் பார்க்கர் நாய் ( ஆர்.பி ) எலி கோவிங்டன் குண்டன் சுபாஷ் பாண்டே ஆகியோர் ரோச் பீட்டரின் நண்பர்கள். அனைவரும் விலங்குகள்.ரோச் பீட்டர் எந்த விலங்கு என்பதை நீங்கள் கதையை வாசித்து கண்டுபிடியுங்களேன்.
முயல் நண்பன் பாரதி அடிக்கடி கவிதை பாடுவான். சூழ்நிலைக்கேற்ப அமையும் கவிதைகள்.புரியும் புரியாது என்பதல்ல. ஆழ்ந்து வாசிக்க எதுதான் புரியாது ?!
“படுத்து சோம்பல் முறித்து
தனது முத்துப்பல்
நட்சத்திரமாய் மின்ன
வாய் திறந்து பூச்சிகள் வழி
குறட்டை விட்டு விட்டு
கண் மூடி உறங்குகிறாள்
பகல்.”
என்ன புரிகிறதா !!!
இப்படி பல இடங்களில் பாடிச்செல்கிறது முயல்.
ஆந்தை மாரிதான் வழிகாட்டி.
இரவுகளில் வழிகாட்டுகிறேன் என பறந்துசெல்ல காணாமல் போய்விடும்.
ஆர.பி நாய் மோப்பசக்தியைக்கொண்டு பல்வேறு பல்வேறு தகவல்களை அளித்துக் கொண்டே பயணத்திற்கு துணையாக வரும்.
வழிநெடுக பலரை சந்திக்கிறார்கள்.
அவர்கள் உருவம் பற்றி, உணவு பற்றி, வாழ்க்கைப் பற்றி விசாரிக்கிறார்கள்.
எள்ளலும் வியப்பும் சோகமும் சிரிப்பும் கேலியுமாக வரலாறுகளை அறிந்து கொள்ளும் விதம் நாம் வாசிக்கும் பக்கங்களை நிதானிக்க வைக்கின்றன.
மின்மினிகளைப் பார்த்து சூரியனைத் தூளாக்கி விழுங்கிவிட்டீர்களா என கேட்பதிலிருந்து தொடங்குகிறது இவர்களின் அரட்டைப்பயணம்.
இரவுகள் பற்றி எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் தெரியுமா ?!
சான்றுக்கு ஒரு தகவல்.
” இரவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா ? இடத்திற்கு இடம் இரவுகள் வேறுபடும். வருடத்திற்கு வருடம் இரவுகளில் மாற்றங்கள் நிகழும். இரவுகளை அந்தி, முன் இரவு , பின் இரவு, நடு இரவு, விடியல் என ஐந்தாக பிரிக்கலாம்.அந்தியில் வெளியேறி முன் இரவுக்குள் கூடடையும் பூச்சிகள் பறவைகள் உண்டு.முன் இரவில் தான் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம்.நடு இரவில்தான் ஆந்தைகள் உணவைத்தேடி அலையும்.பாம்புகளும் எலிகளும் பின் இரவில் தான் வேட்டையாடும்.”
இரவு என்றால் தூக்கத்திற்கு மடடும்தானென நாம் நினைக்க பல உயிர்களுக்கு அந்த இரவுதான் வாழ்க்கை.
காடுகளைப்பற்றி கதையின் போக்கில் கதைக்கிறார்கள். பாடல்களால் காடுகளைப்பற்றி கூறுகிறார்கள்.
” காடு காடு காடு காடு
வெப்பமும் வெதுவெதுப்புமான
ஊசியிலைக்காடு
அது பாலைவனம் அருகே இருக்கும்
குச்சிக்காடு
பைன் தேக்கு தையல் என்று
அள்ளித் தரும் காடு.”
இதுபோல் பல பாடல்களில் எளிமையாக காடுகளின் வகைகளைப் பற்றி பயன்களைப்பற்றி பாடிக் கொண்டே செல்கிறார்கள்.
பயணம் நீள உரையாடல் நீள்கிறது. பல ஆயிரம் கேள்விகள் அலசப்படுகின்றன. பதில்கள் பலவிதமாய் அமைய நிமிர்ந்து படிக்கவைக்கிறது புத்தகம்.
சந்திக்கும் எதிரிகள், தப்பிக்கும் விதம், விக்ரமாதித்ய கதைகளில் வருவதைப்போன்ற புதிர்கள்,கதைப்பாடல்கள் நையாண்டி
பாடல்கள் என அயர்ச்சி தட்டாமல் செல்கிறது கதையின் நடை.
அறிவியலாகட்டும் வரலாறாகட்டும் கண்டுபிடிப்புகளாகட்டும் சுவையாக சொல்லி நம் மனதில் நிரந்தர ஆசனமிட்டு அமர்ந்து விட்டார் இரா.நடராசன் அவர்கள்.
படைப்புகளைப் போற்றுவோம் படைப்பாளியையும் போற்றுவோம்.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : டார்வின் ஸ்கூல்
ஆசிரியர் : இரா.நடராசன்
வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன்
விலை ரூ : 105/
முதல் பதிப்பு : 2014
••••••••••••••••••
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.