தெய்வீகத் தடங்கள் : நூல் அறிமுகம்
எதிர்நீச்சல்
“நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்பது உங்களுக்குத் தெரியாது- வலிமையுடன் இருப்பதுதான் உங்களுக்கான ஒரே வழி என்றாகிற வரையில்.”
-பாப் மார்லே.
சுமைகளும் துயரங்களும் மிகுந்த வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு உத்வேகம் தருகிற ஏதோவொன்றுக்காக ஏங்குகிறோம். அப்படி அகப்படுகிற ஒன்றை இறுகப் பற்றிக்கொள்கிறோம். அந்த ஒன்றை, நபரை, இடத்தை மீண்டும் மீண்டும் அணுக விரும்புகிறோம். எனக்கு அது வாசிப்பாக இருக்கிறது. ஒரு டானிக் போல, நம்பிக்கை தரும் கதைகளைத் தேடிச் செல்லுகிறேன். போலவே நற்செய்தி பகிர்தல் எல்லையற்ற மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருகிறது. அதன் பொருட்டாய், நான் தேடியடைகிற, என்னைத் தேடி வருகிற நம்பிக்கைக் கதைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் செய்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னால் சொந்த அலுவல் நிமித்தமாய் மதுரைக்குப் போனபோது, பேரா.வின்சென்ட் வீட்டில் தங்கினேன். ஆங்கில இலக்கணம், இலக்கியம், நூல் விமர்சனம் என்று பல துறைகளில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தாலும் மொழி பெயர்ப்பு அவர் பெருவிருப்போடு ஈடுபடும் துறை. உளவியல் தொடர்பாகவும் சில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அன்றைய தங்கலின் நினைவாக இயேசு சபை பாதிரியார் அமல் தாஸ் எழுதிய ‘டிவைன் ட்ரெய்ல்ஸ்’ என்கிற சிறு நூலை அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். அந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து நம் வாழ்வு இதழில் ‘தெய்வீகத் தடங்கள்’ என்கிற தொடராக எழுதி வந்தார். ஆங்கில நூலை ஓரிரு நாட்களில் வாசித்துவிட்டு, நூலாசிரியருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். அந்த வாசிப்பின் வியப்பில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. ‘தெய்வீகத் தடங்கள்’ தமிழ்த் தொடர் இப்போது ஒரு நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராத ஒரு விபத்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடுகிறது. உங்களுடைய உலகம் இருண்டு போய்விடுகிறது. அவ்விபத்தின் அதிர்ச்சியிலிருந்து நீங்கள் இன்னும் மீளவில்லை. நோய்ப் படுக்கையில் விழுந்துவிடுகிறீர்கள். மற்றவர் துணையின்றி உங்களால் ஒரு நாளைக் கூட தள்ள முடியாது. உங்கள் உடல் மரத்துப் போய் விடுகிறது. உடலின் உறுப்புகள் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. வலி நிவாரணிகளோ தூக்க மாத்திரைகளோ உங்கள் உடலில் வேலை செய்யாது. 24 மணி நேரமும் மரண வலி உங்களை வதைத்து எடுக்கிறது. வாழ்க்கையில் மிச்சம் இருக்கும் கடைசி நம்பிக்கைகளும் கரைந்து போகிறது. ‘வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டால் என்ன?’ என்று மனது உங்களுக்கு நெருக்கடி தரத் தொடங்குகிறது…
இப்படிப்பட்ட ஒரு கடுமையான நிலையிலிருந்து போராடி மீண்ட ஒரு 40 வயது மனிதனின் கதை தெய்வீகத் தடங்கள்.
2014இல் ஒரு பிப்ரவரி மாதம் மாலை நேரம் கல்லூரியில் வகுப்புகளை முடித்துவிட்டு சேசு சபை குருமட வளாகத்தில் இருந்து திண்டுக்கல் புறநகர் பகுதியிலுள்ள வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருக்கிறார் பாதிரியார் அமல் தாஸ். அங்கு அந்தோணியார் கோயிலில் மாலை 7 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்கான பயணம். நெடுஞ்சாலையில் வீரக்கல் பஞ்சாயத்து அருகில் போய்க்கொண்டிருக்கும்போது வேகமாக வந்த ஒரு எய்ஷர் டிரக் அவரது மோட்டார் சைக்கிளில் மோதி அவரைத் தூக்கியெறிந்துவிடுகிறது.
வலது மேல் கை இரண்டாக உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் அமல் தாஸ். கையில் எலும்பெல்லாம் துண்டு துண்டாய் வெளியில் துருத்திக் கொண்டிருக்கின்றன. தோள்பட்டை முற்றிலுமாய்ச் சிதைந்து போய்விட்டது முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையில் எலும்பு நொறுங்கிப் போய், மணிக்கட்டு தொங்கிக் கொண்டிருந்தது. வலது முழங்காலுக்கு கீழ் சதையின் ஒரு பகுதி இல்லை. மோதிய லாரியின் பம்பர் அவரது காலனியை வெட்டி விட, வலது பாதத்தில் ஆழமான காயம். அணிந்திருந்த தலைக்கவசம் நொறுங்கி, அவரது முகத்தையும் தலையையும் கிழித்து விட்டிருந்தது. வலது காலில் இருந்தும் பல இடங்களில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதயத்தில் இருந்து கைக்கு வரும் முதல் தமனி அறுந்து போய், பெரும் ரத்தப் பெருக்கு. அவரது நிலைமையைப் பார்த்தவர்கள், இனிமேல் அவர் பிழைக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
விபத்து நேர்ந்த இடத்திலிருந்து அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறார்; ஓரிரு நாட்களில் அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு; பிறகு உயர்தனிச் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு. ஐந்து ஆண்டுகள்; ஒன்பது அறுவை சிகிச்சைகள். இதற்கிடையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு, படிப்பு, வாசிப்பு. 2019இல் ஒன்பதாவது அறுவை சிகிச்சை 13 மணி நேரம் நிகழ்த்தப்பட்டது. சிகிச்சையின் போக்குகளை அமல் தாஸ் இப்படி நினைவுகூர்கிறார்:
“முந்தைய அறுவை சிகிச்சைகளின்போது வலது தோள்பட்டை, மேல் கை, கீழ் கை ஆகியவற்றில் உலோகத் தகடுகள் வைக்கப்பட்டன; வலது முழங்காலில் நாளடைவில் கரைந்துபோகிற திருகாணியிட்டுச் சரிசெய்யப்பட்டது. வலது காலில் சுண்டு விரல் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, பாதம் சரியாயிற்று. இந்த சிகிச்சைக்காக இடது தொடையிலிருந்து தசைகளும் தோலும் எடுக்கப்பட்டன. இரத்தக் குழாய்கள் கால் கண்டைத் தசையிலிருந்து எடுக்கப்பட்டன. இவையெல்லாம் எனது வலக்கை தேறுவதற்கு உதவின.”
அமல் தாஸ் ஒரு சமயப் பணியாளர். சமய வாழ்வுக்கென தன்னை ஒப்புவித்துக்கொண்டவர். எனினும், ஒரு பெருவிபத்தும், அதிலிருந்து மீள்வதற்கான முடிவுறாத போராட்டமும் வாழ்க்கையை பற்றிய அவரது பார்வையை மாற்றிவிட்டதை உணர்ந்துகொள்கிறார். அதை மனத்தடை ஏதுமின்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். தொடக்கத்தில் குறிப்பிட்ட பாப் மார்லேயின் கருத்தை முன்வைத்தே தன் பதிவைத் தொடங்குகிறார். இந்த புத்தகத்தின் மைய இழையாக இக்கருத்தியலைக் கருதலாம். அமல் தாசின் வாக்குமூலத்திலிருந்து:
“முதியோர், காயமுற்றோர், நோயுற்றோர், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரிடம் நான் நடந்து கொள்ளும் முறையில் என்னிடம் மாற்றம் ஏற்பட்டிருந்ததை நான் கண்டேன். நோய்வாய்ப்பட்டோரின் மனநிலையில் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்துவது எப்படி என்றும், நியாயப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் கற்றுக் கொண்டேன். ஏழைகளும் சாதாரண மக்களும் அச்சத்தாலும் இயலாமையினாலும் ஏற்படும் மன எழுச்சிகளுக்கு உட்படுவதை அறிந்து கொண்டேன்.
கழுத்துக்கு கீழ் உள்ள நரம்பு மண்டலம் சேதமடையும்போது வலி ஏற்படுவது இயற்கை என்று கங்கா மருத்துவமனை மருத்துவர்கள் சொன்னார்கள். இப்படிப்பட்ட நோய்களில் நரம்பியல் வலியாகவே அது இருக்கும். மேலும் இந்த வலி சாதாரண சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாது. அதாவது, வலி போக்கும் மருந்துகள், மயக்க மருந்துகள் ஸ்டீராய்டுகள் எதுவுமே இங்கு எடுபடாது. அமல் தாசுக்குப் பெரும் சவால் ஆனது இந்த நரம்பியல் வலிதான். மேல் கை நரம்பு பின்னலில் ஏற்படும் வலி கொடூரமான வலியின் கீழ் வரும். இது மிகவும் மோசமானது.
“வலி நோய்க் குறிகள் மனக்கடுப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தின. பகல் நேரத்தில் வலியின் அளவு சீராக இருக்கும். ஆனால் இரவில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். மற்ற வலி நோய்க்குறிகளை போலல்லாமல் வலி கூடுவதும் குறைவதுமாக இருப்பது மன அழுத்தத்தை கொடுக்கும். அதோடு தற்கொலை எண்ணங்களையும் தூண்டும்…
படுக்கையில் படுக்க முடியாது. அப்போது தட்டச்சு செய்வேன்; வலியை மறக்க பல வேலைகளில் ஈடுபடுவேன்; பாடல்கள் கேட்பது, டி.வி. பார்ப்பது, கட்டுரை எழுதுவது, பவர் பாயிண்ட் ஸ்லைடுகள் தயாரிப்பது, தட்டச்சுப் பயிற்சி என்று ஏதாவது செய்து கொண்டிருப்பேன்.
கணினி திறன்களையும் ஓரளவு வளர்த்துக் கொண்டேன். என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடு-ஏறத்தாழ 300 பக்கங்கள்- முழுவதையும் இடது கையாலேயே தட்டச்சு செய்து முடித்தேன். ஆய்வேட்டை 2018 ஏப்ரல் 30ஆம் நாள் கையளித்தேன். 2018 அக்டோபர் 10 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பட்டம் வழங்கினார்.”
அமல் தாஸ் வலியில் இருந்து நிவாரணம் பெற்றது அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்திருந்த வேளைகளில் மட்டுமே. 24 மணி நேரமும் நினைவிலும் துயிலிலும் நரம்பியல் வலியோடு வாழ்க்கையை நகர்த்துவது, அதைத் தாண்டி சாதனைகளை நிகழ்த்துவது சாதாரணமான விஷயம் அல்ல. அதைச் செய்வதற்கு அபூர்வமான மனத்துணிவும் முதிர்ச்சியும் வேண்டும்.
“2014 பிப்ரவரி 21 முதல் 2018 அக்டோபர் 10க்குள் எனக்கு 9 அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. பத்தாவது அறுவை சிகிச்சை 2019 ஏப்ரல் 11 அன்று நடைபெற்றது எனது வலது கையை செயல்பட வைப்பதற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் அவை. அறுவை சிகிச்சைகளிலிருந்து மீள வேண்டும். இடைவிடாது என்னைத் துரத்தும் நரம்பு நோய் வலியை தாங்கிக் கொள்ள ஆக்கபூர்வமான செயல்பாடுகள் உதவின.”
கார் ஓட்டுவது, வயல்களில் நடப்பது, தரையை கூட்டிப் பெருக்குவது, துணி துவைப்பது என்று நான் வேலையில் மூழ்கிவிட்ட அடுத்த நிமிடம் தனக்குள் நம்பிக்கையும் மன உறுதியும் தீர்மானமும் பெருகுவதை உணர்ந்து கொள்கிறார் அமல் தாஸ்.
“எழுதுதல், கணிப்பொறியைப் பயன்படுத்துதல், கருவிகளைக் கையாளுதல், கூடைப்பந்து ஆடுதல், நீச்சல், கார் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு நான் இடது கையை பயன்படுத்துகிறேன். அதுவே போதுமானதாக இருக்கிறது.”
மனித வாழ்வு என்பது உணர்வு நிலைக்கும் இறப்புக்கும் இடையில் நிகழுகிற தொடரும் போராட்டமாக இருக்கிறது. மரணத்திலிருந்து பிழைத்து நிற்கும் கவன நிலை என்பது உயிர்களின் அடிப்படைப் பண்பு. எந்தச் சூழலிலிருந்தும், எந்த நெருக்கடியிலிருந்தும் தப்பித்து வெளியேறிவிடுகிற இந்தத் தூண்டுதல்தான் உயிரின் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையைத் தொடர்வதற்கு நமக்கு நாமே உத்வேகம் தந்து கொள்கிறோம். ஊக்கம் தருகிற செயல்பாடுகளில் முனைந்து ஈடுபடுகிறோம்.
வாழ்தலின் பொருட்டான உள்ளார்ந்த உந்துதலுக்கு எதிர் நிலையாக உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்கிற தற்கொலை எண்ணம் அமைகிறது. ‘எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன’, ‘நான் வாழ்வதில் யாருக்கும் பயனில்லை’, ‘எனக்கு வாழப் பிடிக்கவில்லை’, ‘இனிமேலும் வாழ்வதில் பொருளில்லை’, ‘வாழ்க்கை சாத்தியமில்லை’ என்பதான விரக்தி நிலை, அல்லது அவமான உணர்வு – இப்படி ஏதேனும் ஒன்று தற்கொலைக்கு காரணமாகலாம். இதைத் தாண்டி வருவது என்பது பெரும் சவால். அமல் தாஸ் இதை மனவுறுதியுடன் எதிர்கொண்டுள்ளார். உரிய காலத்தில் முறையான மருத்துவ இடையீடும், சமூக உளநல ஆதரவும் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்பதையும் கவனம் கொள்ளவேண்டும். விலங்குகளிடம் இயல்பாக காணப்படும் இந்த ‘பிழைத்துநிற்கும் முனைப்பு’, மனிதர்களிடையே பலவீனமாகியிருப்பது பண்பாட்டுப் படிமலர்ச்சியின் பின்னடைவா?
குடும்ப உறவினர் நீண்ட நாள் படுக்கையில் உணர்வற்றுக் கிடக்கிறார். அவர் நினைவு மீள்வதற்கு இனிக் கிஞ்சிற்றும் வாய்ப்பில்லை; தன்னுணர்வற்ற நிலையில், தன்னைச் சூழ்ந்து என்ன நிகழ்கிறது என்பதை அறிய முடியாத நிலையில் வாழ்வதைவிட அந்த வாழ்வை முடித்து விடுவதே அவருக்கும் அவரை சூழ்ந்து இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் என்கிற ஒரு நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழலில் கருணைக் கொலை ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. பராமரிப்பாளருக்குச் சவாலான காலம். இவற்றையெல்லாம் கடந்து செல்வதற்கு வாழ்க்கையின் உன்னதமான பொருளை உய்த்துணரும் ஞானம் தேவை.
சில மனிதக் கதை நமக்கான படிப்பினையாக மாறிவிடுவதுண்டு. பாதிரியார் அமல் தாசின் வாழ்க்கைக்கதை அப்படியான ஒன்று. கடப்பதற்குக் கடினமான காலத்தைக் கடந்து வருவதற்கு நம்பிக்கையின் கடைசி இழை அறுந்துவிடாமல் நடை பயிலும் மனத்துணிவு வேண்டும். அதற்குமேல், அந்தக் கதையை சக மனிதர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு அவனிடம் ஒரு பெரும் இலக்கு வேண்டும். சமயத்தைக் கடந்த மானுட அக்கறை. ‘தெய்வீகத் தடங்க’ளை வாசிக்கும்போது அமல் தாஸ் என்கிற ஆளுமையிடம் அதை நீங்களும் பார்க்கலாம்.
இந்த அருமையான நூலைத் தமிழ் வாசகர்களுக்காக மெருகு குலையாமல் மொழிபெயர்த்து வழங்கியிருக்கும் பேராசிரியர் வின்சென்ட்டுக்குப் பேரன்பும் வாழ்த்தும்.
நூலின் தகவல்கள் :
நூல் : தெய்வீகத் தடங்கள்
ஆசிரியர்: பணி. முனைவர் அமல் தாஸ் (சே.ச.)
மொழி பெயர்ப்பு: பேரா.ச. வின்சென்ட்
வெளியீடு: நம் வாழ்வு
விலை:₹70/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
வறீதையா கான்ஸ்தந்தின்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.