(தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது அரசும், மத வெறியர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சியின் அத்தனை ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதை நாடே பார்த்தது. வரவிருக்கும் காலங்களில் நாடு முழுதும் ஆட்சியாளர்களின் வன்முறை வெறியாட்டங்கள் எப்படி வடிவம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இது நடைபெற்றுள்ளது-)
வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்
(தமிழில்: ச. வீரமணி)
“சுதந்திர இந்தியாவில் வகுப்புவாதக் கலவரங்கள் குறித்த ஆய்வுகள் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை உயர்த்திப்பிடிக்கின்றன. அதாவது, அரசாங்கத்திற்கும், கலவரத்தில் ஈடுபடுவோருக்கும், காவல்துறையினருக்கும், கலவரம் நடைபெறும் சமயத்தில் ஆட்சியில் உள்ளவர்களின் ஊழியர்களுக்கும் இடையேயிருந்துவரும் கூட்டுச்சதியை அவை உயர்த்திப்பிடிக்கின்றன. அதிலும்கூட, இப்போது இருக்கின்ற அரசாங்கத்தின் சங்கதியே விதிவிலக்கானதாகும். இதன் கூட்டுச்சதி மேலும் வித்தியாசமானது. ஜனநாயக மற்றும் நிர்வாக நெறிமுறைகளை மீறுவதிலும், மிகவும் மோசமான உத்திகளைக் கையாளுவதிலும் மற்றவற்றிலிருந்து ஈடிணையற்றவிதத்தில் வித்தியாசமான ஒன்றாகும். பிப்ரவரியின் கடைசி வாரத்தில் நடைபெற்ற தில்லிக் கலவரங்களும் இதில் வித்தியாசமானதல்ல.” தில்லிக் காவல்துறையினர் தலைநகரத்தில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிக்கொண்டிருப்பதாகக் கூறியபோதிலும், மார்ச் முதல் வாரத்தில் ஃப்ரண்ட்லைன் சார்பில் கேள்வி கேட்டபோது அதற்கு ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியும், புகழ்பெற்ற இந்தி எழுத்தாளருமாகிய விபுதி நாராயண் ராய் கூறிய பதில் இவ்வாறு அமைந்திருந்தது.
தில்லிக் காவல்துறைக்குக் கட்டளைகள் முழுமையாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைந்திருந்த நார்த் பிளாக்கிலிருந்துதான் பிறப்பிக்கப்பட்டன என்பதும், அங்கிருந்துதான் அனைத்து நெறிமுறைகளும் மீறப்பட்டு, கூட்டுச்சதி நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறின என்பதும் அப்பட்டமாக வெளி உலகத்திற்குத் தெரிந்தது. இவை அனைத்தும் எவ்விதமான மன உறுத்தலும் இன்றி மேற்கொள்ளப்பட்டன என்று ராய் மேலும் கூறினார்.
ராய், தன்னுடைய முப்பத்தைந்து ஆண்டு கால இந்தியக் காவல் பணியில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு ஏஜன்சிகள் உட்பட அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் வகுப்புவாதமயமாகி வருதல் குறித்து எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். நகரில் ஊரடங்கு உத்தரவு (Curfew in the City), வகுப்புமோதலை எதிர்கொள்ளுதல் (Combating Communal Conflict), மற்றும் வகுப்புவாத மோதல்கள்:இந்தியாவில் இந்து-முஸ்லீம் கலவரங்களின்போது காவல்துறையினரின் நடுவுநிலைமை குறித்த எதார்த்தநிலைமைகள் (Communal Conflicts: Perception of Police Neutrality During Hindu-Muslim Riots in India) போன்று எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
ஆட்சியாளர்கள் மத்தியில் காணப்பட்ட கூட்டுச்சதி மற்றும் அனைத்து நெறிமுறைகளையும் மீறியுள்ளமை குறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகள், தில்லியில் பிப்ரவரி 23க்கும் 26க்கும் இடையே நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் அத்தனையிலும் ராய் சுட்டிக்காட்டியிருப்பது போன்று காண முடியும். வன்முறை வெறியாட்டங்களின்போது தில்லிக் காவல்துறையினர், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக குண்டர்களை அணிதிரட்டி, தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தலைமை வகித்தனர். இவ்வாறு இவர்கள் தங்கள் கடமைகளை மீறிச் செயல்பட்டுள்ளனர். (இது தொடர்பாக தனியே ஒரு கட்டுரை ஃப்ரண்ட்லைன் ஏட்டில் எழுதப்பட்டிருக்கிறது.) இவ்வாறு இவர்கள் மேற்கொண்ட அத்துமீறல்களை ஊடகங்கள் பலவும், மனித உரிமைகள் குழுக்கள் பலவும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. அவற்றைப் பார்ப்போர் அனைவருக்கும் தில்லிக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் எவ்வளவு கொரூரமான முறையில் இருந்தன என்பதைத் தெள்ளெனக் காட்டும்.
ஆனாலும், இத்தகைய நெறிமுறைகளை மீறும் செயல்கள் தில்லியில் நிலைமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ள பின்னரும் தொடர்கின்றன. சமீபத்தில் மார்ச் 5 அன்று, தலைநகர் தில்லிக்கு வெகு அருகாமையில் உள்ள மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களான புலந்சாகர் மற்றும் காசியாபாத் போன்ற இடங்களில் சங் பரிவாரத்தின், அதிலும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் அதன் அரசியல் அங்கமாகச் செயல்படும் பாஜக ஆகியவற்றின் கட்டுப்பாட்டின்கீழும், வழிகாட்டுதலின்கீழும் செயல்பட்டுவரும் இந்துத்துவா வெறியர்கள், திட்டமிட்டமுறையில் தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ்வாறு மக்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள அதே சமயத்தில், மத்தியில் உள்ள நரேந்திரமோடி – அமித் ஷா ஆட்சி மிகவும் ஒருதலைப்பட்சமானமுறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதையும் பார்க்க முடிகிறது.
தொலைக்காட்சி சானல்களுக்குத் தடை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆசியா நெட் செய்திகள் மற்றும் மீடியா ஒன் செய்திகள் என்னும் இரு மலையாள தொலைக்காட்சி சானல்களுக்கு மார்ச் 6 அன்று மாலை 7.30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு ஒலிபரப்புக்குத் தடை விதித்தது. இவ்வாறு தடை விதித்ததற்கான காரணங்கள் எந்த அளவிற்கு ஜனநாயக மற்றும் நிர்வாக நெறிமுறைகள் அப்பட்டமான முறையில் மீறப்பட்டிருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையாகும். அந்த உத்தரவுகள் எந்த அளவிற்கு அப்பட்டமான மற்றும் கேலிக்கூத்தான ஒன்று என்பதற்கு அவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். “ஒரு சமூகத்தினர் பக்கம் சாய்ந்திருப்பதாகவும்”, “தில்லி காவல்துறை மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சனத்திற்கு உள்ளாக்கியதாகவும்” தனித்தனியே பிறப்பிக்கப்பட்டிருந்த அந்தத் தடை உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இரண்டு உத்தரவுகளிலுமே, அந்த சானல்கள், கலவரங்களை “வழிபாடு மேற்கொள்ளப்படும் இடங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதை உயர்த்திப்பிடித்ததாகவும்”, “குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்பக்கம் சாய்மானமாக இருக்கும் முறையிலும்” வெளியிட்டிருந்தன என்றும் குற்றஞ்சாட்டியிருந்தன. மீடியா ஒன் செய்திகள் சானலுக்கு எதிரான உத்தரவில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மேற்படி சானல் “ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கேள்வி கேட்டிருப்பதாகவும், தில்லி காவல்துறையினரின் செயலற்ற தன்மையையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்ததாகவும்”, கூறியதுடன், “இவ்வாறு அது தில்லி காவல்துறையையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது” என்றும், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட கலைப்பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அழித்திடும் செயல்கள் மீது கவனம் செலுத்தியதாகவும்” குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்தத் தடை சம்பந்தமாக, ஃப்ரண்ட்லைன் சார்பில் மீடியா ஒன் சானலின் தலைமை எடிட்டரிடம் (EDITOR-IN-CHIEF) விசாரித்தபோது, அவர், இத்தகைய தடை உத்தரவு இந்திய வரலாற்றில் எப்போதுமே நடந்ததில்லை என்றார். தடை உத்தரவில் கூறப்பட்டிருக்கும் சங்கதிகள் அதே சமயத்தில் நகைக்கத்தக்கன என்பதோடு, ‘தீயவை வந்துகொண்டிருக்கின்றன’ என்பதற்கான முன் அறிகுறியுமாகும் என்று கூறும் அதே சமயத்தில், அது அமல்படுத்தப்பட்டுள்ள விதம் நாட்டில் இயங்கும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தையோ அல்லது காவல்துறை போன்ற அதன் ஏஜன்சிகளையோ அல்லது அதன் சித்தாந்தத் தலைமையையோ விமர்சித்தால் இதுதான் கதி என்ற ஒரு தெளிவான எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்களிப்பினையும், தேசிய இயக்கக்காலத்திலிருந்தே ஊடகப் பாரம்பர்யம் கட்டி எழுப்பியிருந்த விழுமியங்களையும் கேவலப்படுத்தும் செயலாகும் இது,” என்றும் குறிப்பிட்டார். இந்தத் தடை உத்தரவுகளுக்கு எதிராக ஊடகங்களிடமிருந்தும், அரசியல் கட்சிகளிடமிருந்தும், மனித உரிமை அமைப்புகளிடமிருந்தும் நாடு தழுவிய அளவில் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இவ்வாறு தடை விதித்து 15 மணி நேரத்திற்குள்ளாகவே அரசாங்கம் அதனைத் திரும்பப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டது.
‘பல்வேறு குழுக்களும் இணைந்து திட்டமிட்டு மேற்கொண்ட வெறிச்செயல்’
தில்லி வன்முறை வெறியாட்டங்களின் தீவிரத் தன்மை குறித்தும், அங்கேயும் மற்றும் அதனை அடுத்து உள்ள மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பகுதிகளிலும் நிர்வாக மட்டத்தில் நடைபெற்றுள்ள நேரடித் தாக்குதல்கள் குறித்தும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், சங் பரிவாரம் மற்றும் பாஜகவின் ஒட்டுமொத்த நிகர இலக்கு, தலைநகரில் நடைபெற்றது உட்பட, நிரந்தரமான முறையில் இரு சமூகத்தினருக்கும் இடையே மதப் பகைமை உணர்வு தொடர்ந்து நீடித்திருக்கும் விதத்தில் நாட்டை உந்தித்தள்ளுவது என்பதேயாகும் என்று கூறியிருக்கிறார். “தில்லி நிகழ்வுகள் மற்றும் அதைத்தொடர்ந்து இடையிடையே நடைபெற்ற தாக்குதல்கள் உட்பட கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்றுள்ளவற்றிலிருந்துதெரிய வருவது என்னவென்றால், இந்த வன்முறை வெறியாட்டங்கள் சங் பரிவாரத்தின் பல்வேறு குழுக்களும் கடந்த சில நாட்களாகவே மிகவும் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது, ” என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லிக் காவல்துறை ஆகியவற்றில் உள்ள அதிகாரபூர்வப் பதிவுருக்களில் பல, 2020 தில்லிக் கலவரங்கள் ஏதோ பிப்ரவரி 23க்கும் 26க்கும் இடையே 60 மணி நேரத்தில் நடந்ததைப்போன்று பதிவு செய்திருக்கின்றன. இந்தப் பதிவுருக்கள், தொடர் தாக்குதல்களும், மோதல்களும் மற்றும் தொந்தரவுகளும் இந்து, முஸ்லீம் ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டவை என்றும், இவ்வாறு இந்த இரு தரப்பினரும் சுமார் 60 மணி நேரத்திற்கு மேற்கொண்டனர் என்றும், பின்னர் பிப்ரவரி 26 அன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன என்றும் வரையறுக்கின்றன.
நடந்த தாக்குதல்களை வரிசையாகப் பட்டியலிட்டு விளக்கிய மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, (இவர்தான் தில்லிக் காவல்துறைக்கும் நேரடியாகப் பொறுப்பு வகிப்பவர்) இடையிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்தும் விளக்கினார். இந்தப் பின்னணியில், 60 மணி நேரம் நடந்த மதவெறிக் கலவரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கிய அடிப்படையிலேயே ஆராய்ந்திடுவோம். இவ்வாறு நுண்ணியமுறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், பிப்ரவரி 26க்குப் பின்னரும் மதவெறி பிடித்தவர்களின் மிருகத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நிற்கப்போவதில்லை என்பதைத்தான் ஐயத்திற்கிடமின்றிக் காட்டுகின்றன.
மேலும் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மதவெறித் தாக்குதல்கள் பிப்ரவரி 23 அன்று மிக மோசமானமுறையில் அதிகரித்திருந்தபோதிலும், தாக்குதல்களின் தொடக்கம் அந்தத் தேதி கிடையாது. மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்த வரும் செய்திகள், பிப்ரவரி 26க்குப் பின்னரும் தாக்குதல்கள் வழக்கமானவைகள் போல் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.
புலந்த்சாகரில் மார்ச் 4-5தேதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் வன்முறைவெறியாட்டங்களின்போது அமைதியை விரும்பும் சமூக ஆர்வலர்கள் (இவர்களில் அதிகமானவர்கள் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது) தக்க சமயத்தில் குறுக்கிடாமல் இருந்திருந்தார்களானால், குண்டர்கும்பல்களின் கொலை வெறித் தாக்குதலில் மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் அன்றைய வெறித்தனம் முடிவுக்கு வந்திருக்காது என்பதாகும். மதவெறித் தாக்குதல்கள் பிப்ரவரி 26க்குப் பின்னர் வீழ்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், இவ்வாறு பிப்ரவரி 23க்கும் 26க்கும் இடையே ஏற்பட்ட மதவெறியர்களின் தாக்குதல்களுக்கான சூழல் அதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே கட்டி எழுப்பப்பட்டது என்பதற்கு எண்ணற்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்களும், வெறுப்பை உமிழ்கின்ற பேச்சுக்களும்
2019 டிசம்பர் இரண்டாவது வாரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு தழுவிய அளவில் மக்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்துப் போராடி வருவதுதான் ஆட்சியாளர்கள் மத்தியில் மிகவும் ஆத்திரத்தைக் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரில் மிகவும் தனித்துவத்துடன் உணர்ச்சி அலைகளைக் கிளப்பும் விதத்தில் ஷாஹீன்பாக்கில் முஸ்லீம் பெண்களும், குழந்தைகளும் நடத்திவரும் போராட்டம் இந்துத்துவா மதவெறியர்களின் மத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான ஆத்திரத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. நடைபெற்ற விஷயங்களைச் சற்றே கூர்ந்து பரிசீலனை செய்திடுவோம். 2019 டிசம்பர் 24 அன்று, அதாவது நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பதினைந்து நாட்களுக்குப் பின்னர், மற்றும் ஷாஹீன்பாக்கில் கிளர்ச்சிப் போராட்டம் தொடங்கி சுமார் பத்து நாட்களுக்குப்பின்னர், பாஜக தலைவர் கபில் மிஷ்ரா, போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாகிஸ்தானின் ஏஜண்டுகள் என்று முத்திரை குத்துகிறார்.
மேலும் அவர் திலலியில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) யுடன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் யுத்தம் என்பது, பாகிஸ்தானியர்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் வெற்றி பெறுவது போன்று முக்கியத்துவம் உடையதாகும் என்றும் பேசுகிறார். இவ்வாறு அவர் ஷாஹீன்பாக் கிளர்ச்சிப் போராளிகளை ஆம் ஆத்மி கட்சியுடன் அடையாளப்படுத்துகிறார். கபில் மிஷ்ராவின் கூற்றுக்களையொட்டியே பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் ஷர்மா போன்றவர்களும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அனுராக் தாகூர் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து “சுட்டுக்கொல்லுங்கள்…”(“Goli maro”) என்று கட்டளை பிறப்பித்தார். பர்வேஷ் ஷர்மா, ஒருவேளை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுமானால், ஷாஹீன்பாக்கில் திரண்டுள்ளவர்களால், இந்து பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் நிலைமை உருவாகும் என்று எச்சரித்தார். அவர் ஷாஹீன்பாக்கில் திரண்டிருந்த கிளர்ச்சியாளர்களை, காஷ்மிர் ஜிகாதிகளுடன் இணைத்தார்.
இவ்வாறு ஏஏபி-யைத் தோற்கடிப்பதற்காக இந்துத்துவா ஆதரவு – எதிர்ப்பு நிலைப்பாடுகளில் வாக்காளர்களிடையே வெறித்தனத்தை உருவாக்குவதற்கு வேண்டுமென்றே முயற்சிகளை மேற்கொண்டார்கள். பிப்ரவரி 11 அன்று வெளியான தேர்தல் முடிவுகள், இவர்களின் சூழ்ச்சித் திட்டத்திற்கு எதிர்பாராவிதத்தில் அதிர்ச்சித் தோல்வியை ஏற்படுத்தியது. ஏஏபி மாபெரும் அளவில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தில்லியின் பல பகுதிகளில், குறிப்பாக தில்லியின் வடகிழக்குப் பகுதியில், ஷாஹீன்பாக் விதத்திலான கிளர்ச்சிகள் தோன்றின. இது, கபில் மிஷ்ரா போன்ற இந்துத்துவா ஆதரவாளர்களை மேலும் வெறிகொள்ளச் செய்தன. மதவெறியர்கள், தங்களுடைய “நிரந்தர மதவெறி மோதலை” (“permanent communal conflict“) க் கூர்மைப்படுத்திமுன்னெடுத்துச் செல்லும் விதத்தில் புதிய திட்டங்களைத் தீட்டினார்கள்.
கபில் மிஷ்ரா வட கிழக்கு தில்லியில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன் சொந்தக் கிளர்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தார். பிப்ரவரி 23 அன்று மாலையில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் முன்னாலேயே, வட கிழக்கு தில்லியில் கிளர்ச்சி நடைபெறும் இடங்களிலிருந்து கிளர்ச்சியாளர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து, பிப்ரவரி 25 அன்று திரும்புவதற்குள் காலி செய்யாவிட்டால், கிளர்ச்சியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவேன் என்று பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஒருசில மணி நேரத்திலேயே, மதவெறிக் கலவரங்கள் தொடங்கின. அடுத்த இரண்டு நாட்களில் அவை முழு அளவிலான வன்முறை வெறியாட்டங்களாக மாறின.
கலவரங்கள் எப்படி முதலில் தொடங்கின என்றும், முதல் கல்லை எடுத்து வீசியவன் எவன் என்றும் முதல் தாக்குதலைத் தொடுத்தவன் எவன் என்றும் இப்போதும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. சங் பரிவார வகையறாக்களின் சார்பிலும், எண்ணற்ற அரசியல் நோக்கர்களும் டிரம்ப் போன்று முக்கியமான ஒரு நபர் நம் நாட்டுக்கு வரும்போது பாஜகவும் அதன் அமைப்புகளும் ஒரு கலவரத்தைத் தொடங்கிடுமா என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதேபோன்று மறுபக்கத்திலும், அரசியல் நோக்கர்களில் பலர், டிரம்ப் பயணம் பாஜகவிற்கும், சங் பரிவாரக் கும்பலுக்கும் “கொலைத் திட்டத்தை” நிறைவேற்றிட சரியானதொரு மூடு திரையாக அமைந்திருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள்.
கலவரத்தை “முதலில் தொடங்கியது யார்” என்பது குறித்த உண்மை எதுவாக இருந்தபோதிலும், மத்திய அரசாங்கத்திற்கும், மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்துத்துவா வெறியர்களுக்கும், காவல்துறையினருக்கும், ஆளும் கட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் இடையே கூட்டுச்சதி இருந்தது என்கிற உண்மை அனைவரும் அறியும்விதத்தில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற நான்கு நாட்களிலும் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட, தில்லிக் காவல்துறையினர் தங்களுடைய புலன்விசாரணைகளின்போது பிரதானமாக முஸ்லீம்களைக் குறி வைத்திருக்கிறார்கள்.
கபில் மிஷ்ராவின் ஆத்திரமூட்டும் விதத்திலான வெறுப்பை உமிழ்ந்த பேச்சுக்கள்தான் வன்முறை வெறியாட்டங்களை முடுக்கிவிட்டன என்று தெள்ளத்தெளிவாகத் தெரியும் அதே சமயத்தில், அவருக்கு தில்லிக் காவல்துறை தேவைக்கும் அதிகமாகவே பாதுகாப்பை அளித்துக்கொண்டிருப்பதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏஏபி கவுன்சிலர் தாகிர் உசேனுக்கு எதிரான வழக்கை (சந்த் பாக்கில் பெட்ரோல் குண்டுகள் வைத்திருந்ததாகவும், காவல் அதிகாரியைத் தாக்கிய குழுவில் ஓர் அங்கமாக இருந்ததாகவும் இவர் மீதான வழக்கு) மிகவும் சுறுசுறுப்பாக விசாரணை செய்துகொண்டிருக்கிறது.
‘அமைப்பிடமிருந்து ஆதரவு’
மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் மூத்த விசுவ இந்து பரிசத்தின் ஊழியர் ஒருவர், இவ்வாறு “அமைப்பிடமிருந்து வந்துள்ள ஆதரவு” என்பது கடந்த ஆறு ஆண்டு காலமாக, அதிலும் குறிப்பாக 2019 மே மாதத்திற்குப் பின்னர், மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அபரிமிதமான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர், சங் பரிவாரத்தால் கட்டி எழுப்பப்பட்ட சமூக, அரசியல் மற்றும் கலாச்சார சீதோஷ்ணநிலையின் பிரதிபலிப்பாகத் தொகுத்தளிக்கிறார்.
“மோடி-ஷா இரட்டையரின் இந்துத்துவா ஆதரவு சீதோஷ்ணநிலை நாட்டை, குறிப்பாக வட இந்தியாவை, மாற்றி அமைத்திருக்கிறது. எனவே, தில்லிக் கலவரங்கள் தொடர்பான புலன் விசாரணையின் வெளிப்பாடுகள் எப்படி இருந்தபோதிலும், அல்லது குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அல்லது தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை எப்படி இருந்தபோதிலும், இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலான திட்டம் பெரிய அளவில் அரசில்ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் கலாச்சார ரீதியாகவும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்,” என்று கூறுகிறார்.
மேலும் அவர், தில்லிக் கலவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் ஏஏபி உட்பட மதச்சார்பற்ற கட்சிகளில் பெரும்பாலானவை அடக்கி வாசித்திருப்பதிலிருந்து, இந்துத்துவா சித்தாந்தத்தின் மேலாதிக்கம் உறுதிப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். “சில சிவில் சமூக ஊழியர்கள், ஏஏபியின் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவாலிடம் கலவரம் நடைபெற்ற இரண்டாம் நாளன்று தன்னுடைய 62 எம்எல்ஏக்களுடன் அமைதி ஊர்வலம் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் ஓர் அங்குலம் கூட அசையவில்லை. எங்களுடைய மேலாதிக்கம் குறித்து இது ஏராளமாகப் பேசுகிறது. இப்போது திரும்பிப் போக வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்துத்துவா வெற்றியின் இந்த ஆதாயங்கள் மேலும் ஒருமுகப்படுத்தப்பட்டு, வரவிருக்கும் காலங்களில் மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும்,” என்று அந்த விஎச்பி தலைவர் ஃப்ரண்ட்லைனுக்குக் கூறினார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தொடரும் தாக்குதல்களும், தொலைக்காட்சி சானல்கள் மீது சிறிது காலமே நீடித்த தடைகளும், அவர்கள் தங்கள் “ஆதாயங்களை” ஒருமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வடிவங்களின் தெளிவான அடையாளங்களாகும். இவைமட்டுமல்ல, நாடு முழுதும் நடைபெறும் பாஜக-சங் பரிவாரக் கூட்டங்களில் “சுட்டுக் கொல்லுங்கள்” (Goli maro…) என்று கோஷம் எழுப்பப்படுவதும், கொல்கத்தாவில் நடைபெற்ற அமித் ஷாவின் கூட்டத்தில்கூட இந்தக் கோஷம் எழுப்பப்பட்டதும், இவர்கள் சூழ்ச்சித் திட்டத்தின் அளவுகோல்களாக நீடிக்கின்றன என்பதையே காட்டுகின்றன. இவை அனைத்தும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பல்வேறு பரிணாமங்களில் “நிரந்தரமான மதவெறி மோதலுக்கு” தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே பிரதிபலிக்கின்றன.
மீரட்டைச் சேர்ந்த விசுவ இந்து பரிசத் தலைவர் கூற்றின்படி, தில்லிக் கலவரங்கள், நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாகக்கலந்து கொள்ளும் இளைஞர்களின் எதிர்ப்பு உணர்வில் ஓட்டையைப் போட்டிருக்க வேண்டும். “குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் மூலமாக மதச்சார்பின்மை குறித்தும், மூவர்ணக் கொடி மற்றும் அரசமைப்புச் சட்டம் பயன்படுத்துவது குறித்தும் நிறையவே பேசப்படுகிறது. இத்தகைய அடையாளங்களுக்கு எதிரான போராட்டத்திலும், தில்லி கலவரங்களின்போது வென்றது போன்று, நாங்கள் தீர்மானகரமான முறையில் வெல்வோம். இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்கள் அனைத்தும் விரைவில் துடைத்தெறியப்பட்டுவிடும். அதன்பின்னர் இந்துத்துவா சக்திகளின் அணிவகுப்பு மேலும் வலுவுடன் முன்செல்லும்,” என்று அந்தத் தலைவர் ஃப்ரண்ட்லைனிடம் மிகவும் நம்பிக்கையுடன் கூறினார். இவ்வாறு இவர்கள் ஒருவிதமான வெறித்தனமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதிலும், இவ்வாறான ஒரு தீய அறிகுறி அவர்கள் மத்தியில் சூழ்கொண்டிருக்கிறது என்பதிலும் அநேகமாக எவ்வித ஐயமுமில்லை. இன்றைய தினம் தில்லியில் நடந்தது, நாட்டின் இதர பகுதிகளுக்கும் வருவதற்கான விதத்தில் விஷயங்கள் வடிவங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
(நன்றி: ஃப்ரண்ட்லைன்)
Attachments area