அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல்
– அ. குமரேசன்
தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு எனும் அந்த மகத்தான செயல்பாட்டின் வாகனங்கள்தான் சொற்களும் எழுத்துகளும் மொழிகளும் இலக்கியங்களும் கலைகளும். எழுதப்பட்ட இலக்கியத்திற்கு ஒரு 3,200 வயது இருக்கும். ஆனால் கதை கவிதை அல்லாமல் கட்டுரை வடிவில் எழுதுவது தொடங்கி சுமார் 550 ஆண்டுகள்தான் ஆகின்றனவாம்.
தனிப்பட்ட அனுபவங்கள் முதல் பொதுவான கருத்துகள் வரையில் கட்டுரைகளாக எழுதப்பட்டுப் பகிரப்படுகின்றன. வரலாற்றுத் தேடல்களும் அறிவியல் ஆராய்ச்சிகளும் கட்டுரைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. கலை இலக்கியத் திறனாய்வுகளும் அரசியல் விமர்சனங்களும் கட்டுரைகளாக முன்வைக்கப்படுகின்றன. பலப்பல வடிவங்களில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கதை இலக்கியம், கவிதை இலக்கியம், நாடக இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல கட்டுரை இலக்கியம் என்று சொல்லத்தக்க பரிணாமம் ஏற்பட்டிருக்கிறது.
கட்டுரை இலக்கியத்தில் தடம் பதித்திருப்பவர் தீபா நாகராணி. அவரது சிறுகதைகள் போலவே கட்டுரைத் தளத்திலும் அழுத்தமான தடம். இதற்கு இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் சான்று.
இளம் (வயது சார்ந்தல்ல) எழுத்தாளர்களுக்கு ஒரு நம்பகமான அறிமுக மேடையாக இருப்பது முகநூல். அதைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன என்ற போதிலும் முகமறியாத பலரும் முகம் காட்டவும் உரையாடவும் அது வழியமைக்கிறது என்பது உண்மை. அவர்களில் பலர் அகம் நெருங்கிய நண்பர்களாகவும் சேர்ந்துவிடுகிறார்கள். 13 ஆண்டுகளுக்கு முன் அப்படி நெருங்கிய ஒரு அன்பு உள்ளம்தான் சேலத்தைச் சேர்ந்த ராஜ் பிரின்ஸ். ஒருநாள் மாலையில் தொலைபேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, “ஒரு நிமிசம் லைன்லேயே இருங்க, கான்ஃபரன்ஸ் கால் கனெக்‘ஷன் கொடுக்கிறேன்… இவங்களோட பேசுங்க,” என்று தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அவங்கதான் தீபா நாகராணி. அவரவர் ஆர்வம், ஈடுபாடு என்று அந்த முதல் ‘சந்திப்பு’ அமைந்தது. அப்புறம் மாதம் ஒருமுறையாவது உரையாடுவது வழக்கமானது. ஒருமுறை தனது இணையர் ராமமூர்த்தியை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஒருநாள் மதுரைக்குச் சென்றிருந்தபோது, இணையர், மகன் வருண் இருவருடனும் ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு வந்து பேசிவிட்டுச் சென்றார். ஒரு குடும்ப நட்பாக இந்த உறவு வளர்ந்தது. இக்குடும்பத்தில் ஒருவரான ராஜ் இன்றில்லை என்றாலும் அவர் கோர்த்துக் கொடுத்த இந்த நட்புறவு மாலை இனிமையாய்த் தொடர்கிறது.
அந்நாளில் முகநூலில் தீபா ஒரு கட்டுரை பதிவிட்டிருந்தார். குடும்ப உறவில் ஒரு மகோன்னதத்தை ஒரு செல்ல மகளாக வெளிப்படுத்திய அந்தக் கட்டுரை, அவரது ஒப்புதல் பெற்று ‘தீக்கதிர்’ ஏட்டின் ஞாயிறு இணைப்பான ‘வண்ணக்கதிர்’ இதழில் வெளியிடப்பட்டது. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘அப்பாவின் இளவரசி’ கட்டுரைதான் அது. மகள் இல்லாத ஏக்கம் எப்போதும் உள்ளவன் நான். தகப்பன் – மகள் உறவின் பாசப் பிணைப்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய அந்தக் கட்டுரை அந்த ஏக்கத்தை மேலும் கிளறிவிட்டது.
சிறுமியாக இருந்த நாட்களில், அப்பா சைக்கிளில் முன்பக்கம் அமரவைத்து ஓட்டிச் சென்றபோது முன்னால் செல்லும் ஒவ்வொரு வண்டியையும் முந்திவிடச் சொல்லி வேகமாக ஓட்ட வைப்பாராம் இவர். வளர்ந்தபின் அவரை டூவீலரின் பின்னால் உட்கார வைத்து இவர் ஓட்டிச் செல்லும்போது அவர் “பார்த்துப் போம்மா” என்று சொல்வதை ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார். அந்த இடம் ஓர் உறவுக் கவிதை.
மகளுக்குத் தந்தை சுதந்திரம் கொடுத்து வளர்க்கவில்லை, மகளின் சுதந்திரத்தைப் பறிக்காமல், சுருக்காமல் வளர்த்திருக்கிறார், அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற செய்தி இதில் பொழிப்புரை பதவுரை இல்லாமல் சொல்லப்படுகிறது.
தமிழின் முக்கிய ஏடுகளிலெல்லாம் இவரது எழுத்துகள் அச்சாகிற வளர்ச்சி நடப்பாகியிருக்கிறது. ‘விரல்களின் சிநேகிதி’ என்றொரு கட்டுரை. ஆனா ஆவன்னா எழுதப் பழகிய பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பென்சில் உறவு பற்றிய பதிவில் எத்தனை சுவைரசனை! வெறும் பென்சில் சீவிய (அதனால் விரல்களில் பிளேடு வெட்டுகள் வாங்கிய) ஞாபகப் பகிர்வு அல்ல. இப்போதும் பயணங்களின்போது கைப்பையில் ஒரு பென்சில் இருக்கும் என்கிறார். கையோடு கொண்டு செல்லும் புத்தகத்தில் தன் கவனத்தைப் பெறும் வரிகளில் அடிக்கோடு இடவும், அந்நேரம் தோன்றும் எண்ணங்களைக் குறித்துக்கொள்ளவும் அந்தப் பென்சில் உதவுகிறது.
தான் வாசித்த சுகம் மட்டுமல்லாது முக்கியமான வரிகளை மறுபடி நினைத்துப் பார்க்க, மற்றவர்களுக்கு எடுத்துக் கூற இது தேவையானதொரு பழக்கமாகிறது. அதுவொரு போற்றத்தக்க தொண்டு. மேலும், இரவல் புத்தகத்தில் இப்படி அடிக்கோடிட்டு குறிப்பெழுத முடியாது என்பதால் சொந்தமாகப் புத்தகங்களை வாங்கியாக வேண்டும் அல்லவா! வீட்டின் ஓர் அங்கமாக ஒரு நூலகம் சேர்ந்துகொள்ளுமே! இதெல்லாம் கட்டுரையில் இல்லாமலேயே ஏற்படும் எண்ணங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பென்சில் சீவுகையில் விரல்களில் பிளேடு ஏற்படுத்திய காயம் சுவைப்பதற்கானது (விரலை வாயில் வைத்துக் கொள்வதாலும்!). இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்னி அரைக்கையில் விரல்களை மிக்ஸியின் பிளேடு வெட்டியதால் ஏற்பட்ட காயம் பதைப்பதற்கானது. தையல் போட நேர்ந்த அந்தக் காயத்தால் இவர் பல மாதங்களுக்கு அனுபவிக்க நேர்ந்த உடல் சார்ந்த வலியையும், பணிகள் முடங்கியதால் ஏற்பட்ட மனம் சார்ந்த வலியையும் நண்பர்கள் அறிவார்கள்
அந்த வேதனையையும் இவரால் நகைப்போடு பகிர்ந்துகொள்ள முடிகிறது – ‘விரலோடு விளையாடிய மிக்ஸி’ கட்டுரையில். இதுதான் இடுக்கண் வருங்கால் நகுவதோ?
‘மெலிஞ்சிட்டீங்க போல’ கட்டுரை, “அக்கறையோடு” உடல் அளவு குறித்து விசாரிக்கப்படுகிற இடுக்கண் வந்ததை நகைத்துத் தள்ளுகிறது. அந்தச் சிரிப்பு அவரவர் இயல்பான உடல்வாகு பற்றிய தேவையற்ற கவலைகளைப் புறந்தள்ளுகிறது.
இந்த நகைச்சுவை உணர்வு எல்லாக் கட்டுரைகளிலும் இழையோடுகிறது. பெண் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை வராது என்பவர்கள் அந்த இழையோட்டம் கண்டு புன்னகைச்சுவையுடன் கருத்தை மாற்றிக்கொள்வார்கள்.
உடல்வாகு பற்றிய மேற்படி கட்டுரையுடன் இணைவது ‘எந்தக் கடையில அரிசி வாங்குற’ என்ற இன்னொரு கட்டுரை. உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்துப் பலரும் இப்படிக் கேட்டுச் சிரிப்பார்கள். இப்படித் தொடங்குகிற ஒரு சினிமாப் பாட்டு கூட உண்டு. திரைப்படங்களில் பருமனாக இருப்பவர்களை நகைப்புக்குரியவர்களாகக் காட்டுகிற அநாகரிகம் இன்றும் மறையவில்லையே. அதில், இவ்வாறு பருமனாக இருப்பவர்களின் உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்ட வாதைகள் சிறுமைப்படுத்துகின்றன. உருவத்தைக் கேலி செய்யும் இந்தச் சிறுமை, சமூகத்தைப் பிடித்த சீழ் என்று சாடுகிறது இக்கட்டுரை.
சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மற்றொரு புண், சமையலைப் பெண்களுக்கு உரிய வேலையாகச் சுமத்தும் பாகுபாடு. விதிவிலக்குகளாகப் பல குடும்பங்கள் இருக்கின்றன, ஒப்பீட்டளவில் ஆண்களின் சமையலறைப் பங்கேற்பு அதிகரித்திருக்கிறது. இருந்தபோதிலும், வீடுகளில் கணவன்மார்கள் சமையல் செய்வதை “ஆண்மைக்கு” இழுக்கு என்பதாகச் சித்தரிக்கிற போக்கு தொடரவே செய்கிறது. அம்மாவின்/ மனைவியின்/ சகோதரியின் கைமணம் தனியான சுவை எனறு பதக்கம் மாட்டிவிட்டு, நடைமுறையில் பெண்ணின் சுமை என அவிக்கப்படுகிறது சமையல். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் பெண்ணின் இந்தச் சுமையை சோற்றில் கிடக்கும் கல்லாக எடுத்துக் காட்டியது.
‘இருவரும் சமைத்தல் இனிது’ என்ற கட்டுரை அந்தக் கற்களை அப்புறப்படுத்தி நிறைவான சமத்துவச் சுவைக்கு நாவைத் தயார்ப்படுத்துகிறது. மூத்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், ‘ஆண்களுக்கான சமையல் குறிப்பு’ என்றொரு புத்தகமே பரிமாறினார். ‘வண்ணக்கதிர்’ இணைப்பில், சமையல் குறிப்புகள் வெளியிட்டபோது அதற்கு ‘சேர்ந்து சமைத்தல் இனிதிலும் இனிது’ என்று தலைப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு கதை பொதிந்திருக்கிறது, கதை சொல்லும் நடை கூடவே வருகிறது. அதனாலேயே, தொடக்கத்தில் குறிப்பிட்டதற்கேற்ப, “கட்டுரை இலக்கியம்” என்ற அடையாளத்தைப் பெறுகின்றன இந்த எழுத்தாக்கங்கள். அருமையான சிறுகதைகளைப் படைத்தளிப்பவராக, இலக்கிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, பல்வேறு கருப்பொருள்களில் உரையாளராக என்று தெளிவாகப் பதிந்துவிட்ட தடங்கள் மென்மேலும் அழுத்தமும் ஆழமும் பெறும் என்பதில் ஐயமில்லை..
இப்படியான கட்டுரைகளின் நோக்கம் தனக்கு இந்தப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் இப்படிப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன என்று தெரியப்படுத்துவது மட்டுமல்ல. அந்தக் கண்ணோட்டங்கள் சரியா தவறா என்று சிந்தியுங்கள், விவாதியுங்கள், சரியென்றால் மாறுங்கள், மற்றவர்களுக்கும் மடைமாற்றுங்கள் என்று கூறுவதும்தான். அருளுரை, அறிவுரைத் தொணிகளில் அல்லாமல் தோழமையோடு தோளில் கைபோட்டு, உடனமர்ந்து சிரித்துப் பேசிப் பகிரப்படுகிற கருத்துகள் அப்படிப்பட்ட மாற்றங்களுக்குத் துணை செய்யும். இப்படிப் பேசுவதற்கு உலகத்தில் ஏராளமான நிலைமைகள் இருக்கின்றன. அவற்றில் சில துளிகளைக் கையிலேந்திக் கொடுத்திருக்கிற நூலாசிரியர் பெருமழையாக இன்னும் நிறைய வழங்க வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புவதன்றி வேறென்ன வாழ்த்துக் கூறிவிடப்போகிறேன்?

நூலின் விவரம்:
அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) அகவெளியின் அலைகள்
நூலாசிரியர்: தீபா நாகராணி (Deepa Nagarani)
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ் (Her Stories)
81, நான்காவது நிழற்சாலை
அசோக் நகர்
சென்னை – 600 083
தொடர்பு எண்: 7550098666
விலை: ரூ. 130
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம் – அற்புதமான மதிப்புரை. மிக்க நன்றி சார் திரு குமரேசன் அவர்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani