*மரணத்தெரு* சிறுகதை – உதயசங்கர்

Death Street (மரணத்தெரு) Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day is Branch of Bharathi Puthakalayamநான் முதன்முதலாக அப்படியொரு தெருவை அந்த ஊரில் தான் கேள்விப்பட்டேன். மரணத்தெரு என்று பெயர்ப்பலகை அம்புக்குறி போல பாயும் நிலையில் நின்று கொண்டிருந்தது. ஊரின் நடுவிலிருந்தது அந்தத் தெரு. ஆனால் யாரும் அந்தத் தெருவுக்குள் போகவில்லை. ஊரினை இரண்டாகப் பிரித்த அந்தத் தெரு ஊரினை ஒன்றாக இணைத்தபடியும் இருந்தது. எல்லோரும் எவ்வளவு தூரமானாலும் ஊரைச் சுற்றிப் போகத் தயாராக இருந்தார்கள். அந்தத் தெருவுக்குள் மட்டும் நுழைவதில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது அந்த ஊரிலிருந்த சலூன் கடைக்காரர் சொன்னார்.

“ சார்.. அந்தத் தெருவுக்குள்ள போனவங்க யாரும் வெளியே வர்றதில்ல.. “

“ ஏன்? “

“ யாருக்குத் தெரியும்? போனவங்க யாராச்சும் வெளிய வந்தா கேக்கலாம்.. யாருமே வர்றதில்லையே..”

“ ஒருத்தருமே அந்தத் தெருவழியா போறதேயில்லையா? “

“ போவாங்க.. வீட்டை விட்டு விரட்டப்பட்ட முதியவர்கள், புருசனோடு சண்டைபோட்டு ஓடி வர்ற பொம்பிளைக…. பைத்தியக்காரங்க.. எப்போதாவது குழந்தைங்க..”
நான் துணிச்சலுடன் அந்தத் தெருவின் முனையில் நின்று தெருவை எட்டிப் பார்த்தேன். தெரு அமைதியாக இருந்தது. ஒரு சுடுகுஞ்சி இல்லை.

எல்லாத்தெருக்களையும் போல வரிசையான வீடுகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், உணவகங்கள், ஃபேன்சி ஸ்டோர்கள் எல்லாம் இருப்பது தடயங்களாகத் தெரிந்தன. ஆனால் எந்தச் சத்தமும் இல்லை. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மற்ற இடங்களைப் போல நீலமாகவே இருந்தது. வானத்தின் நீலம் சாலையில் விழுந்தது. என்ன தோன்றியதோ நான் தெருவுக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

அடுத்த கணம் அந்தத் தெருவில் ஆரவாரம் கேட்டது. எல்லாம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் ஆரவாரத்துடன் அங்குமிங்கும் மகிழ்ச்சியுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கே நின்று திரும்பி நான் நுழைந்த இடத்தைப் பார்த்தேன். அங்கே அமைதி. ஒரு சுடுகுஞ்சி இல்லை. என்னைக் கடந்த ஒரு முதியவர் நான் வந்த தெருவைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்,

“ மரணத்தெருவுக்குப் போயிராதே.. திரும்பி வரவே முடியாது. “

நான் திரும்பிப்பார்த்தேன். மரணத்தெரு என்ற பெயர்ப்பலகை அம்புக்குறி பாய்வது போல நான் வந்த தெருவை நோக்கி நின்று கொண்டிருந்தது.

உதயசங்கர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.