டிச:19 அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்ட நாள் – அ.பாக்கியம்

டிச:19 அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்ட நாள் – அ.பாக்கியம்




“மனித கொலையால் என் கைகள் அழுக்காக்கப்படவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது” – அஷ்பகுல்லா கான்
(ஆங்கிலேய காவல்துறையால் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கூறிய கடைசி வார்த்தைகள்)

டிசம்பர் 19, 1927 பைசாபாத் சிறையில் தனது 27 வது வயதில் அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். காக்கோரி சதி வழக்கில் (Kakori Conspiracy) தண்டிக்கப்பட்டவர்களில் நான்கு பேர், அக்டோபர் 17 முதல் 19 வரை தூக்கிலிடப்பட்டார்கள். இந்த நாட்கள் காக்கோரி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

22, அக்டோபர் 1900-ல் அஷ்பகுல்லா கான், ஐக்கிய மாகாணத்தில் உள்ள ஷாஜஹான்பூர் (உ.பி.) மாவட்டத்தில் நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஷபிக் உல்லா கான், தாய் மஜருனிசா. ஐந்து உடன்பிறப்புகளில் அஷ்பகுல்லா கான் இளையவர்.

இந்தியாவில் 1918ஆம் ஆண்டில், ​​காலனித்துவ எதிர்ப்பு இலக்கியங்களை வெளியிடுவதற்கு நிதி திரட்டுவதற்காக கிராமங்களில் இருந்த பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பது (Money Action) என்று முடிவு செய்து மெயின்புரி கிராமத்தில் சுதந்திரப் போராளிகள் செயலில் இறங்கினர். இதையடுத்து மெயின்புரி சதி வழக்கை தொடுத்த பிரிட்டீஷ் போலீசார், சுதந்திரப் போராளிகளை தேட ஆரம்பித்தனர்.

அஷ்பகுல்லா கான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளியில், பிரிட்டீஷ் போலீசார் திடீர் சோதனை நடத்தி மெயின்புரி சதி வழக்கில் தொடர்புடைய ராஜாராம் பாரதியாவைக் கைது செய்தனர். இந்த சம்பவம்தான், அஷ்பகுல்லா கான், புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.

சோட்டா உல்லா கான் என்பவர் அஷ்பகுல்லா கானின் மூத்த சகோதரர்களில் ஒருவர். அவர், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் வகுப்புத் தோழர். 1918ல் மெயின்புரி சதி வழக்குக்குப் பிறகு, ராம் பிரசாத் பிஸ்மில் பிரிட்டிஷ் போலீசில் சிக்காமல் தலைமறைவானார். பிரசாத் பிஸ்மிலின் துணிச்சலான நடவடிக்கைகளை தேசபக்தியைப் பற்றி, அஷ்பகுல்லா கானிடம் விவரித்து சொல்வார் அவருடைய அண்ணன். சோட்டா உல்லா கான்.

பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் தேசபக்த நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட அஷ்பகுல்லா கான், அவர் 1920ல் உ.பி. ஷாஜஹான்பூருக்கு வந்தபோது அவரைச் சந்தித்தார். அப்போது பிஸ்மிலுடன் கான் தன் கவிதைகள் மற்றும் கஜல்களைப் பரிமாறிக் கொள்வது மட்டுமே சாத்தியமானது.

ராம் பிரசாத் பிஸ்மில் இந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர். அஷ்பகுல்லா கான் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். மதம், ஜாதி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போராட்டத்தில் பலரும் இணைந்து ஈடுபட்டனர். பிஸ்மிலும், கானும் அப்படி இணைந்து செயல்பட்டனர். பொதுவான சித்தாந்தம், லட்சியங்கள் தேசபக்தி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் நட்பு நெருக்கமாக இருந்தது.

1922 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற சிறிய நகரத்தில் நடந்த படுகொலைக்குப் பிறகு மகாத்மா காந்தி அவர்களால் திரும்ப பெறப்பட்டது.

இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்களும் புரட்சியாளர்களும் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது இந்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர்களில் அஷ்பகுல்லா கானும் ஒருவர்.

1924 ஆம் ஆண்டில், ராம் பிரசாத் பிஸ்மிலின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், அஷ்பகுல்லா கான் மற்றும் அவரது தோழர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட தனி புரட்சிகர அமைப்பை நிறுவ முடிவு செய்தனர். இந்துஸ்தான் குடியரசுக் கழகம் (HRA- Hindustan Republican Association) 1924ல் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சிகளை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது.

1925 ஆம் ஆண்டில், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் ஹெச்ஆர்ஏ அமைப்பின் பிற புரட்சியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் செலவுகளை சமாளிக்க காக்கோரிக்கு ரயிலில் கொண்டு வரப்படும் அரசாங்கப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டனர்.

ரயில் கொள்ளைக்கு எதிராக கான் இருந்தார்.மேலும் அவர், தனது குழு உறுப்பினர்களிடம் இந்தக் கொள்ளையினால் பல அப்பாவி பயணிகளுக்கு மரணம் ஏற்படலாம் என்றும் அதனால் ரயில் கொள்ளை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தன் கருத்தை தெரிவித்தார். அவரின் அறிவுரையை குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மேலும், இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற லட்சியவேட்கை அவர்களை 1925ல் காக்கோரி ரயிலைக் கொள்ளையடிக்கத் தூண்டியது. இந்தக் கொள்ளை இந்தியாவில் இந்துஸ்தான் குடியரசுக் கழகம் (HRA) என்ற அமைப்பின் மூலம் ஆயுதப் புரட்சியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.

ஆகஸ்ட் 8, 1925 அன்று, ஹெச்ஆர்ஏ அமைப்பைச் சேர்ந்த புரட்சிகர உறுப்பினர்களால் காக்கோரி ரயிலைக் கொள்ளையடிக்க ஷாஜஹான்பூரில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. காக்கோரி-லக்னோ ரயிலில் அரசு கருவூலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை ராம் பிரசாத் பிஸ்மில் ஏற்கனவே தனது பயணத்தின்போது நோட்டமிட்டிருந்தார். அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, தாக்கூர் ரோஷன் சிங், சசீந்திர பக்‌ஷி, சந்திரசேகர் ஆசாத், கேசப் சக்ரவர்த்தி, பன்வாரி லால், முராரி லால் குப்தா, முகுந்தி லால், மன்மத்நாத் குப்தா ஆகியோருக்கு காக்கோரி ரயில் பண நடவடிக்கைக்கான பொறுப்பு வழங்கப்பட்டது.

9 ஆகஸ்ட் 1925 அன்று, ரயில் ஷாஜஹான்பூரில் இருந்து லக்னோவிற்கு புறப்பட்டது, புரட்சியாளர்கள் ஏற்கனவே ரயிலில் ஏறியிருந்தனர். பயணத்தின் நடுவே ரயிலின் சங்கிலியை யாரோ இழுத்து விட்டார்கள். இதனால் ரயிலை நிறுத்திய காவலாளி திடீரென சங்கிலி இழுத்ததற்கான காரணத்தை சோதிப்பதற்காக ரயிலில் இருந்து வெளியே வந்தார். அஷ்பகுல்லா கான், சசீந்திர பக்‌ஷி மற்றும் ராஜேந்திர லஹிரி ஆகியோர் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து வெளியே வந்தனர். முதலில் சிலர் காவலரை சிறைப் பிடித்தனர், வேறு சிலர் இன்ஜின் டிரைவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டு சிறைப்பிடித்தனர். புரட்சியாளர்களில் இருவர் ரயிலின் இரு முனைகளிலும் துப்பாக்கி முனையில் காவலுக்கு நின்றனர்.

இந்த நடவடிக்கையின்போது புரட்சியாளர்கள் ரயில் பயணிகளை எச்சரித்தனர். ‘‘ பயணிகளே, பயப்பட வேண்டாம். நாங்கள் விடுதலைக்காகப் போராடும் புரட்சியாளர்கள். உங்கள் உயிரும், பணமும், கௌரவமும் பாதுகாப்பாக உள்ளன. நீங்கள் ரயிலில் இருந்து வெளியே எட்டிப்பார்க்காமல் இருங்கள்” என்றனர்.

ரயில் ​​காவலாளியின் கேபினில் கருவூலப் பணப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதைப் புரட்சியாளர்கள் ரயிலைவிட்டு இறக்கி வெளியே கொண்டு சென்றனர்.

பிரிட்டாஷாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ரயில் கொள்ளையில் ஈடுபட்ட புரட்சியாளர்களின் இருப்பிடம் பற்றி ஒரு மாதமாக பிரிட்டீஷ் காவல்துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

ஹெச்ஆர்ஏ (HRA) அமைப்பின் தலைவர் ‘ராம் பிரசாத் பிஸ்மில்’ 26 அக்டோபர் 1925 அன்று காவல்துறையிடம் பிடிபட்டார். அஷ்பகுல்லா கானை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் தனது வீட்டிலிருந்து அடர்ந்த கரும்பு வயல்கள். இடையே ஓடி தப்பித்தார். மறுபுறம், பிரிட்டிஷ் காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையில், புரட்சியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

பிரிட்டிஷ் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்த அஷ்பகுல்லா கான், புகழ்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கணேஷ் சங்கர் வித்யார்த்தியைச் சந்திக்க நேபாளம் வழியாக கான்பூருக்கு சென்றார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்த தனது நண்பர்களை சந்திக்க காசிக்கு சென்றார்.

அங்கு, பலமாவ் மாவட்டத்தில் உள்ள டால்டோங்கஞ்சில் பத்துமாதம் பணிபுரிந்தார். அதன்பிறகு, லாலா ஹர் தயாலிடம் சுதந்திரப் போராட்டத்திற்காக உதவியைப் பெற அஷ்பகுல்லா கான் வெளிநாடு செல்ல திட்டமிட்டார்.

அதன் ஒரு பகுதியாக, அவர் டெல்லிக்குச் சென்று தனது பால்ய நண்பன் பதான் என்பவர் வீட்டில் தங்கினார். ஷாஜஹான்பூரில் கானின் பள்ளி வகுப்புத் தோழனாக இருந்த பதான், டெல்லியில் காட்டிக் கொடுக்கும் துரோகியாக மாறிவிட்டான்.

பதானை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த கான், இரவு உணவை பதானுடன் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு வரை தங்கள் பால்ய வயது நினைவுகளை பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன்னதாகவே பதான், கான் இருக்குமிடம் குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டான்.

அடுத்த நாள் காலை 17 ஜூலை 1926 அன்று, காவலர்கள் கதவை பலமாகத் தட்டினர். தூக்கக் கலக்கத்துடன் கதவைத்திறந்த கானை காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனே அவரை பரிதாபாத் சிறையில் அடைத்தனர். அங்கு கானின் அண்ணன்களில் ஒருவரான ரியாசதுல்லா கான் சட்ட ஆலோசகராக இருந்தார்.
டிசம்பர் 19, 1928 அன்று, காக்கோரி ரயில் கொள்ளையை நடத்தியதற்காக ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான், ராஜேந்திர லஹிரி மற்றும் தாக்கூர் ரோஷன் சிங் ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கைதான மற்ற புரட்சியாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சுதந்திரப் போராளி அஷ்பகுல்லா கான் ஒரு சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர். நிறைய தேச பக்தி கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருக்கிறது.

வார்சி மற்றும் ஹஸ்ரத் ஆகியவை அஷ்பகுல்லா கான் உருது மொழியில் கவிதைகள்,கஜல்களை எழுதும் போது பயன்படுத்திய புனைப்பெயர்களாகும்.

சுதந்திரம் அடைவதற்கான தெளிவான சிந்தனை, தைரியம் மற்றும் தேசபக்தி கொண்ட ஒரு போராளிதான் அஷ்பகுல்லா கான். இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட உறுதி பூண்டிருந்தார்.

தாய்நாட்டிற்காக அஷ்பகுல்லா கானின் உயிர் தியாகம் குறித்து பல இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன. இந்திய அஞ்சல் சேவைகள் 19 டிசம்பர் 1997 அன்று அஷ்பகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மிலின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட முத்திரையை ( Stamp) வெளியிட்டது.

ஹெச்ஆர்ஏ அமைப்பில் உள்ள மற்றவர்களைப் போலவே, கானும் லெனின்,போல்ஷிவிக் புரட்சியால் வலுவாக ஈர்க்கப்பட்டார். அவர் ஏழைகளின் விடுதலை, முதலாளித்துவ நலன்களை நிராகரிப்பதில் நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார். அவர் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் வலுவான கருத்துக்களை கொண்டிருந்தார்.

அஷ்பகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மில் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருந்தும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது ஒன்றாக இணைந்து பணியாற்றினர். ஒருமுறை, ஊடக நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் பேரன் ராஜ் பகதூர் தோமர், கானுக்கும் பிஸ்மிலுக்கும் இடையிலான நட்பு, தோழமை என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

இருவரும் நெருக்கமான நண்பர்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள்; வேலை செய்தார்கள். கான் தொழுகை நடத்தும் போது அதே அறையில்தான் பிஸ்மில் பூஜை நடத்தினார் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் மத மாச்சரியங்கள் எதுவுமே இல்லை. சுதந்திரம் அடைந்தே தீருவது என்ற லட்சியம்தான் இருந்தது. சுதந்திரப் போராட்ட வரலாறு வகுப்பு ஒற்றுமைக்கான பல பாடங்களை சொல்லித் தந்திருக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத சங்கிகள் அவற்றை சிறிதும் சட்டை செய்வதாக இல்லை. வகுப்பு துவேஷ தீ மூட்டி இன்னமும் அதில் குளிர்காய்வதில்தான் குறியாய் இருக்கிறார்கள். இவர்களை முறியடிப்பதில்தான் நாமும் குறியாய் இருக்க வேண்டும்.

அ.பாக்கியம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *