தேபேஷ் ராய் | தமிழில் ஞா.சத்தீஸ்வரன் | Debesh Roy "The Refugee" | அகதிகள் | Agathigal

‘அகதிகள்’ வங்காள எழுத்தாளர் தேபேஷ்ராய் எழுதிய நீள்கதையாகும். இன்றைய வங்காள தேசத்தில் இருக்கும் பாப்னா நகரில் 1936ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலும், கல்கத்தா நகரிலும் வாழ்ந்தார். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி ஐம்பதாண்டு காலம் கதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று நிறைய எழுதியுள்ளார். தன்னுடைய படைப்புகளில் டீஸ்டா நதிக்கரையில் வாழும் ராஜ்பன்ஷி எனும் சமூகத்தினரின் வாழ்வியலை எழுத்தோவியமாக்கினார். இவரின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘டீஸ்டா நதிக்கரையின் கதை’ நாவல் தமிழில் பெ.பானுமதி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட தேபேஷ்ராய் ’தேஷ் இதழ்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

இந்திய விடுதலையோடு நடந்த தேசப் பிரிவினையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்பிரிவினையினால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகினர். மதவெறி தலைவிரித்தாடிய பிரிவினைக் காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குழந்தைகளும், பெண்களும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர்; கடத்தப்பட்டனர். இந்துக்களும், இஸ்லாமியர்களும் எதிரும் புதிருமாக இடம்பெயர நேர்ந்தது. சொத்துக்களையும், உறவுகளையும் இழந்தது மட்டுமல்லாமல் தங்கள் அடையாளத்தையும் இழந்து தவித்தனர். எழுத்தாளர்கள் பலரும் பிரிவினைக் காலத்து துயரங்களைத் தங்கள் படைப்புகளில் சொற்சித்திரங்களாகத் தீட்டினார்கள். ஆங்கிலம், உருது, இந்தி, பஞ்சாபி, வங்காளம் என்று பல மொழிகளிலும் பிரிவினைக் காலச் சோகங்கள் நாவல், கதை, கவிதை, ஆய்வுக்கட்டுரை என்று பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரைப்படங்களாக, ஆவணப்படங்களாக எடுக்கப்பட்டு காட்சி வடிவமாகவும் அவை காணக் கிடைக்கின்றன.

’அகதிகள்’ பிரிவினைக் காலத்தில் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவிடும் அடையாளப் பிரச்சனை குறித்து எள்ளல் நடையில் தேபேஷ் ராயால் எழுதப்பட்ட நீள்கதையாகும். உலகெங்கிலும் இன்று எண்ணிலடங்கா மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். போர், இயற்கைப் பேரிடர், வறுமை போன்ற காரணங்களால் தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அகதிகள் அல்லது புலம்பெயர்ந்தோர் என அழைக்கப்பட்டு முகாம்களில் வாழும் இவர்களின் சோகம் சொல்லில் அடங்காது. புலம்பெயர்ந்து வாழ்பவர்களை  அரவணைத்துக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதே அறமாகும். அகதிகளின் பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் உறுதி செய்கிறது அனைத்து உறுப்பு நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய வங்கதேசம்) கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த இந்துக்கள் இந்தியாவுக்கும் புலம்பெயர்ந்தனர். இவர்கள் எதிர்கொள்ளும் அடையாளப் பிரச்ச்னையே ’அகதிகள்’ கதையின் கருவாகும்.

ஒன்றியஅரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இடியென இறங்கியுள்ள அதிர்ச்சியாகும். ’தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்ற முறையையும் கொண்டுவந்து அமைதியுடன் வாழ்ந்துவரும் குடிமக்களை அந்நியர்கள் என்று முத்திரை குத்தி தடுப்பு முகாம்களில் அடைத்திடுவதற்கான வழியையும் வகுத்துள்ளனர். இன்றைய பின்னணியில் ‘அகதிகள்’ கதை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வங்க மொழியில் தேபேஷ்ராய் எழுதிய ’உத்பாஸ்து’ (அகதிகள்) என்ற கதையை ஆங்கிலத்தில் சுக்தி சர்க்காரும், தமிழில் ஞா.சத்தீஸ்வரனும் மொழிபெயர்த்துள்ளார்கள்.

C:\Users\Chandraguru\Desktop\1714964648576.jpg

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கதையின் நாயகன் சத்யப்ரதனை அவர் மனைவி அணிமா தட்டி எழுப்புவதில் தொடங்குகிறது கதை. சத்யப்ரதனைப் பார்ப்பதற்காக அவரது வீட்டு வாசலில் இருவர் காத்திருக்கின்றனர். மனைவி கொடுக்கும் தேநீரைக்கூட அருந்தாமல் வந்தவர்களைக்காண அவர் வீட்டுக்கு வெளியே வருகிறார். சத்யப்ரதன் தனக்கு ஓய்வானதொரு நேரத்தில் பல்லவ்பூர் காவல்நிலையம் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் கொண்டு வந்த தகவல். எதற்காக என்று சொல்லச் சொல்லி அழுத்திக் கேட்டதும், ”வேறொன்றுமில்லை; அரசாங்கத்திடமிருந்து உத்திரவு வந்திருக்கிறது. நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிறைய வெளி நாட்டினர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாம். எனவே எல்லைப் பகுதியில் குடியிருப்பவர்கள் எல்லாம் ’தாங்கள்’ ’தாங்களேதான்’ என்று நிரூபிக்க வேண்டுமாம்! பல்லவ்பூர் காவல்நிலையத்துக்கு ஒரு நடை போய்ட்டுவாங்க” என்ற தகவலைச் சொல்லி அவர்கள் இருவரும் கிளம்புகிறார்கள்.

‘சத்யரதன் லாகிரி த/பெ. புண்யப்ரதன் லாகிரி; கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்; 1945இல் டக்கா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்; தற்போது ஹோல்டிங் எண் 230/எ/6 என்ற முகவரியில் வசித்து வருகிறார்; இதற்காக பல்லவ்பூர் நகராட்சிக்கு கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வரி செலுத்தி வருகிறார்; வீட்டின் முந்தைய உரிமையாளரிடமிருந்து 1950ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம்நாள் வீட்டினை வாங்கி பத்திரப் பதிவு செய்துள்ளார். 1947இல் அணிமா சன்யால் (முகேரா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீஹேமச்சந்திர சன்யாலின் மகள்) என்ற பெண்மணியைத் திருமணம் செய்து அஞ்சனா என்ற பெண் குழந்தையைப் பெற்றுள்ளார்’ போன்ற விவரங்கள்  விசாரணையில் தெரிய வருகின்றன.

மற்றொரு விசாரணையில் ‘மறைந்த புண்யப்ரத லாகிரியின் மகன் சத்யப்ரத லாகிரி எனும் நபர் 1945இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தேர்ச்சி பெற்றுள்ளார். 1946இல் குல்னா எனும் இடத்துக்கு பயணிக்கும் வழியில் நடந்த மதமோதலில் அவர் கொல்லப்பட்டார்’ என்ற தகவல் கிடைக்கிறது.

இறந்த சத்யப்ரத லாகிரி யார் என்ற கேள்வி இப்போது எழுகிறது. வெவ்வேறு மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து 1947ஆம் ஆண்டில் சத்யப்ரத லாகிரி என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக 87 பேர் திருமணம் முடித்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. இவர்களில் டாக்கா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் யார், அணிமா என்ற பெண்மணியைத் திருமணம் செய்தவர் யார் என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வரை சத்யப்ரதன் என்பவர் யார் என்ற முடிவுக்கு யாராலும் வர முடியாது. தன் கணவர் இன்னார் என்று அணிமா சன்யாலாலும் அடையாளப்படுத்த முடியாது. குழந்தை அஞ்சனாவாலும் தன் தந்தை யார் என்பதை உறுதிசெய்திட முடியாது என்றாகிப் போகிறது.

பல்லவ்பூர் நகரில் சத்யப்ரதன் ’யார்’? என்ற பிரச்சனை தீர்க்க முடியாமல் இருந்த அதே நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த அணிமா சன்யால் என்ற பெண்மணி ’யார்’ என்ற மர்மமும் சேர்ந்துகொள்கிறது. கதை மேலும் சுவாரசியமாகிறது.  சத்யப்ரதனின் அடையாளம் குறித்து இருவேறு தகவல்கள் இருப்பதைப் போலவே அணிமா சன்யாலின் அடையாளம் குறித்தும் குழப்பம் நிலவுகிறது. அணிமா சன்யால் குறித்து மூன்று வேறுபட்ட தகவல்கள் விசாரணையில் கிடைக்கின்றன.

தகவல்-1 இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில்  பாகிஸ்தானில் வசித்து வந்த இந்துக் குடும்பங்கள் இஸ்லாமியர்களின் உதவியின்றி வாழ முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்த ஹேமச்சந்திர சன்யால் என்பவரின் குடும்பம் மைனுல் ஹக்சௌதுரி என்ற இஸ்லாமியர் குடும்பத்தின் பாதுகாப்பில்  இருக்க நேர்ந்தது. ஹேமச்சந்திர சன்யாலின் மகள் அணிமா சன்யாலும், மைனூல் ஹக்சௌதுரியின் மகன் எனாமுல் ஹக்சௌதுரியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் காதல் வயப்பட்டனர். 1950இல் கலவரம் முடிந்ததும் ஹேமச்சந்திர சன்யால் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து செல்கிறார். அவரின் இளைய மகள் அணிமா சன்யால் குடும்பத்தினருடன் இந்தியாவிற்குச் செல்லாமல் பாகிஸ்தானிலேயே தங்கிவிடுகிறார். அதற்குப் பின்னர் கும்கும் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு அணிமா மனமுவந்து எனாமுல் ஹக்சௌதுரியை 1951இல் திருமணம் செய்து கொள்கிறாள்.

தேபேஷ் ராய் வங்காள எழுத்தாளர்
தேபேஷ் ராய் | வங்காள எழுத்தாளர்

தகவல்-2 பிரிவினைக் காலத்து கலவரங்களின்போது கிழக்கு பாகிஸ்தானில் வசித்த ஹேமச்சந்திர சன்யால் குடும்பம் தங்கள் பாதுகாப்பு கருதி மைனுல் ஹக்சௌதுரி குடும்பத்துடன் தங்க நேரிடுகிறது. ஹேமச்சந்திர சன்யாலின் இளைய மகள் அணிமா சன்யாலின் அழகில் மயங்கிய மைனூல் ஹக்சௌதுரியின் மகன் எனாமுல் ஹக்சௌதுரி அவளை எப்படியேனும் அடைந்திட வேண்டுமென்று திட்டமிடுகிறான். கலவரங்கள் முடிந்ததும் ஹேமச்சந்திர சன்யால் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்திட நினைக்கிறார். ஆனால் எனாமுல் ஹக்சௌதுரி கொடுக்கும் நெருக்கடியில் திணறுகிறார். அவனைப் பகைத்துக்கொள்ளாமல் குடும்பத்தினர் அனைவரும் இந்தியா திரும்ப வேண்டும் என்றால் இளைய மகள் அணிமாவை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது. ஒட்டு மொத்த குடும்பத்தின் நலன் கருதி அணிமா சன்யாலை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களுடன் ஹேமச்சந்திர சன்யால் இந்தியாவுக்கு வருகிறார். சிறிது நாட்களில் அணிமாவின் பெயரை கும்கும் என்று மாற்றி எனாமுல் ஹக்சௌதுரி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

தகவல்-3 தன் இளைய மகள் அணிமா அவள் அக்கா குடும்பத்தினருடன் அஸ்ஸாமில் வசிப்பதாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து முகேரா கிராமத்தில் வசித்து வந்த ஹேமச்சந்திர சன்யால் கூறிவருகிறார். ஆனால் அஸ்ஸாமில் வசிக்கும் அவர் மூத்த மருமகனும், முகேரா கிராமத்தில் சன்யாலின் பக்கத்து வீட்டுக்காரர்களும் அணிமா சன்யால் தன் தகப்பனார் ஹேமச்சந்திர சன்யாலுடன்  இந்தியாவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

”எனாமுல் ஹக்சௌதுரியுடன் கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த அணிமா சன்யால் கர்ப்பமடைகிறாள். தாய்மை அடைந்திருக்கும் நேரத்தில் பெற்றோரின் அரவணைப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி எனாமுல் ஹக்சௌதுரி அணிமாவை இந்தியா அனுப்பி வைக்கிறான். தான் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்ததை எனாமுல்லுக்கு கடிதம் மூலம் அணிமா தெரிவிக்கிறாள். அதற்குப் பிறகு எனாமுல் எழுதும் கடிதங்களுக்கு அணிமா பதில் ஏதும் எழுதவில்லை. அவனுடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறாள். ஹேமச்சந்திர சன்யால் அவள் கொண்டுவந்த நகைகள், பணத்தைக் கொண்டு முகேரா கிராமத்தில் வசதியுடன் வாழ்கிறார். அந்த வசதியைப் பயன்படுத்தி இரண்டு மாத கர்ப்பிணியான அணிமாவை சத்யப்ரதனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார். குழந்தை அஞ்சனா திருமணமான ஏழாவது மாதத்தில் பிறக்கிறாள். எனாமுல் ஹக்சௌதுரியின் மனைவியாக கர்ப்பம்தரித்து, சத்யப்ரத லாகிரியின் மனைவியாக அவள் தனது குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்” என்ற தகவலும் விசாரணையில் தெரிய வருகிறது.

இவ்வாறு கிடைக்கும் வேறுபட்ட தகவல்கள் பல்வேறு குழப்பங்களுக்கு இட்டுச்செல்கின்றன. அணிமா சன்யால் தன் விருப்பத்துடனே எனாமுல்லைத் திருமணம்செய்து கொண்டாளா அல்லது நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து அவ்வாறு செய்தாளா என்பது புதிராகவே இருக்கிறது. அஞ்சனா யாருடைய குழந்தை? எனாமுல் ஹக்சௌத்ரியின் குழந்தையா? சத்யப்ரதன் குழந்தையா? அணிமா எப்போது கருத்தரித்தாள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் இல்லாமல் புதிராகவே இருக்கிறது.

இவற்றையெல்லாம் கேள்விகளாகத் தொடுத்த பல்லவ்பூர் நிர்வாகம் அணிமா, சத்யப்ரதன் இருவரையும் தகுந்த ஆவணங்களுடன் காவல்நிலையம் வந்து அணிமா தன்னை அணிமா என்றும், சத்யப்ரதன் தன்னை சத்யப்ரதன் என்றும் நிரூபிக்க வேண்டுமென்று ஆணையிடுகிறது. குடியுரிமை குறித்த இந்த விசாரணைக்கு முன்னர் மிகவும் அந்நியோன்னியமாக இருந்த சத்யப்ரதன் – அணிமா தம்பதிகள் வாழ்வில் இருள் சூழ்கிறது. வீட்டின் வாசல், தாழ்வாரம், படிக்கட்டு, துளசிமாடம் என்று அனைத்திலும் இருள் கவிழ்கிறது. தங்களின் அடையாளத்தைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் தம்பதியினர் என்ன செய்வதென்று அறியாது திகைக்கின்றனர்.

அந்தக் கருவிருளைத் துளைத்துக்கொண்டு “அம்மா! அப்பா!” என்று அஞ்சனா அவர்களை அழைத்ததும் இருள் விலகுகிறது. அஞ்சனாவின் பெற்றோர்கள் என்பதே தங்களின் அடையாளம் என்பது தெளிவாகி இருவரும் மனநிம்மதி அடைகின்றனர் என்று கதை முடிகிறது.

குடியுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்ன நேரும், அந்தச் சட்டத்தால் மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுவர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தேபேஷ்ராயின் ’அகதிகள்’ கதை எழுதப்பட்டிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் விளைவிக்கவிருக்கும் பிரச்சனைகளை அன்றே தீர்க்கதரிசியைப் போல் தேபேஷ்ராய் சொல்லிச் சென்றிருக்கிறார். அன்பின் வழியது உலகம். அன்பு, பாசம் போன்ற உன்னத உணர்ச்சிகளால் கட்டப்பட்டது குடும்ப உறவு. இதை  நிரூபிக்கச் சான்றிதழ்கள் எதற்கு?

நூலின் தகவல்கள்:

பதிப்பகம் :
பாரதி புத்தகாலயம்


விலை : ₹.25 
நூலறிமுகம் ஏழுதியவர்: 
பேரா.பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அடையாளப் பிரச்சனையைச் சித்தரிக்கும் தேபேஷ்ராயின் கதை ‘அகதிகள்’ – நூல் அறிமுகம்”
  1. பேராசிரியாரின் அறிமுகம் நூலுக்கு விமர்சனமாகவும், நூலின் சாரமாகவும் உள்ளது. பல்வேறு கோணங்களில் இந்த சிறுகதையை பார்க்க முடிவது இதன் சிறப்பு. தனிமனித ஒழுக்கமின்மை தலைமுறை தாண்டியும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூட சில தூய்மைவாதிகள் ( puritans) என்னக்கூடும் . சர்வதேச அரசியல் கூட ஒரு தனிமனிதனின் குடும்பத்துக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்பதை இதை விட நுணுக்கமாக விளக்க முடியாது. முழு புத்தகத்தின் தாக்கத்தை ஒரு விமர்சனமும் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடிய வில்லை, பேராசிரியரை நன்றியுடன் வணங்குகிறேன். தங்கள் பணி தொடரட்டும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *